காதல் கதகளி அத்தியாயம் 14

0
137

அபிமன்யுவுடன் பேசிவிட்டு நேராக தன்னுடைய வீட்டிற்கு தான் சென்றான் சத்யன்.அங்கே வீட்டின் முன் பகுதியில் யாரும் இல்லாததால் சத்தமில்லாமல் மேலே இருக்கும் சஹானாவின் அறையை நோக்கி சென்றான்.அங்கே அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருந்த சஹானாவை பார்த்ததும் அவனது பார்வை தானாக கனிந்தது.  

“விஷ்வா …எதுவும் வேலையா இருக்கியா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான் சத்யன்.  

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணா…சும்மா பொழுது போகலை…அதான் கதை புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தேன்….சொல்லுங்க அண்ணா…என்ன விஷயம்?”

“நான் எதை செஞ்சாலும் உன்னோட நன்மைக்காக தான் செய்வேன்னு நீ நம்புற தானே விஷ்வா”  

“இது என்ன அண்ணா கேள்வி…நீங்க எது செய்தாலும் அது என்னோட நன்மைக்காக தான் இருக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்…இப்போ எதுக்கு இந்த கேள்வி எல்லாம்…”

  “நாளை மறுநாள் நீயும் நானும் சென்னை போகிறோம் விஷ்வா…தயாராய் இரு…அப்பாவிடம் நான் பேசிக் கொள்கிறேன் சரிதானா…”  

“எப்படி அண்ணா…அப்பா ஒத்துக் கொள்ள மாட்டாரே”சஹானாவின் குரல் விரக்தியாக ஒலித்தது.

“ஏன் அனுப்ப மாட்டார்…நீ விவசாயத்தில் வந்து புது முறைகளை தெரிந்து கொள்வதற்காக தானே அங்கே போகிறாய்…அதனால் உன்னை தடுக்க மாட்டார்..”

  “விவசாயமா…” என்று கண்களில் கேள்வியோடு சத்யனை நிமிர்ந்து பார்த்தவள் அது சொல்லிய சேதியில் மகிழ்வோடு அவனிடம் பேச தொடங்கினாள்.

  “நிஜமாவா அண்ணா…” என்று மகிழ்ச்சியோடு ஆரம்பித்தவள் உடனே கொஞ்சம் சோகமானாள்.

“ஏன் அண்ணா… விவசாய சம்பந்தப்பட்ட படிப்பு தானே…உன்னை போய் படிக்க சொல்லிவிட்டால்…” கேள்வியாக நிமிர்ந்து சத்யனை பார்த்தாள்.

  “அது நிச்சயம் நடக்காது விஷ்வா…நான் சென்னைக்கு படிக்க வந்து விட்டால் இங்கே இருக்கும் வேலைகளை யார் பார்ப்பது…அப்பாவால் தனியாக சமாளிக்க முடியாது.வேறு யாரையும் துணைக்கு வைத்துக் கொண்டால் கூட இதெல்லாம் சமாளிக்க முடியாது.

அது மட்டும் இல்லாமல் போன வாரம் அந்த தங்கவேலு கூட போட்டி போட்டு ஒரு புது வாழை தோப்பை வாங்கினார் இல்லையா…அது கிட்டத்தட்ட ஐம்பது ஏக்கர்…ஏற்கனவே இருப்பதையே சமாளிக்க முடியாத நிலையில் என்னை சென்னைக்கு அனுப்பி வைக்க அப்பா கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்.” தெளிவாக எடுத்து சொன்னான் சத்யன்.

  “இல்லை அண்ணா…போன முறை நாம் போன பொழுதே அப்பாவிற்கு விஷயம் தெரிந்து போய் சாதுர்யமாக பேசி நம்மை மீண்டும் இங்கே வர வைத்து விட்டார் இல்லையா…அது போல இந்த முறையும் நடந்து விட்டால்…” ஜீவனை கண்களில் தேக்கி ஏக்கமாக கேட்டாள் சஹானா.  

“இந்த முறை எல்லா ஏற்பாடும் நான் சரியாக செய்து வைத்துவிட்டேன் விஷ்வா…அதை பற்றி எல்லாம் நீ கவலைபடாதே….நாளை மறுநாள் கிளம்புவதற்கு ரெடியாக இரு. அப்பாவிடம் நான் பேசிக் கொள்கிறேன்.. சரிதானே?   மகிழ்ச்சியில் கண்கள் கலங்க பூம் பூம் மாடு போல வேகமாக தலையாட்டினாள் சஹானா.  

“அண்ணா …. சென்னையில் யாரை போய் பார்க்க போகிறோம்?”  

“எனக்கு தெரிஞ்ச டான்ஸ் மாஸ்டர் ஒருத்தர் சென்னைல டான்ஸ் அகாடமி வச்சு இருக்கார் விஷ்வா…அவர் கிட்ட பேசிட்டேன்..அதெல்லாம் நீ ஒண்ணும் கவலை படாதே…”  

“சரி அண்ணா…ரொம்ப…ரொம்ப…ரொம்ப தேங்க்ஸ்…” மகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓட சத்யனின் கைகளை பிடித்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பேசினாள் சஹானா.

  “அசடு…அண்ணனுக்கு தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியா…. விஷ்வா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்.நல்லா கேட்டுக்கோ…இந்த சந்தர்ப்பம் தவறினால் மறுபடி இதே போல ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது.அதனால் இதையா நல்ல படியா பயன்படுத்திக் கொள்….சரியா?…நான் கீழே போறேன்…” சத்யன் சொன்னது போல இனி ஒரு வாய்ப்பு இது போல கிடைப்பது அரிது என்பதை உணர்ந்து கொண்டவள் எப்படியாவது போன வேலையை நல்லபடியாக முடித்துக் கொண்டு தான் ஊர் திரும்ப வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

  மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைக்க அன்றைய பொழுது அபிமன்யு சஹானா இருவருக்கும் நல்லபடியாகவே முடிந்தது.   மறுநாள் விடியல் இருவருக்குமே ஆனந்தமானதாக தான் இருந்தது.அபிமன்யு வழக்கம்போல் விடியற்காலையில் கிளம்பி ஆற்றங்கரைக்கு சென்று விட்டான்.

அங்கே சஹானாவிற்காக அவன் காத்திருக்க அவனை நெடுநேரம் காத்திருக்க வைக்காமல் உல்லாச நடையோடு கோவிலுக்கு வந்தாள் சஹானா. மற்ற நாட்களை விட இன்று அவளின் முகத்தில் அழகு கூடி இருந்தது போல அபிமன்யுவிற்கு தோன்றியது.ஆகாய வண்ணத்தில் தாவணியும் வெளிர் சந்தன நிறத்தில் பாவாடையும் அணிந்து இருந்தாள்.தலை நிறைய மல்லிகை சூடி துள்ளலான நடையோடு நடந்து வந்தாள்.

அவள் இருந்த மன நிலையில் அபிமன்யுவை பற்றிய நினைவே அவளுக்கு இல்லை.அவன் அங்கே வருவான் கூட துணைக்கு ஆளை கூட்டி வந்தால் தான் தன்னுடன் தனித்து பேச முற்பட மாட்டான் என்பதையும் மறந்து போனாள்.   முகம் முழுக்க மகிழ்ச்சியில் பொங்க விநாயகரின் முன்பு நின்று மனமுருக வேண்டினாள்.

இன்றும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.ஆனால் அது ஆனந்த கண்ணீராக இருந்தது.இதழ்களில் லேசானதொரு சிரிப்பு உறைந்து இருக்க கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.  

வழக்கம் போல மரத்தின் பின் நின்று இந்த காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த அபிமன்யுவிற்கு மனது நிறைந்து விட்டது.இப்பொழுது அவளின் பிரச்சினை என்ன என்பது அவனுக்கு தெரிந்து இருப்பதால் அவள் ஏன் இப்படி ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள் என்பதும் அவனுக்கு புரிந்தது.

‘அழு…நல்லா அழுது முடிச்சுடு…இனி உன் வாழ்க்கையில் கண்ணீருக்கு இடம் இல்லை.இனி எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்வேன்.உன்னை கண்ணில் வைத்து பாதுகாப்பேன்.உன் காரியம் யாவிலும் உனக்கு உற்ற துணையாக இருப்பேன்’என்று மனதுக்குள் சூளுரைத்தவன் அவளின் விழி திறப்பதற்காக காத்திருக்க தொடங்கினான். கண் விழித்தவள் கண்களை துடைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடனே  அங்கிருந்து செல்ல முற்பட்டாள்.

அவளின் வழியை மறைத்து நின்றான் அபிமன்யு.இன்று இருந்த சந்தோஷத்தில் துணைக்கு பெரிய (!) மனிதர்கள் யாரையும் கூட்டி வராமல் விட்ட தன்னுடைய மடத் தனத்தை நொந்து கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்டாள் சஹானா.

  “உங்களுக்காக அடியேன்  இங்கே காத்து கிடக்கிறேன்…ஒரு வார்த்தை கூட பேசாமல் போனால் எப்படி தேவியாரே???” வேண்டுமென்றே செந்தமிழில் பேசி அவளை வம்பு இழுத்தான் அபிமன்யு.   முதல் நாள் இவன் இங்கிலிஷில் பேசியதை தான்  கிண்டலடித்ததை இவன் வேண்டுமென்றே நினைவு படுத்துகிறான் என்ற நினைவுடன் பல்லை கடித்தாள் சஹானா.

நாளை முதல் தான் இந்த ஊரில் இருக்க போவதில்லை என்ற எண்ணம் அவளுக்கு மேலும் தைரியத்தை கொடுக்க நிமிர்ந்து நின்று அவனை நேருக்கு நேராக பார்த்து முறைத்தாள் சஹானா.   அவளுடைய தைரியத்தை உள்ளுக்குள் பாராட்டியபடியே அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு.

  “என்ன ஒரு வழியா தைரியம் வந்துடுச்சு போல என்னை முறைச்சு பார்க்கிற…சரி சரி..அதெல்லாம் விடு என்ன முடிவு பண்ணி இருக்க?”

“எதை பத்தி”  

“நாளை என்னோடு வர போவதை பற்றி …”

  “அது கனவிலும் நடக்காது…”   “நான் நினைத்ததை இது வரை நடத்தி காட்டாமல் இருந்ததில்லை….எதிலும் வெற்றி அடைந்து மட்டும் தான் எனக்கு பழக்கம்.”

  “நீங்கள் அடைந்த வெற்றி எதிலும் நான் சம்மந்த படவில்லை….ஆனால் இது முழுக்க முழுக்க என் சம்மந்தப்பட்டது…இதில் நீங்கள் வெற்றி அடைய முடியாது.”

  “நீயாகவே என்னை தேடி வருவாய் பார்…”

  “அது ஒருக்காலும் நடக்காது…”

  “நடந்தால்?”

  “நடக்காததை பற்றி பேச நான் விரும்பவில்லை…”

  “ஏன் பயமாக இருக்கிறதா?”   “உங்களிடம் எனக்கு என்ன பயம்?” உள்ளுக்குள் இருந்த நடுக்கத்தை வெளிகாட்டாமல் பேசினாள் சஹானா.

  “என்னிடம் தோற்று விடுவோமோ என்று உனக்கு பயம்….” வேண்டுமென்றே சஹானாவை சீண்டினான் அபிமன்யு.

  “உங்களை பார்த்து நான் இனி பயப்பட மாட்டேன்” …இந்த வார்த்தையை சொல்லும் போது சஹானா நினைத்தது இனி தான் இவனை சந்திக்க போவதில்லை என்ற எண்ணத்தில் தான் அவளது வார்த்தைகள் உறுதியாக வெளி வந்தன.

“ஒருவேளை இனி என்னை எங்கேனும் பார்த்தால் கூட இதே போல பயப்படாமல் பேசுவாயா?” அபிமன்யு தூண்டிலை வீசினான்.

  “அதற்கான அவசியம் இல்லாத பொழுது நான் எதற்கு பயப்பட வேண்டும்.”வெறுப்புடன் அபிமன்யுவிற்கு பதில் அளித்து விட்டு அங்கிருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சஹானா சொன்னது இனி அவனை தன்னுடைய வாழ்நாளில் பார்க்க போவதில்லை என்ற எண்ணத்தில் சொன்னது.ஆனால் அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை அப்படி நடக்க போவதில்லை என்று.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here