காதல் கதகளி அத்தியாயம் 22

0
180

சஹானாவிடம் பேசிவிட்டு காரை நேராக பீச்சிற்கு செலுத்தியவன் காரை விட்டு கீழே இறங்காமல் காரிலேயே அமர்ந்து இருந்தான்.முன் தினம் இரவு முழுக்க தூங்காமல் இங்கே கடற்கரையில் தான் இருந்தான்.

  போன் செய்து கேட்ட அன்னையிடமும் அகாடமியில் இருக்கிறேன் இன்று இரவு வர மாட்டேன் என்று பொய் சொல்லி சமாளித்து இருந்தான்.பார்வதியும் மகன் இப்படி செய்வது வழக்கம் என்பதால் மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் போனை வைத்து விட்டார் .

இப்பொழுது அவளை பார்த்து பேசிவிட்ட பிறகும் கூட ஏனோ அவனால் தன்னிலை அடைய முடியாமல் வருந்திக் கொண்டு இருந்தான்.   சஹானாவிடம் எடுப்பாக பேசி விட்டு வந்தாலும் அபிமன்யுவால் இயல்பாக இருக்க முடியவில்லை.என்ன தான் கோபத்தில் செய்து இருந்தாலும் தான் செய்தது தவறு என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.

இப்பொழுது வருந்தி என்ன ஆவது? இப்படி இருந்து தனிமையில் வருந்துவதை விட இனி இப்படி ஒரு தவறு நடக்காமல் முடிந்தவரை அவள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியோடு காரை வீட்டின் உள்ளே சென்று நிறுத்தினான்.  

வாசலில் எப்பொழுதும் போல எதிர்கொண்ட தாயையும் தந்தையையும் கண்டும் காணாமல் போனவனை எப்பொழுதும் போல தங்கையை தான் பார்க்க போகிறான் என்ற நினைவுடன் லேசான பெருமையும் கொஞ்சம் பொறாமையும் கலந்து பார்வதி பார்த்துக் கொண்டு இருக்க மனைவியின் பார்வையின் பொருளை உணர்ந்து சிரிப்புடன் மகனையும் மனைவியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜேந்திரன்.  

ஹாலில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்த அஞ்சலியை திரும்பியும் பாராமல் சென்ற மகனை செயலை  பார்த்த கணவனும் மனைவியும் வியப்புடன் ஒரே நேரத்தில் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

  “என்னங்க அபிக்கு என்ன ஆச்சு …அஞ்சலி ஹால்ல அவனுக்கு எதிர்ல தான் இருக்கா? இவன் கொஞ்சம் கூட கண்டுக்கவே மாட்டேன்ங்குறான்.அவன் பாட்டிற்கு போறான்.ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா?அஞ்சலி சண்டை போட்டா கூட அபி எப்பவும் இறங்கி போய் பேசுவானே.இன்னிக்கு என்ன ஆச்சு இந்த அஞ்சலி எதுவும் ஏடாகூடமா செய்து வைச்சுட்டாளோ”  

“ஹே…போதும் போதும் நிறுத்து..கொஞ்சம் மூச்சு விடு..நீ பாட்டிற்கு அடுக்கிக்கிட்டே போற…இது சாதாரண விஷயம் .இதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?அபி வேற ஏதாவது டென்ஷன்ல கவனிக்காம போய் இருப்பான்.அதை போய் ஏன் பெருசு பண்ற?

அபியும் சரி அஞ்சலியும் சரி மத்த விஷயத்தில் எப்படியோ எனக்கு தெரியாது ஆனா அவங்க ரெண்டு பெரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சு இருக்கிற பாசத்தை பத்தி எனக்கு நல்லா தெரியும்.ஒருவேளை ரெண்டு பேருக்கும் நடுவில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் கூட அதற்கு ஆயுசு ரொம்ப கம்மி.

ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பாசமா இருக்காங்க.நீ தேவை இல்லாமல் குழப்பிக் கொள்ளாதே” என்று மனைவியை தேற்றியவரின் மனமோ மகனின் பாராமுகத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் இறங்கியது.  

குளித்து முடித்து சாப்பிடக் கூட வராமல் எங்கோ வெளியில் கிளம்பிய மகனை பார்வையால் தொடர்ந்தார் ராஜேந்திரன். தாய் வறுபுறுத்திக் கொடுத்த ஜூசை குடிக்காமல் வெறுமனே கையில் வைத்துக் கொண்டு ஏதோ நினைவில் இருந்த மகனை கேள்வியாய் பார்த்துக் கொண்டு இருந்தார் அவர்.மகனிடம் பேச முனைந்த பார்வதியை பார்வையாலேயே தடுத்துவிட்டு தனிமையில் மகனிடம் இது குறித்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.  

“அண்ணா என்னை காலேஜ்ல டிராப் பண்ணிடு” என்று சொன்னபடியே அவனுக்கு அருகில் கையில் வாட்சை கட்டியபடியே வந்து நின்றாள் அஞ்சலி.

  “டிரைவர் கூட போய் இறங்கிக்கோ அஞ்சலி…எனக்கு முக்கியமான வேலை இருக்கு.” அபிமன்யுவின் அந்த பதிலில் மொத்த வீடும் அமைதி ஆனது.எல்லாருமே ஒரு விதத்தில் அதிர்ந்து போய் இருந்தனர்.

தாய், தந்தை, அஞ்சலி, வீட்டு வேலையாள் உட்பட… ஆனால் அதிகம் அதிர்ந்தது அஞ்சலி தான்.   வீட்டினர் மொத்தமும் அதிர்ந்து நிற்பதை கொஞ்சமும் கவனிக்காது அபிமன்யு தன் போக்கில் கிளம்பி காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.முதலில் சுதாரித்த ராஜேந்திரன் பார்வதியையும் தோளில் தட்டி சுய உணர்விற்கு கொண்டு வந்தார்.   பத்து நிமிடங்கள் கழிந்தும் அதிர்ந்து நின்றது அஞ்சலி மட்டுமே.

மெதுவாக அவளின் தோளின் தட்டியவர், “ அவனுக்கு வேறு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு நேத்தே என்கிட்ட சொன்னான் அஞ்சு.அதான் கிளம்பிட்டான்.நீ வா உன்னை நான் டிராப் பண்ணுறேன்.” என்று கூறியபடி அவளின் கையை பிடித்தவரின் கையை விலக்கி விட்டு அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள் அஞ்சலி.  

“நான் காலேஜ் போகலைப்பா…நீங்க போங்க…போய் உங்களுக்கு வேறு ஏதாவது ‘முக்கியமான’ வேலை இருந்தா அதை பாருங்க” அஞ்சலியின் குரலை வைத்தே அவளின் கோபத்தை அவரால் உணர முடிந்தது.

  “அஞ்சலி அதான் டாடி சொல்றாரு இல்ல…அபிக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்து இருக்கும் அதற்காக இப்படி காலேஜ் போகலைன்னு சொன்னா எப்படி?” என்று மகளை தேற்றி காலேஜ்க்கு கிளப்ப முனைந்தார் பார்வதி.

  “என்னை விட அப்படி அண்ணனுக்கு வேறு எந்த வேலை முக்கியமா போச்சு.”   அவளின் அந்த கேள்விக்கு பார்வதியிடம் பதில் இல்லை.எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி விட வேண்டும் என்ற நினைவில் பேச தொடங்கினார்.  

“இன்னிக்கு உனக்கு செமஸ்டர் எக்ஸாம் நியாபகம் இருக்கா இல்லையா?”

  “அந்த நினைவு அண்ணனுக்கு ஏன் இல்லை மம்மி?”   “இது என்ன அஞ்சு நீ இப்படி வீண் விதண்டாவாதம் செஞ்சுக்கிட்டு இருக்க? அண்ணன் வெளியூர் போய் இருக்கும் சமயங்களில் நீ டாடி கூட தானே காலேஜ்க்கு போய்க்கிட்டு இருந்த… அது போல இன்னைக்கு ஒரு நாள் போய்ட்டு வந்துடு”  

“ஆனா அண்ணன் இப்ப வெளியூர்ல இல்ல மம்மி…”   “இது என்ன பிடிவாதம் அஞ்சு சொன்னா கேளு காலேஜ்க்கு கிளம்பு…”  

“முடியாது மம்மி” என்று தீர்மானமாக உரைத்தவள் அங்கிருந்து தன்னுடைய ரூமுக்குள் சென்று விட்டாள்.

  “இது என்னங்க இவ இப்படி சொல்லிட்டு போறா? இந்த அபிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக்கிறான்? இவளை பத்தி தான் அவனுக்கு நல்லா தெரியுமே?இத்தனைக்கும் அவளுக்கு இந்த அளவுக்கு செல்லம் கொடுத்து அவளை கெடுத்ததே அவன் தானே…  இருந்தும் இப்படி செஞ்சு வச்சா நாம என்ன தான் செய்யுறது? முதல்ல அவனுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வந்து இந்த மகராசியை கூட்டிக்கொண்டு போக சொல்லுங்க.இவளுக்கு இன்னிக்கு செமஸ்டர் எக்ஸாம் வேற இருக்கு.” என்று கணவரிடம் கூறிவிட்டு மகளின் அறையை நோக்கி சென்றார்.

  அங்கே கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டு இருந்தாள் அஞ்சலி.அவளின் அழுகைக்கு காரணம் அபியின் மேல் அவளுக்கு இருந்த பாசம் தான் என்பதை உணர்ந்தவர் மெதுவாக கட்டிலில் அமர்ந்து அவளது தலையை வருடிக் கொடுத்தார். யார் என்று திரும்பிப் பார்த்தவள் மீண்டும் அழுக ஆரம்பித்தாள்.  

“அஞ்சு..நீ சின்ன பொண்ணு இல்லை…இதுக்காக எல்லாம் அழலாமா?அண்ணனுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்து இருக்கும்.அப்பா கூட அப்படிதானே சொன்னார்.அழாதே அஞ்சு”

  “இத்தனை வருஷத்தில் இது புதுசா இருக்கே மம்மி… எப்பொழுதும் அண்ணனுக்கு எனக்கு அப்புறம் தானே எல்லா விஷயமும்.இன்று மட்டும் என்ன ஆச்சு…அப்படினா என்ன அர்த்தம் ? அண்ணனுக்கு என்னை விட வேற ஏதோ ஒண்ணு முக்கியமா போயிடுச்சா? இல்லை எனக்கான முக்கியத்துவமும் , பாசமும் குறைஞ்சு போச்சா?இது ரெண்டுத்துல எதுவா இருந்தாலும் அதை தாங்கிக்க என்னால முடியாது மம்மி.” என்று கூறிவிட்டு மேலும் அழுகையில் கரையத் தொடங்கினாள் அஞ்சலி.

  மகளை தேற்றும் வழி அறியாமல் பார்வதி முழித்துக்கொண்டு இருக்க அறையின் வாயிலில் இருந்த ராஜேந்திரன் மகள் பேசிய அனைத்தையும் கேட்டு மகள் சொல்வதிலும் ஒரு நியாயம் உள்ளது என்றே நினைத்தார்.   திடீரென்று மகனின் போக்கில் ஏற்பட்ட மாறுதலை அஞ்சலியால் தாங்க முடியவில்லை என்பதை உணர்ந்தார்.

அஞ்சலியின் பாசத்தை அவரால் உணர முடிந்தது.அவரால் அஞ்சலி மீது குறை சொல்ல முடியவில்லை.சற்று தள்ளி தோட்டத்துக்கு வந்தவர் அபிமன்யுவின் எண்களை போனில் அழுத்தி பேசத் தொடங்கினார்.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here