குண்டோதரன்

0
44

தினமும் ஒரு குட்டி கதை

குண்டோதரன் !

குடந்தை நகரத்தில் குப்பன் என்றால் யாருக்கும் தெரியாது. குண்டோதர குப்பன் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை பிரசித்தம். குழந்தையாக இருக்கும் போதே அவன் பாட்டி செல்லமாக வயிறு புடைக்க ஊட்டிவிடுவாள். அப்போதே ஜூராசிக் பேபி ஆகிவிட்டான். வயது கூட கூட வளர்ச்சியும் அபரிதமாகக் கூடியது.

தொப்பையும் தொந்தியும் வயதுக்கு மீறி குண்டானதால் எல்லாரும் அவனை குண்டோதரா என அழைத்தனர். பள்ளியிலும் எந்த விளையாட்டிலும் பங்கேற்க முடியவில்லை. அவன் தந்தை தருமன் அவனை, “தினந்தோறும் ஒருமணி நேரம் வேகமாக நடக்கவேண்டும்; உடற்பயிற்சி செய்ய வேண்டும்; கொழுப்பு சத்துள்ள பண்டங்களை சாப்பிடக்கூடாது. இளச்சவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்குக் கொள்ளு என்றபடி நீ தினந்தோறும் கொள்ளு தண்ணீர்தான் குடிக்கவேண்டும்’ என பலவிதமாக அவனுக்குப் புத்திமதிச் சொல்லிப்பார்த்தார்.
எல்லாவற்றிற்கும் தலையாட்டுவானேத்தவிர எதையும் சரிவர பின்பற்றவில்லை. இரண்டு தினங்கள் நடைபயிற்சி போவான். பின் ஒருவாரம் போகமாட்டான். எங்காவது கல்யாணம், விருந்து என்றால் வஞ்சனை இல்லாமல் ஒரு பிடி பிடிப்பான். கையில் காசு கிடைத்தால் நொறுக்குத் தீனி, ஐஸ்கிரீம். இதையெல்லாம் பார்த்து தருமன் அலுத்துப்போய்விட்டார். முடிவாக ஆழ்ந்த யோசனைச் செய்து குப்பனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தால்தான் பலன் கிட்டுமென எண்ணி செய்கையில் இறங்கினார்.
அதன்படி தன் மனைவியை கொஞ்சம் லட்டு செய்து தரும்படிக் கேட்டார். அதை ஒரு டப்பாவில் போட்டு, “”ஏய் குண்டா! இங்க வா! என் நண்பனுக்கு 60வது பிறந்த நாள். எனக்கு உடல் நலம் சரியில்லை. ஆகவே, எனக்குப் பதிலாக நீ சென்று என் வாழ்த்துக்களைக் கூறி, இந்த இனிப்பு லட்டுக்களை அவரிடம் கொடுத்து வா!” என்றார்.
லட்டு என்றதும் குப்பனுக்கு நாக்கில் ஜலம் ஊறியது. அதனால் உடனே மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டான். தன் கிராமத்தைத் தாண்டிச் செல்லும் வழியில் ஒரு சுடுகாடு உள்ளது. இருப்பினும் குப்பன் மாலையில் புறப்படத் தயாரானான். அதற்குமுன் அவன் தந்தை தருமன் முன்னதாகவேச் சென்று, சுடுகாட்டின் அருகில் ஒரு பெரிய மரத்தின் பின் மறைந்துக் கொண்டார்.
குப்பன் சுடுகாட்டை நெருங்கும்போது இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. நடந்து வந்தக் களைப்பில் இரண்டு லட்டுகளைச் சாப்பிட்டால் என்ன என்று ஒரு ஓரமாக உட்கார்ந்து லட்டை ருசித்தான்.
அதைக் கண்டு மறைவிலிருந்த அவன் தந்தை தருமன் குரலை மாற்றிக் கொண்டு, “”யாரடா அங்கே? என் எல்லையில் புகுந்தது. திருட்டு பயலே! என்ன தின்கிறாய்? எனக்கோ அகோர பசி. குண்டா உன்னை விழுங்கினால்தான் என் பசி தீரும். அசையாதே இதோ வருகிறேன்!” என்றார்.
இடமோ சுடுகாடு. இருள் சூழ்ந்துவிட்டது. ஏதோ பேய்தான் வருகிறது என பயந்து எடுத்தான் ஓட்டம் வீட்டை நோக்கி. வீட்டு வாசற்படியில் வந்து விழுந்தான்.
“”அய்யோ! அம்மா! அப்பா! என்னைக் காப்பாற்றுங்கள். என்னை பேய் துரத்தி வருகிறது!” எனக் கதறினான்.
குப்பன் குரலைக் கேட்டு அவன் தாத்தாவும், அம்மாவும் வெளியே வந்து, “”என்னடா குப்பா! என்னவாயிற்று எதைக் கண்டு பயந்தாய்? ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது?” என்று வினவி அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, விபூதி பூசி திருஷ்டிக் கழித்தனர்.
அச்சமயம் ஒன்றுமே தெரியாததுபோல் தருமன் உள்ளே வந்தார். என்ன சமாசாரம் என்றார்.
“”குப்பன் எதையோ பார்த்து பயந்து திரும்பி வந்துவிட்டான்!”
“”அதெல்லாம் ஒன்றுமிருக்காது. வெறும் பிரமைதான். அவனுக்கு ஏதாவது ஆகாரம் கொடு!” என்றார் தருமன்.
“”இல்லை அப்பா! பிரமை அல்ல உண்மையிலேயே ஒரு பேய் சுடுகாட்டில் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். உன்னை விழுங்காமல் விடமாட்டேன். உன்னை விழுங்கினால்தான் என் பசி தீரும் என்றது. அதனிடமிருந்து தப்பித்தால் போதுமென ஓடிவந்தேன். இந்த உடம்போடு நடக்கமுடியாத எனக்கு எப்படி ஓடமுடிந்தது என்று யோசித்துப்பாருங்க… அப்போதுதான் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் புரிந்தது.
“”நான் குண்டாய் இருந்ததால்தானே அப்பேய் என்னைக் கொல்ல வந்தது. இனி நீங்கள் சொல்வதுபோல் நடைபயிற்சி அல்ல ஓட்டப்பயிற்சிதான். சாப்பாடு மற்றும் எல்லா விஷயத்திலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்!” என்று உறுதிப்படக் கூறினான்.
சாப்பிடும்போது தன் தட்டில் வைத்த லட்டை எடுத்து தன் தந்தையின் தட்டில் வைத்து விட்டான். ஆறுமாதத்திலேயே பருமன் குறைந்து ஆண் அழகனாக மாறிவிட்டான். அவனை பார்த்தவர்களெல்லாம், “இதுயார் குண்டோதர குப்பனா நம்பமடியவில்லையே!’ என்றனர். வீட்டில் எல்லாரும் பேய்க்கு நன்றி தெரிவித்தனர். தருமன்தான் பேய் என்று யாருக்கும் தெரியாத ரகசியமாயிற்றே. தருமன் தன் தந்திரம் பலித்ததற்கு மகிழ்ச்சியுற்றார்..

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here