குழந்தை மஞ்சுவிற்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தாள் பாட்டி மரகதம்
மரகதத்தின் ஒரே செல்ல மகன் ஆதி .. சிறு வயதில் தந்தையை இழந்து தாய் பட்ட கஷ்டத்தை நன்கு உணர்ந்து பொறுப்பாக படித்தான் . ஒரு பன்னாட்டு நிறுவன கம்பெனியில் வேலையும் கிடைத்தது . உடன் பணிபுரியும் அனுவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டான். கல்யாணம் ஆன மூன்றாவது மாதத்திலே அனுவும் கருவுற்றாள். இதுதான் சொர்க்கமோ என்று பார்ப்பவர் வியக்கும் வண்ணம் இருவரும் வாழ்ந்து வந்தனர். அப்பொழுதுதான் விதி என்னும் அரக்கன் இவர்கள் வாழ்வில் விளையாடினான். பிரசவ நேரத்தில் அனு அவர்களின் தேவதையை ஆதியிடம் ஒப்படைத்து விட்டு தன் கடமை முடிந்தது என்று எண்ணி இறைவனடி சேர்ந்தாள் .. மதி கலங்கி நின்றான் ஆதி..
அன்றிலிருந்து ஆதி உயிரற்ற உடல் போல் காணப்பட்டான். எதிலும் அவன் நாட்டம் கொள்ளவில்லை. இருப்பினும் மகளின் வதனத்தை கண்டு அவளுக்காக வாழ வேண்டும் என சபதம் ஏற்றான். அனுவின் பெற்றோர் வந்து தன் மகளை கேட்கும் பொழுதும் தர மறுத்து விட்டான். என் வாழ்வின் ஒரே பிடிமானம் அவளே , தாயும் தந்தையுமாக இருந்து அவளை வளர்ப்பேன் என்று உரைத்தான். மகனின் நிலை அறிந்நு அவனுடைய தாய் மரகதம் கிராமத்தில் இருந்து வந்து மகனிற்கு துணை நின்றார். பேத்தியை மிகவும் அருமையாக வளர்த்தார். காலங்கள் கடந்தோடியது. மஞ்சு ஐந்தாம் வகுப்பு வந்தாள். அம்மாவுடனும் மகளுடனும் இன்பமாக வாழ்ந்தான் ஆதி..
ஆனால் இம்முறையும் விதி அவர்களை வாழ விடவில்லை. அயல்நாட்டிற்கு தொழில் நிமித்தமாக சென்ற அவன் கொடிய நோயான கொரனா வால் பாதிக்கப்பட்டான். மூன்று இரவுகளே அயல் நாட்டில் தங்கிய பொழுதும் அவனை அறியாமலே நோய் தடையின்றி அவனை வந்தடைந்தது. பின் தாய்நாட்டிற்கு திரும்பி விட்டான். ஆனால் அந்த நோயினால் அவன் ஆட்கொள்ளப்பட்டது பற்றி அவனுக்கு தெரியாது .
தமிழ்நாட்டிலும் விழிப்புணர்வு செய்திகள் பிரசுரித்தன. தேவை இல்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசாங்கத்தால் மக்கள் கேட்டு கொள்ளப்பட்டார்கள். ஆனால் இவன் அதை அலட்சியம் செய்தான் .
மரகதம் :: ஆதி நீ வெளிநாட்டிற்கு போயிட்டு வந்ததிலிருந்து உனக்கு ஒரே இருமலா இருக்குடா. எனக்கு என்னமோ நீ கொரனா வால பாதிக்கப்பட்டிருப்பியோ னு தோணுது டா. எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வாயேன் டா..
ஆதி : அட போமா , அந்த நாட்டோட சீதோஷ்ண நிலை எனக்கு ஒத்துக்கலை. அவ்ளோதான். இரண்டு நாள் மிளகு பால் குடிச்சா சரி ஆயிடும். நான் லேப்டாப் ஆன் பண்ண போறேன். மேனஜர்ட்ட பேசணும். டோன்ட் டிஸ்டர்ப் மீ மம்மி.
மரகதம் : அடேய் சரிடா அடுத்த வாரமும் உனக்கு இருமல் குணமாகவில்லையெனில் நீ பிளட் டெஸ்ட் எடுக்க ஒத்துக்கணும்
ஆதி : ஷுயர் டியர் மம்மி
மரகதம் : சரிடா இன்னும் ஒரு கண்டிஷன் . நீ இனிமே வீட்டை விட்டு வெளிய வர கூடாது சரியா. நோய் இல்லனு கன்பார்ம் ஆன அப்புறம் தான் வரணும் .
ஆதி : சரி என்றான் எரிச்சலுடன் அவனுக்கு ஆபிஸ் டியூட்டி இருந்தபடியால் தாயுடன் மேலும் விவாதத்தை வளர்க்க விரும்பாமல் சரி என்று முடித்துக் கொண்டான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மதியம் உணவு உண்டுவிட்டு ஆதியின் தாயும் மகளும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தூக்கம் வராமல் ஆதி வீட்டின் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்பொழுது கீழே எட்டு வயது சிறுமி பலூன் ஊத முயன்று கொண்டிருந்தாள். ஆனால் முடியவில்லை . கடைசியில் தன் இயலாமையை நினைத்து அழ ஆரம்பித்தாள் . மேலே இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதிக்கு சிரிப்பும் தன் மகளின் நினைவும் வர எதையும் யோசிக்காமல் அச்சிறுமி முன் சென்றான் .
ஆதி : பாப்பா உன் பேரு என்ன
அர்ச்சனா என்றது மழலை மொழியில்
ஆதி : உன் வீடு எங்கம்மா ?. அம்மா எங்கே ?
அம்மா வீட்டுக்குள்ள இருக்காங்க . எனக்கு ஒரே போரிங்கா இருக்கு அங்கிள். எவ்ளோ நேரம் தான் டிவி , மொபைல் பார்க்க . அதான் வெளியே வந்தேன். ஆனா பாருங்க இந்த பலூன் சேட்டை பண்ணுது . நான் ஊதுனா பெரிசாவே ஆக மாட்டிக்கு என்றது.
உடனே அவன் அந்த பலூனை ஊதி கொடுத்துவிட்டு அவள் கன்னத்தில் சிறு முத்தமும் இட்டு அந்த குழந்தை கை காட்டிய வீட்டிற்கு சென்று அவள் தாயிடம் ஒப்படைத்து விட்டு மேலே அவனுடைய வீட்டிற்கு வந்து தனதறைக்குள் புகுந்தான். மரகதம் மஞ்சு வுடன் நன்கு அசந்து தூங்கி கொண்டிருந்தப் படியால் அவளுக்கு ஆதி வெளியில் சென்றது பற்றி எதுவும் தெரியாது . ஆதியும் இதை ஒரு பெரிய விசயமாக கருதாத படியால் தாயிடம் எதுவும் சொல்லவில்லை .
இரண்டொரு நாளில் அப்படி ஒரு சம்பவம் நடந்தே விட்டது. ஆம் குழந்தை அர்ச்சனா தன் இன்னுயிரை துறந்தது. குழந்தைக்கு கொரனா பாதிப்பு உறுதி செய்யபட்டது. பின் அரசாங்கத்தால் அந்த தெருவில் அனைவரும் டெஸ்ட் எடுக்குமாறு ஆணையிடப்பட்டது .இதை தாயின் மூலம் அறிந்த ஆதி குற்ற உணர்ச்சியால் துடிதுடித்தான். இருப்பினும் அவன் குழந்தை அர்ச்சனாவை சந்தித்ததை வெளியே சொல்லவில்லை.
தன் மகளை இழுத்து கொண்டு ஓடினான் மருத்துவமனைக்கு . ஆம் குழந்தை மஞ்சுவிற்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாட்டி மரகதம் நன்றாக கவனித்து கொண்டாள். நில வேம்பு கஷாயம், மிளகு ரசம் என்று பேத்திக்கு தாயாக மாறினாள் . ஆனால் மரகதம் திடீர் மரணமடைந்து விட்டாள் .. ஆம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் நோய் வந்தவுடன் நோயைஅடையாளம் காணும் முன்னரே இறந்து விட்டாள். பாட்டியின் பிரிவினாலும் நோயின் வீரியத்தினாலும் மனதளவாலும் உடலாலும் மிகவும் சோர்ந்தே காணப்பட்ட மஞ்சு தன் தாயுடன் இரண்டற கலந்து விட்டாள். அந்த வீதியில் மொத்தம் 21 positive cases உறுதி செய்யப்பட்டன . அதில் 5 குழந்தைகளும் 7 முதியவர்களும் அடக்கம் . பாவம் என் செய்வார்கள் அவர்கள்.
ஆனால் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ஆதி எவ்வித மருந்தின் உதவியின்றியுமே நோயிலிருந்து குணமாக்கப்பட்டான் .. ஆனால் என்ன பயன் தன் தாய் மற்றும் மகளின் பிரிவால் நடைபிணமாய் வாழ்ந்தான். குற்ற உணர்ச்சி மேலும் கூறு போட்டு கொன்றது அவனை.
ஆம் அவன் நல்லவனாக இருந்த பொழுதும்
ஒரு அப்பாவி சிறுமி மற்றும் தன் தாய் மற்றும் தன் மகளின் மரணத்திற்க்கு அவனே தூது போனான். அது மட்டுமா அவனுடைய வீதியில் இன்னும் கண்ணுக்கு தெரியாமல்
எத்தனையோ மரகதங்கள் மஞ்சுளாக்களை உருவாக்கி விட்டான்..
இது நாம் அனைவரும் அரசுடன் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். தயவுசெய்து அனைவரும் வீட்டிலுள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளை கருத்தில் கொள்வோம். dears brothers and Sisters please stay at home ..
இக்கதையில் ஆதி மற்றும் குற்றவாளி அல்ல. அர்ச்சனாவின் தாயும்தான். அன்று மட்டும் அவள் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டிருந்தால் அக்குழந்தை வீட்டை விட்டு வெளியே வந்திருக்காது .. இக்கொடூரம் அரங்கேறி இருக்காது .அன்பு சகோதரிகளே இது விடுமுறை காலமன்று. நாம் நம்முடைய குழந்தைகளை கொரனாவின் பிடியில் சிக்க விடாமல் இருப்பதற்கான நேரம் . வீட்டிற்குள்ளையே முடிந்த அளவு உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.
ஒற்றுமையுடன் இருப்போம் . கொரனாவை கொல்வோம்…