சதிராடும் திமிரே அத்தியாயம் 9 tamil novels

0
435

அத்தியாயம் 9

அஞ்சலி அணைத்த அடுத்த நொடி அவளை தள்ளி விட முனைந்தவன் அப்பொழுது தான் உணர்ந்தான் அவளது கதறலை.

பல மணி நேரமாக அடக்கி வைத்திருந்த அழுகை அல்லவா? கரையை உடைத்த வெள்ளம் போல கண்ணீர் நிற்காமல் பொங்கி வந்தது அவளுக்கு.

துரைசாமியின் முன்பாக கண்ணீர் விட்டு அவரின் கீழ்த்தரமான ஆசையை பலிக்க விடக்கூடாது என்று இத்தனை நேரம் அழுகையை கட்டுப்படுத்தி வைத்தவளால், யாரும் இல்லா தனிமையில் முடியாமல் போனது.

இதே முன்பாக இருந்திருந்தால் சத்யனின் முன் கூட தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்தி இருப்பாள். ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே… அவள் தான் உறுதியாக முடிவு செய்து விட்டாளே.. சத்யன் தான் அவளின் கணவன். அவளது எதிர்காலம் என்று. இனி அதில் மாற்றமில்லை. அவளது உணர்வுகளை அவனிடம் மறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாய் அவளுக்கு தோன்றவில்லை.

அவனது தந்தையைப் பற்றி அவள் அறிந்த உண்மையை மட்டும் அவனிடம் இப்போதைக்கு சொல்ல அவள் விரும்பவில்லை.

அது பிரம்மாஸ்த்திரம்… அதை வைத்துத் தான் அவள் நிறைய காரியங்கள் சாதிக்க வேண்டி இருக்கிறது. எனவே அதை மட்டும் மறைத்து விட முடிவு செய்து விட்டாள்.

அவளின் அழுகையிலும், அணைப்பிலும் திகைத்த சத்யன் ஒரு சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு விலக முயல… அவள் விட்டால் தானே?

“ப்ளீஸ்!” இறைஞ்சலாய் ஒலித்த அவள் குரலில் செய்வதறியாது தவித்து நின்றது என்னவோ சத்யன் தான்.

அவனுக்கு நன்றாக புரிகிறது. இது ஆசையில் அணைத்த அணைப்பில்லை. அழுகையில்… ஆறுதலுக்காக அணைத்திருக்கிறாள் என்று. ஆனாலும் இது தவறு என்று அவன் மனம் கூவியது. அதை அலட்சியப்படுத்த அவனால் முடியவில்லை.

யாரேனும் பார்த்தால் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ளக் கூடும்? அதுவும் அவள் தன்னை மணந்து கொள்வதைப் பற்றி வெளிப்படையாகவே பேசிய பிறகு… யாரேனும் இந்தக் காட்சியை பார்த்து விட்டு அபிமன்யுவின் வீட்டில் சொல்லி விட்டால் பழி முழுக்க அவன் மேல் தானே விழும்.

அறியாப்பெண்ணை மயக்கி அவளை அணைத்துக் கொண்டு இருந்ததாக… இவ்வளவு கேள்விகளும், குழப்பங்களும் மனதில் இருந்தாலும் அவளை தள்ளி விடவில்லை சத்யன். அவனது ஒரு கை ஆதரவாக அஞ்சலியின் தலையை வருடிக் கொண்டிருந்தது.  

சில நொடிகள் அழுது தீர்த்தவள் மெல்ல சுதாரித்துக் கொண்டு சத்யனை விட்டு விலகினாள்.

சத்யன் அவள் முகத்தைப் பார்க்காமல் சில நொடிகள் தயங்கியவன் அவளைப் பார்ப்பதும் பின் வெளியே வேடிக்கைப் பார்ப்பதுமாக இருந்தான்.

அவன் என்ன நினைக்கிறான் என்று புரியாமல் இல்லை அஞ்சலிக்கு.

“தெரியாம எல்லாம் உங்க மேல சாய்ஞ்சு அழலை… நீங்கன்னு தெரிஞ்சு தான் செஞ்சேன். இனியும் செய்வேன்… ஏன்னா நீங்க என் ப்ராப்பர்ட்டி. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு… நீங்களும் இனி பழகிக்கோங்க” என்று இயல்பாய் சொன்னவளைப் பார்த்து புருவம் சுருக்கினான் சத்யன்.

“இந்த பேச்சு வேண்டாம்ங்க… ஏதோ மன வருத்தத்தில் இப்போ இருக்கிறதால நான் ஒன்னும் சொல்லல… எப்பவும் இதே மாதிரி இருக்க மாட்டேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது.”

“அதுக்குத் தான் பழகிக்க சொன்னேன்” என்றாள் இடைமறித்து.

“சொன்னா புரிஞ்சுக்கோங்க”

“என் முடிவு எப்பவும் இது தான்… டிரைவர் வர்றார்.. அப்புறம் பேசலாம்” என்றவள் காரில் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொள்ள சத்யனும் மேற்கொண்டு பேச்சை தொடர முடியாமல் போனது.

அபிமன்யுவின் வீட்டிற்கு ஏற்கனவே திருமணத்தின் பொழுது ஒருமுறை வந்து இருந்தாலும் அப்பொழுது இருந்த பரபரப்பில் எதையும் அவன் கவனித்து பார்க்கவில்லை. இப்பொழுதும் கூட மனம் முழுவதும் வருத்தம் தேங்கி இருக்க… கண்ணில் பட்ட மாளிகை அவன் கருத்தை கவரவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும் அஞ்சலி தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டவள் சில நொடிகள் கழித்து வெளியே வந்தாள்.

“சாரி… உங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லவே மறந்துட்டேன்… கீழே கெஸ்ட் ரூம் இருக்கு.. அதை யூஸ் பண்ணிக்கோங்க” என்றவள் வேலையாளிடம் இருவருக்கும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தயார் செய்ய சொன்னாள்.

மறுக்காமல் காபியை வாங்கிக் கொண்டாலும் சத்யன் அவளைத் தான் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன கேட்க நினைக்கறீங்க?” அவனைப் பார்க்கவிட்டாலும் அவன் பார்வையை அவளால் உணர முடிந்ததே.

“ரொம்ப வித்தியாசமா நடந்துக்கறீங்க”

“நானா? நான் என்ன வித்தியாசமா நடந்துகிட்டேன்?” அவளுக்கு புரியவில்லை.

“மாப்பிள்ளைக்கும், தங்கச்சிக்கும் இப்படி ஆகிடுச்சுன்னு ஹாஸ்பிடலில் வச்சு சொன்னப்போ உங்க கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் இல்லை… அப்புறம் காரில் யாருமே இல்லாத நேரத்தில் அப்படி கதறி அழுதீங்க… உங்க வீட்டுக்கு வந்ததும் இப்போ எனக்கு காபி கொடுத்து உபசரிச்சுட்டு இருக்கீங்க”

“ஸோ… வாட்… என்னோட அண்ணன், அண்ணி மேல எனக்கு பாசம் இல்லைன்னு சொல்றீங்களா?”

“சே! சே!…. பட்… கொஞ்சம் குழப்பமா இருக்கு.. உங்க நடவடிக்கை எல்லாம்”

“எனக்கு ஒரு கண் போனா என்னோட எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும்னு நினைக்கிறவ நான்.. என்னோட அண்ணன் மேலயும், அண்ணி மேலயும் கை வச்சவனை சும்மா விடுவேனா… ஆனா அழுகை என்னை பலவீனமாக்கிடும். உள்ளுக்குள்ளேயே தேக்கி வைச்சு இருந்தா தான் மொத்த கோபத்தையும் இறக்க முடியும்.

எஸ்… காருக்குள்ளே அழுதேன் தான். மம்மியையும், டாடியையும் பார்த்ததும் கொஞ்சம் கன்ட்ரோல் மிஸ் ஆகிடுச்சு. இனி அழ மாட்டேன். அண்ணியும், அண்ணனும் திரும்பி வரட்டும். அதுக்கு அப்புறம் அந்த துரோகிக்கு இருக்கு” என்று கண்கள் சிவக்க பேசிய அஞ்சலி அவனுக்கு முற்றிலும் புதிதாக தெரிந்தாள்.

“ரொம்ப ஆபத்தான பொண்ணுங்க நீங்க”

“கரெக்ட் கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ஜாக்கிரதையா தான் இருக்கணும்” என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டவளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான் சத்யன்.

“அண்ணனையும், அண்ணியையும் எப்படியும் மதியத்துக்கு மேலே தான் நார்மல் வார்டுக்கு மாத்துவாங்க. அதுக்கு அப்புறம் தான் நாம போய் பார்க்க அனுமதி கொடுப்பாங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நீங்களும் டயர்டா தானே இருப்பீங்க. ரெஸ்ட் எடுங்க. நான் என்னோட ரூம்க்கு போறேன்” என்று சொன்னவள் அவனது பதிலை எதிர்பாராமல் தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டாள்.

கதவை பூட்டியவள் முதல் வேலையாக தன்னுடைய மொபைலை எடுத்து சில வேலைகளை செய்து முடித்தாள்.

அடுத்ததாக அவளுக்கு தோழியின் மூலமாக ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவியை (ஸ்ரீரங்கத்து ராட்சசி ஹீரோ) தொடர்பு கொண்டாள்.

துரைசாமியின் மீது தனக்கிருக்கும் சந்தேகத்தை பற்றி மட்டும் எதுவும் சொல்லாமல் அபிமன்யு, சஹானாவின் மீது நடைபெற்ற தாக்குதலைப் பற்றி மட்டும் சொன்னாள்.

“இதுக்கு யார் காரணம்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க ஜீவா சார். அபிசியலா அப்பா கம்ப்ளைன்ட் கொடுப்பார் தான். இருந்தாலும் எனக்கு என்னவோ நீங்க இந்த கேஸை எடுத்துகிட்டா நல்லா இருக்கும்னு தோணுது. ப்ளீஸ்!” என்று இறைஞ்சுதலாக கேட்டாள்.

“கவலைப்படாதீங்க சிஸ்டர்… நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் உறுதி கூற சற்றே ஆறுதல் அடைந்தவள் மேலும் ஒரு கோரிக்கையையும் வைத்தாள்.

“ஒரு ரெக்வஸ்ட் சார்… ஆள் யாருன்னு கண்டுபிடிச்சதும் முதல்ல என்கிட்டே தான் சொல்லணும்.”

“அவ்வளவு தானே சிஸ்டர்… செஞ்சுட்டா போச்சு… என்னோட ஆளு மதுர வாணி உங்க அண்ணனோட தீவிர ரசிகை… காலையில் நியூஸ் கேட்டதில் இருந்தே அம்மணி ஒரே சோகம். யார் இதை செஞ்சானோ தெரியலைன்னு வண்டி வண்டியா சாபம் கொடுத்துட்டு இருக்கா… அவ பேசுன பேச்சுல காதுல ரத்தம் வந்துடுச்சு.. அவ்ளோ கிரீன் கிரீனா திட்டுறா… அவனை மட்டுமில்லை… டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிற என்னையும். அவ வாயில் இருந்து தப்பிக்கணும்னா சீக்கிரமா குற்றவாளியை கண்டுபிடிக்கணும்னு வேண்டிகிட்டே இருந்தேன். நல்லவேளை இப்போ என்கிட்டேயே கேஸ் வந்துடுச்சு… இனி நான் பார்த்துக்கிறேன்” என்று உறுதி அளித்தான் சிரஞ்ஜீவி.

சிரஞ்ஜீவி நேர்மையானவன்… திறமையானவனும் கூட.. கண்டிப்பா ஆதாரங்களை கண்டுபிடித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விடுவான் என்று நம்பினாள்.

மனதில் ஒரு ஓரத்தில் ஒரு துளி அளவிற்கு அவளுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஒருவேளை இந்த காரியத்தை செய்தது துரைசாமி அனுப்பிய ஆளாக இல்லாமல் வேறு யாரேனும் செய்து இருந்தால்?

சிறு துளி அளவு சந்தேகம் மட்டும் தான். அதற்காக எல்லாம் துரைசாமியை அவள் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி ஒரு எண்ணம் வந்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அவர் உணர வேண்டாம். அதற்கு அவள் அந்த வீட்டு மருமகளாகத் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.

மருத்துவமனையில் இருந்த பெற்றோருக்கு உணவு எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டாள். அபிமன்யு, சஹானா இருவரையும் ரூமிற்கு மாற்றும் வரை காத்திருக்க பொறுமை இல்லை அவளுக்கு.

சத்யனும்  அவளுடன் கிளம்பி மருத்துவமனைக்கு வந்து சேர… அபிமன்யு அப்பொழுது தான் கண் விழித்து இருந்தான். உடலில் காயங்கள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை அவனுக்கு. அஞ்சலி கொஞ்சம் நிம்மதியானாள்.

சுற்றி இருந்த உறவுகள் யாரும் அவன் கண்ணில் படவில்லை.

“ச… சனா எங்கேம்மா?” தாயிடம் தான் கேட்டான்.

“மருமகளுக்கு ஒண்ணுமில்லை அபி… இன்னும் ரூமுக்கு மாத்தலை.. ரூமுக்கு மாத்தினதும் உன்னை அழைச்சுட்டுப் போறேன்” என்று ராஜேந்திரன் பதில் சொல்ல அந்த பதில் அவனுக்கு போதுமானதாய் இல்லை.

“நான் உடனே அவளைப் பார்க்கணும்… என்னை அழைச்சுட்டு போங்கப்பா…”

“கொஞ்ச நேரம் வெயிட் செய்யேன் அபி” கெஞ்சுதலாக அவர் கேட்க… அதற்கு செவி சாய்க்க மறுத்தான் அபிமன்யு. அவனுக்கு கண் முன்னே சஹானாவை ரவுடிகள் வெட்டிய காட்சியே வந்து வந்து போக… அவளை பார்க்க துடியாய் துடித்தான்.

“அப்பா… ப்ளீஸ்! புரிஞ்சுக்கோங்க… எனக்கு அவளை உடனே பார்க்கணும்” என்று கத்தியவன் கட்டிலை விட்டு இறங்க முற்பட… அவனை அடக்குவதே பெரும்பாடாய் போனது மற்றவர்களுக்கு.

யார் சொல்லுக்கும் அடங்கவில்லை அவன். மனைவியை உடனே காண வேண்டும் என்று எல்லாரிடமும் கெஞ்சியவன் யாரும் செவி சாய்க்காமல் போனதால் உடம்பில் பொருத்தி இருந்த ஊசிகளை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு கட்டிலை விட்டு இறங்க துணிந்தான். இது அனைத்தையும் அறையின் ஒரு ஓரத்தில் இருந்து கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தார் துரைசாமி.

“அண்ணா.. இப்போ எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்க நீ?” அஞ்சலியின் அதட்டலில் நிதானத்திற்கு வந்தான் அபிமன்யு.

“அஞ்சலி… அண்ணியை பார்க்க யாரும் என்னை விட மாட்டேங்கிறாங்க டா… நீயாவது கொஞ்சம் சொல்லேன்” என்று தங்கையிடம் கெஞ்ச… சுற்றி இருந்த உறவுகள் அனைவருக்கும் கண்ணில் ரத்தம் வராத குறை. பார்வதியின் நிலையோ கேட்கவே வேண்டாம்.

எங்கே சத்தம் போட்டு அழுது விடுவோமோ என்று அஞ்சி புடவை தலைப்பை வாயில் வைத்து அழுத்தி… அவரது அழுகை சத்தம் வெளியே யாருக்கும் கேட்காத வண்ணம் நின்று கொண்டிருந்தார்.

அஞ்சலியின் கண்கள் எல்லாரையும் பார்த்தாலும் அதீத சந்தோஷத்தில் மின்னிக் கொண்டிருந்த துரைசாமியின் மீது ஒரு கணம் அதிகமாகவே படிந்தது.

“அவங்களுக்கு தொந்தரவு கொடுக்கப் போறியா?” அண்ணனிடம் அழுத்தமாய் கேட்டாள்.

“தொந்தரவு எல்லாம் இல்லைடா…ஜஸ்ட் போய் பார்த்துட்டு வந்துடறேன்… நீ சொல்லேன்” அவளது உயிருக்கு உயிரான அண்ணன் அவளிடம் கெஞ்சுகிறான்… எப்படி இருக்குமாம் அவளுக்கு. வெளியே திடமாய் காட்டிக் கொண்டாள் அஞ்சலி.

“அவங்களை இப்போ தான் பார்த்துட்டு வர்றேன். டாக்டர் தூங்குறதுக்கு ஊசி போட்டு இருக்காங்க அஞ்சலி… ரொம்ப தூக்கமா வருது. யாரும் வந்து என்னை தொந்தரவு செய்யாம பார்த்துக்கோன்னு சொல்லிட்டு தான் தூங்கினாங்க… இப்போ நீ போனா அவங்க தூங்குவாங்களா?” தெரிந்தே பொய் சொன்னாள்.

“நான் வேணும்னா வெளியே நின்னு பார்த்துட்டு வந்துடறேனே”

“அண்ணா… சின்ன பிள்ளை மாதிரி பேசாதே… அவங்க என்ன கண்ணாடி ரூம்லயா இருக்காங்க… நீ வெளியே நின்னு பார்க்க… நீ கதவை திறக்கிற சத்தத்தில் கூட அவங்க முழிச்சுப்பாங்க..” என்று ஏதேதோ சொல்லி அவன் வாயை மூடினாள்.

சத்யன் அவளையும் அபிமன்யுவையும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இத்தனை நேரம் யாருக்கும் அடங்காமல் திமிறிக் கொண்டிருந்தவன் அஞ்சலி சொன்னதும் மறுவார்த்தை கூட பேசாமல் அப்படியே அடங்கிப் போகிறானே’

ஒரு வழியாக அபிமன்யுவை சஹானா நலமாக இருப்பதாக நம்ப வைத்து அவனை தூங்க வைத்து விட்டு துணைக்கு ஒரு ஆளையும் அமர்த்தி விட்டு எல்லோரும் சகானாவிற்கு ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு செல்ல… அவள் அப்பொழுது தான் அறைக்கு அழைத்து வரப்பட்டு இருந்தாள்.

முகத்தில் சில இடங்களிலும், தோள் பட்டையிலும் காயம் இருந்தாலும்… காலில் தான் பெரிய காயம் இருந்தது.

சத்யனுக்கு தாங்க முடியவில்லை அவளை அப்படி பார்ப்பதற்கு.சின்ன வயதில் இருந்து அவன் கண் முன்னே ஓடி விளையாடிய தங்கை… அப்பாவுக்கு தெரியாமல் நாட்டியம் கற்றுக் கொண்ட பொழுது ஒரு இடத்தில் நில்லாமல் ஆடிய பாதங்கள் இன்று பெரிதாக கட்டு போடப்பட்டு இருந்தது.

ஆண்மகன் அவனுக்கே அழுகையை அடக்க முடியவில்லை. நல்லவேளை மேகலாவிற்கு இன்னும் உறக்கம் தெளியவில்லை. அவர் மட்டும் இந்த காட்சியை கண்டால் அவ்வளவு தான். உலகையே வெறுத்து விடுவார்.

எல்லாரும் கலக்கத்தில் இருக்க அஞ்சலி மட்டும் மிகவும் தெளிவாக இருந்தாள்.

“சரி எல்லாரும் கிளம்புங்க… அண்ணி முழிக்க எப்படியும் இன்னும் மூணு மணி நேரம் ஆகும்னு சொல்லி இருக்காங்க. அதுவரை இங்கேயே இருக்க வேண்டாம்.

சத்யா… நீங்க கொஞ்ச நேரம் இங்கே இருங்க… போலீஸ் காவலுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தோம். அவங்க ஜென்ட்ஸ் அனுப்பி இருக்காங்க. ஒரு லேடி கான்ஸ்டபிள் கேட்டு இருந்தேன். அவங்க வர்ற வரை கொஞ்சம் அண்ணிக்கு துணையா இருங்க. நான் போய் டாக்டர்சை பார்த்துட்டு வர்றேன்” என்றவள் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

அஞ்சலி அங்கே வந்த பின்பு மொத்த சூழலையும் கைக்குள் எடுத்துக் கொண்டாள். யாரும் எதை நினைத்தும் வருந்துவதற்கு இடம் தராமல் எல்லாருக்கும் ஒரு வேலை கொடுத்தாள். சத்யன் கூட அவளின் தெளிவைக் கண்டு வெகுவாக ஆச்சரியப்பட்டான்.

எல்லாரும் அவளை ஆச்சரியமாக பார்க்க ராஜேந்திரனோ மகளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்குத் தெரியாதா மகளைப் பற்றி… இத்தனை இறுக்கமாக மகள் இருக்கிறாள் என்றால் அதன் காரணம் என்ன? அழுகையை அடக்கிக் கொண்டு தனக்குள் இறுகிப் போய் இருப்பது யாருக்காக?Free pdf download novels

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here