சதிராடும் திமிரே 11 tamil novels

0
645

 

ராஜேந்திரன் அஞ்சலி தன்னிடம் பகிர்ந்து கொண்டதை யாரிடமும் சொல்லவில்லை. அது அவசியம் இல்லை என்றே அவருக்கு தோன்றியது. இதுநாள் வரை விளையாட்டாக பொம்மை வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்த மகள் இன்று சத்யனை கேட்கிறாள் என்று நினைத்து அதை அப்படியே விட்டு விட்டார். அஞ்சலியின் பிடிவாத குணம் அறிந்து இருந்தாலும் இது ஏதோ சத்யனை அருகில் இருந்து பார்த்ததினால் வந்த ஈர்ப்பு என்று மட்டுமே நினைத்தார்.
சில நாட்கள் மட்டுமே அருகில் வைத்த பார்த்த ராஜேந்திரனுக்கும், பார்வதிக்குமே சத்யனை பிடிக்கும் பொழுது மகளுக்கு அவனை பிடித்ததில் அவருக்கு வியப்பேதும் இல்லை. ஆனால் அந்த பிடித்தம் கல்யாணம் வரை செல்வதில் ஒரு தந்தையாக அவருக்கு விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன தான் சத்யன் நல்லவனாக இருந்தாலும் துரைசாமியின் குணம் அறிந்து வைத்திருப்பவரால் அந்த வீட்டுக்கு தன்னுடைய ஆசை மகளை மருமகளாக அனுப்ப அவருக்கு துளியும் விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரம் அஞ்சலியும், சத்யனும் குணத்தில் அப்படியே நேரெதிர் துருவங்கள்.
சத்யன் அச்சு அசல் கிராமத்தில் வளர்ந்த கட்டுகோப்பான கிராமத்து இளைஞன். அஞ்சலியோ அல்ட்ரா மாடர்ன் பெண்.
நகரத்தில் ஒரு பெரிய வீட்டின் எஜமானியாக வலம் வருவதும், லேடிஸ் கிளப், பார்ட்டி, பப் என்று சுற்றுவது அஞ்சலியின் வாடிக்கை.
அவளால் கிராமத்து வீட்டில் பண்ணையாரம்மாவாக இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
சத்யனுக்கு காலையில் உணவாக கேப்பங்களி கண்டிப்பாக இருக்க வேண்டும். அஞ்சலியோ இன்றைய காலத்திற்கு ஏற்ப பிட்சாவும் , பாஸ்தாவும் கேட்பவள்.
சத்யன் பொறுமையின் சிகரம்… அஞ்சலிக்கோ கோபம் வந்து விட்டால் பத்ரகாளி.
சத்யனோ எல்லா இடத்திலும் சூழல் கருதி விட்டுக் கொடுத்து செல்பவன், அஞ்சலியோ பிடிவாதம் பிடித்து தான் நினைத்ததை சாதித்து முடிப்பவள்.
ஒருவேளை அஞ்சலி அங்கே திருமணம் செய்து கொண்டு போனாலும் எல்லா விதத்திலும் அவள் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும். ஆரம்பத்தில் அவள் ஏதோ வீம்புக்காக செய்தாலும், நாளடைவில் அவளுக்கு வெறுப்பு வந்து விடும். அந்த வெறுப்பு யார் மீது வேண்டுமானாலும் திரும்பக் கூடும்.
இது அத்தனையும் தாண்டி அஞ்சலியின் திருமண வாழ்க்கை பாதிக்கபட்டால் அபிமன்யுவின் வாழ்வும் பாதிக்கப்படும். சஹானாவின் அண்ணனான சத்யனை வைத்து அவர்கள் இருவருக்கும் சண்டைகள் வர வாய்ப்பிருக்கிறது.
இப்படி எல்லா விதத்திலும் யோசித்த ராஜேந்திரன் இதை வளர விட வேண்டாம் என்றே முடிவு செய்தார்.
அவர் நினைத்தால் மட்டும் போதுமா? அஞ்சலி அதற்கு விட வேண்டுமே?
மேகலா அங்கே தங்கி இருந்த நாட்களில் அஞ்சலி அவர் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டே சுற்றினாள்.
பார்வதி கூட கொஞ்சம் கிண்டலும், பொறாமையும் கலந்த குரலில் கணவரிடம் சொன்னார்.
“இந்த அஞ்சலிக்கு அம்மா நானா இல்லை சம்பந்தி அம்மாவான்னே தெரியலை… எப்பப் பாரு அவங்க முந்தானையை பிடிச்சுக்கிட்டே சுத்துறா” என்றார். ராஜேந்திரன் அலட்டிக் கொள்ளவில்லை.
அன்றைய தினம் சஹானாவிற்கு காலில் கட்டு பிரிப்பதாக இருந்தது. எல்லோர் முகத்திலும் கொஞ்சம் டென்ஷன் வழிந்தது.
மருத்துவர் வந்து அவளை பரிசோதிக்கும் பொழுது அபிமன்யு அவளுக்கு அருகில் அமர்ந்து அவள் கரங்களை கெட்டியாக பற்றிக் கொண்டான். கணவனின் கரங்கள் அவளுக்கு மலையளவு தெம்பைக் கொடுத்தது.
சஹானாவிற்கு வேண்டியது அனைத்தும் பெரும்பாலும் மேகலா அல்லது பார்வதி தான் செய்து வந்தார்கள். சத்யன் வெளிவேலைகளை செய்து அவர்கள் இருவருக்கும் அலைச்சல் இல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டு, அபிமன்யுவின் வேலைகளை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.
இன்னமும் அபிமன்யுவின் காயங்கள் முழுதாக குணம் அடைந்து விடவில்லை. ஆங்காங்கே சில பிளாஸ்டர்கள் காணப்பட்டது.
சஹானா அவன் கரங்களை இறுக்கிப் பிடித்த விதத்திலேயே அவளது மனநிலை புரிய அவளை தோளில் சாய்த்துக் கொண்டு மெல்லத் தட்டிக் கொடுத்தான் அபிமன்யு.
அவளை முழுதாக பரிசோதித்த மருத்துவர்கள் அபிமன்யுவைப் பார்த்து புன்னகைக்க அவனுக்கு அப்பொழுது தான் அவனுக்கு உயிரே வந்தது.
“எலும்பு கூட ஆரம்பிடுச்சு சார். இனி பயமில்லை. இன்னும் ஆறு மாசத்துக்கு காலை கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும். பதினைஞ்சு நாளைக்கு ஒருமுறை கண்டிப்பா செக்கப் கூட்டிட்டு வாங்க.. கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும். பிசியோதெரபி பண்ண வீட்டுக்கே ஆள் அனுப்பறேன். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டு நகர குடும்பத்தினர் மொத்தமும் அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சை வெளியேற்றினார்கள்.
எல்லார் முகத்திலும் இருந்த கவலை நீங்கி கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கவும் செய்தார்கள். சஹானா மட்டும் இன்னமும் முழுதாக இயல்புக்கு திரும்பவில்லை. பெரும்பாலும் கணவனின் கை அணைப்பிலேயே இருந்தாள். அவன் கொஞ்சம் நகர்ந்தாலும் அவள் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது. அவளும் தனியே எங்கேயும் செல்லவில்லை. அபிமன்யுவையும் விட மறுத்தாள் அவள்.
அன்றைய நாளின் தாக்கத்தால் அவள் மனம் பாதிக்கப்பட்டு இருப்பது புரிய அதற்காக தனியே கவுன்சிலிங்கும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அவளிடம் பேச்சு குறைந்து போனது. அபிமன்யு அருகில் இல்லாத நேரத்தில் யாரேனும் கதவை தட்டினாலோ, புதியவர்களை கண்டாளோ அஞ்சி நடுங்கத் தொடங்கினாள்.
அன்று காலை கூட அப்படித் தான் அவளுக்காக காபி கோப்பையை எடுத்துக் கொண்டு வந்த வீட்டு வேலைக்காரப் பெண் கை தவறி கோப்பையை தவற விட்டுவிட, அந்த சத்தத்தை கேட்ட சஹானா ஒரேயடியாய் பயந்து கத்தி விட்டாள்.
அபிமன்யு வந்து அவளை கட்டுப்படுத்தும் வரை யாராலும் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை. மழையில் நனைந்த கோழி போல அவன் மார்பில் அஞ்சி ஒடுங்கி போய் நடுங்கிக் கொண்டிருந்த மனைவியை ஆறுதல் படுத்த அணைத்து இருந்தாலும் அந்த நேரத்தில் அபிமன்யுவின் முகத்தில் இருந்த சீற்றத்தை வீட்டில் இருந்த எல்லாருமே அறிவார்கள்.
சூழல் இப்படி இருக்கும் பொழுது சத்யனால் உடனடியாக அங்கிருந்து கிளம்ப முடியாமல் போனது. துரைசாமியோ ஊரில் இருந்து தினமும் போன் மேல் போன் போட்டு அவனை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
மேகலா, சத்யன் இருவரும் சென்னையில் தங்கி விட தனியே வீட்டில் இருக்க அவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. மீண்டும் சென்னைக்கு வந்து அவர்களை பார்க்கவும் அவர் விரும்பவில்லை. அபிமன்யு, சஹானா இருவரையும் பார்க்க பார்க்க அவரது ஆத்திரம் பன்மடங்காக பெருகியது.
ஒரு வழியாக சஹானா, அபிமன்யு இருவரும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட அவளை உறங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தான் அபிமன்யு. அவன் கண்கள் இரை தேடும் புலியாக ஜொலித்தது.
சத்யனைத் தவிர்த்து மொத்த குடும்பமும் அவனுக்காக ஹாலில் காத்திருந்தது.
“அப்பா இன்னும் கொஞ்ச நாள் அகாடமி வேலை எல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க… நான் சனா இன்னும் ஓரளவுக்கு தேறின பிறகு தான் வருவேன்”
“சரிப்பா”
“போலீஸ் என்ன சொல்றாங்க அப்பா?”
“சிசிடிவியில் பார்த்ததை வச்சு ஆளை கண்டுபிடிக்க முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க அபி”
“இதே தான் இத்தனை நாளும் சொல்லிட்டு இருக்கீங்க… அவங்களால முடியுமா? முடியாதா?”
“நான் தினமும் அவங்க கிட்டே பேசிட்டு தான் இருக்கேன் அபி… கொஞ்சம் டைம் கொடுக்கலாம்”
“எதுக்குப்பா… என்னையும், சனாவையும் கொலை செய்ய முயற்சி செஞ்சவன் தப்பிச்சு ஓடுறதுக்கா?”
“நான் வேணும்னா கமிஷனர் லெவல்ல பேசிப் பார்க்கட்டுமா அபி”
“அதெல்லாம் நான் ஏற்கனவே பேசிட்டேன். அந்த இன்ஸ்பெக்டர் சிரஞ்ஜீவி இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வருவார். அதுக்கு முன்னே உங்க கிட்டே கொஞ்சம் பேசணும் பா”
“சொல்லு அபி”
“உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?”
“உண்மையை சொல்லணும்னா எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. தொழிலில் உனக்கு எதிரின்னு யாரையும் நீ விட்டு வச்சது இல்லை. அப்படினா இது யாரா இருக்கும்? சொந்தத்தில் யாராவதா இருக்குமா?”
“எனக்கும் அந்த சந்தேகம் இருக்குப்பா… சனாவையும் சேர்த்து அட்டாக் செஞ்சு இருக்கிறதைப் பார்த்தா அப்படித் தான் தோணுது. எங்களோட கல்யாணத்தப்போ நம்ம சொந்தக்காரங்க யாரும் ஆட்சேபம் சொன்னாங்களா? இல்லேன்னா அவங்க பொண்ணை கட்டிக்க சொல்லி யாரும் பேசினாங்களா? கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க டாடி”
“உங்க கல்யாணமே ரொம்ப பெருசா யாருக்கும் சொல்லாம கிராமத்தில் தானே நடந்தது அபி… சென்னையில் ரிஷப்ஷன் வைக்கும் பொழுது தான் சில பேர்…”
“யாருப்பா? என்ன சொன்னாங்க?”
“பெருசா ரொம்ப கோபமா எல்லாம் யாருமே நடந்துக்கலை அபி… நம்ம வசதியை கம்பேர் பண்ணும்போது மருமக வீட்டில் கொஞ்சம் கம்மி தானே.அதை சில பேர் சொல்லிக் காட்டி பேசினாங்க. மத்தபடி விவகாரமா…” என்று சொல்லிக் கொண்டே போனவரின் பேச்சு ஏதோ யோசனையில் தடைப்பட்டு நின்றது.
“சொல்லுங்க டாடி”
“உங்க அம்மா வழியில் தூரத்து சொந்தத்துல ஒரு மாமா இருக்கார்ல அவர் தான் ரிஷப்ஷன் அப்போ கொஞ்சம் கோபமா இருந்தார். அவரோட பொண்ணை கல்யாணம் செய்யலைன்னு சொல்லி. அவரும் நம்ம அளவுக்கு வசதி வேற… நாம கண்டிப்பா அவர் கிட்டே பொண்ணு கேட்டு போவோம்னு நினைச்சு இருப்பார் போல. அப்படி எதுவும் நடக்காம நாம கல்யாணத்துக்கு கூட சொல்லாம ரிஷப்ஷன் வைக்கவும் அந்த கோபத்தில் கொஞ்சம் கத்தினார்”
“அவரோட டீடைல்ஸ் கொஞ்சம் எடுத்து வைங்கப்பா”
“அபி.. அவர் அந்த நேர கோபத்தில் ஏதோ கோபமா பேசினாரே தவிர இப்படி கொலை செய்ற அளவுக்கு எல்லாம் போக மாட்டார்”
“அதை தீர விசாரிச்ச பிறகு முடிவு பண்ணிக்கலாம் டாடி.” என்றவனின் முகம் பாறையாக இறுகி இருக்க ராஜேந்திரனும் மகனின் மனநிலை அறிந்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் இந்த விஷயத்தில் எவ்வளவு தூரம் கடுங்கோபத்தில் இருக்கிறான் என்பது பெற்றவர் அறியாததா?
அவள் மீது சிறு துரும்பு பட்டாலே தாங்கிக் கொள்ள முடியாதவன் அவன். அப்படி இருக்கையில் நொடிக்கு நொடி அவள் இப்படி அஞ்சி நடுங்கி கதறுவதை பார்க்கையில் அவனுக்கு உயிரே போவது போல இருந்தது.
அவன் கண் முன்னால் அன்று அவள் துடித்த துடிப்பும், தவித்த தவிப்பும் அவன் மனக்கண்ணில் அழியாமல் அப்படியே நின்றது.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்தமர்ந்த சத்யன் இவர்கள் பேசி முடிக்கும் வரை பொறுமையோடு இருந்து விட்டு தன்னுடைய சந்தேகத்தையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டான்.
“எங்க ஊர்ல ஒரு தறுதலை கொஞ்ச நாள் விஷ்வா பின்னாடி சுத்தினான் மாப்பிள்ளை. பாப்பா வந்து என்கிட்டே சொன்னதும் , நான் கொஞ்சம் கண்டிச்சு வச்சேன். உங்க கல்யாணத்தப்போ அவன் கொஞ்சம் கோக்குமாக்கு வேலை எல்லாம் பார்த்தான். எனக்கு முன்னாடியே தெரிய வந்ததால அவனை தூக்கி மோட்டார் ரூமில் போட்டு நாலு ஊமைக்குத்து குத்தி அங்கேயே அடைச்சி வச்சிருந்தேன். உங்க கல்யாணம் முடிஞ்சு நீங்க எல்லாரும் கிளம்பின பிறகு தான் அவனை வெளியே விட்டேன். இப்போ எனக்கு அவன் மேல சந்தேகமா இருக்கு”
சத்யனும், அபிமன்யுவும் தங்களுக்கு யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கிறது என்று வரிசைப்படுத்தி சொல்ல, அருகில் இருந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது உள்ளம்.
இவர்கள் யாருடைய சந்தேக வட்டத்திலும் துரைசாமி வரவே இல்லை. அப்படி எனில் என்ன அர்த்தம். பெற்ற தகப்பன் இப்படி ஒரு காரியத்தை செய்யக்கூடும் என்ற எண்ணமே யாருக்குமே இல்லையே. ஆனால் அவர்கள் எண்ணுவதற்கு மாறாக உடல் முழுக்க விஷத்துடன் அல்லவா அந்த மனிதர் இருந்து வருகிறார்.
அஞ்சலி நினைத்து இருந்தால் அந்த நேரம் துரைசாமியைப் பற்றி சொல்லி இருக்கலாம். ஆனால் அவள் அதை சொல்லவில்லை. வேண்டுமென்றே மறைத்தாள்.
அதே நேரம் ஊருக்குள் துரைசாமி போனில் கத்திக் கொண்டிருந்தார்.
“ஒரு வேலையை உருப்படியா செய்ய துப்பில்லை… உனக்கு ஏற்கனவே கொடுத்த காசே தண்டம். இதுல இன்னும் வேற கொடுக்கணுமா நான்? அதுக்கு வேற ஆளைப் பாரு”
“இதோ பாருங்க சார்… நாங்க ஸ்கெட்ச் போட்டு அந்தாளும், அந்தாளு பொண்டாட்டியும் தப்பிச்சுட்டாங்க. கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா இப்போ எங்களை போலீஸ் ரொம்ப தீவிரமா தேடிட்டு இருக்கு.எங்களால வெளியே எங்கேயும் போகவே முடியலை. கொஞ்ச நாள் வேற ஸ்டேட்க்கு போய் தலைமறைவா இருக்கலாம்னு பார்த்தா அதுக்கு நீங்க கொடுத்த பணம் கொஞ்சம் கூட பத்தாது. இன்னும் கொஞ்சம் காசு கொடுத்தா தான் நாங்க தப்பிக்க முடியும்”
“காசெல்லாம் என்கிட்டே இல்லை”
“அய்யே… இன்னா சாரு… சொம்மா அத்தயே சொல்லினுகிறீங்க… இப்போ வெளியே போனா நாங்க மட்டுமா மாட்டுவோம். நீங்களும் சேர்ந்து தான் மாட்டுவீங்க”
“ஹ… என்னடா மிரட்டிப் பார்க்கறியா? என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? எதுவும் தெரியாது. நீ என்னை நேரில் பார்த்தது கூட இல்லை. “
“உண்மை தான் சார். ஆனா இப்போ நீங்க பேசிட்டு இருக்கீங்களே இந்த நம்பரை கொடுத்தா கூட போதுமே”
“இதுவும் ஒண்ணும் என்னோட பேரில் இல்லையே” என்றார் தெனாவட்டாக.
“இருக்கலாம் சார். ஆனா இந்த நம்பரை கொடுத்தா இப்போ இந்த சிம் எந்த ஊரில் பயன்படுத்திட்டு இருக்கீங்கன்னு போலீஸ் கண்டுபிடிச்சுடுவாங்க… மொத்த தமிழ்நாட்டில் அபிமன்யுவுக்கு எதிரி யாருன்னு கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம். ஆனா இப்போ நீங்க இருக்கிற ஊர் தெரிஞ்சுட்டா அதுல ஒருத்தனை கண்டுபிடிக்கிறது போலீசுக்கு ரொம்ப சுலபம்” என்றான் எதிர்முனையில் பேசிய கூலிப்படை தலைவன்.
துரைசாமியைப் போல எத்தனை பேரை பார்த்து இருப்பான் அவன்.
“இப்போ என்ன தான் சொல்ல வர்ற” அவருக்கு உள்ளுக்குள் கொஞ்சம் கிலி பரவத் தொடங்கியது.
“நாங்க பாதுகாப்பா தப்பிச்சு வேற மாநிலத்துக்கு போயாகனும். அதுக்கு இன்னும் ஒரு அஞ்சு லட்சம் வேணும். அனுப்பி வைங்க” என்று உத்தரவிட்டவன் போனை வைத்து விட தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் அவர்.
‘இது என்னடா புது தலைவலியா இருக்கு. இப்போ இவனுக்கு பணம் கொடுக்காமப் போனா நான் மாட்டிப்பேன். ஒருவேளை கொடுத்து பழகிட்டா இதையே சொல்லி சொல்லி என்னை மிரட்டி பணம் வாங்க ஆரம்பிச்சுட்டா என்ன செய்றது?’
வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான். இனி துரைசாமியின் நிலை?

Free pdf download novels

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here