சதிராடும் திமிரே 13 tamil novels

0
700

அத்தியாயம் 13

“ஹலோ மிஸ்டர் துரை.. எப்படி இருக்கீங்க?” என்று கொஞ்சம் எகத்தாளமாகவே பேச்சைத் தொடங்கினாள் அஞ்சலி.

“ஏய்! என்ன பெரியவங்க, சின்னவங்கனு மட்டுமரியாதை இல்லாம பேசிகிட்டு இருக்க…. இதுதான் உங்க வீட்டில் சொல்லிக் கொடுத்தாங்களா?” என்று பதிலுக்கு அவளை அவமதிக்கும் எண்ணத்துடன் அவரும் பேசினார்.

“வளர்ப்பைப் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க மிஸ்டர் துரை… அதுக்கான தகுதி உங்களுக்கு இல்லை”

“ஏன்… ஏன் எனக்கு இல்லை” எதிர்முனையில் அஞ்சலியின் காது சவ்வு கிழிந்து போகும்படி கத்தினார் துரை.

“ஸ்ஸ்ஸ்… மெதுவா… ஏன் பிபி பேஷன்ட் மாதிரி கத்துறீங்க… நீங்க இத்தனை நாள் உங்க மனைவியையும், மகளையும் நடத்தின விதமே சொல்லுமே… நான் வேற தனியா சொல்லணுமா?” என்றாள் குரலில் அலட்சியத்தை கூட்டி.

“ஏய்!…”

“ஷ்… கத்தாதீங்க… ஆன்ட்டியும், உங்க பையனும் ஊருக்கு வந்துட்டு இருக்காங்க. நான் பக்கத்தில்  இல்லைங்கிற தைரியத்தில் ஆன்ட்டி கிட்டே ஏதாவது வம்பு வளர்த்தீங்கன்னு தெரிய வந்துச்சு…”

“என்ன செய்வ? ரொம்ப மிரட்டுற… அவ என் பொண்டாட்டி.. அவளை நான் அடிப்பேன், உதைப்பேன். என்னமும் செய்வேன். நீ யார் அதைக் கேட்க… நான் பெத்த புள்ளைங்களே என் விஷயத்தில் தலையிட மாட்டாங்க… நீ என்னவோ பெரிய இவ மாதிரி வந்துட்ட… போ.. உன் வேலையை பார்த்துக்கிட்டு…” அஞ்சலி அவரை மதிக்காமல் பேசப் பேச அவருக்கு கோபம் கண்மண் தெரியாமல் ஏறிக் கொண்டிருந்தது.

“நான் தினமும் ஆன்ட்டி கிட்டே பேசுவேன். ஏதாவது தப்பான தகவல் வந்துச்சு… அதுக்கு அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை.. புரிஞ்சுதா? இனி என்கிட்டே குரல் உயர்த்தி பேசாதீங்க. நான் அஞ்சலி…நியாபகம் இருக்கட்டும். வச்சு செஞ்சுடுவேன். ஜாக்கிரதை” என்று எச்சரித்தவள் அவரின் பதிலை எதிர்பாராமல் போனை வைத்து விட இந்தப் பக்கம் இவரோ காலில் சலங்கை கட்டாத குறையாக ஆடிக் கொண்டிருந்தார்.

‘என் பொண்டாட்டி கிட்டே நான் எப்படி பேசணும்னு சொல்றதுக்கு இவ யாரு. எல்லாம் இந்த வீட்டில் இருக்கிறவங்க கொடுக்கிற இடம்’ என்று எல்லாரையும் திட்டித் தீர்த்தார்.

ஒரு வழியாக மேகலாவும், சத்யனும் வீட்டுக்கு வந்து சேர மதியம் ஆகி விட்டது. மேகலா அசதியில் வந்தவுடன் உறங்க சென்று விட்டார். சத்யனும் வந்ததுமே வயலுக்கு சென்று விட்டு இரவு உணவுக்குத் தான் வந்தான். மேகலா டிபனை சமைத்து விட்டு மகனுக்காக காத்திருந்தார்.

மகன் வந்ததுமே மூவருமே சாப்பிட அமர, சத்யன் எப்பொழுதும் போல வயலில் நடந்த வேலைகளை பற்றி  துரையிடம் பேசிக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான்.

“அப்பா… மாந்தோப்புல மரம் எல்லாம் பூச்சி வைக்க ஆரம்பிச்சு இருக்கு. ஆரம்பத்துலேயே சரி செஞ்சுட்டா பாதிப்பு கம்மியா இருக்கும்”

“செஞ்சுக்க சத்யா. இதெல்லாம் என்கிட்டே கேட்கணுமா? நீயே செய்ய வேண்டியது தானே”

“அப்புறம் நம்ம பரமசிவம் மாமா வந்தார். அவருக்கு பையனுக்கு பொண்ணு பார்த்து இருக்காராம். அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போறாங்களாம். நீங்களும் கொஞ்சம் கூட வந்தா அவருக்கு மதிப்பா இருக்குமாம். வர முடியுமானு கேட்டார். நான் நாளைக்கு வந்து உங்ககிட்டேயே பேச சொல்லி இருக்கேன்”

“ஹ்ம்ம்.. இந்த மாதிரி ஏதாவது தேவைனா மட்டும் தான் அந்த பயலுக்கு என்னைக் கண்ணுக்குத் தெரியும். நாளைக்கு வரட்டும்… எப்படி கதற விடுறேன் பாரு” என்று பெருமை பேசியவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் பின்னர் பார்வையை தட்டுக்கு மாற்றிக் கொண்டான்.

மேகலா எதுவும் சொல்லாமல் உணவு உண்டு கொண்டிருந்தார். அவருக்குத் தெரியாதா கணவரின் குணம் பற்றி. இத்தனை வருடங்களாய் பார்க்கிறாரே..

அப்பா… அப்புறம் நம்ம வாழைத் தோப்பை குத்தகைக்கு விடுறதைப் பத்தி பேசிட்டு இருந்தோமே. அவங்க வந்து பணம் கொடுத்துட்டாங்களாமே. இன்னிக்கு தோப்பு பக்கம் போனப்போ சொன்னாங்க. எவ்வளவு பணம் வந்துச்சுப்பா?”

“ஏய்! என்னடா என்கிட்டேயே கணக்கு கேட்கிறியா?” என்றவர் ஏகத்துக்கும் கோபத்தில் எகிற சத்யனோ அமைதி மாறாமல் அவரைப் பார்த்தான்.

“இல்லைப்பா… கணக்குப் பிள்ளை கிட்டே விவரம் கேட்டேன். அவர் பணம் எதுவும் நீங்க அவர் கிட்டே கொடுக்கலைன்னு சொன்னார். மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன். பணத்தை நான் தானே பேங்கில் போடுவேன். அதுக்குத் தான் விவரம் கேட்டேன்”

“அ.. அது என்கிட்டே தான் இருக்கு… இருக்கட்டும். பணம் தேவைப்படும்னு என்கிட்டே தான் வச்சு இருக்கேன்”

“அப்பா… பத்து லட்சம் பா… வீட்டில் அவ்வளவு பெரிய தொகை வைக்க வேண்டாம்.தேவைக்கு கொஞ்சம் வைச்சுக்கிட்டு மிச்சத்தை கொடுங்க. நான் நாளைக்கு போய் பேங்கில் கட்டிட்டு வந்துடறேன்” என்று சொல்ல துரைசாமி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டு பறந்து போய் சுவரில் விழுந்தது.

“என்னடா என்னோட பணத்தை நான் வச்சுக்கக் கூட உனக்கு நான் பதில் சொல்லிட்டு இருக்கணுமா? என்னமோ நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச மாதிரி சொல்ற.. அதெல்லாம் என் பணம். ஞாபகம் இருக்கட்டும். என்கிட்டே கணக்கு கேட்கிற வேலை எல்லாம் வச்சுக்கிட்ட தோலை உறிச்சுடுவேன்” என்று காட்டு கத்தலாய் கத்தி விட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள மேகலா, சத்யன் இருவருமே அதிர்ந்து போய் நின்றார்கள்.

“என்னாச்சுடா சத்யா உங்க அப்பாவுக்கு”

“விடுங்கம்மா.. வேற ஏதாவது டென்ஷனா இருக்கும்” என்று சொன்னவனுக்கு உள்ளுர ஏதோ உதைத்துக் கொண்டே தான் இருந்தது.

சத்யன் பொறுப்பை எடுத்துக் கொண்ட நாட்களில் இருந்து வரவு , செலவு எல்லாமே அவன் தான் பார்த்துக் கொள்கிறான். துரைசாமியும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு மகனை வேலை வாங்கிக் கொண்டிருந்தார். சத்யனும் எப்பொழுதும் கணக்கு வழக்கு விஷயத்தில் தெளிவாகவே இருப்பான். அவரும் இதுநாள் வரை அவன் கேள்வி கேட்டால் தன்மையாகவே பதில் சொல்லி வந்தார். இப்படி முகத்தில் அடித்தது போல பேசியது இல்லை.

தனக்கு வேலை மிச்சம் என்று எண்ணி பொறுப்புகளை அவன் தலையில் கட்டியவர் ஊர் பெரிய மனிதன் தோரணையில் எப்பொழுதும் வெட்டி நியாயம் பேசிக் கொண்டும், பஞ்சாயத்துகளை பார்ப்பதுமாகவே இருந்து வந்தார்.

இப்பொழுது மகனின் கேள்வி அவருக்கு ஆத்திரத்தை தூண்டவில்லை. ஆனால் பயம் வந்தது. பின்னே பணம் என்ன அவரின் கையிலா இருக்கிறது. அதைத்தான் அப்படியே தூக்கி அந்த கூலிப்படை ஆட்களிடம் கொடுத்து விட்டாரே. அந்தப் பணத்தைப் பற்றிய கணக்கை என்னவென்று மகனிடம் சொல்லுவார்.

மேகலாவிற்கோ, சத்யனுக்கோ விஷயம் தெரிய வந்தால் தன்னுடைய நிலை என்னாகும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட அவருக்கு பிரியமில்லை.

பெரிதாக அவரை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. அப்படியே அவர்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் காட்டினால் அதை சமாளிக்க அவருக்குத் தெரியாதா என்ன? இத்தனை வருடங்கள் அவர்களை சமாளிக்கவில்லையா என்ன?

ஆனால் அவர் ஒன்றை மறந்து விட்டார். இதுநாள் வரை அவர் மற்றவர்களை அடக்கி ஆண்டது ஒரு குடும்பத் தலைவர் என்ற முறையில். அதுவும் கணவனை, தகப்பனை மீறி எதையும் செய்து அவரை வருந்த விடக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்த உறவுகளைத் தான் அவர் பார்த்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் செய்திருப்பதோ உயிர் பறிக்கும் கொடூர செயல் அல்லவா? அவரது தகாத செயல் வெளியே தெரிந்தால் அப்பொழுதும் எல்லாரும் மௌனம் காக்க மாட்டார்கள் என்பதை அவர் அறியவில்லை.

உணவு உண்டதும் சத்யன் தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்க, மேகலா மகனைக் காண வந்தார். தாயைப் பார்த்ததும் நடையை நிறுத்தி விட்டு அவரோடு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான் சத்யன்.

“தூங்கலையா மா.. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்றீங்க? எதுவும் வேணுமா?”

“நீ சரியாவே சாப்பிடலையே சத்யா… அதான் உனக்கு பால் எடுத்துட்டு வந்தேன்”

“அம்மா.. அதெல்லாம் நான் நல்லா தான் சாப்பிட்டேன். அப்பா தான் பாதி சாப்பாட்டில் எழுந்துட்டார். நீங்க அவருக்கு போய் கொடுங்க” என்று சொல்ல, மேகலா மகனின் முகத்தை இருளில் உற்று நோக்கினார். அதில் கவலையின் தடம் எதுவும் தெரிகிறதா என்று.

“என்னம்மா? அப்படி பார்க்கறீங்க”

 “அப்பா மேல கோபமா இருக்கியா சத்யா?”

“அம்மா.. அப்பாவைப் பத்தி எனக்குத் தெரியாதா? அதெல்லாம் எனக்கு ஒரு கோபமும் இல்லை”

“நாளைக்கே நாம நம்ம வக்கீலை பார்த்துட்டு வருவோமா?” என்று கேட்ட தாயை யோசனையுடன் பார்த்தான் சத்யன்.

“என் பேர்ல இருக்கிற சொத்தை எல்லாம் உன் பேருக்கு எழுதி வச்சிடறேன் சத்யா…” என்று சொல்ல மகனின் ஆட்சேபம் நிறைந்த பார்வையில் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திக் கொண்டார்.

“அம்மா.. நாம ஏற்கனவே பேசினதை மறந்துட்டீங்களா? சஹானா காதலிச்சு கல்யாணம் செஞ்சதால அப்பா அவளுக்கு முறைப்படி சேர வேண்டிய சொத்தை கொடுக்கிறது சந்தேகம் தான். அதனால உங்க அப்பா, அம்மா உங்களுக்கு கொடுத்த சொத்தை எல்லாம் தங்கச்சி கொடுக்கலாம்னு தானே ஏற்கனவே பேசி இருந்தோம். இப்போ என்ன?”

“அது இல்ல தம்பி… நீ தினமும் அவர் கிட்டே இப்படி பேச்சு வாங்குறதை கேட்க எனக்கு கஷ்டமா இருக்கு. வர வர அவர் உன்னை நடத்துற விதமே சரியில்லை. உன்னை என்னவோ வேலைக்காரன் மாதிரி நடத்துறார்” என்றார் மனத்தாங்கலுடன்.

“அம்மா… உங்க வருத்தம் எனக்குப் புரியுது. பேசுறது யாரு அப்பா தானே! இதெல்லாம் எனக்கு என்ன புதுசா? இத்தனை வருசமும் இப்படித் தானே நடக்குது. விடுங்கம்மா”

“இதுநாள் வரை இப்படி நடந்து இருக்கலாம் தம்பி. ஆனா  இனியும் அப்படி நடக்கக் கூடாது. உனக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு. நாளைக்கு உன்னை நம்பி ஒருத்தி வருவா. நாளைக்கு அவ முன்னாடி உங்க அப்பா இப்படி உன்னை மரியாதை இல்லாம பேசக் கூடாது. அதுக்கு நீ இடம் கொடுத்தா அது உன் பொண்டாட்டி மனசை பாதிக்கும்” என்று சொன்ன தாயை ஆச்சரியமாக பார்த்தான் சத்யன்.

“என்னம்மா திடீர்னு என்னோட கல்யாணத்தை பத்தி பேசறீங்க? அதுக்கு இப்போ என்ன அவசரம்?”

“அவசரம்னு இல்லை தம்பி… இப்பவே பார்க்க ஆரம்பிச்சா தான் எப்படியும் ஒரு வருசம் ஆகும். நம்மளும் நல்ல பொண்ணா பார்க்கணும் இல்ல” என்று சொல்ல, சத்யனின் மனக்கண்ணில் திமிராக பார்த்தபடி நின்ற அஞ்சலியின் முகம் வந்து போனது. சட்டென தலையை உதறி அந்த எண்ணத்தை தள்ளி வைத்தவன் தாயைப் பார்த்து புன்னகைக்க முயன்றான்.

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் மா. சஹானாவுக்கு ஒரு அண்ணனா நான் செய்ய வேண்டிய கடமைங்க இன்னும் பாக்கி இருக்கு. அதெல்லாம் முடிச்சுட்டு அதுக்கு அப்புறம் எனக்கு பொண்ணு பார்க்கிறதை பத்தி யோசிக்கலாம்”

“அவளுக்கு செய்ய வேண்டியது எல்லாம் அப்பா பார்த்துப்பார் தம்பி”

“செய்வார்.. கண்டிப்பா செய்வார். ஊர் ஜனங்க முன்னாடி தன்னோட மரியாதையை காப்பாத்திக்க வேண்டி கண்டிப்பா செய்வார். அதுல சபை நிறையும். ஆனா தங்கச்சி மனசு நிறையாது. என் தங்கச்சி புள்ளைக்கு என் மடியில் வச்சு காது குத்தி மாமன் சீரை நிறக்க செஞ்சா தான் எனக்கு நிம்மதி”

“சத்யா… அவளுக்கு பிள்ளை பிறக்கிற வரை உன்னோட கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடணும்?”

“என்னை வற்புறுத்தாதீங்க மா. ப்ளீஸ்!” என்று சொல்ல அவர் மேலும் பேச்சை வளர்க்கவில்லை. தாயின் கரங்களில் இருந்த பாலை வாங்கி பருகியவன் அப்படியே அவர் மடியில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.

இடைப்பட்ட இந்த நாட்களில் அஞ்சலி மனம் மாறி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று அவன் நினைத்ததும் அவன் திருமணத்தை தள்ளிப் போடுவதற்கு ஒரு காரணம். அஞ்சலி இன்னும் தன்னுடைய வீட்டில் தன்னை விரும்புவதாக சொல்லி இருக்க மாட்டாள் என்றே அவன் நினைத்தான். ஆனால் துரைசாமியைத் தவிர இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் என்பது அவனுக்கு தெரியாமல் போனது.

அஞ்சலி கண்டிப்பாக இந்த இடைப்பட்ட  நாட்களுக்குள்  தன்னை மறந்து விடுவாள் என்று எண்ணி இருக்க, உறங்குவதற்கு அவன் அறைக்குள் சென்ற அடுத்த நிமிடமே அவனுக்கு அவளிடம் இருந்து மெசேஜ் வந்து விட்டது.

“தூங்கியாச்சா?”

“…”சத்யன் எந்த பதிலும் அனுப்பவில்லை.

ஒருவேளை அவன் பதில் அனுப்பாமல் விட்டால், அவளே சலித்து போய் அவனிடம் இருந்து ஒதுங்கிக் கொள்வாள் என்று அவன் நினைக்க, மற்றவர் நினைக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் ரகமா அஞ்சலி?. யாருடைய கணிப்பிற்குள்ளும் அடங்காதவள் அல்லவா அவள்?

“நீங்க பதில் அனுப்பினா பத்து நிமிசம் சாட் (chat) பண்ணிட்டு வச்சிடுவேன். இல்லைனா விடிய விடிய மெசேஜ் அனுப்புவேன்”

‘குட்டி சாத்தான்… செஞ்சாலும் செய்வா’ என்று எண்ணியவன் வேறு வழியின்றி அவளுக்கு பதில் அனுப்பினான்.

“என்ன வேணும் உனக்கு?”

“உங்க கிட்டே இருந்து பதில்” என்று இரட்டைத் தொனியில் பேச அவனுக்கோ என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

“எல்லாரும் சாப்பிட்டாச்சு. அம்மா தூங்க போய்ட்டாங்க…இப்போ எனக்கு தூக்கம் வருது. போனை வச்சுடு”

“அவ்வளவு தானா?”

“வேறென்ன?”

“என்னைப் பத்தி எதுவும் கேட்க மாட்டீங்களா?”

“…”

“எனக்கு தூக்கமே வரலை. உங்க நினைப்பாவே இருக்கு”

“…”

“ஹலோ மிஸ்டர் உங்கனு நான் சொன்னது அத்தையையும் சேர்த்து…” என்று சொன்னவளின் குரலில் மெல்லியதோர் நகைப்பு.

“சந்தோசம்… காலையில அம்மாவை பேச சொல்றேன்”

“எங்க இரண்டு பேருக்கு நடுவுல நீங்க வர வேண்டாம். நானே காலையில ஆன்ட்டி கிட்டே பேசிப்பேன்”

“ரொம்ப சந்தோசம்.. இப்போ போனை வைக்கறியா?”

“யோவ்! என்ன விளையாடுறியா? ஒரு வயசு பொண்ணு.. அதுவும் உன்னை கல்யாணம் செய்ய ஆசைப்படுற பொண்ணு.. நைட் இந்த நேரத்துக்கு போன் பண்ணி இருக்கேன். எப்பப்பாரு போனை வை போனை வைன்னு சொல்லிட்டு இருக்கே… கொஞ்சம் ரொமான்டிக்கா பேச மாட்டியா?”

“அதெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கிட்ட பேசுவேன். உன்னை மாதிரி குட்டி சாத்தான் கிட்டே எல்லாம் பேச முடியாது”

“எதே நான் குட்டி சாத்தானா? இவரு பெரிய மன்மதரு”

“நான் எப்போ அப்படி சொன்னேன். நீயாத் தான் என் பின்னாடி வர்ற” என்று சொல்லி விட மறுமுனை சில நொடி அமைதி காத்தது.

‘அவளை காயப்படுத்தி விட்டோமோ’ என்று அவன் நினைக்கையிலேயே அவள் மெல்லிய குரலில் பேசினாள்.

“நான் அழகா இல்லைன்னு நினைக்கறீங்களா? அதனால தான் உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா?”

அஞ்சலி சுண்டி இழுக்கும் எலுமிச்சை நிறம் கிடையாது. தேனும், கோதுமையும் கலந்த நிறத்தில் இருப்பவள். பெரிதாக வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவளுக்கு தன்னுடைய நிறம் குறித்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை உண்டு. அதற்காக அவள் அழகில்லை என்று சொல்லி விட முடியாது. அவளுக்கு சத்யன் தன்னை வேண்டாம் என்று மறுப்பதால் அப்படி ஒரு கலக்கம் வரத் தொடங்கியது.

இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் வேறு விதமான பின் விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதை உணர்ந்த சத்யன் அமைதியாகி விட அஞ்சலி ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டாள்.

‘ஏதாவது சொல்லி அவளை சமாதானம் செய்து இருக்க வேண்டுமோ’ என்ற எண்ணம் சத்யனின் மனதில் தோன்றி தூங்க விடாமல்  அலைகழிக்கத் தொடங்கியது.

இங்கே சென்னையிலோ அஞ்சலி தன்னுடைய படுக்கையில் சத்யனை எண்ணி சிரித்துக் கொண்டாள்.

‘எனக்குத் தெரியும். இப்போ நீ என்னைப் பத்தி மட்டும் தான் நினைச்சுட்டு இருப்ப… எனக்கும் அதுதான் வேணும்’ என்று எண்ணியவள் அதே நினைவுடன் சுகமாக உறங்கத் தொடங்கினாள்.Free pdf download novels

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here