சதிராடும் திமிரே 14 tamil novels

0
509

அத்தியாயம் 14

சஹானாவிற்காக ஏற்பாடு செய்து இருந்த பிசியோதெரபி டாக்டர் வந்து இருக்க அவரிடம் அவளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக கேட்டுத் தெரிந்து கொண்டான் அபிமன்யு.

நேற்று தான் அவளின் காலில் போட்டு இருந்த  கட்டை மருத்துவமனைக்குப் போய் பிரித்து விட்டு வந்தார்கள். இன்னும் சஹானாவால் தனியாக எழுந்து நடமாட முடியாததால் அவளுக்கு துணையாக எந்நேரமும் ஒரு நர்ஸ் வீட்டோடு இருந்தார். அபிமன்யு இல்லாத நேரத்தில் சஹானா முழுக்க முழுக்க அவர் பொறுப்பு தான்.

ஹாலில் அபிமன்யுவின் பிஏ அவருக்காக காத்திருப்பது புரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே அவரிடம் வந்தான்.

“சொல்லுங்க உதயன்? என்ன விஷயம் இவ்வளவு காலையிலேயே வந்து இருக்கீங்க?”

“சார் அந்த டைரக்டர் ராஜா உங்க மேல ரொம்ப கோபமா இருக்கார் சார்” மென்று விழுங்கிக் கொண்டே பேசினான்.

“என்னவாம் அவருக்கு… அவருக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும் தானே?” என்றான் கேள்வியாய்

“தெரியும் சார். ஆனாலும் குறிச்ச தேதியில படத்தை ரிலீஸ் பண்ண முடியாம போயிடுமோனு ரொம்ப பயப்படுறார்” பேச்சை தொடர வெகுவாக தயங்கினான் உதயன்.

“அதுக்கு”

“உங்களை வந்து அந்த மிச்சம் இருக்கிற ஒரு பாட்டுக்கு டான்ஸ்  சொல்லி கொடுத்துட்டு போக சொல்றார்”

“என்னால இப்போதைக்கு அவுட்டோர் எல்லாம் வர முடியாதுன்னு தெளிவா சொல்லிடுங்க உதயன். நான் என்னோட அசிஸ்டெண்ட் இரண்டு பேரை அனுப்பி வைக்கறேன். அவங்க வருவாங்கன்னு சொல்லிடுங்க”

“சொன்னேன் சார். ஆனா?”

“என்ன இழுக்கறீங்க?” அவன் பார்வை கூர்மையுடன் உதயன் மீது பதிந்தது.

“நான் என்ன அவரோட அசிஸ்டெண்ட்க்கா பணம் கொடுத்தேன்னு கேட்கிறார் சார். அது மட்டும் இல்ல…” என்று மேலும் சொல்ல வந்தவன் அபிமன்யுவின் இறுகிய கரங்களைப் பார்த்து சொல்ல வந்ததை பயந்து பாதியிலேயே நிறுத்தினான்.

“ம்ம்ம்” அபிமன்யுவின் குரல் உறுமலாய் வந்தது.

“அ..அதுதான் இரண்டு பேரும் பொழைச்சு வந்துட்டாங்க தானே… அபிமன்யுவுக்குக் கூட பெருசா எந்த காயமும் இல்லை. நல்லா நடை உடையாத் தானே இருக்கார். அவர் பொண்டாட்டிக்குத் தானே அதிக காயம். இவர் இப்படி பொண்டாட்டி பின்னாடி திரியறதுக்கா நான் இவரை படத்துல டான்ஸ் மாஸ்டரா போட்டேன்னு…” என்று இழுத்து தயக்கத்தோடு நிறுத்தினான் உதயன்.

“புரோடுயுசர் கிட்டே பேசி வாங்கின அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துடு உதயா…இனி இந்த படத்துல அபிமன்யு வேலை பார்க்க மாட்டான்னு சொல்லிடு. இது மட்டும் இல்லை. இனி ராஜாவோட எந்த படத்துக்கும் நான் டான்ஸ் கொரியோகிராப் பண்ண மாட்டேன்னு சொல்லிடு”

“சார் உங்களுக்குத் தெரியாதது இல்லை. இது பெரிய பட்ஜெட் படம். மொத்த இண்டஸ்ட்ரியும் ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கிற படம். இதுல கெஸ்ட் ரோல் பண்ணுறதுக்காகவது சான்ஸ் கிடைக்காதான்னு எத்தனையோ பேர் காத்துக்கிட்டு இருக்காங்க. அப்படி இருக்கும் பொழுது..”

“அதுக்காக சனாவை இப்படி விட்டுட்டு போக சொல்றியா உதயா… அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையே இல்லை. எனக்கு இப்போ அவளை விட எதுவுமே முக்கியம் இல்லை உதயா. இதனால இனி எனக்கு சினிமா வாய்ப்பே இல்லைனாலும் பரவாயில்லை. அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. என் பொண்டாட்டி பழையபடி எழுந்து நடமாடாம நான் அவளை விட்டு எங்கேயும் வர மாட்டேன்”என்று உறுதியாக தெரிவித்தவன் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டான்.

அவன் பேசிய அத்தனையும் ஒன்று விடாமல் கேட்ட சஹானாவிற்கு கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

‘என்ன தவம் செய்து விட்டேன் நான். இவனை கணவனாய் அடைய’ நெஞ்சம் பூரிப்பில் விம்மியது.

அதே நேரம் தன்னால் கணவனுக்கு நேரப் போகும் இழப்பு அவள் மனதை வருத்தத் தொடங்கியது. அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே அந்த படத்தைப் பற்றி அத்தனை ஆசையுடன் அபிமன்யு பேசி இருந்தான் அவளிடம். அந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டு உழைத்து இருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயங்களை மிகுந்த உற்சாகத்துடன் அவளிடம் பகிர்ந்து கொள்வான். சரித்திர பின்னணியில் நடைபெறும் அந்தப் படத்தின் மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை, ஆசை. கண்டிப்பாக தான் அந்தப் படத்திற்காக தேசிய விருது வாங்குவோம் என்று உறுதியாக நம்பினான்.

அத்தனையையும் இப்பொழுது  இவளுக்காக விட்டுக் கொடுத்து விட்டான். அவன் நினைத்தால் அவளை வீட்டில் இருக்கும் நர்சிடம் ஒப்படைத்து விட்டு அவன் செல்லலாம். மிஞ்சிப் போனால் ஒரு வாரம் ஆகக் கூடும். ஆனால் அவன் போக மாட்டான் என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். வற்புறுத்தினாலும் அவளை விட்டு அவன் அசைய மாட்டான் என்பதையும் இடைப்பட்ட இந்த காலத்தில் அவள் அறிந்து இருந்தாள்.

சம்பவம் நடந்த சில நாட்களில் அவள் நடந்து கொண்ட முறை ஒரு காரணமாக இருந்தாலும், உண்மைக் காரணம் வேறு ஒன்று.

வெளியில் சொல்லாவிட்டாலும் அன்றைய தினம் தான் பக்கத்தில் இருந்தும் அவளை காப்பாற்ற முடியாமல் போனது அவனுக்கு உள்ளுர அத்தனை குற்ற உணர்ச்சி.

அவளிடமே கூட இது குறித்து ஒருமுறை சொல்லி விட்டான்.

“என்னை நினைச்சா எனக்கே கோபமா வருது சனா.. உன் மேல காயம் ஆகுற அளவுக்கு விட்டேனே. நான் எல்லாம் என்ன ஆம்பிளை..கட்டின புருசன் நான் பக்கத்துல இருக்கும் போதே உன் மேல கை வச்சு இருக்காங்க. என்னால எதுவுமே செய்ய முடியலைல” அவன் குரலில் அத்தனை தவிப்பு இருந்தது.

“என்னங்க இது சின்ன பிள்ளை மாதிரி… நீங்க என்ன வேடிக்கையா பார்த்துக்கிட்டு இருந்தீங்க… எனக்காக ஆயுதம் வச்சு இருந்த அந்த ரவுடிங்களை எதிர்த்து சண்டை போட்டீங்க. என்னைக் காப்பாத்த குறுக்கே வந்து உங்க மேலயும் வெட்டு விழுந்தது. அப்பவும் என்னைக் காப்பாத்த முன்னாடி நின்னீங்க. உங்களால முடிஞ்ச அளவுக்கு என்னைக் காப்பாத்த எல்லா முயற்சியும் செஞ்சீங்க தானே. உங்களையும் மீறி நடந்ததுக்கு ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?” அவனை சமாதானம் செய்ய முயற்சித்தாள். அவன் வருந்தினால் அவளுக்கு தாங்குமா என்ன?

“இல்லை சனா.. ஏதோ நான் செஞ்ச புண்ணியம் உன் காலில் வெட்டு விழுந்தது… தப்பித் தவறி கழுத்தில் விழுந்து இருந்தா… என்னோட நிலைமை?” என்று சொன்னவனுக்கு அன்றைய நாள் நினைவில் இன்றைய தினம்  உடல் உதறியது பயத்தில்.

“அது தான் ஒன்னும் ஆகலையே..” அவன் கைகளை மெல்ல வருடி அவனை அமைதிபடுத்த முயற்சித்தாள் சஹானா.

“என்ன ஆகலை.. உன்னோட காலில் அடிபட்டுடுச்சே… ஆனா என்னைப் பார் குத்துக்கல்லாட்டம் இருக்கேன்” தன்னைத் தானே பார்த்து சபித்துக் கொண்டான்.

“என்னங்க நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க? ஒருவேளை என் மேல அடியே படாம இருந்து இருந்தா அப்போ என்னோட அன்புல குறைன்னு சொல்வீங்களா? ஏதோ நீங்க கொஞ்சம் அசந்த நேரம் அவங்க வெட்டிட்டாங்க. அதுக்குனு உங்க காதல் மேல குறை சொல்ல முடியுமா? நீங்க இருக்கவும் தான் அவங்களால என் உயிரை எடுக்க முடியல… இல்லேன்னா அன்னிக்கே என் உயிர் போய் இருக்கும்.

அன்னிக்கு வந்தவங்க எல்லாம் சாதாரணமான மனுஷங்களா… ராட்சசனுங்க. கொலை வெறி அவங்க கண்ணுல தாண்டவம் ஆடுச்சு. பணத்துக்காக பச்சை குழந்தையைக் கூட கொல்றவங்க. அப்படி இருந்தும் நான் இன்னிக்கு உயிரோட இருக்கேன். யாரால? உங்களால… உங்களால மட்டும் தான். உங்க இடத்துல வேற யார் இருந்து இருந்தாலும், அந்த நேரம் தன்னோட உயிரைக் காப்பாத்திக்க ஓடி இருப்பாங்க. நீங்க அப்படியா செஞ்சீங்க?”

“நான் எப்படி சனா அப்படி ஓடுவேன்.. என் உயிரே நீ தானேடி” என்றவனின் குரல் கரகரத்தது.

“தெரியுதுல்ல… அவ்வளவு தான் விஷயம். அன்னிக்கு நடந்தது யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம். நீங்க அசந்த நேரத்துல உங்களை அடிச்சுட்டு என்னை கொல்ல வந்தாங்க. நீங்க காப்பத்திட்டீங்க”

“இல்லை.. நான் காப்பத்தலை… போலீஸ் வந்ததும் அவனுங்க ஓடிட்டாங்க” அவன் குரலில் ஆற்றாமை இன்னும் மிச்சம் இருந்தது.

“ஸ்ஸ்ஸ்… அப்பா… உங்களை வச்சுக்கிட்டு… இப்போ என்ன? இதை செஞ்சவங்களையும், செய்ய சொல்லி ஏவி விட்டவங்களையும் நீங்க சும்மா விட்டுட போறீங்களா?”

“யாருன்னு மட்டும் தெரியட்டும்.. இதை செஞ்சவனுக்கு என் கையால தான் சாவு” என்று பற்களை கடித்துக் கொண்டே நரசிம்ம மூர்த்தி போல நின்றவனைக் கண்டு சஹானாவிற்கே ஒரு நொடி பயம் வந்தது.

“அப்புறம் என்ன? விட்டுத் தள்ளுங்க… உங்க எதிரி உங்க காலடியில் வந்து விழும் பொழுது அவனுக்கு எத்தனை  விதமா தண்டனை கொடுக்கலாம்னு யோசிங்க. அதை விட்டுட்டு இப்படி அதையே நினைச்சுட்டு இருக்காதீங்க. என் புருசன் இப்படி இருக்க மாட்டார். நடந்ததை நினைச்சு கவலை பட்டுகிட்டே இருக்காம அடுத்து என்ன செய்யணும்னு தெளிவா இருப்பார்” என்றவள் அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகம் தெளிவடைந்தது.

இதை எல்லாம் செய்தது தன்னுடைய தந்தை என்று தெரியாமலே அவருக்கு எதிராக தன்னுடைய கணவனை கையில் ஆயுதம் ஏந்தி நிற்க வைத்தாள் சஹானா.

கணவனின் ஆயுதத்துக்கு முன்னால் நிற்பது தன்னை பெற்று வளர்த்த தந்தை என்று தெரிய வரும் பொழுது அவளின் மனநிலை எப்படி இருக்கும்? தந்தையை காப்பாற்ற நினைப்பாளா? அல்லது பழி வாங்கத் துணிவாளா?   

மேகலாவிடம் அபிமன்யு தனக்காக அந்த பட வாய்ப்பை உதறியதைப் பற்றி சொல்லி வருத்தப்பட மேகலாவிற்கு உச்சி குளிர்ந்து போனது. மருமகன் மகள் மீது காட்டும் நேசத்தில். அதை மகனிடம் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை அவர்.

“நம்ம விஷ்வா கொடுத்து வச்சவ சத்யா… அவ மேல உயிரா இருக்கிற புருசன் அவளுக்கு கிடைச்சு இருக்கார்.”

“ஹ்ம்ம்.. சும்மாவே நீங்க மருமகன் புராணம் தான் பாடுவீங்க… இனி சொல்லவே வேண்டாம். என்னை எல்லாம் மறந்துடுவீங்க போலவே” கிண்டல் செய்தாலும் சத்யாவிற்கும் தாய் சொன்னதில் மாற்று கருத்து  இல்லை.

அத்தனை அழகாய் காதலுடன் அபிமன்யுவும், சஹானாவும் குடும்பம் நடத்தினார்கள். ஒவ்வொரு நொடியும் அவர்கள் காதல் அவர்கள் இருவராலும் கொண்டாடப்பட்டது.

தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கைத் துணை கிட்டுமா என்ற ஏக்கம் சத்யனின் மனதில் மெல்ல வந்து போனது. கூடவே துரைசாமியின் முகமும் வந்து போனது தான் வேதனை.

அவரைப் போன்ற ஒருவரை தகப்பனாய்  வைத்துக் கொண்டு மனைவியின் மரியாதை குறையாமல் அவளை பார்த்துக் கொள்வது எப்படி என்பதே அவனுக்கு பெரும் யோசனையாய் இருந்தது.

துரைசாமிக்கு எல்லோரும் தனக்கு கீழ்படிந்து அடங்கி நடக்க வேண்டும் என்று விரும்புவார். அப்படி வருபவள் பெண்ணா அல்லது பொம்மையா?

மீறினால் அவரிடம் பேச்சு வாங்க வேண்டி இருக்கும். மனைவியை திட்டினால் இவன் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்ப்பார்.

‘சை! கல்யாணத்தை பத்தி நினைச்சாலே தலைவலி தான்’ என்று எண்ணியவன் சலிப்புடன் அறைக்குள் செல்ல, மிகச் சரியாய் அவன் போன் ஒலித்தது.

இரவு பத்து மணிக்கு அவனது எண்ணிற்கு வேறு யார் அழைக்கக் கூடும்? அஞ்சலியின் பெயர் திரையில் மின்னியது.

“சைத்தானை நினைச்சா அது முன்னாடி வந்து நிக்குமாம்.. இதோ போன் வந்துடுச்சு. சரியான குட்டி சாத்தான். மோகினிப் பிசாசு… போனை எடுக்கலேன்னா இந்த பிசாசு தூங்க விடாது” என்று முணுமுணுத்தவன் சலிப்புடன் போனை எடுத்து பேசினான்.

“ஹலோ…சத்யா”

“ம்ம்ம்”

“ஒரு முக்கியமான விஷயம் உங்க ஹெல்ப் வேணுமே.. செய்ய முடியுமா?” அவள் குரலில் இருந்த பரபரப்பு அவனையும் தொற்றிக்கொண்டது.

“சொல்லுங்க… என்ன விஷயம்?”

“நானும் என்னோட பிரண்டும் ப்ராஜெக்ட் செய்ய ஒரு மில் இல்லைனா பாக்டரிக்கு போகணும். உங்களுக்கு ?” என்று அவள் சொல்லாமல் கேள்வியாக நிறுத்த அவனே அதை பூர்த்தி செய்தான்.

“பக்கத்து ஊர்ல என்னோட பிரண்டு கம்பெனி இருக்குங்க… அவனுக்கு பஞ்சு மில், எண்ணெய் கம்பெனி எல்லாம் இருக்கு.. உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க. நாளைக்கே பேசி அனுமதி வாங்கிடறேன்” என்று சொல்ல மறுமுனையில் அமைதி.

“ஹலோ… ஹலோ… லைன்ல இருக்கீங்களா?”

“உங்களுக்கு சொந்தமா எந்த மில்லும், பாக்டரியும் இல்லையோ? அடுத்த ஊர்ல தான் இருக்கோ? தப்பித்தவறி கூட உங்க ஊர் பக்கம் நான் வராம இருக்கணும்னு யோசிக்கறீங்க… அப்படித்தானே?” என்று அவள் நேராய் கேட்க.. இங்கே சத்யனோ மௌனம் காத்தான்.

“அப்போ அதுதான் உண்மை.. இப்படி என்னை பார்க்கக் கூட விரும்பாத அளவுக்கு உங்களுக்கு நான் என்ன துரோகம் செஞ்சேன் சத்யா” என்று கேட்டவளின் குரலில் இருந்த வலி ஆணவனின் இதயத்தை உலுக்கியது.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க.. வெளி இடம்னா உங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது. நீங்க நிறைய கத்துக்கலாம். அதுக்குத்தான் யோசிச்சேன்.”

“அதெல்லாம் வேண்டாம்.. நான் நம்ம மில்லுக்கு தான் வருவேன்” அடம் பிடித்தாள் அஞ்சலி.

“நம்ம மில்லா? அது எங்க அப்பாவோடதுங்க.. வேணும்னா காலையில் அவர் கிட்டே பேசிட்டு சொல்லட்டுமா?”

“ஆணியே புடுங்க வேண்டாம்.. நான் வேற ஏற்பாடு செஞ்சுக்கிறேன்” என்றவள் பட்டென போனை வைத்து விட சத்யன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

‘அப்பாவுக்கும் இந்தப் பொண்ணுக்கும் ஆகவே மாட்டேங்குது. இரண்டு பேரும் மத்தவங்க பேரை கேட்டா பட்டாசா பொரியறாங்க.. இதுல இந்த பொண்ணு எப்படி இங்கே வந்து என்னை கட்டிக்கிட்டு அவரோட அன்பாவா இருக்கும்?Free pdf download novels.இந்தியா – பாகிஸ்தான் பார்டர் மாதிரி ஆகிடும் வீடு’

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here