சதிராடும் திமிரே 2

0
363

 

அத்தியாயம் 2
மாலை நேரத்தில் எல்லோரும் குடும்ப சகிதமாக குல தெய்வ வழிபாட்டிற்கு கிளம்ப வேறுவழியின்றி துரையும் அவர்களுடன் கலந்து கொண்டார். அவர்களுடன் ஒன்றாக கோவிலுக்கு செல்வதில் அவருக்கு ஒரு துளி அளவு கூட சம்மதம் இல்லை தான். ஆனாலும் அவருக்கு வேறு வழி இல்லை. அவர்களுடன் போகாமல் வீட்டில் இருந்தால் ஊரார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதே.
துரைசாமியின் மனம் ஒப்பாமல் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் மனம் புழுங்கியது.
‘பழி… பழி’ என்ற அவரின் உள் மனதின் ஓலம் அவரை ஆட்டுவித்தது.
இறைவனின் சந்நிதானத்தில் சஹானா, அபிமன்யு இருவரின் மனமும் நிரம்பி இருந்தது. மனதார விரும்பியவர்களையே தங்கள் வாழ்க்கைத் துணையாக அடைந்த பூரிப்பு அவர்களின் முகம் எங்கும் நிரம்பி வழிந்தது.
மேகலா ஏற்கனவே செய்திருந்த வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அந்த ஊர் மக்களுக்கு துணி மணியும், அம்மனுக்கு தங்கத்தில் கிரீடமும் கொடுத்தார்.
ஊர் மக்களின் உதவியும் இருக்கவே இரவு நெருங்குவதற்குள் எல்லாவற்றையும் கொடுத்து முடித்த பின்னர் குடும்பமாக எல்லாரும் கொஞ்ச நேரம் கோவிலில் அமர்ந்திருக்க முடிவு செய்தார்கள்.
சஹானா, அபிமன்யு இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவியபடி இருக்க… மேகலாவின் முகமோ மகளின் பூரிப்பில் மின்னிக் கொண்டிருந்தது. துரையின் முகம் வெளியே ஆத்திரத்தை கொட்ட முடியாத நிலையிலும் அவரது கண்கள் செந்தணலாக ஜொலிக்க… அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
‘எத்தனை ஆத்திரம் இந்த மனிதருக்கு’ என்று எண்ணியபடி பார்வையை திருப்பியவள் சத்யனின் இமைக்காத பார்வையில் சிக்கிக் கொண்டாள்.
அஞ்சலி வந்ததில் இருந்தே தன்னுடைய தந்தையை பார்வையால் விடாமல் தொடருவதை அறிந்து வைத்திருந்த சத்யனின் முகம் சொல்லில் அடங்காத கோபத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் அவனால் அந்த கோபத்தை வெளிப்படையாக அவளிடம் காட்டி விடவும் முடியாது. தங்கையின் நாத்தனார் அல்லவா? முதல் முறையாக வீட்டிற்கு வந்து இருக்கும் அஞ்சலியிடம் கோபமாக பேசி விட்டால் அபிமன்யுவின் மனத்தாங்கலுக்கு ஆளாக நேரிடும் என்பது ஒருபுறமிருக்க… வெகுநாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் வளைய வரும் தாயின் முகம், அவனை எதுவும் செய்ய விடாமல் தடுத்தது.
இது எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் சிறு பொறி அளவுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தாலும் போதும். அதை ஊதி பெரிதாக்கி அபிமன்யுவுடன் சண்டை இட தயாராக காத்திருக்கும் துரைக்கு வாய்ப்பை தந்து விடவே கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தான் சத்யன்.
“அம்மா… நாங்க நாளைக்கே கிளம்புறோம் அம்மா”என்று கூறிய சஹானாவின் வார்த்தைகள் எல்லோரையும் சுய உணர்வுக்கு கொண்டு வந்தது.
“என்னடா ….. இன்னிக்குத் தானே வந்தீங்க… மறுவீட்டு விருந்துக்கு வந்தா…ஒரு வாரமாவது தங்கி இருக்கணுமே”என்றார் தயக்கத்துடன்.
“இல்லைமா..அது வந்து இவர் தான்”… என்று சஹானா தடுமாற… தாயை முந்திக்கொண்டு பேசினான் சத்யன்.
“என்னாச்சு மாப்பிள்ளை… இங்கே உங்களுக்கு எதுவும் வசதிக் குறைவு இருக்கா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாப்பிள்ளை சரி செஞ்சிடலாம்”என்றவனின் பார்வை சந்தேகத்துடன் அஞ்சலியையும், தந்தையையும் துளைத்தது.
‘உனக்கு சந்தேகமா இருந்தா உங்க அப்பாவை முறைச்சுப் பாரு மேன்(Man)… என்னை எதுக்கு பார்க்கிற… நான் என்னவோ வில்லி மாதிரி இல்லே பார்க்கிற…’என்று எண்ணியவள் கோபுரத்தில் அமர்ந்து இருந்த புறாக்களின் பக்கம் அசுவாரசியமாகப் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை மச்சான்… நானும் சனாவும் நாளைக்கு சுவிஸ்க்கு ஹனிமூன் போறோம்… ஏற்கனவே புக் செஞ்சது. இந்த சம்பிரதாயம் எதுவும் தெரியாம அப்பா புக் பண்ணிட்டாங்க..தள்ளிப் போட முடியாது” என்றவனின் குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்து கொண்டனர் அனைவரும்…
“அது எப்படி சம்பிரதாயத்தை மீறலாம்?” என்று துரைசாமி சண்டையை துவக்க ஆயத்தமாக… சத்யனோ ஒரே நொடியில் சூழலை மாற்றி விட்டான்.
“புரியுது மாப்பிள்ளை… முன்கூட்டியே செஞ்ச ஏற்பாட்டை மாற்ற வேண்டாம்.. நீங்க இரண்டு பேரும் சந்தோசமா போய்ட்டு வாங்க… ஆனா ஊருக்குப் போய்ட்டு திரும்பி வந்ததும் நம்ம வீட்டில் ஒரு வாரம் கண்டிப்பா தங்கணும். பெண் வீட்டை சேர்ந்த எங்களுக்கு அவளோட சந்தோசம் தானே முக்கியம்” என்றவனின் அழுத்தமான பேச்சில் தந்தைக்கான மறைமுக செய்தி ஒளிந்து இருப்பதை துரைசாமியோடு சேர்ந்து அஞ்சலியும் புரிந்து கொண்டாள்.
“கண்டிப்பா வர்றோம் மச்சான்… நாங்க திரும்பி வர எப்படியும் பதினைஞ்சு நாள் ஆகும்… அதுவரை அஞ்சலி இங்கே இருக்க ஆசைப்படுறா.. நாங்க திரும்பி வரும்பொழுது இவளை கூட்டிட்டு போய்க்கிறோம். உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை தானே” என்று சத்யனிடம் ஆரம்பித்து மேகலாவிடம் முடித்தான் அபிமன்யு.
வீட்டு மாப்பிள்ளை இப்படி தயவாக கேட்கும் பொழுது மறுக்கவா முடியும்? ஆனாலும் துரைசாமி அதை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் இல்லை. ஏனெனில் அஞ்சலியைப் பற்றி அவர் நன்கு அறிவார்.
அவள் மேகலாவுடன் பழகினால் தன்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தன்னிடம் இருந்து பிரித்து கூட்டி செல்ல முயற்சி செய்வாள். ஏற்கனவே அபிமன்யு, சஹானா திருமணத்தின் பொழுது முயன்றவள் தானே.. மறுபடி முயற்சிக்க மாட்டாளா என்ன? அப்படி அவள் முயற்சிக்கும் பொழுது மேகலா மனது மாறி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டால் என்ன செய்வது? என்று எண்ணி அச்சமடைந்தார்.
“அதெப்படி வயசு பொண்ணை எங்க வீட்டில் தங்க வைக்கிறது?” என்று எகிறினார்.
“அஞ்சலிக்கு நம்ம கிராமத்தை ரொம்ப பிடிச்சு இருக்காம் மாமா.. கொஞ்ச நாள் இருந்து நல்லா சுத்திப் பார்த்துட்டு வரணும்னு ஆசைப்பட்டா..அதான்… வெளி இடம்னா நாங்க யோசிச்சு இருப்போம்… உங்க வீட்டில் அவளுக்கு முழு பாதுகாப்பு இருக்குமே… அதுவும் இல்லாம உங்க வீடு இருக்கும் பொழுது இதே ஊரில் வேற வீட்டில் தங்கினால் அப்புறம் ஊர்க்காரங்க எல்லாரும் உங்களைத் தானே கேள்வி கேட்பாங்க” என்று நயமாக பேசினான் அபிமன்யு.
இப்பொழுது துரைசாமி திகைத்து அமர்ந்து விட்டார். அஞ்சலி அங்கே தங்குவது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதை வைத்து பிரச்சினையை கிளப்பலாம் என்று அவர் நினைக்க… சாமார்த்தியமாக அதை ஆரம்பத்திலேயே அபிமன்யு தடுத்து நிறுத்தி விட திகைத்து விழித்தார்.
அபிமன்யுவின் பேச்சில் சத்யனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு அஞ்சலி இருந்த திசை பக்கம் திரும்ப.. அவள் முகத்திலோ நமட்டுச் சிரிப்பு…
அத்தனை பேரின் முன்னிலையில் அவளை எதுவும் கேட்க முடியாமல் கண்களால் எரிக்க… அஞ்சலியோ அவன் இருந்த திசைப்பக்கம் கூட திரும்பவில்லை.
‘உன்னைப் பார்த்தா தானே வம்பு’
“அதுவும் இல்லாம அவளுக்கு சனாவோட அம்மாவை ரொம்ப பிடிச்சு இருக்காம்.அவங்களோட கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசைப்படுறா” என்று சொல்ல துரைசாமியின் மூளையில் அபாய மணி அடித்தது.
‘இந்தப் பொண்ணு இங்கே இருந்தா மேகலாவை சுலபமா அவ பக்கம் இழுத்துத்துடுவாளே… ஏற்கனவே அவளை என்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறேன்னு சொன்னவ தானே’
“அது வந்து மாப்பிள்ளை… விஷ்வாவோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா… ராமேஸ்வரதுக்கு போறதா வேண்டி இருக்கேன்”என்று அவசர கதியில் பேச… அங்கிருந்த ஒருவருமே அவரது பேச்சை நம்பவில்லை என்பது அவர்களது முகக் குறிப்பிலேயே தெரிந்தது.
“அதனால என்ன மாமா நீங்க போய்ட்டு வாங்க… அஞ்சலி அத்தை கூட தானே இருக்க ஆசைப் பட்டாள்”
“அதெப்படி… வேண்டுதலே நாங்க இரண்டு பேரும் வருவதாகத் தானே…”எப்படியாவது அஞ்சலி இங்கே தங்குவதை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று அவர் போராட..மேகலாவின் முகம் கவலையானது.
‘மகளின் நாத்தனார் ஒரு பத்து நாள் இங்கே தங்க விரும்பும் பொழுது அதை தடுத்து நிறுத்துவது போல இவர் இப்படி விடாமல் பேசுவது சரியில்லையே.. இவரின் பேச்சை அபிமன்யு வேண்டுமானால் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அஞ்சலியோ .. அவளின் பெற்றோர்களோ நிச்சயம் தவறாகத் தான் எடுத்துக் கொள்வார்கள்.’ என்று நினைத்தவர் மகளுக்காக முந்திக்கொண்டு பேசினார்.
“அதனால என்னங்க… உடனே போய் ஆகணுமா என்ன? ஒரு மாசம் கழிச்சு போய்க்கலாம்…அஞ்சலி நம்ம வீட்டுக்கு முதன்முதலா வந்து இருக்கா..அவ ஆசை தீர எங்க வீட்டில் தங்கட்டும் மாப்பிள்ளை.. பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொல்லிவிட்டு எழுந்து விட துரைசாமியின் உள்ளத்தில் மேலும் ஒரு கரும்புள்ளி உற்பத்தியானது.
‘பழி..’
‘அது எப்படி நான் ஒரு விஷயம் மறுத்துப் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இவள் உள்ளே புகுந்து என் பேச்சை மீறி சம்மதத்தை சொல்லலாம்? அப்புறம் என் பேச்சுக்கு என்ன மதிப்பு? குடும்பத் தலைவன் நானா இல்லை அவளா?’அவரது உள்ளம் கடுகடுத்தது.
எல்லாரும் அமைதியாக வீட்டுக்கு சென்று விட… இரவு உணவு முடிந்ததும் அபிமன்யு சத்யனைத் தேடி அவனது அறைக்கு வந்தான்.
“வாங்க மாப்பிள்ளை… உட்காருங்க…”
“அஞ்சலி ரொம்பவே ஆசைப்பட்டா மச்சான்… எங்க வீட்டில் எப்பவுமே அவளோட விருப்பத்துக்கு எதிரா யாரும் ஒரு குண்டூசியை கூட நகர்த்த மாட்டோம்… அதனால தான் உங்க வீட்டில்…”என்று தயக்கத்துடன் இழுத்தான் அபிமன்யு.
“எனக்கு புரியுது மாப்பிள்ளை..உங்க விளக்கத்துக்கு எல்லாம் அவசியமே இல்லை.. அவங்களுக்கு எவ்வளவு நாள் வேணுமோ இங்கே தங்கிக்கட்டும். அவங்களை பத்திரமா பார்த்துப்போம்”
“அது எனக்குத் தெரியும் மச்சான்… மாமாவுக்கு இன்னமும் எங்க எல்லார் மேலயும் கோபம் இருக்குனு எனக்குப் புரியுது. என்னை எது சொன்னாலும் சனாவுக்காக நான் பொறுத்துப்பேன். ஆனா அஞ்சலி சின்னப் பொண்ணு..அவளால தாங்க முடியாது. மாமா அவ கிட்டே கோபமா எதுவும் பேசாத மாதிரி நீங்க கொஞ்சம் பார்த்துக்கணும்.”
‘உண்மையில் அஞ்சலி இந்த வீட்டில் இருக்கும்போது அவ கிட்டே இருந்து எங்க அப்பாவை காப்பாத்தத் தான் நான் ரொம்ப போராட வேண்டி இருக்கும்னு உங்களுக்கு எப்படி நான் சொல்வேன்!’
“ஏன்னா அஞ்சலிக்கு எந்த விதத்திலயும்..சஹானா மீதோ … அவளை சேர்ந்தவர்கள் மீதோ எந்த விதமான கசப்பான உணர்வுகளும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அப்படி ஏதாவது நடந்தா சனா கஷ்டப்படுவா… அதை என்னால தாங்கிக்க முடியாது.”
சஹானாவின் மகிழ்ச்சிக்காக அவர் இத்தனை தூரம் யோசிக்க…உடன் பிறந்த தானும் அவளுக்காக அஞ்சலியை தந்தையிடம் இருந்து காப்பதாக வாக்களித்தான் சத்யன்.
“நீங்க திரும்பி வரும் வரை அஞ்சலியை நான் பத்திரமாக பார்த்துக் கொள்வேன். அம்மாவும் கூட இருக்கும் பொழுது உங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு தயக்கம்? நீங்க புது மாப்பிள்ளை.. எதைப் பத்தியும் கவலைப் படாம தங்கச்சி கூட சந்தோசமா ஹனிமூனுக்கு போய்ட்டு வாங்க…”என்று கூற அபிமன்யுவின் முகமும் மலர்ந்தது.
இங்கே அறையில் இருந்த அஞ்சலியோ அபிமன்யு, சஹானா இருவரும் கிளம்பிய பிறகு என்னென்ன விதங்களில் துரைசாமியை வறுத்தெடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அபிமன்யுவின் திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே மேகலாவிற்கும், சஹானாவிற்கும் அவர் செய்த கொடுமைகள் எல்லாமே தெரிய வந்த பொழுது அவளின் உள்ளம் கொதித்தது.
கட்டிய மனைவியின் ஆசை பரதத்தை அரங்கேற்றம் செய்வது தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் மேகலாவை திட்டமிட்டே வீட்டுக்குள் முடக்கி வைத்தவர் அவர். தன்னுடைய ஆசையை மகளின் மூலமாவது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அவர் காத்திருக்க…அதற்கும் தான் எத்தனை தடைகள் விதித்தார். மனைவியை வீட்டுக்குள்ளேயே முடக்கி… மகளை பரதம் கற்க விடாமல் செய்து… சத்யன் உதவி செய்ய முயல்வதை அறிந்து மனைவியின் பெயரை சொல்லி மிரட்டி அல்லவா சஹானா பரதம் கற்க முடியாமல் செய்தார்.
யார் செய்த புண்ணியமோ… அபிமன்யு சூட்டிங் நடத்துவதற்காக அந்த ஊருக்கு வந்தவன் சஹானாவின் துயர் துடைக்க முன் வந்தான். அதிலும் கூட விஷயத்தை முழுதாக தெரிந்து கொள்ளாமல் தானே கூட பலமுறை சதி செய்து அவர்களை பிரிக்க நினைத்தேன்.
எப்படியோ இறைவனின் அருளால் சஹானா பரதத்தை அரங்கேற்றம் செய்ததோடு மட்டும் இல்லாமல் அவளை உயிருக்கு உயிராக நேசித்த அபிமன்யுவையே திருமணமும் செய்து கொண்டாள். அதற்கும் தான் எத்தனை பாடு… திருமணத்திற்கு முதல் நாள் வரையிலும் மாப்பிள்ளை அவன் தான் என்ற விஷயம் துரைசாமியின் காதுகளுக்கே வராத வண்ணம் காரியத்தை சாதித்தவள் அஞ்சலி தானே… ஆனால் இது அத்தனையும் செய்து முடித்த பிறகும் கூட அஞ்சலியின் மனம் அமைதி அடைய மறுத்தது.

பெண்களை தன்னுடைய அடிமைகள் என்ற ரீதியில் அதுநாள் வரை நடத்தி வந்த துரைசாமிக்கு பாடம் புகட்டியே தீர வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் அஞ்சலி. அதற்காகத் தான் அவளின் இந்த பயணமே.
அடுத்த நாளின் விடியலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள் அஞ்சலி.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here