சதிராடும் திமிரே 20 tamil novels

0
201

அத்தியாயம் 20

வீட்டில் அனைவரும் உறங்கி இருக்க, தாமதமாகவே வழக்கத்திற்கு மீறிய சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பினார் துரை.

அஞ்சலியின் ஏற்பாட்டின் படி மேகலா முன்னரே உறங்க சென்று இருக்க, கண்ணில் திமிருடன் கதவை திறந்து விட்ட அஞ்சலியைப் பார்த்து பல்லைக் கடித்தார்.

“எங்கே போய் தொலைஞ்சா அந்த கழுதை?” முணுமுணுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார்.

“நான் தான் அவங்களை முன்னாடியே தூங்க சொல்லிட்டேன்.” அவருக்கு பதில் அளித்தபடி வீட்டில் யாரேனும் இன்னும் தூங்காமல் இருக்கிறார்களா என்று பார்த்து உறுதி செய்து கொண்டாள்.

“ரொம்ப சந்தோசம். நானே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கிறேன். நீ போய் தூங்கு” அவளை எதிரில் வைத்துக் கொண்டே சாப்பிட்டால் இரண்டு கவளம் கூட நிம்மதியாக உண்ண முடியாது என்ற எண்ணம் அவருக்கு.

“உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பக்குவமா சாப்பாடு பரிமாற நினைச்சு ஒண்ணும் நான் இங்கே வரலை” என்றாள் துடுக்காக.

அவள் பேசிய தோரணையில் எரிச்சல் அதிகமாக அவளையே வெறுப்புடன் பார்த்தார்.

ஹாலில் இருந்த சோபாவில் முதலில் அமர்ந்தவள் அவரை அமருமாறு சைகை செய்ய, துரைசாமியின் வெறுப்பு உச்சத்திற்கு சென்றது.

“நல்லா வளர்த்து இருக்காங்க உங்க வீட்டில். இதை தான் சொல்லிக் கொடுத்தாங்களா? பெரியவங்க கிட்டே கொஞ்சமும் மரியாதை இல்லாம நடந்துக்கிற?”

“உங்களை பெத்தவங்க உங்களை நல்ல மாதிரி தானே வளர்த்தாங்க. அப்புறம் ஏன் நீங்க இப்படி இருக்கீங்க?” என்று குரலை உயர்த்தாமல் அவள் கேட்ட கேள்வியில் ஆத்திரம் அதிகமாக அவளது கழுத்தை நெறிப்பதற்கு கையை கழுத்துக்கு கொண்டு சென்று விட்டார் துரைசாமி.

அஞ்சலி கொஞ்சமும் அசையவில்லை. அவளின் தீர்க்கமான பார்வையில் அவருள் ஏதோவொரு தடுமாற்றம். தானாகவே அவரது கைகள் கீழிறங்கியது.

“பேசி முடிச்சுட்டா நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டே இருப்பேன்.” அதே அசட்டை தொனி தான் அஞ்சலியிடம்.

வேண்டா வெறுப்பாய் தான் அமர்ந்தார் அவர். அவர் நினைத்து இருந்தால் அவளை ஒதுக்கி தள்ளி விட்டு சென்று இருக்கலாம். ஆனால் அவள் பார்வையில் இருந்த ஏதோவொன்று அவரை அமர செய்தது.

“அடுத்து வர்ற முகூர்த்த நாளில் நான் உங்க மகன் சத்யாவின் மனைவியாகி இருக்கணும்” எந்த வித வளவளா … கொழகொழா பேச்சுக்களும் இன்றி நேரடியாய் அம்பை எய்தாள் அஞ்சலி.

ஒரு நிமிடம் அவளது பேச்சைக் கேட்டு திகைத்து நின்ற துரைசாமி உடனே கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.

“என் பையனுக்கு ஜோடி நீயா? என் பையன் ராஜா.. அவனுக்கு நீயா? ஒரு அனாதையை கட்டி வச்சாலும் வைப்பேனே தவிர, உனக்கு எல்லாம் அந்த அந்தஸ்து கிடைக்கவே விடமாட்டேன். இந்த வீட்டில் இதுக்கு யார் ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்கவே மாட்டேன். எந்த தைரியத்துல நீ என்கிட்டே இப்படி கேட்கிற”

“நீங்க கண்டிப்பா முன்னே நின்னு எங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை செஞ்சு வைப்பீங்ககிற நம்பிக்கையில் தான்”

“நான் நாளைக்கே செத்தாக் கூட இவளை மட்டும் கல்யாணம் பண்ணிக்காதடா சத்யானு என் பையன் கிட்ட சொல்லிட்டுத் தான் சாவேன். என் பையனும் என் பேச்சை மீறி உன்னை கல்யாணம் செஞ்சுக்க மாட்டான்.”

“அவ்வளவு சீக்கிரம் உங்களை சாக விட மாட்டேன் மாமனாரே”

“ஏய்! என்னை அப்படிக் கூப்பிடாதே”

“நான் முடிவு பண்ணிட்டேன். இனி யார் நினைச்சாலும் அதை மாத்த முடியாது”

“உன்னோட தில்லாலங்கடி வேலை எல்லாம் என்கிட்டே நடக்காது. சஹானா விஷயத்துல ஒருமுறை ஏமாந்துட்டேன். இனியொரு முறை அப்படி நடக்கவே நடக்காது”

“ஹா ஹா… ரொம்ப லேட் மாமனாரே… ஸ்கெட்ச் போட்டு பக்காவா எல்லாத்தையும் முடிச்சுட்டேன்.”

“ஏய்! போன முறை மாதிரி ஒண்ணுமே தெரியாம உன்கிட்டே ஏமாந்து நிற்பேன்னு நினைச்சியா?”

“சே! சே! எல்லாம் தெரிஞ்சாலும் இந்த முறை எதுவுமே செய்ய முடியாம கையை கட்டிக்கிட்டு நிற்கப் போறீங்கனு சொல்றேன்”

“சீ! உன்கிட்டே எனக்கு என்ன பேச்சு… சாக்கடையைப் பார்த்தா ஒதுங்கி போறது தான் என் குணம். உன்னை மாதிரி ஒருத்தி கிட்டே பேசினா எனக்கு மட்டுமில்லை என்னோட குடும்பத்துக்கே பெரும் பழி” துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு அவளை தாண்டி செல்ல முயன்றவரின் முன்னால் போனை நீட்டி அந்த வீடியோவை ப்ளே செய்தாள் அஞ்சலி.

அபிமன்யுவையும், சஹானாவையும் கொள்வதற்கு ஆள் ஏற்பாடு செய்த அன்று வீட்டில் அவர் பேசிய அத்தனையும் போனில் வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தது.

கையும், களவுமாக அஞ்சலியிடம் மாட்டிக் கொண்டதில் பேச வார்த்தைகள் இன்றி உறைந்து போய் நின்றார் துரைசாமி.

“இந்த உலகத்துல உங்க… ஹூம் உனக்கு எல்லாம் எதுக்கு மரியாதை?. உன் அளவுக்கு ஒரு கேவலமான ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை.”

 “ஏய்! இதுல இருக்கிறது நானே இல்ல. பேசுறதும் என்னோட குரல் இல்ல. கூத்தாடி தங்கச்சி தானே நீ. என்னை மாதிரியே யாரையோ நடிக்க வச்சு என்னோட குடும்பத்தை கெடுக்கப் பார்க்கறியா?”என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய… அஞ்சலியோ கொஞ்சமும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருந்தாள்.

“ராத்திரி நேரத்துல இப்படி சத்தம் போட்டீங்கன்னா வீட்டுல இருக்கிற எல்லாரும் முழிச்சு வெளியே வந்துடுவாங்க. அப்புறம் அவங்க கேட்கிற கேள்விக்கு என்கிட்டே பதில் இருக்கு. உங்க கிட்டே இருக்கா?”

“….”

“அப்புறம் என்னமோ சொன்னீங்களே… கூத்தாடி தங்கச்சின்னு… ஆமா என் அண்ணன் நடிக்கிறவன் தான். அது திரையில… மத்தவங்கள சந்தோசப்படுத்த … ஆனா நீ சொந்த குடும்பத்துக்கிட்டேயே நடிக்கிறவன். நீ எல்லாம் கேவலமான ஜென்மம். உனக்கு அவரைப் பத்தி பேச என்ன தகுதி இருக்கு.”

“ஏய்!”குரலை உயர்த்தி கத்தினார் துரைசாமி.

“நீ கத்தினா நானும் கத்துவேன். கத்தட்டுமா?” என்று அவள் அழுத்தமாக பேசியதில் துரைசாமியின் மனதுக்குள் அலாரம் அடித்தது.

“அதுல இருக்கிறது நான் இல்லவே இல்ல.”

“அப்போ ஒன்னு செய்யலாம். வீட்டில இருக்கிற எல்லார் கிட்டயும் இந்த வீடியோவை காட்டி இதுல இருக்கிறது நீங்களா இல்லையானு கேட்கலாமா?”

“…”

“என்ன மிஸ்டர் பண்ணையார்.. பேச்சையே காணோம்”

“…”

“இந்த வீடியோவை மத்தவங்க பார்த்தா என்ன ஆகும்னு நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை. உங்களுக்கே தெரியும். உங்களுக்கு வேற ஆப்ஷனே இல்லை. நான் சொல்றதை கேட்கிறது மட்டும் தான் ஒரே வழி.”

“சத்யாவுக்கு ஜாதகத்துல ஒரு தோஷம் இருக்கு. அதனால அவனுக்கு ஏத்த பெண்ணா தேடி இன்னிக்குத் தான் பேசி முடிச்சேன்.”

“நம்ப மாட்டேன். வாய்ப்பே இல்லை.”

“இல்ல… நிஜமாவே…”

“அப்படியே பேசி முடிச்சு இருந்தாலும் பரவாயில்லை. அதை ஸ்டாப் பண்ணிட்டு எங்க கல்யாணத்தை நீங்களே முன்னே நின்னு நடத்தி வைக்கணும்”

“முடியாது… முடியவே முடியாது”

“முடிஞ்சே ஆகணும்”

“எனக்கு உன்னைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது. உன்னோட மூஞ்சியில தினம் நான் முழிக்கணுமா?”

“அது என்னோட பிரச்சினை இல்லை. முதல்ல கல்யாணம் நடக்கட்டும். அதுக்கு அப்புறம் உங்களை தனிக்குடித்தனம் வைக்கிறேன்”

“என்ன?”

“ அ.. அது  அப்படி இல்ல… நான் தனிக்குடித்தனம் போய்க்கிறேன்னு சொல்ல வந்தேன்.” என்றாள் உள்ளே பொங்கிய வஞ்சத்தை மறைத்துக் கொண்டு.

“ஓஹோ… நான் கஷ்டப்பட்டு  ஆஸ்திக்கு ஒரு ஆண் பிள்ளையை பெத்து வைப்பேனாம். இவங்க வந்து தனிக் குடித்தனம் கூட்டிட்டு போவாங்களாம்” என்றார் எரிச்சல் மண்ட…

“இதெல்லாம் யோசிக்கிற நிலையில் நீங்க இருக்கிறதா உங்களுக்கு இன்னுமா தோணுது? ஒரு நிமிஷம் போதும். ஒரே அழுத்து… இந்த வீட்டில் இருக்கிறவங்க மட்டும் இல்ல… உலகத்துல இருக்கிற எல்லாரும் இந்த வீடியோவை பார்க்கிற மாதிரி செஞ்சிடுவேன். அப்புறம் போலீஸ், கேஸ்… ஜெயில்… களி” என்றாள் நக்கலாக.

“செத்தாலும் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்”

“இனிமே வாழ்ற ஒவ்வொரு நாளும் நீங்க உயிரோட இருக்கணுமா வேண்டாமா அப்படிங்கிறது என்னோட கையில் தான் இருக்கு” என்று தடாலடியாக பேச சோர்ந்து போய் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டார்.

“கொஞ்சம் யோசிச்சு பாருங்க மாமனாரே… இந்த வீடியோ வெளியே போனா உங்க ஊர்ல இருக்கிற மக்கள் உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க. உங்க மேல இத்தனை நாளா அவங்க வச்சிருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் என்ன ஆகும்?”  அடுக்கடுக்காய் அவள் கணைகளை வீச தளர்ந்து  போனார் துரைசாமி.

“ என்னோட பேச்சைக் கேட்டு, நான் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறதைத் தவிர உங்களுக்கு வேற வழி இல்லை. ஆப்புக்கு அசைஞ்ச குரங்கு மாதிரி”

“காசு , பணம் எவ்வளவு வேணுமோ தர்றேன். ஆனா இது வேண்டாம்” என்றார் லேசாக நடுங்கிய குரலில்

“நீங்க பேசுறது எவ்வளவு பெரிய காமெடின்னு உங்களுக்கே தெரியும்…. என் அப்பாவும், அண்ணனும் என் பேர்ல ஏற்கனவே ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குமிச்சு இருக்காங்க. எனக்கு பணம் வேண்டாம். ஒரே டீல்… உங்க வீட்டு மருமகளா ஆகுறது மட்டும் தான்”

“உன்னை நான் எப்படி நம்புறது? கல்யாணம் முடிஞ்ச பிறகு, நீ இந்த வீடியோவை வெளியில் அனுப்பிட்டா?”

“கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷம் இந்த போனை அப்படியே தூக்கி உங்களுக்கு கொடுத்திடறேன்”

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி என் பொண்ணு கல்யாணத்தை எனக்கே தெரியாம உங்க அண்ணனை மாப்பிள்ளையா ஆக்கினவ தானே நீ”

“இப்போ எல்லாத்தையும் உங்க கிட்டே நேரடியா சொல்லிட்டேனே… நீங்க தான் செய்ய போறீங்க?”

“இதுல நீ எப்ப வேணா மாறுவ? அப்புறம் வீடியோவை வெளியில் எல்லாருக்கும் அனுப்பினா?. உன்கிட்டே நான் ஏற்கனவே ஏமாந்துட்டேன். மறுபடியும் ஏமாற நான் தயாரா இல்லை”

“சரி இப்படி செய்யலாம். நல்ல ஆபர் ஒன்னு தர்றேன். இந்த போனை நீங்களே வச்சுக்கோங்க. கல்யாணம் முடியற வரை உங்க கிட்டயே இருக்கட்டும்.”

“கொடு… கொடு” என்று அந்த போனை வாங்க பரபரத்தார் துரைசாமி.

“என்ன மாமனாரே… போனை வாங்கி உடைச்சு போட்டுடலாம்னு கை எல்லாம் பரபரக்குது போல.”

“….”                  

“இந்த போன்ல தினமும் ஒருமுறை போய் அந்த வீடியோல நான் டைமிங் மாத்தி வைப்பேன். அப்படி செய்யலைனா ஆட்டோமேட்டிக்கா வீடியோ என்னோட பேமிலியில இருக்கிற எல்லாருக்கும் செட் பண்ணி இருக்கேன். ஸோ நான் இறந்தாலோ… தினமும் தேதியை மாத்தி வைக்காம விட்டாலோ அது தானாவே எல்லாருக்கும் போய்டும்.”

“சண்டாளி” அவள் காதுகளில் விழுந்துவிடா வண்ணம் மெதுவாக முணுமுணுத்தார்.

“என்ன சொல்றீங்க … பிரில்லியண்ட்னா… தேங்க்ஸ்” என்றவளின் முகத்தில் எள்ளல் நிறைந்து காணப்பட்டது.

எப்படி எல்லாமோ அஞ்சலியிடம் பேசிப் பார்த்தார் துரைசாமி. ஆனால் அவளிடம் அவரது வாய் ஜாலங்கள் எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. கல்யாணத்தை நடத்துவதைத் தவிர அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. திருமணம் நடந்து விட்டால் அஞ்சலியால் அவருக்கு தொல்லைகள் இன்னும் அதிகமாகும் என்று தெரிந்தாலும் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அவருக்குள் இருந்த சாத்தான் வேறு விதமாக திட்டம் தீட்டியது. திருமணம் முடிந்த பிறகு, அவளிடம் நைச்சியமாக பேசி அந்த ஆதாரத்தை அழித்து விட்டு அவளை கொன்று விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார்.

ஒட்டு மொத்த குடும்பமும் ஆச்சரியப்படும் விதமாக துரைசாமியே அடுத்த நாள் காலை திருமணத்திற்கு தன்னுடைய விருப்பத்தை தன்னுடைய வீட்டில் தெரிவித்து விட்டு அஞ்சலியின் பெற்றோர்களிடமும் பேசினார்.

அஞ்சலியைத் தவிர ஒட்டு மொத்த குடும்பமும் அவரது விருப்பத்தைக் கேட்டு அதிர்ந்து தான் போனார்கள். யாராலும் முழு மனதோடு சந்தோசப் பட முடியவில்லை. எல்லாருக்கும் துரைசாமியின் குணம் தெரியுமே.

அபிமன்யு, சஹானா திருமணத்தை அவரை ஏமாற்றி செய்ததில் அவள் மீது அவர் பெரும் ஆத்திரத்தில் இருப்பதை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள். அப்படி இருக்கையில் அவராகவே முன்வந்து இந்த திருமணத்தைப் பற்றி பேசுவதைக் கண்டு எல்லோருக்கும் பயமும், குழப்பமும் தான் ஏற்பட்டது. ஆனால் அத்தனையையும் அஞ்சலி தன்னுடைய பிடிவாதத்தால் முறியடித்து விட்டாள்.

இதோ இன்றைய தினம் அஞ்சலி, சத்யன் இருவரின் திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டது.

குறை என்று யாரும் எதுவும் சொல்லிவிட முடியாதபடி தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்தி இருந்தான் அபிமன்யு.

சஹானாவின் கால்கள் இன்னும் முழுதாக பலம் பெறவில்லை. வீல் சேரில் அமர்ந்து அண்ணனின் திருமணத்தை மகிழ்ச்சியுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் சஹானா. மனதின் ஓரம் தந்தையை நினைத்து பயம் இருந்தாலும், தாயும், அண்ணனும் நல்லபடியாக அஞ்சலியைப் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பினாள்.

சத்யன் நிறைவான மனதுடன் அஞ்சலியின் கழுத்தில் தாலி இருக்க, அஞ்சலியின் முகத்தில் நினைத்ததை சாதித்து விட்ட கர்வம் அப்பட்டமாய் தெரிந்தது.

அது மனதில் நினைத்தபடி சத்யனையே மணந்து கொண்டதற்காக என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, அது துரைசாமியின் மருமகளாய் ஆகி விட்டதற்காக என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

அதற்காக சத்யனின் மீது அன்பில்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் துரைசாமியின் வழக்கு முதலில் தீர்க்கப்பட வேண்டியது என்று அவள் மட்டுமே அறிவாள்.

ஏற்கனவே அவளை அழ வைத்து கதற வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த துரைசாமி இப்பொழுது அவளை கொன்று விடும் எண்ணத்துடன் தன்னுடைய மருமகளாக்கி இருக்கும் துரைசாமியின் வஞ்சம் ஒரு பக்கம்…

தன்னுடைய உயிருக்கும் மேலான அண்ணனை கொல்ல நினைத்த துரைசாமியை கதற வைக்க வேண்டும் என்ற வஞ்சத்துடன் அஞ்சலி மறுபக்கம்.

வஞ்சத்தை வஞ்சம் வெல்லுமா?

இந்த விஷயம் வெளியே தெரிந்தால், மற்றவர்களின் மனநிலை என்னவாகும்?Free pdf download novels

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here