சதிராடும் திமிரே 5 tamil novels

0
158

அத்தியாயம் 5
மேகலாவிற்கு ஏனோ சில நாட்களாக மனதில் ஏதோ கவலையாக இருந்தது.காரணம் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் அவரின் மனதை ஏதோ ஒரு விதத்தில் சஹானாவின் எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது. இத்தனை நாள் கூடவே இருந்ததால் கணவரின் கொடூரமான மறுபக்கம் அறிந்து வைத்து இருந்ததாலோ என்னவோ அவரின் அமைதி அவருக்கு சந்தேகத்தையும், பயத்தையும் கிளப்பியது என்னவோ உண்மை.கணவரை கவனித்த வரையில் அவரிடம் பெரிதாக எந்த மாற்றமும் தெரியாததாலோ என்னவோ தன்னைத்தானே கொட்டிக் கொண்டார்.அவரை தவறாக நினைத்ததற்காக…
‘அவர் கொஞ்சம் கோபக்காரர். தான் நினைச்சது தான் நடக்கணும்னு நினைக்கிற மனுசன். அதுக்காக பிடிவாதம் பிடிச்சு எந்த எல்லைக்கும் போகக் கூடியவர் தான். ஆனா அதுக்காக பெத்த பொண்ணையோ, மாப்பிள்ளையையோ அவர் ஒன்னும் செஞ்சிட மாட்டார்.ஒருவேளை அவருக்கு கோபம் வந்தாலும் முன்னைப் போலவே என்கிட்டே காட்டுவார். அதை நான் சமாளிச்சுப்பேன்’ என்று எண்ணியவர் அன்று கோவிலுக்கு சென்றார்.
சில நாட்களாக தொடர்ந்து கெட்ட கனவுகளாக வருவது அவருக்கு பயத்தை ஏற்படுத்தி இருந்தது. கோவிலுக்கு போய் மகள், மருமகனின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வரலாம் என்று எண்ணி கிளம்பியவருடன் எப்பொழுதும் போல அஞ்சலியும் சேர்ந்து கொண்டாள்.
செல்லும் வழி முழுக்க மேகலா அமைதியையே கடைபிடிக்க அவரையே பார்த்துக் கொண்டு வந்த அஞ்சலி பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டாள்.
“என்ன ஆன்ட்டி.. ரொம்ப அமைதியா… எதையோ யோசிச்சுக்கிட்டே வர்றீங்க?”
“ஒன்னுமில்லைடா”
“சும்மா சொல்லுங்க ஆண்ட்டி… அங்கிள் எதுவும் உங்க கிட்டே சண்டை போட்டாரா? உங்களுக்காக பேச அண்ணி இடத்துல இப்போ நான் இருக்கேன். என்னன்னு சொல்லுங்க. அங்கிளை ஒரு வழி ஆக்கிடறேன்” என்று வரிந்து கட்டிக் கொண்டு பேச அஞ்சலியின் வேகத்தைப் பார்த்து அவருக்கு லேசாய் புன்னகை வந்தது முகத்தில்.
“அவர் கிட்டே சண்டை போட சொன்னா உனக்கு அல்வா சாப்பிடற மாதிரி இருக்கும் போல… எப்பவும் தயாரா இருக்க” அவர் குரலில் கோபம் இல்லை. ஆனால் உன்னை நான் அறிவேன் என்ற பாவனை இருந்தது.
அஞ்சலி இதற்கெல்லாம் அசருபவளா என்ன?
“அங்கிள் மேல கோபம்னு ஏன் நினைக்கறீங்க ஆன்ட்டி… உங்க மேல அதிக பாசம்னு வச்சுக்கோங்களேன்” என்றவள் சலுகையாக அவரின் தோளில் சாய்ந்து கொள்ள செல்லப் பூனை போல நாள் முழுதும் உரசிக் கொண்டே திரியும் அவளிடம் கோபம் காட்ட முடியாமல் சிரித்துக் கொண்டார் மேகலா.
“சிரிக்கறீங்க… அப்போ சொல்ல மாட்டீங்க.. அப்படித் தானே” செல்லக் கோபம் காட்டினாள் அஞ்சலி.
“மனசு கொஞ்சம் சரியில்லைடா… என்னவோ உள்ளே போட்டு குடையுது..என்னனு தெளிவா சொல்லத் தெரியல. இரண்டு நாளா ஒரே கெட்ட கனவா வருது.அதான் கோவிலுக்கு போய் குறி கேட்கலாம்னு போறேன்”
“குறி கேட்கிறதுனா?” அஞ்சலிக்கு புரியவில்லை.
“கோவில் பூசாரி அருள் வந்து ஆடும் போது நாம போய் நம்ம குறைகளை சொன்னா அதுக்கு அவங்க தீர்வு சொல்வாங்க”
“ஆன்ட்டி இதெல்லாம் நீங்க நம்புறீங்களா?”
“ஏன் உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?”ஆச்சரியம் வழிந்தது அவர் குரலில்.
“இருக்குனும் சொல்ல முடியாது… இல்லைனும் சொல்ல முடியாது.” என்று தலையை குருவியாய் ஆட்டி ஆட்டி சொல்ல அவளது தலையை பிடித்து செல்லமாக ஆட்டினார் மேகலா.
“இது என்ன பதில்?”
“எக்ஸாம் ரிசல்ட் வரும் பொழுது கண்டிப்பா சாமி கும்பிடுவேன்.”
“அதுக்கு அடுத்த நாள்…”
“பிள்ளையாரைப் பார்த்தா… ஒரு டாட்டா… ஆஞ்சநேயரை பார்த்தா ஒரு பிளையிங் கிஸ்” என்று சொல்ல அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தார் மேகலா.
“ஆஞ்சநேயருக்கே பிளையிங் கிஸ்ஸா?.. அவர் பிரம்மச்சாரி… சும்மா இல்லை கட்டை பிரம்மச்சாரி தெரியும்ல”
“இருக்கட்டுமே.. அவர் வாழ்க்கையிலயும் லேடிஸ் உண்டு தானே”
“ம் அவரோட அம்மா …”
“ம்ஹும்… அவரோட அம்மா மட்டுமில்லை.. சீதையும் அவரோட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பெண்.”
“ம்ம்… உண்மை தான். சீதையையும் அவர் தன்னோட அம்மாவா தான் பார்த்தார்.”
“அப்படித் தான் நானும்…”என்று அசால்ட்டாக சொல்ல மேகலாவிற்கு பக்கென்று ஆனது.
“அப்படி சொல்லாதே அஞ்சலி… இந்த உலகத்தில் எந்தப் பொண்ணுமே சீதை மாதிரி ஆகிடக் கூடாதுன்னு நான் நினைப்பேன். என்னைப் பொறுத்தவரை சீதை ரொம்பவும் பாவப்பட்ட பொண்ணு” என்றார் தீவிரமான குரலில்.
பேசிக் கொண்டே இருவரும் கோவிலுக்கு வந்து விட தொடர்ந்து பேச்சை வளர்க்காமல் அமைதியானாள் அஞ்சலி.
சாமி கும்பிட்டு முடித்ததும் கோவில் பூசாரி அருள்வாக்கு சொல்லும் இடத்துக்கு இருவரும் சென்றனர். உள்ளூர் மக்கள் சிலர் ஏற்கனவே அங்கே குழுமியிருந்தனர்.
மேகலாவை கண்டதும் உள்ளூர் ஆட்கள் மரியாதையுடன் ஒதுங்கி வழி விட இருவரும் முன்னேறி பூசாரிக்கு அருகில் சென்று நின்றார்கள்.அஞ்சலி முதன்முறையாக இதை எல்லாம் பார்ப்பதால் என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
பூசாரி அருள் வந்து ஆடத் தொடங்கியதும் பயந்தே போனாள். நாக்கை கடித்துக் கொண்டு சத்தமிட்டு கத்தவும் பயத்தில் மேகலாவின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.
“ஒண்ணுமில்லைடா. பயப்படாதே” என்று மெல்லிய குரலில் அவளுக்கு தைரியம் சொன்னவர் அவளது கையை தட்டிக் கொடுத்தார்.
மேகலாவைப் பார்ததும் பூசாரி கை நீட்டி அவரை அழைத்தார்.
“வா…”
“…”
“ஊராளும் வீட்டுக்காரி என் வீட்டைத் தேடி வந்து இருக்க… என்ன விஷயம்?”
“ஆத்தாவுக்கு தெரியாதா? கொஞ்ச நாளாவே கெட்ட கனவா வருது…மனசு நிலையா நிக்காம தவிக்குது”
“உன் புள்ளைக்கு கண்டம் இருக்கு…எமன் உன் வீட்டைப் பார்த்து சிரிக்கிறான்டி”
“ஆத்தா…” கதறினார் மேகலா.
“என் எல்லைக்கு வந்துட்டே இல்ல… இனி நான் காவல் நிக்குறேன் உன் புள்ளைக்கு. ஆனா”
“என்ன தாயே”
“உனக்கு உன் புள்ளை உயிரு வேணுமா? இல்ல உடம்பு வேணுமா?” என்ற அவரின் இந்த கேள்வியில் மேகலா மட்டுமில்லை அஞ்சலியும் கொஞ்சம் ஆடித் தான் போனாள். நடுக்கம் இன்னும் அதிகரித்தது.
“அம்மா… உன் காலடியில் என் பிள்ளைக்காக பிச்சை கேட்டு வந்து இருக்கேன். என் புள்ளையை முழுசா என்கிட்டே கொடுத்துடும்மா” என்று கண்ணீர் விட்டு கதறினார் மேகலா.
“வர்ற திருவிழாவுக்கு விரதம் இருந்து அலகு குத்தி, பூசட்டி ஏந்தி என் கோவிலை நீ வலம் வரணும். செய்வியா?”
“செய்றேன் தாயே… என் புள்ளை…”
“விரத பங்கம் வராம செஞ்சு முடி… உன் புள்ளைக்கு நான் பொறுப்பு… பங்கம் வந்துட்டா…” என்று பேசிக் கொண்டே இருந்தவர் அப்படியே மயங்கி சரிய… அவரை மற்றவர்கள் தாங்கி சாமியை மலையேற்ற உதவினார்கள்.
மேகலா, அஞ்சலி இருவரின் முகமும் கொஞ்சம் பயத்துடனே இருந்தது. இருவரும் வீடு திரும்பும் வழியில் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இருவரின் முகத்திலும் கலவரம் நிறைந்து காணப்பட்டது.
அவர்கள் வந்த நேரம் துரையும், சத்யனும் வீட்டில் இல்லை. இருவருக்கும் பணியாள் வந்து மோர் கொடுத்து விட்டு சென்றதும் இருவருமே மறுப்பு சொல்லாமல் ஒரே மூச்சில் குடித்து முடித்தார்கள்.
“அ…அத்தை… எனக்கு பயமா இருக்கு”
“என்ன பயம் அஞ்சலி… நான் கடவுளை முழு மனசா நம்புறேன். என் பிள்ளைக்கு எதுவும் ஆகாது” என்று திடமாக சொன்னவரை ஆச்சரியமாக பார்த்தாள் அஞ்சலி.
“உங்களுக்கு கொஞ்சம் கூட பயமாவே இல்லையா அத்தை… இது நடக்கும், நடக்காது.. அப்படிங்கிறதையும் தாண்டி அந்த பூசாரி சொன்ன விஷயங்கள் உங்க மனசுல பயத்தை விதைக்கலையா?”
“அஞ்சலி… கடவுள் கிட்டே நம்மை முழுசா ஒப்படைச்சுட்டா அதுக்கு அப்புறம் இந்த மாதிரி சந்தேகம் எதுவும் வராது. வரக்கூடாது” என்றார் அழுத்தமாக.
அவரின் கடவுள் நம்பிக்கையை அஞ்சலியால் குறை சொல்லவும் முடியவில்லை. அதே நேரம் இந்த விஷயத்தை அப்படியே விடவும் மனமில்லை. யாரிடமாவது இதை சொல்ல வேண்டும் என்று மனது பரபரத்தது.
‘யாரிடம் சொல்வது?
’அபிமன்யு, சஹானா இருவரும் தங்களது வாழ்வின் இனிமையான நாட்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இதை சொல்லி அவர்களை பதட்டப்பட வைக்க வேண்டாம். அவர்களின் மகிழ்ச்சி இதனால் பாதிக்கப்படக் கூடும். அதே நேரம் ஏனோ தன்னுடைய அப்பா, அம்மாவிடமும் இதை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அவர்களும் மேகலாவைப் போலத் தானே. தேவையில்லாமல் பயப்படக் கூடும்.
‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தவளுக்கு ஏனோ சத்யனின் முகம் மின்னி மறைந்தது.
‘அவன் கிட்டே சொல்லலாமா?’ என்று கொஞ்ச நேரம் யோசித்தவளுக்கு அதுவே சரியாக இருக்கும் என்று தோன்றிவிட அவனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள். அன்றைய தினம் சத்யனுக்கும் வேலை அதிகம் இருக்க அவன் வீட்டிற்கு வருவதற்கு வழக்கத்தை விடவும் கொஞ்சம் தாமதமாகி இருந்தது. மேகலாவும்,துரையும் உறங்கி விட்டார்கள்.
எப்பொழுதும் உணவு உண்டதும் கொஞ்ச நேரம் நடை பயின்று விட்டு உறங்க சென்று விடும் அஞ்சலி அன்று வீட்டின் முன் பகுதியில் தோட்டத்து ஊஞ்சலில் அவனுக்காக காத்திருந்தாள்.
சத்யன் பைக்கில் வந்ததும் அவனுக்காகவே காத்திருந்தவள் வேகமாக எழுந்து அவனது பாதையை மறித்து நின்றாள்.
அந்த நேரத்தில் அவள் அப்படி வந்து நிற்பாள் என்று எதிர்பாராததாலோ என்னவோ ஒரு நொடி திடுக்கிட்ட சத்யன் அவள் மேல் மோதும் கடைசி நொடியில் சுதாரித்து வண்டியை நிறுத்தினான்.
“இப்படியா மேலே இடிக்கிற மாதிரி வண்டியை ஓட்டிட்டு வருவீங்க?”அவளும் கொஞ்சம் பயந்து தான் போய் இருந்தாள்.
“நீ இப்படியா ராத்திரி நேரத்தில் திடீர்னு முன்னாடி வந்து நிற்ப?”
‘மோகினிப் பிசாசு மாதிரி’ முன்னதை சத்தமாகவும், பின்னதை மனதுக்குள்ளும் சொல்லிக் கொண்டான்.
“நீங்க வீட்டுக்குள்ளே இவ்வளவு வேகமா வருவீங்கன்னு எதிர்பார்க்கல” அவள் குரல் உள்ளே போய்விட்டது.
“இந்த நேரத்துல வீட்டில் யாரும் முழிச்சு இருக்க மாட்டாங்க. அப்படியே இருந்தாலும் தோட்டத்தில… பனியில யாரும் உலாவ மாட்டாங்க.”என்றான் அவனும் சமாதானம் செய்யும் குரலில்.
“உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன். வீட்டுக்குள்ளே இருந்தா தூங்கினாலும் தூங்கிடுவேன். அதான்.”
“எனக்காகவா?” ஆச்சரியம் வழிந்தது அவன் குரலில்.
“ம்ம்ம்… ஆமா… வீட்டுக்குள்ளே வேண்டாம். இங்கேயே பேசுவோம்” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.
நகரத்தில் இருபாலாரோடும் ஒன்றாக படித்து வளர்ந்தவளுக்கு அந்த செய்கை வித்தியாசமாக தோன்றவில்லை. ஆனால் சத்யன் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான். ஆனால் அஞ்சலியின் முகத்தில் இருந்த கவலை அவனை வேறு எதுவும் யோசிக்க விடவில்லை.
“என்ன விஷயம்?” என்று கேட்க… காலையில் நடந்தது அத்தனையையும் ஒன்று விடாமல் ஒப்பித்தவள் அவன் முகத்தையே பார்த்தாள்.
“சரி.. அதுக்கென்ன இப்போ?” என்றான் அசட்டையாக.
“என்ன கொஞ்சம் கூட பயமே இல்லாம பேசுறீங்க? அந்த பூசாரி சொன்ன மாதிரி ஏதாவது கெடுதல் நடந்துட்டா?”
“அதெல்லாம் எதுவும் நடக்காது”
“சீ! உங்க கிட்டே போய் சொன்னேன் பாருங்க.. அப்படியே தங்கச்சிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பதறிப் போய் ஏதாவது செஞ்சிடுவீங்கனு… என்னை சொல்லணும்” என்று வேகமாக நெற்றியில் அறைந்து கொண்டவள் அவன் அழைப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள்.
“சரியான பிசாசு… மோகினிப் பிசாசு” என்று திட்டியவன் வீட்டினுள் சென்று விட்டான். அறைக்குள் அஞ்சலிக்கு தூக்கமே வரவில்லை. குறுக்கும் நெடுக்குமாக சற்று நேரம் நடந்தவள் எதேச்சையாக திரும்பி கண்ணாடியைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
இரவில் நைட்டி போட்டு உறங்கும் பழக்கம் உள்ளவள் எப்பொழுதும் போல நைட்டியில் இருந்திருக்க..மேலே போடும் கோட் இல்லாமல் வெறும் ஸ்லீவ்லெஸ் உடன் இவ்வளவு நேரம் சத்யனுடன் பேசி இருந்திருக்கிறாள்.
‘சை! இதை எப்படி மறந்தேன்? பார்த்து இருப்பானோ? ம்ஹும்… வாய்ப்பே இல்லை.. இருட்டில் தெரிஞ்சு இருக்காது அந்த மாக்கானுக்கு” என்று எண்ணியவள் ஏதேதோ நினைவுகளுடன் உறங்கிப் போனாள்.
அதே நேரம் அபிமன்யு தேனிலவில் இருந்து உடனடியாக ஊருக்கு திரும்பும் முடிவில் இருந்தான்.
“சனா பேபி.. இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு அப்புறம் போகலாம்னு தான் நினைச்சேன்டா. ஆனா டைரக்டர் சார் உடனே வர சொல்லி ரொம்ப கெஞ்சுறார். ஏற்கனவே ஒத்துக்கிட்ட படம். இந்த ஒரு பாட்டுக்காக தான் வெயிட்டிங். மத்தபடி முழுப்படமும் முடிஞ்சுடுச்சு. பாட்டு பாரின் லொகேஷனா இருந்திருந்தா இங்கேயே வர சொல்லி இருப்பேன். ஆனா பாட்டு கிராமத்து லொகேஷன்ல எடுக்க முடிவு செஞ்சு இருக்காங்க. போய் தான் ஆகணும் செல்லம்”
“எனக்கு எதுக்குங்க இவ்வளவு விளக்கம்.. கிளம்ப சொன்னா கிளம்ப போறேன்” என்றாள் அவனின் மனம் அறிந்தவளாய்.
“நீ கேள்வி கேட்க மாட்ட தான். ஆனா எனக்கே இங்கிருந்து கிளம்ப மனசு இல்லையே.”என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.
அவனின் பாவனையில் அவள் சிரிக்க வலிக்காமல் அவள் கன்னம் கிள்ளியவன், “சிரிக்கறியா நீ” என்றான்.
“இந்த ஊர் எங்கே போய்ட போகுது. மறுபடி வந்துட்டா போச்சு… நாளைக்கே கிளம்பலாம். நீங்க டிக்கெட் புக் பண்ணுங்க” என்று அவன் தலையை கோதியபடி சொல்ல சில நொடிகள் அமைதியாக இருந்தவன் வேகமாக எழுந்து அமர்ந்தான்.
“சரி ஆனா ஒரு கண்டிஷன்…”
“என்னவாம்?”
“ஷூட்டிங் நடக்கும் பொழுது நீயும் என் கூடவே வரணும்.”
“அவ்வளவு தானே… வந்துட்டா போச்சு” என்று சொன்னவள் சலங்கையாய் சிரிக்க எப்பொழுதும் போல அவளது சிரிப்பை சில நொடிகள் ரசித்தவனின் பார்வை மெல்ல மெல்ல மனைவியை ரசிக்கத் தொடங்கியது.
“சனா” என்று உருகியவனின் கைகள் மெல்ல மனைவியை தன் பக்கம் இழுத்துக் கொள்ள அதன் பின்னே அங்கே கொலுசுகளின் கீர்த்தனை ஒலி மட்டுமே கேட்டது.Free pdf download novels

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here