சதிராடும் திமிரே tamil novels 19

0
1070

 

அத்தியாயம் 19

துரைசாமிக்கு சொந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எந்நேரமும் ஹாலில் பெண்களின் சிரிப்பு சத்தம். அஞ்சலியால் வீடே கலகலவென்று இருந்தது. அவள் துரைசாமியை வெறுப்பேற்ற செய்தாளோ அல்லது மனமுவந்து செய்தாளோ மேகலாவை சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தாள்.

சத்யன் அவ்வபொழுது மேகலாவின் முகத்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இதற்கு முன் இல்லாத அளவிற்கு அவர் முகம் அத்தனை மகிழ்ச்சியாகவும், சாந்தமாகவும் இருந்தது அஞ்சலியின் வருகைக்குப் பின்.

அதே நேரம் அவள் இருக்கும் நேரத்தில் துரைசாமி பெரிதாக வெளியில் வருவதும் இல்லை. வாயைத் திறப்பதும் இல்லை. சாப்பிடும் நேரத்தில் கூட அவர் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டார்.

மொத்தத்தில் வீடு நிறைவாக இருப்பதைப் போல தோன்றியது சத்யனுக்கு. எல்லாம் சரி தான். ஆனால் அப்பாவுக்கும், அவளுக்கும் ஒத்து வரவில்லையே. அவருக்கு பிடிக்கவில்லை எனில் அஞ்சலியின் வாழ்வை நரகமாக்கி விடுவாரே.

அஞ்சலி அறியாமல் அவளை ரசிக்கத் தொடங்கினான். உண்மையை சொல்வதானால் அவனையும் அறியாமலே அது நடந்தது.

அஞ்சலி மாநிறம் தான். ஆனால் அவள் கண்களில் எப்பொழுதும் ஒரு துறுதுறுப்பு இருக்கும். படபடவென்று வாய் ஓயாமல் அவள் பேசிக் கொண்டிருக்க, ஏதோ வேலையாய் செல்பவனைப் போல நான்கைந்து முறை அவர்களை கடந்து சென்றவனை பார்த்து மேகலாவும், சஹானாவும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.

அஞ்சலி பார்க்காத நேரம் அவளைப் பார்த்தவன், அவள் பார்க்கும் பொழுது கோபமாய் முகத்தை திருப்பி சென்றான்.

‘அவனை ஏமாற்றி விட்டாளாம்!’ அவனது கோபத்திற்கு காரணமும் சொல்லிக் கொண்டான். அஞ்சலியும் இரண்டு முறை அவனது முகத்தை பார்த்து விட்டு நாக்கை துருத்தி அழகு காட்டினாள் யாரும் அறியாமல்.

அவளது தைரியத்தில் அவன் தான் மிரண்டு போய் உள்ளே தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான்.

‘இதென்ன அம்மாவும், தங்கையும் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறாள். தைரியம் தான்’ என்று எண்ணியவன் அதன்பிறகு அவள் பக்கம் திரும்பவே இல்லை.

மதியம் உணவை உண்டு முடித்து வயலுக்கு சென்றவனுக்கு அங்கே வேலையே ஓடவில்லை. முடிந்தவரை சமாளித்தவன் அன்று இரவு வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டின் அடுப்படியில் இருந்து அவளின் சிரிப்பு சத்தம் வாசல் வரை கேட்டது.

லேசாக எட்டிப் பார்த்தான்.

அன்றைய நாள் கோவிலில் விசேச பூஜை இருக்கவே அங்கே கோவிலில் வரும் பக்தர்களுக்கு கொடுத்து அனுப்புவதற்காக பொங்கல் தயார் செய்து கொண்ருந்தார்கள்.

சஹானா சர்க்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஏலக்காயை இடிகல்லில் போட்டு இடித்துக் கொண்டிருக்க, மேகலா பொங்கலை கிண்டிக் கொண்டிருந்தார். அஞ்சலி சமையல் மேடையில் அமர்ந்து கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

“அம்மா…பசிக்குதுமா… டிபன் தர்றீங்களா?”

“என்ன சத்யா இன்னிக்கு சீக்கிரமே வந்துட்ட… கொஞ்ச நேரம் பொறு தம்பி…இதோ பொங்கலை செஞ்சு முடிக்கப் போறோம். இதை கோவிலுக்கு அனுப்பிட்டு உனக்கு தோசை சுட்டுத் தர்றேன்”

“அதென்ன அத்தை… நம்ம தான் வேலையா இருக்கோமே… உங்க பையனுக்கு அது தெரியலையா? கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டாராமா?” வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள் அஞ்சலி.

அவளை ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி மேகலாவிடம் , “ முடிச்சுட்டு சொல்லுங்கம்மா… எனக்கு ரூமில் கொஞ்சம் வேலை இருக்கு”

“ஸ்ரீராமஜெயம் எழுத போறீங்களா?” என்று சத்தமாகவே  கேட்டாள் அஞ்சலி.

சத்யன் நிற்க கூட இல்லாமல் சென்று விட, அவன் காதில் சொன்னது`காதில் விழவில்லையோ என்று நினைத்தவள் அப்படியே அதை மறந்தும் போனாள்.

பொங்கல் தயார் ஆனதும் பெரிய பாத்திரங்களில் இருந்ததை எல்லாம் வேலையாட்களை வைத்து வண்டியில் ஏற்றிய மேகலா  கோவிலுக்கு புறப்படத் தாயாரானார்.

“அஞ்சலி நான் கோவிலுக்கு போய் இதை கொடுத்துட்டு வந்துடறேன்மா. நீயும் சஹானாவும் வீட்டில் இருங்க. இப்போ கோவிலில் கும்பல் ஜாஸ்தியா இருக்கும். நீங்க இரண்டு பேரும் வர வேண்டாம். நம்ம எல்லாரும் சேர்ந்து காலையில் போகலாம். வேலைக்காரி கிட்டே டிபன் செய்ய சொல்லி இருக்கேன். நீங்க எனக்காக காத்திருக்காம எல்லாரும் சாப்பிட்டுடுங்க… நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வரப் பார்க்கிறேன்” என்றவர் கோவிலுக்கு புறப்பட்டு சென்று விட, சஹானாவை அவளது அறைக்கு அழைத்து சென்றாள் அஞ்சலி.

“அண்ணி… அண்ணன் வந்து கேட்டா…”

“நான் தான் உன்னை வர சொன்னேன்னு சொல்லிடறேன் போதுமா?” என்றாள் சஹானா சிரிப்புடன்.

“நல்ல அண்ணி” என்று அவள் கழுத்தை கட்டிக் கொண்டாள் அஞ்சலி.

“உன்கிட்டே ஒன்னு கேட்கணுமே அஞ்சலி…”

“கேளுங்க அண்ணி”

“நீ என் அண்ணன் சத்யாவை…”

“ஆமா அண்ணி..”அவள் கேள்வியை முடிக்கும் முன் பதில் வந்தது அஞ்சலியிடம் இருந்து.

“இதுல நிறைய சிக்கல் இருக்கு அஞ்சலி.. அவ்வளவு ஈசியா நடந்துடாது… நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடியும், அதுக்கு பின்னாடியும்… நானோ, உங்க அண்ணனோ எப்பவுமே உன் பக்கத்துல இருக்க முடியாது. அண்ணனே கூட உன் பக்கத்துலயே இருபத்து நாலு மணி நேரமும் இருக்க முடியாது. உன்னை நீ தான் பார்த்துக்கணும்.”

“அண்ணி… உங்க கல்யாணத்தையே நான் தான் நடத்தி வச்சேன். மறந்துட்டீங்களா? உங்க கல்யாணத்தை நடத்த தெரிஞ்ச எனக்கு என் கல்யாணத்தை நடத்திக்கத் தெரியாதா?” என்றாள் கண்களில் சவாலுடன்.

“அதுவும் என்னோட பயத்துக்கு ஒரு காரணம் அஞ்சலி. அப்பாவுக்கு உன்மேல ஏற்கனவே கோபம் இருக்கும்… என்னோட கல்யாணத்தை நடத்தி முடிச்சுட்டு நீயும், நானும் சென்னை போயிட்டோம். ஆனா உன்னோட ஆசைப்படி என் அண்ணனை கல்யாணம் செஞ்சுகிட்டா  நீ அதுக்கு அப்புறம் இங்கே இந்த வீட்டில் தான் இருந்தாகணும். தினம் தினம் அவர் உன்னை குத்திக் குதற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டே இருப்பார். தினமும் அவர்கிட்டே இருந்து நீ ஓடி ஒளியவும் முடியாது. உன்னைக் காப்பாத்துறதே  ஒரு வேலையா அண்ணனுக்கு ஆகிட்டா, அண்ணனுக்கும் தான் கஷ்டம். அவருக்கு வீட்டில் நிம்மதி இல்லாம போய்டும்.” அஞ்சலிக்கு சொல்லி புரிய வைக்க முயன்றாள் சஹானா.

“அண்ணி இதெல்லாம் உங்க அப்பாவுக்கு என்னைப் பிடிக்காம போனாத் தானே… அவருக்கே என்னை பிடிச்சு எங்க இரண்டு பேருக்கும் முன்னே இருந்து கல்யாணம் செஞ்சு வச்சா” என்றாள் கண்களில் யோசனையை தேக்கி

“ஹம்… ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் தான் அஞ்சலி.” என்று சலித்துக் கொண்டாள் சஹானா.

‘இந்தப் பெண் ஏன் எதையுமே புரிந்து கொள்ள மறுக்கிறாள்.’ அவளுக்கு கவலையாக இருந்தது.

அவளின் கவலை நிறைந்த முகத்தைப் பார்த்த அஞ்சலி அவளைப் பார்த்து சமாதானமாய் புன்னகைத்தாள்.

“நீங்க கவலைப்படாதீங்க அண்ணி… கூடிய சீக்கிரம் நான் நினைச்ச மாதிரி என்னோட கல்யாணம் நடக்கும். அதுக்கு ஒரு ஸ்பெஷல் வேண்டுதல் செய்யத் தான் இப்போ நான் உங்க ஊருக்கு வந்து இருக்கேன்” என்று அழுத்தமாக சொல்ல, சஹானா எதுவும் பேசாமல் மௌனம் காத்தாள்.

அஞ்சலியும் மேலும் பேச்சை வளர்க்கவில்லை.

“அண்ணி நீங்க இருங்க… நான் டிபன் ரெடி ஆகிடுச்சானு பார்த்துட்டு வர்றேன்” என்றவள் உல்லாச நடையுடன் அகல, சஹானாவிற்கு கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இருப்பதாய் தோன்றவில்லை.

டிபன் தயாரானதும் முதலில் சத்யனைத் தேடிப் போனாள் அஞ்சலி.

‘அப்பவே பசிக்குதுன்னு சொன்னாரே’

அறையின் வாசலில் இருந்து இரண்டு முறை குரல் கொடுத்தாள்.

உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை.

‘உள்ளே இல்லையோ…தூங்கிட்டாரோ? எதுக்கும் உள்ளே போய் பார்க்கலாமா?’ எண்ணியபடி உள்ளே செல்ல, வேகமாக உள்ளிருந்து இழுக்கப்பட்டாள்.

அஞ்சலி பதறவில்லை. அவளுக்கு அவள் மேல் கை பட்டதுமே தெரிந்து போனது. அந்தக் கைகளுக்கு சொந்தக்காரன் யார் என்று.

“பயமே இல்லையா உனக்கு?” அவன் கைகள் இப்பொழுது சுவற்றில் பதிந்து இருந்தது. கண்கள் அவள் கண்களை உரசி சென்றது.

“பயமா? எனக்கா? அதுவும் உங்க கிட்டேயா? வாய்ப்பில்லையே” உதட்டை பிதுக்கினாள்.

“ஏனாம்?” அவன் பார்வை இப்பொழுது அவள் இதழ்களில்.

“நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்” என்று கண்களில் கேலியுடன் சொல்ல, அவனின் ஆண் மனது முரண்டியது ‘இவளை ஏதாவது செய்’ என்று.

தங்கையின் நாத்தனார் என்பது சற்றே ஒரு நொடி பின்னுக்கு செல்ல, தன்னை மணக்க விரும்பும் பெண்  என்பது அவன் முன்னே வந்து நின்றது.

இமைக்காமல் அவள் கண்களையே பார்த்தபடி மேலும் ஒரு அடி முன்னேறினான்.

“அம்மாவும், தங்கச்சியும் இருக்கும் பொழுதே அவங்களை வைச்சுக்கிட்டே என்னை வம்புக்கு இழுக்கிற…”

“என்ன செய்ய? இதெல்லாம் நீங்க செய்யணும்? உங்களுக்குத் தான் அந்த அளவுக்கு தைரியம் இல்லையே” அவன் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்தாலும் படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் பேசினாள்.

“ஊருக்கு வந்துட்டு தானே இன்னிக்கு காலையிலேயே போனில் என்கிட்டே அப்படி பேசின”

“ஆமா… அதுக்கென்ன? இனிமே என்கிட்டே வம்பு செய்றதுக்கு உங்களுக்கு தைரியம் வரக்கூடாது… அதுக்குத்தான் அப்படி பேசினேன்” அவனை சீண்டி விட்டே தீர வேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்திருந்தாள்.

“அப்படினா உனக்கு என் மேல பயமில்லை… எனக்கு தைரியம் இல்லாததால என்னை சீண்டுற”

“இனியும் செய்வேன்… ஏன்னா?…”

“எனக்கு தைரியம் இல்லை… அப்படித்தானே?” அவள் தொடங்கியதை அவன் முடித்து வைத்தான்.

“உன்னைப் பொறுத்தவரை தைரியம்னா என்ன?”

“மனசுக்கு பிடிச்சதை செய்றது”

“வீட்டோட மூத்த பையன் நான். எப்பவும் என்னைப் பத்தி மட்டுமே யோசிக்க முடியாது.”

“மத்தவங்களுக்காக மட்டுமே வாழ்ந்தா அது எப்படி நம்ம வாழ்க்கையாக முடியும்? நமக்கு இஷ்டப்பட்டத செஞ்சு, நம்ம சந்தோசத்துக்கு ஏத்த மாதிரி வாழ முடியலேன்னா அப்புறம் என்ன வாழ்க்கை அது!”

“இந்திய குடும்பங்கள் பெரும்பாலும் இப்படித்தான். ஆணோ, பெண்ணோ யாரோ ஒருத்தர் விட்டுக் கொடுத்து போனா தான் அந்த வீடு அமைதியா இருக்கும்”

“ஹுக்கும்… எங்க வீடு என்ன பாகிஸ்தான்லயா இருக்கு. எங்க வீட்டில் எப்பவும் எல்லாரோட விருப்பத்தையும் கேட்டு தான் நடப்பாங்க.”என்று சொல்ல மெல்ல அவளை விட்டு நகர்ந்தான்.

“எல்லா வீடும் ஒரே மாதிரி இருக்காது”

“உண்மை தான். குடும்பத்தில் எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்கனு எதிர்பார்க்க முடியாது தான்”என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல, அவளை விட்டு முழுதாய் தள்ளி நின்றான் சத்யன்.

அஞ்சலியும் உடனே எதையும் பேசவில்லை. இருவரும் அந்த மௌனத்தை அப்படியே சில நொடிகள் நீட்டித்தனர்.

“டிபன் ரெடி ஆகிடுச்சு… சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.”

“நீங்க சாப்பிடுங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.” அவன் புருவ சுழிப்பை பார்த்த அஞ்சலி அவன் நகர விடாமல் கைகளை குறுக்கே நீட்டி அவனை செல்ல விடாமல் தடுத்தாள்.

“ஏன் அப்பவே பசிக்குதுன்னு சொன்னீங்க?”

“ம்ச்… இப்போ பசிக்கலை போதுமா?”

“அதெப்படி பசி காணாம போகும்… ஒழுங்கா வந்து சாப்பிடுங்க”

“நீங்க சொல்றபடி எல்லாம் ஆட என்னால முடியாது…”

“இப்போ இருந்து பழகிக்கோங்க. இல்லைனா பின்னாடி கஷ்டம்”

“அதுக்கு வாய்ப்பில்லை…” என்று உதட்டை சுழித்து அவளைப் போலவே அவன் சொல்ல, அவள் முகத்தில் லேசான புன்னகை கீற்று.

“நல்லாருக்கு”

“எது”

“உன் சிரிப்பு”

“பார்றா… ஆள் கூட நல்லா தான் இருக்கேன்”

“அப்படி ஒண்ணும் தெரியலையே” என்றான் தாடையை தடவியபடி.

“கண்ணைத் திறந்து பார்த்தா தெரியும்”

“அந்த வம்பே வேண்டாம் தாயி…”

“சரி சரி சாப்பிட வாங்க போகலாம்”

“நான் தான் அப்புறமா வர்றேன்னு சொன்னேனே”

“நானும் நீங்க வராம போக மாட்டேன்னு சொன்னேனே”

“பிடிவாதம்”

“சில விஷயத்துல தப்பில்லை…”

“சரி போங்க வர்றேன்…”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ, வான்னு பேசினதா ஒரு ஞாபகம்”

“…”

“கீழே போறேன்… சீக்கிரம் வாங்க..என்னை சாப்பாட்டு விஷயத்துல வெயிட் பண்ண வைக்கிறது எனக்கு பிடிக்காது. தெரிஞ்சு வச்சுக்கோங்க”

“அதை எதுக்கு நான் தெரிஞ்சு வச்சுக்கணும்?”

“கூடிய சீக்கிரம் தேவைப்படும். வீட்டுல அமைதி இருக்கணும்னா எனக்கு பிடிச்சது, பிடிக்காதது எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும் நீங்க”

“அதையும் தான் நான் ஏன் தெரிஞ்சு வச்சுக்கணும்னு கேட்கிறேன்”

“கழுத்துல தாலி கட்டினதும் இதுக்கு பதில் சொல்றேன்”என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் கீழே ஓடி விட்டாள்.

“உப்ப்ப்ப்… தலையால தண்ணி குடிக்க வைக்கிறாளே… கொஞ்ச நேரத்துக்கே கண்ணைக் கட்டுதே… ஆனா இதுவும் பிடிச்சு தொலைக்குது”

தனியே பேசியவன் தலையை அழுந்த கோதி தன்னை சமன்படுத்திக் கொள்ள முயன்றான்.

சத்யனை ஒரு வழி செய்தவள் அன்றைய இரவு துரைசாமியிடம் எப்படி பேச வேண்டும் என்று மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.

ஒத்திகை பார்க்காமல் பேசியதற்கே சத்யனை தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள். அப்படி என்றால் ஒத்திகை பார்த்து விட்டு பேசப் போகும் துரைசாமியின் நிலைமை!

அந்தோ பரிதாபம்! ஆப்பை பார்த்து பார்த்து அழகாக செதுக்கி விட்டு அவருக்காக காத்திருந்தாள் அஞ்சலி.Free pdf download novels

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here