அத்தியாயம் 1
அந்த விபச்சார விடுதியின் முன்னே போலீஸ் குமிந்து இருந்தது. வயது வாரியாக எத்தனையோ பெண்கள், சிறுமிகள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். பெண்கள் பெரும்பாலும் முகத்தை மூடிக் கொண்டு நிற்க… போட்டோகிராபர்கள் அவர்களை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
“எவனாவது இங்கே வந்த ஆம்பிளைங்களை போட்டோ எடுக்கிறானா பாரு” என்று ஒரு பெண் முணுமுணுக்க லத்தியை ஓங்கிக் கொண்டு அவரிடம் வந்தார் விறைப்பாக ஒரு காக்கி சட்டை.
“வாயை மூடு… உனக்கெல்லாம் பேச்சு ஒரு கேடு… வொர்க்கிங் உமன்ஸ் (Working womens) ஹாஸ்டல்ங்கிற பேர்ல விபச்சார விடுதியா நடத்துற…”
“அய்யே… இன்னா சாரு… மாசா மாசம் வந்து மாமூல் எல்லாம் வாங்கினு போனீங்க… இப்போ இன்னாவோ புச்சா பேசினுகுறீங்க”
“தோலை உறிச்சுடுவேன் ராஸ்கல்… நான் உன்கிட்டே காசு வாங்கினேனா? வாங்கினவன் கிட்டே போய் கேளு” என்றவர் அங்கிருந்த பெண்கள் பக்கம் பார்வையை திருப்ப… கூட்டத்தின் பின்னால் மருண்ட விழிகளோடு நின்ற அந்த இரட்டை சிறுமியர்களை பார்த்ததும் இன்னும் ஆவேசமானார்.
“பச்சை பிள்ளைகளை கூட விட்டு வைக்க மாட்டியா … பொம்பளையா நீ” என்று திட்டித் தீர்த்தவர் வேகமாக அந்த சிறுமிகளின் அருகில் போனார்.
“உங்க பேர் என்னம்மா?”
“ஹா… ஹாசினி… இவ சுஹாசினி”
“இங்கே எப்படி வந்தீங்க? யார் கூட்டிட்டு வந்தா?”
“எங்க சித்தி தான் இங்கே வேலை செஞ்சா காசு கிடைக்கும்னு சொல்லி இன்னிக்கு காலையிலே விட்டுட்டு போனாங்க…”
“சித்தினா? அப்பாவோட சம்சாரமா?” போலீஸ் விசாரணை தொடங்கியது.
“இ.. இல்லை சித்தப்பாவோட பொண்டாட்டி”
“உங்க அப்பா, அம்மா?”
“சா… சாமிகிட்டே” என்று பேசியபடியே சிறுமிகள் இருவரும் மாறி மாறி அழத் துவங்கினார்கள். மிஞ்சிப்போனால் இருவருக்கும் பதிமூன்று வயது இருக்கும். பால் மணம் மாறாத முகம். குழந்தைகளைப் பற்றி விசாரித்து மீண்டும் அவர்கள் சித்தப்பா வீட்டில் அவரால் ஒப்படைக்க முடியவில்லை.
விபச்சார விடுதியில் இருந்த பெண்களை வீட்டிற்குள் சேர்த்தால் அவரது பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இரக்கமே இல்லாமல் சொன்ன அவர்களின் சித்தியிடம் செல்ல இரு பெண்களுமே மறுத்து விட்டார்கள்.
“உங்களுக்கு வேற யாரும் சொந்தக்காரங்க இருக்காங்களா பாப்பா?”
“மாமா இருக்காங்க… ஆனா அங்கேயும் வேண்டாம்” என்று வேகமாக மறுத்தாள் சுஹாசினி
“ஏன்?” போலீஸ்காரரின் பார்வை கூர்மையானது.
“…”
“சொந்தக்காரங்க வீட்டுக்கு போகலைனா உங்களை ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு தான் அனுப்ப வேண்டி இருக்கும்மா” அவர்களின் பரிதாபமான நிலையை மெதுவாக எடுத்து சொன்னார்.
“பரவாயில்லை சார்… ஆனா மாமா வீடு மட்டும் வேண்டாம்” என்றாள் சுஹாசினி கண்களில் பயத்தை தேக்கியபடி…
“அத்தை கொஞ்சம் திட்டுவாங்க சார்… அதான் பயப்படுறா போல… நாங்க அங்கேயே போறோம் சார்… நான் இவகிட்டே பேசிக்கிறேன்” என்று சொன்ன ஹாசினி. எப்படியோ ஒரு வழியாக சுஹாசினியை சமாளித்து வைக்க, அவர்களின் மாமா வீட்டுக்கும் தகவல் சொல்லியாகிற்று.
கோதை அத்தையை பார்த்ததுமே சுஹாசினியின் உடலில் மெல்லிய நடுக்கம் பரவுவதை உணர்ந்த ஹாசினி மெல்ல அவளின் கைகளைப் யாரும் அறியாமல் பற்றிக் கொண்டாள். மற்றவர்கள் அறியாமல் உடன் பிறந்தவளுக்கு தைரியம் கொடுத்தாள் . அவர்களை அழைத்து செல்ல வந்திருந்த அத்தையின் கடுகடுத்த முகத்தையும், போலீசையும் மாறி மாறி பார்த்தவண்ணம் அங்கிருந்து வெளியேறினார்கள் இருவரும்.
கோதைக்கும், மணிமாறனுக்கும் திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மணிமாறனுக்கு பெரிதாக எந்த சொத்தும் கிடையாது. அவ்வபொழுது கிடைக்கும் பிளம்பிங் (Plumbing) வேலைகளை செய்து தான் காலத்தை ஓட்டி வந்தார்கள். எனவே மற்றவர்களை விடவும் கூடுதல் பாசத்துடன் இருவரையும் பார்த்துக் கொள்வார்கள் என்பது மற்றவர்களின் கணிப்பாக இருந்தது. வீடு வந்து சேரும் வரையிலுமே அத்தனை வசவுகள் அத்தையிடம் இருந்து.
“எங்கேயாவது அனாதை ஆசிரமத்தில் போய் இருக்க வேண்டியது தானே? ஒன்னுக்கு ரெண்டு பொட்டப் புள்ளைங்க… எப்படி சமாளிப்பேன்? எல்லாம் என்னோட தலையில் தான் விடியுமா? இனி உசுரை கையில பிடுச்சுக்கிட்டே இல்ல ஒவ்வொரு நாளையும் ஓட்டணும். போலீசுக்கு என்ன வந்துச்சு? யார் கிட்டயாவது இதுங்களை தள்ளி விட்டா போதும்னு நினைச்சு இருப்பாங்க… எல்லாம் என் தலை எழுத்து”
அவரின் வசவுகளுக்கு நேர்மாறாக இருந்தது மாமா மணிமாறனின் முகம்.
“வாங்க செல்லங்களா…” என்று கூவியபடியே அவர்கள் இருவரையும் நோக்கி கரங்களை விரித்து நீட்டியபடி வந்தவர் கோதையின் கடுகடுத்த முகத்தில் நடையை தேக்கினார்.
“போங்க… போய் அடுப்படிக்குள்ளே இருங்க… அந்த இடத்தை விட்டு எப்பவும் வெளியே வரக்கூடாது. சாப்பாடு தூக்கம் எல்லாம் இனி அங்கே தான் உங்களுக்கு” குழந்தைகளிடம் கடுகாய் பொறிந்தார்.
“பாவம் கோதை… சின்ன பிள்ளைங்க… ஏன் இப்படி அவங்களை வாட்டுற.. அவங்க எதுக்கு அடுப்படிக்குள்ளே இருக்கணும். அது தான் ரூம் இருக்கே? ” பரிந்து பேசிய மணிமாறனை கண்களால் எரித்தார்.
“ஏய்! ரூமுக்குள்ளே காலை வச்சா ரெண்டு பேர் காலையும் உடைச்சு அடுப்பில் வச்சுடுவேன். என் பேச்சுக்கு அடங்கி இருக்கிறதுனா இங்கே இருக்கட்டும். இல்லேன்னா…” என்றவரை முடிக்க விடாமல் தடுத்து பேசினார் மணிமாறன்.
“சரி சரி… உன் இஷ்டம்… பிள்ளைங்க சோர்வா இருக்காங்க..சாப்பிட ஏதாவது கொடு”
“எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க உங்க அலுவலைப் பாருங்க.. வந்துட்டாரு… ஏய்! இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்னு வாய் பார்த்துட்டு இருக்கப் போறீங்க? உள்ளே போங்க”
சலதி 1 tamil novels
Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
2
+1
1
+1
+1
1
+1
+1