சலதி 3 tamil novels

0
181
 • அத்தியாயம் 3
  “ஏய்! இரண்டு பேரும் என்னோட கிளம்புங்கடி.”
  “பிள்ளைங்களை எங்கே கூப்பிடுற கோதை?”
  “ம்… போலீஸ் ஸ்டேஷன்க்கு”
  “அங்கே எதுக்கு? ஏன்?… ” பதட்டமானார் மணிமாறன்.
  “உங்க தங்கச்சியும், அவ புருஷனும் இதுங்க ரெண்டு பேர் பேர்லயும் இன்சூரன்ஸ் போட்டு வச்சு இருந்த பணத்தை அப்படியே இதுங்க சித்திகாரி சுருட்டிட்டா.. அதான் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து அந்த பணத்தை வாங்கப் போறேன்”
  “எவ்வளவு பணம்?”
  “இரண்டு பேருக்கும் ஆளுக்கு அஞ்சு லட்சம்”
  “அவ்வளவா?” வாயை பிளந்தார் மணிமாறன்.
  “ஆமா.. எவ்வளவு பெரிய தொகை.. அதை அப்படியே அமுக்கப் பார்க்கிறா அந்த குந்தாணி. வாங்கி வச்சுக்கிட்டா நாளைக்கு நமக்கு பயன்படும்ல”
  “ஆமாமா… நானும் வரட்டுமா”
  “வேண்டாம்… நானே பார்த்துக்கிறேன்.. எப்படியும் திரும்பி வர சாயந்திரம் ஆகிடும்.”
  “சரி சரி.. நீ மெதுவா வா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதைப் பார்க்கிறேன்.”
  “அப்படியே அந்த பாத்ரூம் குழாயையும் சரி பண்ணிடுங்க.. ரொம்ப ஒழுகுது”
  “சரி மா.. நான் பார்த்துக்கிறேன்”
  வீட்டில் இருந்து கிளம்பிய கோதை பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு முதலில் சென்றது ஒரு அனாதை ஆசிரமத்திற்குத் தான். அதன் பின்னர் கையில் இருந்த காசில் இருவருக்கும் உண்பதற்கு டீயும், பன்னும் வாங்கிக் கொடுத்தவர் அடுத்து அழைத்து சென்றது போலீஸ் ஸ்டேஷனுக்குத் தான்.
  பிள்ளைகளை வெளியே அமர வைத்து விட்டு உள்ளே சென்றவர் வெகுநேரம் அங்கு இருந்தவர்களிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.
  வாதத்தில் தொடங்கி கெஞ்சல் வரை நீண்டது அவர்களின் பேச்சு வார்த்தை. ஹாசினியும், சுஹாசினியும் ஒரு வித பயத்துடன் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்க.. சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தார் கோதை.
  “வந்து தொலைங்க…” என்று ஆத்திரமாக கத்தியவர் அவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றார். வீட்டுக்கு திரும்பியவர்களை மணிமாறன் உற்சாகத்துடன் வரவேற்றார்.
  “போன விஷயம் என்னாச்சு கோதை?” ஆர்வம் கொப்பளித்தது அவர் குரலில்.
  “கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்து இருக்கேன். பார்க்கலாம்” என்று விட்டேத்தியாக சொன்னவர் அடுத்த வேலைகளை பார்க்க நகர்ந்து விட மணிமாறனின் முகம் யோசனையானது.
  “நான் வேணும்னா அந்த பொண்ணுகிட்டே தனியா பேசிப் பார்க்கட்டுமா? எதுக்கு போலீசுக்கு எல்லாம் போய்க்கிட்டு…” என்றவர் பேச்சை முடிக்கவில்லை. அவசரமாக வெளியே வந்து கத்தத் தொடங்கினார் கோதை.
  “நீரு வாயை வச்சுக்கிட்டு சும்மா இரும்… அதுவே பெரிய உதவி.. நீங்க கேட்ட உடனே ஆஹானு தூக்கி கொடுத்துடுவாளா அந்த ராங்கி பிடிச்சவ… பச்சை பிள்ளையாட்டம் பாசாங்கு செய்வா… நான் பார்த்துக்கிறேன்… நீங்க அடங்கி இருங்க” என்று அதட்டியவர் மேலும் சில வசவுகளை அவருக்கு பரிசளித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தார்.
  பிள்ளைகள் இருவரும் அன்றைய இரவு தூங்காமல் வெகுநேரம் முழித்துக் கொண்டு இருந்தார்கள். எப்பொழுதும் இரவு அவர்கள் இருக்கும் அடுப்படியை வெளிப்பக்கம் பூட்டு போட்டு பூட்டி விட்டுத் தான் கோதை உறங்க செல்வார்.
  “பணம் கைக்கு வர்ற வரைக்கும் இந்த குட்டிங்க நம்ம கிட்டே தான் இருந்தாகணும். ராத்திரியில் நமக்கு தெரியாம ஓடிட்டா என்ன செய்வீங்க? எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்” என்று மணிமாறனிடம் மாலையில் பேசிக் கொண்டதை கேட்டதில் இருந்தே ஹாசினிக்கும், சுஹாசினிக்கும் மனதில் தவிப்பு.
  ‘அப்படியானால் பணம் வந்ததும் இவர்களும் தங்களை துரத்தி விடுவார்களோ’ என்பதே இருவரின் பெரிய கவலையாக இருந்தது.
  “ஏன் ஹாசினி இங்கே இருந்தும் துரத்திட்டா அப்புறம் எங்கேடி போறது? சித்தி வீட்டுக்கு போனா மறுபடியும் அந்த மோசமான வீட்டுக்கு நம்மை அனுப்பினாலும் அனுப்பிடுவாங்க”
  “அதெல்லாம் யோசிச்சு ரொம்ப குழப்பிக்காத சுஹா… எங்கே போனாலும் உன் கூடவே நான் இருப்பேன். இரண்டு பேரும் சேர்ந்து சமாளிச்சுடலாம்.”
  “ஹாசினி நாம போன வீடு ரொம்ப மோசமான வீடுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க… தெரிஞ்சே தானே சித்தி அங்கே அனுப்பினாங்க? ஒருவேளை அங்கே நமக்கு எதுவும் ஆகி இருந்தா?”
  “ரொம்ப யோசிக்காதே சுஹா”
  “இல்லடி… அங்கே போனோம்னு சொல்லி சொல்லியே எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க…பள்ளிக்கூடத்துலையும் யாரும் நம்ம கிட்டே பேசுறது இல்ல. அங்கே இருந்தப்பவும் அந்த வீட்டில் இருந்த அந்த பொம்பளை நம்ம ரெண்டு பேரையும் யார் யாரோ ஆம்பளைங்க முன்னாடி நிக்க வச்சு ஏதோ பேரம் பேசினாங்க தானே… ஒருவேளை பிள்ளை பிடிக்கிற கும்பலா அவங்க… போலீஸ் வந்து நம்மளை காப்பாத்தாம போய் இருந்தா?”
  “சுஹா… எதுக்கு இப்படி நடக்காதது எல்லாத்தையும் யோசிச்சு குழப்பிக்கிட்டு இருக்க? இப்போ இந்த நிமிஷம் நாம பாதுகாப்பா இருக்கோம். அதைப் பத்தி மட்டும் நினை”
  “நீ எப்படிடி இவ்வளவு தெளிவா யோசிக்கிற”
  “தெளிவா யோசிக்க மண்டையில் மூளைன்னு ஒரு வஸ்து வேணும்டி… உனக்குத் தான் மேல் மாடி காலி ஆச்சே” என்று உடன்பிறந்தவளை சீண்டினாள். அவளின் எண்ணப்படியே சுஹாசினியும் அவளது கவலைகளில் இருந்து சிறிது நேரம் வெளியே வந்தவள் சில நொடிகளில் மீண்டும் மௌனமானாள்.
  “அப்பாவும், அம்மாவும் ஏன்டி நம்ம இரண்டு பேரையும் இப்படி தனியா தவிக்க விட்டு போனாங்க”
  “…”
  “எவ்வளவு அன்பா பார்த்துக்கிட்டாங்க… சந்தோசமா இருந்தோமே… ஏன் இந்த கடவுள் நம்ம கிட்டே இருந்து அவங்களை பிரிச்சுட்டாங்க”
  “சுஹா.. போதும்டி” ஹாசினியின் குரலுமே கரகரத்துப் போய் இருந்தது. என்ன தான் ஹாசினி பெரிய மனுசி போல நடந்து கொண்டாலும் அவளுக்கும் அதே வயது தானே… சுஹாசினி கூட துக்கங்களை வெளியே கொட்டி விடுவாள். ஆனால் ஹாசினி அப்படி இல்லை. எல்லாவற்றையும் உள்ளுக்குள் போட்டு பூட்டிக் கொள்வாள். இன்று சுஹாசினியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இலக்கில்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாசினி.
  “எனக்கு அம்மா வேணும்… அம்மாவோட சேலை வாசனை வேணும்… தூங்கும் போது தலை கோதும் அப்பாவோட விரல் வேணும். பால் சாதம் ஊட்டும் அம்மாவோட சிரிச்ச முகம் வேணும். தூங்கப் போறப்போ தேவதை கதை சொல்லும் அப்பாவோட குரல் வேணும்…”
  அவள் பேசப்பேச இதுநாள் வரை மனதில் அடக்கி வைத்திருந்த அழுகையை எல்லாம் மனம் விட்டு கதறி அழத் தோன்றியது ஹாசினிக்கு. ஆனால் அவள் அழுதால் சுஹாசினி இன்னுமே நொறுங்கி விடுவாள். சுஹாசினியின் பலம் ஹாசினி தானே. இதழ் கடித்து அழுகையை விழுங்கினாள். அவள் வயதுக்கு மிகவும் கடினமான காரியம் தான். ஆனாலும் செய்தாள்… சுஹாசினிக்காக…
  சிறு வயதில் இருந்தே ஹாசினி கொஞ்சம் தெளிவானவள். தைரியமான சுபாவம் கொண்டவள். சுஹாசினி அவளுக்கு அப்படியே நேர் எதிர் குணம் கொண்டவள். பயந்தே தன் வாழ்க்கையை ஓட்டுவாள். அவளுக்கும் எப்பொழுதும் யாராவது ஒருவரின் துணை வேண்டும். இதுநாள் வரை அம்மா, அப்பா.. இப்பொழுது ஒட்டிப் பிறந்த ஹாசினி. அவளின் நிலையைப் போலவே தான் சுஹாசினியின் நிலையும். ஒருவரையொருவர் பிரியாத வரை எல்லாம் சுபமே.. பிரிந்தாலோ … பிரிய நேர்ந்தாலோ… மற்றவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது அந்த கடவுளுக்குக் கூட தெரியாது.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here