சலதி 8 tamil novels

0
144

#Tamil novels#Tamil literature#Tamil authors#Online Tamil novels#Free Tamil novels#Tamil eBooks#Tamil novels download#Tamil novels online reading#Best Tamil novels#Tamil novels PDF

அத்தியாயம் 8
மணி நள்ளிரவு பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த மாடலிங் ஏஜென்சியின் ரிஷப்ஷனில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தாள் ஹனி. அந்த கம்பெனிக்கு விளம்பரம் கொடுக்கும் ஒரு பெரிய பணக்காரன் ஒருவனுக்காக காத்திருக்கிறாள். ஆறு மணிக்கே வந்து விட்டாள். இன்னமும் அந்த ஆள் வந்த பாடில்லை. அவரது சோப் தயாரிக்கும் கம்பெனியின் சார்பாக தான் அவள் நடிக்கப் போகிறாள். அதற்கு அவளை நேரில் பார்க்க வர சொல்லி இருந்தார் அந்த பணக்காரன்.
நேரம் கரைந்து கொண்டிருந்தது. இதோ வருகிறேன். அதோ வருகிறேன் என்று தகவல் மட்டும் வந்து கொண்டிருந்தது. ஆள் வந்த பாடில்லை. ஒரு வழியாக நடுராத்திரி ஒன்று முப்பது மணிக்கு வந்து சேர்ந்தான் அவன்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை பணத்தின் செழுமை மின்னியது. மிஞ்சிப் போனால் முப்பது வயது இருக்கக்கூடும் அவனுக்கு. பெயர் ஜகதீஷ் என்று மேனேஜர் சொல்லி இருந்தான்.
“இவங்க தான் மாடலா?” அவளை நேர்கொண்டு பார்த்தான். அவன் பார்வை லேசராய் அவள் மீது விழுந்தது. அவளது அங்கங்களின் மீது ஒரு நொடி அதிகமாகவே நிலைத்து மீண்டது.
“இது சோப் விளம்பரம்… டவல் கட்டிட்டு குளிக்கிற மாதிரி சீன் இருக்கும். நடிப்பீங்களா?”நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“நோ ப்ராப்ளம்”
“இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் கை தெரியுது.. கால் தெரியுது . நான் நடிக்க மாட்டேன்னு சொல்லக்கூடாது.”
“பணம் சரியா வர்ற வரை என்னால எந்த பிரச்சினையும் இருக்காது” தெளிவாய் தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதை சொல்லி விட்டாள் ஹனி. இப்பொழுது அவன் பார்வை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே அவளிடம் படிந்தது.
“இன்னிக்கே ஒரு சின்ன மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்திடலாமா? என்னால இன்னொரு நாள் ஒதுக்க முடியாது”
“ஓகே…” அசட்டையாய் தோள் குலுக்கினாள்.
“இப்போ ஆரம்பிச்சா விடிஞ்ச பிறகும் கூட வேலை இழுக்கும்…” அவன் பார்வை இன்னமும் அவளை படித்த படியே தான் இருந்தது.
“ஐ கேன் மேனேஜ்” என்றவள் மீண்டும் சேரில் அமர்ந்து விட.. ஜகதீஷும் நட்ராஜுக்கு கண்ணைக் காட்ட.. அடுத்தடுத்த வேலைகள் மளமளவென நடந்தேறியது.
அந்த இடத்தில் அவளைத் தவிர வேறு எந்த பெண்ணும் இல்லை. அவளுக்கு உடையாக ஒற்றை டவல் மட்டுமே கொடுக்கப்பட்டது. தலை முடி உயர்த்தி கொண்டை வடிவில் கட்டப்பட்டது. வெல்குரோ துண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் அவள் உடம்பில் இழுந்து நழுவலாம் என்ற விதத்தில் கட்டி இருந்தாள் ஹனி. அடிக்கடி ஜகதீஷின் பார்வை தன் மேல் விழுந்து அப்புவதை உறுதி செய்து கொண்டவள் வேண்டுமென்றே அவனுக்கு கிறக்கமூட்டும் விதமாக உடலை வளைத்து நெளித்து காட்சி அளிக்கத் தொடங்கினாள்.
அவளது உள்மனம் அலறியது.
‘இது தப்பு… இப்படி செய்யாதே… குணசேகரனை நினைச்சுப் பார். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்கு’ .
மற்றொரு மனமோ அதை அசட்டை செய்தது.
‘பணம் பணம் பணம்’ என்று விடாமல் கூப்பாடு போட்டது.
கண்களால் அவனுக்கு அழைப்பு விடுத்தாள். ஆனால் கிட்டே நெருங்க முடியாதபடி பார்வையாலேயே தடுத்து நிறுத்தினாள்.
‘இவ கிட்டே வர சொல்றாளா? வேண்டாம்னு சொல்றாளா?’
‘இவ கண்ணகி பரம்பரையா இல்ல மாதவியா? கண்ணால தூண்டில் போடுறா… கிட்டே போனாலே ஒதுங்கறாளே’ அவள் மனதில் ஓடும் எண்ணம் புரியாமல் மண்டையை பிய்த்துக் கொள்ளத் தொடங்கினான் ஜகதீஷ்.
எடுத்தவுடன் தூக்கி கொடுத்து விட்டால் அந்த பொருளுக்கு மதிப்பு இருக்காது என்பதை உணர்ந்தவள் ஹனி…
ஜகதீஷை காக்க வைத்து… அவளுக்காக ஏங்க வைக்க வேண்டும். ஹனி வேண்டும். அவள் இல்லாவிட்டால் தனக்கு வாழ்க்கையே இல்லை என்று அவனுக்கு தோன்ற வேண்டும். குறைந்தபட்சம் அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய அவன் தயாராக இருக்க வேண்டும்.
அதற்கு அவனை அவள் பின்னால் சுற்ற வைக்க வேண்டும். அவளை தொடும் அந்த நொடிக்காக உயிரைத் தரவும் அவன் சித்தமாக இருக்க வேண்டும். அவனது பணத்தை எல்லாம் அவள் காலடியில் கொட்ட அவன் தயாராக இருக்க வேண்டும் அப்படி ஒரு நேரம் வந்த பிறகு தான் அவனது விரல் தன் மீது படுவதற்கு அனுமதிக்க வேண்டும். வைரத்தையும், தங்கத்தையும் அவள் காலடியில் கொட்டுவதற்கு அவன் துணியும் வரை அவனது மோகத்தை தூண்டி அதில் குளிர் காய வேண்டும்.
இப்படி எண்ணிலடங்கா ஆயிரம் ‘வேண்டும்’கள் அவள் மனதில் இருந்தது. வெறுமனே விபச்சாரியாக இருந்தால் என்ன கிடைக்கும் ? தினமும் சில ஆயிரங்கள்… அது எப்படி போதும்? அதுவே ஒரு பெரும் பணக்காரனுக்கு ஆசை நாயகியாக மாறி விட்டால்? கணக்கில் அடங்காத பணம். அவளது காலடியில்.
ஷாலினி கொடுத்த ஐடியா தான் இது. ஆரம்பத்தில் அவளது கல்லூரி நாட்களில் பெரும் பணக்காரர்களுக்கு இரவு கம்பெனி கொடுத்தால் ஒரு இரவுக்கு ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டு அங்கே போனவளால் முழு மனதாக அப்படி செய்ய முடியவில்லை. தினமும் ஒருவனோடா? எண்ணமே கசந்து வழிந்தது அவளுக்கு. ஆனால் பணமும் வேண்டுமே… என்ன செய்வது? இரு மனமாக அவள் போராடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஷாலினி இந்த ஐடியாவை சொன்னாள்.
ஷாலினி கிட்டத்தட்ட ஒரு பெண் ப்ரோக்கர் போல… அவளுக்கு ஹனியின் தேவையும், மனநிலையும் புரிந்து போக அவள் தான் இந்த வழியை காட்டினாள். ஆரம்பத்தில் இரவு நேரத்தில் ரோட்டில் நின்று பெரும் பணம் கொண்டவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அவளது அழகுக்காகவும் அவள் இன்னும் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் அவளுக்கு ஒருநாள் இரவுக்கு லட்சக்கணக்கில் பணம் தர பலர் முன் வரவே செய்தார்கள். ஆனால் அதன் பிறகு அவளது வாழ்க்கை என்னாவது? அதன் பிறகு அவளால் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கை வாழ்வது முடியாத காரியம். எனவே நல்ல பணக்காரனுக்கு இரண்டாம் தாரமாகவோ அல்லது முறையில்லாத சின்ன வீடாகவோ வாழ்ந்து விட முடிவெடுத்தாள். எத்தனையோ பேருக்கு இரவுகளில் விருந்தாவதை விட முறை தவறி வாழ்ந்தாலும் ஒருவனுடன் மட்டுமே வாழ்ந்து தனக்கு வேண்டிய பணக்கார வாழ்க்கையை அடைந்து விட துடித்தாள்.
அவளது காத்திருப்பு வீண் போகவில்லை. ஜகதீஷ் அவளது வலையில் விழுந்தான். அவனுக்கே தெரியாமல் அவனைப் பற்றி ஷாலினியிடம் விசாரித்தாள். திருமணம் ஆனவன் தான். குழந்தை இல்லை. சொத்துக்கள் ஏராளம். அவனை மட்டும் மடக்கி விட்டால் போதும் அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் அவளுக்கு அள்ள அள்ள குறையாத பணம் கிடைக்கும். அவளது கணக்கு தெளிவாக இருந்தது. காலத்தின் கணக்கு?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here