சலதி 7 tamil novels

0
142

அத்தியாயம் 7
அப்பா, அம்மா உயிருடன் இருக்கும் பொழுதே மணிமாறன் யாரும் இல்லா நேரங்களிலோ அல்லது யாரும் இல்லாத நேரத்தை உண்டாக்கிக் கொண்டோ சுஹாசினியிடம் ஏற்கனவே இதுபோல சில முறை அத்துமீறி இருக்கிறான். அவள் எத்தனையோ முறை அவளது தாயிடம் சொல்ல முயற்சி செய்து இருக்கிறாள். ஆனால் அவளை வாயை திறக்க முடியாதபடி மிரட்டி இருந்தான் மணிமாறன். இதைப்பற்றி வெளியே சொன்னால் அவளது தாயும் , தந்தையும் அதன்பிறகு அவளை நம்பாமல் வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் என்று நன்றாக பயமுறுத்தி இருந்ததும் ஒரு காரணம்.
உடன் பிறந்த இரட்டையான ஹாசினிக்கு கூட இந்த விஷயத்தை அவளால் சொல்ல முடியாமல் போனது தான் சோகம். அப்படி அவள் யாரிடமும் சொல்லாமல் விட்டது தான் இன்று அவளுக்கு எதிராக மாறி விட்டு இருந்தது. ஒருவேளை அவள் வெளியே சொல்லி இருந்தால் கூட அவரது குணத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரிய வந்து இருக்கும். குறைந்த பட்சமாய் ஹாசினி அவரிடம் இருந்து அவளை காப்பாற்றி இருப்பாள். இந்த வீட்டிற்கு வருவதையே தடுத்து இருப்பாள். இந்த வீட்டை விட அனாதை ஆசிரமம் மேலானது என்பதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி அங்கேயே தங்கியும் இருப்பார்கள். இப்பொழுதோ அழகான இரண்டு கிளி குஞ்சுகள்… பருந்தின் கைகளில்…
தரையில் விழுந்த மீனாக துடித்தாள் சுஹாசினி.
“வி… விடுங்க… மாமா… ப்ளீஸ்! எனக்கு பயமா இருக்கு”
“ஹே குட்டி… சும்மா கத்தாதே… கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கலாம்.”
“வே.. வேண்டாம்… மாமா… என்னை வி.. விடுங்க… அங்கே தொடாதீங்க” என்று திமிறி இறங்க முயல… ஓங்கி அவளது கன்னத்தில் அறைந்தது அந்த மிருகம்.
“சத்தம் போடாதனு சொல்லிட்டே இருக்கேன். மறுபடி மறுபடி கத்திட்டே இருக்கே… இன்னொரு முறை சத்தம் போட்ட… தொலைச்சுடுவேன் தொலைச்சு… முன்னே மாதிரி நீ ஓடி ஒளியவும் முடியாது. வெளியே சொல்லவும் முடியாது. போக்கிடம் இல்லாத கழுதை… இங்கே இருந்து நான் துரத்தி விட்டா மறுபடியும் அந்த விபச்சார விடுதிக்குத் தான் போகணும். தினமும் நூறு பேர் வந்து தொடுவான். உடம்பு நொந்து போய்டுவீங்க… இங்கேனா நான் ஒருத்தன் மட்டும் தான். அதுவும் எப்பவாச்சும் தண்ணி அடிக்கும் போது மட்டும் தான். கசக்குதா உனக்கு? இருக்க இடம் கொடுத்து சாப்பிட சாப்பாடு எல்லாம் போடுறேன்… ஒரு பத்து நிமிசம் படுக்க மாட்டியாடி” என்று கேட்டபடி வெறி கொண்ட மிருகம் போல அவளது உதட்டைப் பிடித்து கடிக்கத் தொடங்கினான்.
சுஹாசினிக்கு பயத்தில் உடம்பு உதறல் எடுக்கத் தொடங்கியது. பயத்தில் கண்கள் இருட்டிக் கொண்டு விழுந்தது. ‘இல்லை… இது மயங்கும் நேரம் இல்லை.’ புத்தி எடுத்துரைத்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை.
அவளின் நல்ல நேரம் என்று சொல்வதா விதியின் சதி என்று சொல்வதா? போதையில் இருந்த மணிமாறன் தடுமாறி கீழே விழுந்து எழ முடியாமல் திணறிக் கொண்டிருந்த சில கணங்களை பயன்படுத்தி அவனது பிடியில் இருந்து விலகி எழுந்தவள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டவள் அதிர்ச்சியின் விளைவால் அப்படியே மயங்கி சரிந்தாள்.
தூரத்தில் யாரோ கதவை தட்டும் ஒலி கேட்டது. எழுந்து அவளால் கதவை திறக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஆழ்ந்த மயக்கத்திற்குள் சென்று விட்டாள். ஆனால் அவள் மறந்த விஷயம் ஒன்று உண்டு.
வெறி கொண்ட மிருகத்திற்கு மான் குட்டியாக இருந்தால் என்ன? முயல் குட்டியாக இருந்தால் என்ன? அதன் நோக்கம் தன்னுடைய பசியை தீர்த்துக் கொள்வது மட்டுமே.
அறையில் மயங்கி இருந்த சுஹாசினி மறந்தது வெளியே கிச்சனில் உடல்நிலை சரியில்லாமல் உறங்கிக் கொண்டிருந்த ஹாசினியைத் தான். மீண்டுமாய் அவளுக்கு மயக்கம் தெளிந்து தமக்கையை காப்பாற்ற அவள் விரைந்து செல்லும் முன் எல்லாம் முடிந்து இருந்தது. அவள் செய்வதற்கு எதுவுமே இல்லை. இருட்டாகிப் போன உலகத்தின் முன்னால் மிரண்டு விழித்துக் கொண்டு இருந்தாள் சுஹாசினி.
சில மணி நேர மயக்கத்திற்கு பிறகு அறைக்கு வெளியே கேட்ட கோதையின் குரலில் சுயம் தெளிந்தவள் மெல்ல எழுந்து கதவை திறந்து கொண்டு வெளியே போனாள். தட்டு தடுமாறி நடந்தவள் சுவற்றை பிடித்துக் கொண்டே வெளியே போய் நின்ற கோதைக்கு அருகில் செல்ல வேகமாக அவளை ஆராய்ந்தார் கோதை.
உதடு கிழிந்து… வழிந்த ரத்தம் காய்ந்து போய்… கன்னத்தில் பற்களின் தடத்துடன் உடைகள் ஆங்காங்கே கிழிந்து போய் பார்க்கவே பரிதாபமான தோற்றத்துடன் நின்றவளைக் கண்டதும் ஒரு பெண்ணாய் கோதையின் மனம் துடியாய் துடித்தது.
என்ன நடந்து இருக்கக்கூடும் என்பதை அவள் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அவருக்கே புரிந்தது. திருமணம் ஆன இத்தனை ஆண்டுகளில் கணவனின் குணம் அறியாதவரா அவர்… தெரிந்து தானே பிள்ளைகளை தன்னோடு வைத்துக் கொள்ள வெகுவாக தயங்கினார். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கணவன் மற்ற பெண்களிடமும், குழந்தைகளிடமும் அத்துமீறி நடக்க முயல்வதையும், எல்லை மீறி பேசுவதையும் கண்டு கொண்டவர் ஆரம்பத்தில் இருந்தே அவரை கண்டித்து வைத்தார்.
மனைவிக்கு பயந்து கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் மணிமாறன் திருந்தி விடவில்லை. கோதை அருகில் இல்லாத நேரங்களில் தன்னுடைய மிருக குணத்தை வெளிபடுத்திக் கொண்டிருந்தார். காய்கறி விற்பவள். பூ விற்பவள், புண்ணாக்கு விற்பவள் என்று ஒருத்தியையும் விட மாட்டார். முதலில் லேசாக சிரித்து பேசுவார். மெல்ல நட்பை வளர்த்துக் கொண்ட பின் தனிமையான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார். அல்லது தானே உருவாக்குவார்.
தனியே சிக்கினால் அத்தோடு அவருக்கு பலியாக வேண்டியது தான். இந்த வேலைகள் எதையும் அவர் வீட்டில் வைத்துக் கொண்டது இல்லை என்பதால் அவரது தெருவை சேர்ந்த யாருக்கும் அவரது உண்மை குணம் தெரியாது. பாதிக்கப்பட்ட பெண்களையும் விஷயத்தை வெளியே சொல்ல விடாமல் மிரட்டியே வைத்திருப்பார். அந்தப் பெண்களும் குடும்ப மானத்திற்கு பயந்து வாயே திறக்க மாட்டார்கள். அது அவருக்கு சாதகமாய் போனது.
“வெளியே சொன்னால் உன்னோட மானம் தான் போகும்… நான் ஆம்பிளை. எனக்கு ஒண்ணுமில்லை. நான் சட்டைக் காலரை தூக்கி விட்டு வெளியே நடப்பேன். என்னை ஒரு பய கேள்வி கேட்க மாட்டான். ஆனா உனக்கு அப்படி இல்ல. நீ வெளியே தலை நிமிர்ந்து நடக்க முடியாது. இன்னிக்கு நான் தொட்டேன். நாளைக்கு இதையே காரணமா வச்சு இன்னொருத்தன் தொடுவான்… தடவுவான்… அப்போ என்ன செய்வ” என்று கொஞ்சமும் மனித தன்மையே இல்லாமல் பேசும் மணிமாறனை அந்த பெண்களால் எதுவும் செய்ய முடியாது. அவன் சொல்வதும் உண்மை தானே. இந்த சமூகத்தில் குற்றம் செய்தவனை விட பாதிக்கப்பட்ட பெண்கள் தானே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அப்படியும் ஒரு சில பெண்கள் கோதையிடம் அவரைப் பற்றி சொல்லி விட்டார்கள். முதலில் அவரைப் பற்றி தெரிந்து கொண்ட கோதை அதிர்ந்தாலும் மெல்ல சமாளித்துக் கொண்டார். முடிந்த அளவு விஷயம் வெளியே தெரியாமல் சமாளித்தார். ஒரு சாதாரண பெண் எப்படி நடந்து கொள்வாரோ அதையே தான் செய்தார். கணவனின் குற்றங்களை மூடி மறைத்தார். அழகாக உடை அணிந்து கணவனின் கருத்தை கவர்ந்து அவர் வெளியே வடிகால் தேடாத வண்ணம் நடந்து கொள்ள முயன்றார். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்ப் போனது.
அதிலும் குடித்து விட்டால் போதும். மணிமாறன் ஆளே மாறி விடுவார். வெறி கொண்ட மிருகம் தான் அவர். உடல் முழுவதும் புண்ணாக்கி… அதை ரசித்து… வலியில் கோதை துடிப்பதை கண்டு ரசிக்கும் மனோபாவம் கொண்ட மணிமாறனை ஒரு கட்டத்திற்கு மேல் வெறுக்கத் தொடங்கினார். இனி அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்து போனது அவருக்கு. எனவே முடிந்த அளவு மற்ற பெண்கள் அவரை அணுக முடியாத அளவிற்கு காத்து நின்றார். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை அவர்.
அன்றைய அவரின் அமைதியின் விளைவு தான் இன்றைய ஹாசினி, சுஹாசினியின் நிலை.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here