சலதி 9 tamil novels

0
166

வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு வந்த கோதை போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த மணிமாறனை வீட்டின் பின் பக்கம் இருந்த கிணத்தடிக்கு தள்ளி சென்றவர் அவரது தலையில் தண்ணிரை சேந்தி கொட்டினார். அப்பொழுதும் முழு போதை தெளியாமல் வீட்டினுள் புரண்டு கொண்டிருந்தார்.
அறையின் உள்பக்கமாக ஹாசினியின் உடல் தெரிந்தது. கால்கள் மட்டும் வெளியே தெரிய ஏதோவொன்று மனதை வாள் கொண்டு அறுக்க… மயக்கத்தை உதறி தள்ள முயன்றபடி அந்த அறையை நோக்கி நடந்தாள் சுஹாசினி. அறைக்குள் காலடி எடுத்து வைக்கும் நேரம் அவளது கரம் வேகமாக பற்றி வெளியே இழுக்கப்பட்டது.
“எங்கே போற?” கோதையின் குரலில் அதிகாரம் கொஞ்சமும் குறையவில்லை.
“ஹாசினியை பார்க்க…” பிசிறில்லாமல் சுஹாசினியின் பதில் வந்தது.
“இப்போ நீ பார்க்க வேண்டாம்.. பார்க்கக் கூடாது” அதட்டலையும் மீறிய ஒரு வலி அவர் குரலில்.
“ஏன்?”
“….”
“உங்க புருசன்… அந்த பொம்பளை பொறுக்கியை இன்னும் எத்தனை நாள் தான் காப்பாத்துவீங்க?”சுஹாசினியின் குரலில் கொஞ்சமும் பயம் இல்லை. இதையும் மீறி என்ன நடந்து விடப் போகிறது என்ற எண்ணம் ஒரு பக்கம் என்றாலும், இனியும் அந்த வீட்டில் இருக்க அவள் விரும்பவில்லை. தெருவில் கிடந்து பிச்சை எடுத்தால் கூட பரவாயில்லை என்று தான் அவளுக்கு தோன்றியது.
“ஏய்! என்னடி வாய் நீளுது?”
“இப்போ நான் கத்தி ஊரைக் கூட்டினா உங்க நிலைமை என்ன ஆகும்னு தெரியுமா?”
“…”
“வழியை விடுங்க.. நான் அவளைப் பார்க்கணும்…” என்று சொல்ல இப்பொழுது அவளது வழியை மறிக்காமல் ஒதுங்கி நின்று கொண்டார் கோதை. உள்ளே நுழைந்த சுஹாசினி கண்ட காட்சி அவளது வாழ்நாளில் அவளால் மறக்கக்கூடியது இல்லை.
தரையில் ரத்தம் வழிந்தோடிய நிலையில், உடைகள் கிழிந்து, உடலெங்கும் ரத்த காயத்துடன் இருந்தவளைப் பார்த்ததும் அவளது இதயம் துடிக்க மறந்தது.
“ஹாசினினினி” அவளின் கதறல் அந்த வீடு முழுக்க எதிரொலித்தது. பாய்ந்து சென்று அவளின் அருகில் அமர்ந்தவள் அவளை மடியில் அள்ளிப் போட்டுக் கொண்டு கதறினாள். மணிமாறனின் நல்ல நேரம் அவளின் கதறல் வெளியே யாருக்கும் கேட்காமல் போனது.
“எ… என்னை விட்டு போய்ட்டியா… ஏன்டி போன… அப்பா, அம்மா கிட்டே போயிட்டியா? என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாம் தானே…” என்று அவளை கட்டிக் கொண்டு அழ கோதையின் குரல் அவசரமாய் இடையிட்டது.
“ஏய்! அவ ஒன்னும் சாகலை… இன்னும் உயிர் இருக்கு. சும்மா கத்தி ஊரைக் கூட்டாதே”
“அப்போ தூக்குங்க அத்தை.. ஹாஸ்பிடலுக்கு போகலாம்” என்று வேகமாக கண்ணைத் துடைத்துக் கொண்டு எழ முற்பட… கோதையோ கல்லாய் இறுகிப்போய் நின்றார்.
“முடியாது…”
“ஏன் அத்தை?” அவளுக்கு புரியவில்லை
“என்ன ஏன்? இப்போ இவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் என்னன்னு சொல்லுவ? என் புருசன் செஞ்சதை சொன்னா… அந்த ஆளை போலீஸ் புடிச்சுட்டு போய்டும். அப்புறம் என் வாழ்க்கை என்னாகிறது?” என்றார் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல்.
“சீ!” ஒற்றை வார்த்தை தான்… மொத்த வெறுப்பையும் கண்களில் தேக்கி கோதையிடம் கொட்டினாள்.
“எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம். அதுக்காக என்னவும் செய்வேன். இப்படி எல்லாம் நடக்கக்கூடாதுன்னு தானே உங்க இரண்டு பேரையும் என்னோட அழைச்சிட்டு வர அவ்வளவு தயங்கினேன். ஆனா விதி… ம்ச்! வீண் கதை வேண்டாம். நடந்தது நடந்து போச்சு. இப்போ ஹாசினியை வெளியே கூட்டிட்டு போறது என்னோட குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வச்ச மாதிரி ஆகிடும்.”
“இவளை இப்படியே விட்டா அவ செத்துடுவா அத்தை” அவள் குரலில் அத்தனை தவிப்பு… உடன்பிறந்தவளின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற துடிப்பு.
“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. உனக்கு அவ முக்கியம்னா அவளை காப்பாத்திக்கோ. ஆனா இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது” என்று கொஞ்சமும் தயவு தாட்சண்யமின்றி சொன்னவரை ஒரு நொடி ஆழப் பார்வை பார்த்தாள். உயிரைக் குதறும் அந்தப் பார்வை கோதையை கொஞ்சமும் அசைக்கவில்லை.
என்ன செய்வது ? ஏது செய்வது அவளுக்கு புரியவில்லை. ஆனால் அமைதியாக இருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு இருக்கும் ஒரேயொரு துணையையும் இழந்து விடுவோம் என்பது தெளிவாக புரிய அவளின் மூளை மின்னல் வேகத்தில் செயல்பட்டது.
“இப்போ நீங்க இவளை ஹாஸ்பிடலில் சேருங்க… வெளியில் யாராவது கேட்டா நான் கண்டிப்பா உங்க புருசன் பேரை சொல்ல மாட்டேன். அதுக்கு பதிலா வேற ஒரு ஆளைப் பத்தி சொல்றேன்.”
“யாரை சொல்வ?” என்றார் குழப்பத்துடன்.
“யாரையோ.. இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு ஆளை… உங்க புருசனோட கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒருத்தரை… நல்ல உயரமா.. குண்டா… கருப்பா”
“…”
“வெளியே சொன்னாலும் உங்க புருஷனை யாரும் சந்தேகப்பட மாட்டாங்க. குடிச்சுட்டு அவரு மயங்கினதால அவருக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடலாம்” எப்பாடுபட்டாவது உடன்பிறந்தவளை காக்க வேண்டும் என்ற தவிப்பு அவளை உலகத்தில் உள்ள எந்த குற்றத்தையும் செய்ய தயார் ஆக்கியது.
ஹாசினியை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் தப்பித்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டாள். அவளுக்கு வேண்டியது அவளின் ஒரே உறவு உயிர் பிழைத்தாக வேண்டும் என்பது தான்.
“ரொம்ப யோசிக்காதீங்க… இதுக்கு நீங்க சம்மதிக்கலைனா நான் நடந்த எல்லா உண்மையையும் வெளியே சொல்லிடுவேன்.”என்று மிரட்ட கோதையின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.
‘எப்படியும் ஹாசினியின் விஷயத்தை முழுதாக மறைக்க முடியாது. அப்படியே மறைத்தாலும் இந்த பிசாசு வெளியே போய் சொல்லி விடும் போலிருக்கே’
அவளின் மிரட்டலுக்கு கோதையிடம் நல்ல பலன் இருந்தது. எப்படியோ தன்னுடைய வாழ்க்கை பாதிக்கபடாமல் இருந்தால் போதும் என்று நினைத்தவர் சுஹாசினி சொல்லிய படியே வெளியில் சொல்லி ஹாசினியை மருத்துவமனையில் சேர்த்தார். போலீஸ் விசாரணையின் பொழுதும் ஏற்கனவே பேசி வைத்திருந்ததைப் போல மாற்றிப் பேசி மணிமாறனை தப்பிக்க செய்தாள்.
ஹாசினியின் உயிரை மீட்டாலும் முன் போல அவளால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் போனது. மனதளவில் ஒரு குழந்தையாகவே மாறி இருந்தாள். மருத்துவமனையில் இருந்து வந்தவளை வீட்டுக்கு அழைத்து செல்லாமல் மனநல காப்பகத்தில் சேர்க்க வைத்து இருந்தாள் சுஹாசினி.
அவள் மட்டும் தொடர்ந்து அங்கேயே தங்கி படித்து வந்தாள். கொஞ்ச நாள் அடக்கி வாசித்த மணிமாறன் மீண்டும் சில மாதங்கள் கழித்து அவளிடம் தன்னுடைய வேலையை காட்ட முயல, பெண் புலியாய் சீறியவள் அடுப்படியில் இருந்த அரிவாள்மனையை எடுத்து அவரது காலிலேயே வெட்டி விட்டாள். மணிமாறனின் நல்ல நேரம் தக்க சமயத்தில் கோதை வந்து விட கணவனை வழக்கம் போல காப்பாற்றி அவளை வெளியே துரத்த முயல… ஹாசினி சுனாமியாய் மாறி இருந்தாள்.
அவள் பேசிய பேச்சிலும், மிரட்டலிலும் அரண்டு தான் போனார் கோதை. வேறு வழியில்லாமல் காப்பகத்தில் அவளை சேர்த்து படிக்க வைக்க சம்மதித்தார். அங்கே அறிமுகம் ஆனவன் தான் குணசேகரன். இதோ ஒரு வழியாக எப்படியோ கல்லூரி படிப்பையும் முடித்து விட்டாள். அதுவரை வாரத்திற்கு ஒருமுறையாவது ஹாசினியை போய் பார்த்துவிட்டு வந்து விடுவாள்.
அவளின் மனநிலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சில நேரம் வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருப்பாள். ஆண்களை கண்டாலே அலறி நடுங்குவாள். சாப்பிட, உணவு உண்ண எல்லாமே போராட்டம் தான். ஆனால் அவளின் உடையின் மீது யாரேனும் கை வைத்தால் மட்டும் அந்த இடமே போர்க்களமாகி விடும்.
சுஹாசினி அவளால் முடிந்த வரை சின்ன சின்ன வேலைகள் பார்த்து கிடைத்த பணத்தை வைத்து அவளை பெரிய மருத்துவர்களிடம் காட்டினாள். எல்லாரும் சொன்னது ஒரேயொரு விஷயம் தான். அவளை குணப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு பெருந்தொகை தேவைப்பட்டது.
பணம்! உலகின் சக்தி வாய்ந்த ஆயுதம்.
பணத்தால் வாழ்ந்தவர்களும் உண்டு… பணம் இல்லாமல் செத்தவர்களும் உண்டு.
சுஹாசினி இப்பொழுது இரண்டாம் இடத்தில் இருந்தாள். ஹாசினி அந்த நிலையில் இருப்பதற்கு தன்னுடைய அஜாக்கிரதையும் ஒரு காரணமோ என்ற குற்ற உணர்வு அவளை கொன்று தீர்த்தது.
ஒன்று முன் கூட்டியே அவளிடம் மணிமாறனின் மோசமான நடத்தை குறித்து சொல்லி இருக்க வேண்டும். அதை அவள் செய்யவில்லை. அன்றாவது அவளை அந்த மிருகத்திடம் இருந்து காப்பாற்றி இருக்க வேண்டும். இரண்டையுமே அவள் செய்யவில்லை.
முதலாவதை அவள் சரியாக செய்து இருந்தால் இரண்டாவது விஷயம் நடக்கவே வாய்ப்பு இருந்து இருக்காதே.
இரவுகளில் தூங்காமல் கண்ணீர் வடித்தாள். உயிர் இருந்தும் இல்லாதவள் ஆனாள். ஒவ்வொரு நாளும் அவளது மனசாட்சி அவளை கொன்று தின்றது. பணத்தை தேடி ஓடினாள். கிடைத்த வேலை எல்லாம் செய்தாள்.
பெரிய பெரிய கம்பெனிகளில் அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வேலை செய்ய தயாராய் தான் இருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்த பணம் அவளுக்கு கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி எல்லா இடத்திலும் அவளுக்கு என்று யாரும் இல்லாததால் அவள் வெறும் சதைப் பிண்டமாகவே பிணம் தின்னி கழுகுகளின் கண்களுக்கு தென்பட்டாள். வேலி இல்லாத பயிர் என்பது மற்றவர்களுக்கு வசதியாகப் போனது.
கம்பெனி கம்பெனியாக மாறி மாறி ஓடிக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் சலித்துப் போய் ஓடுவதை நிறுத்திக் கொண்டாள்.
அவளை துரத்துபவர்களை ஓட வைத்தாள்.
“நான் வேண்டுமா? வருகிறேன்.ஆனால் நான் கேட்கும் தொகை உன்னால் தர முடியுமா?” என்று ஒரு பெருந்தொகையை கேட்டு அவளுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டாள். அதற்கு நல்ல பலன் இருக்கவே செய்தது. சின்ன சின்னப் பருந்துகளின் தொல்லையில் இருந்து தப்பினாள்.
நாளாக நாளாக ஹாசினியின் நிலையை எண்ணி எண்ணி மனதளவில் வெகுவாக சோர்ந்து போனாள். எங்கே போவது என்று அவளுக்கு வழி தெரியவில்லை. சிறு வயதில் இருந்து தனக்கு நேர்ந்த சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தாள்.
முதலில் சந்தோஷமான வாழ்க்கை பெற்றோர்களுடன். ஆனந்தத்திற்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.
அதன் பிறகு விபச்சார விடுதி… அங்கே இருந்து வெளியே வந்த பிறகு மணிமாறன் வீடு.. இதற்கு நடுவில் அவர்கள் இருவரையும் மற்றவர்கள் பார்க்கும் பார்வை மிகவும் மோசமாக இருக்கும். அந்த வீட்டில் அவர்களுக்கு எந்த தீங்குமே நடக்கவில்லை என்பதை யாருமே நம்புவதாய் இல்லை.
அங்கேயே ஆரம்பித்தது அவளுக்கான போராட்டம். ஆனால் அப்பொழுது அவள் அதை பெரிது படுத்தவில்லை. காரணம் அப்பொழுது ஹாசினியின் துணை அவளுக்கு இருந்தது.
மணி மாறனின் வீட்டிற்கு வந்த பிறகு தினமும் பயந்து பயந்து தான் நாளைக் கடத்தினாள். அவரைப் பற்றி யாரிடமும் சொல்லவும் பயம். சொன்னாலும் தன்னை நம்புவார்களா என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. அதையும் மீறி அவள் சொல்லி அதன் பலனாக கோதையின் கோபத்திற்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேற வேண்டி இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பமும் அவளை ஆட்டுவித்தது.
ஆரம்பத்தில் இருந்தே விதி அவளை ஏதோவொரு சூழ்நிலையில் முறைமையற்ற வாழ்க்கைக்கு தன்னை தள்ள முயற்சிப்பதாக அவளுக்குத் தோன்றியது.
அன்றைய அசம்பாவிதம் நடந்த தினத்தில் அவள் தன்னை காத்துக் கொண்டது அவள் மனதில் பதியாமல் அவளுக்கு பதிலாக ஹாசினி பலியானது அவளது நெஞ்சில் ஆழப் பதிந்து போனது விதியின் சோதனை அன்றி வேறென்ன…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here