சலதி tamil novels 4

0
168

பாரின் உள்ளே சென்றவள் மற்றவர் கவனத்தை கவராத வண்ணம் அங்கிருந்த தடுப்புக் கதவை தாண்டி சில பல வளைவுகளை கடந்து உள்ளே சென்று ஒரு ரூமுக்குள் நுழைந்து கொண்டாள். அறைக்குள் அவளைப் போலவே பல பெண்கள் இருந்தார்கள். எல்லாரும் அவர்களின் மேக்கப்பில் கவனமாக இருந்தார்கள். யாரும் இவளை பெரிதாக கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை. ஜூலி மட்டும் அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து அவள் அருகில் வந்தாள்.
“என்ன ஹனி… இன்னிக்கு யாராவது சிக்கினாங்களா?”
“ம்ச்.. சும்மா இரு ஜூலி” சலித்துக் கொண்டாள் பெண்ணவள்.
“ஓ… புரியுது… அப்புறம் சாயந்திரத்துல இருந்து குணசேகரன் இரண்டு , மூணு தடவை வந்து தேடிட்டு போனாரு.”
“அவன் கிடக்கிறான்.. சரியான லூசு”
“நீயும் தான் அவரோட பேச்சை கொஞ்சம் யோசிச்சு பாரேன் ஹனி.. நல்ல அமைதியான, நிம்மதியான, மரியாதையான வாழ்க்கை”
“இதெல்லாம் இருக்கும். ஆனா பணம்?” என்றவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியானாள். அரைகுறை ஆடையில் பாரில் நடனமாடும் இந்த வேலையை ஜூலி செய்வதற்கு காரணமே வீட்டின் வறுமை… தம்பியின் படிப்பு, அப்பாவின் மருத்துவ செலவு இதெல்லாம் தானே? அப்புறம் எப்படி பணம் தேவை இல்லை என்று சொல்லுவாள்.
“உன்னால பதில் சொல்ல முடியலை தானே… எனக்கு பணம் வேணும் ஜூலி… சும்மா ஒருநாள் ராத்திரிக்கு எல்லாம் இல்லை. அது சீக்கிரம் தீர்ந்துடும். வேணும்… நிறைய பணம் வேணும். லட்சக்கணக்கா எல்லாம் போதாது. கோடிக்கணக்குல வேணும்.” என்று கண்களில் வெறி மின்ன சொன்னவளை கண்டு ஜூலி அமைதியானாள். அவளுக்குத் தெரியும் அவளிடம் பேசி பயனில்லை என்பது.
“சரி… நீ என்ன இன்னும் டிரஸ் மாத்திக்காம இருக்க… அந்த மேனேஜர் வந்தா வள்ளுவள்ளுனு விழுவான்”
“நான் இன்னிக்கு வேலைக்கு லீவு போட்டேன்.”
“அப்புறம் எதுக்கு வந்த?”
“அந்த மேனேஜர் கிட்டே கொஞ்சம் அட்வான்ஸ் கேட்டு இருந்தேன். இங்கே வந்து வாங்கிக்க சொன்னான். அதான் வந்தேன்”
“ஓ.. சரி சரி… என்ன திடீர்னு லீவு?”
“மாடலிங் செய்ய ஒரு ஆபர் வந்துச்சு. ஒருத்தன் வர சொன்னான். அதான் போய் பார்த்துட்டு வரலாம்னு”
“தனியாவா போற?அதுவும் இந்த நேரத்துல?”
“ஏன் தனியா போனா என்ன? நீ என்னை என்ன கற்புக்கரசி கண்ணகினு நினைச்சியா? அவன் என்கிட்டே தப்பா நடக்க வந்தா ‘ஐயோ! அம்மா காப்பாத்துங்க… என்னை காப்பாத்த யாருமே இல்லையா? கடவுளே காப்பாத்து’ இப்படி எல்லாம் கத்தி ஸீன் போட… கிட்டே வந்த உடனே நான் கேட்கிற அளவுக்கு பணத்தோட வசதியானவனா இருந்தா நானே அவன் இஷ்டப்படி நடந்துக்கப் போறேன். பணம் இல்லாம என் மேலே கையை வச்சா மட்டும் தான் நான் வருத்தப்படுவேன். மத்தபடி கற்பு… ஹ.. அந்த கருமத்தைப் பத்தி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை” என்றவள் அசட்டையான தோள் குலுக்கலுடன் அங்கிருந்து அகன்று விட்டாள்.
தோழிக்காக சில நொடிகள் வருந்திய ஜூலி உடனே தன்னை மீட்டுக் கொண்டு தன்னுடைய வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டாள்.
வெளியே கிளம்பி வந்த ஹனியின் பாதையை மறித்தபடி நின்றான் குணசேகரன்.
“ம்ச்! உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவு வராதா? ஏன் இப்படி என்னை தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிற?”
“கல்யாணத்துக்கு ஓகே சொல்லு. அதுக்கு அப்புறம் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். அதாவது இப்படி வழி மறிக்கிற வேலையை சொன்னேன்”
“புரிஞ்சுக்கோ குணா.. உனக்கும் எனக்கும் செட்டாகாது. இன்னும் உனக்கு புரியும்படி பளிச்சுன்னு உண்மையை சொல்லணும்னா கல்யாணத்துக்கும் எனக்குமே செட் ஆகாது”
“ஏன்டா தேனம்மா.. நானும் ஒரு கம்பெனியில வேலை பார்க்கிறேன். மாசம் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன். நம்ம இரண்டு பேருக்கும் அந்த பணம் போதாதா?”
“போதாது… பிச்சைக்காசு இரண்டு லட்ச ரூபாய்… என்னோட மேக்கப் செலவுக்கே சரியா போய்டும். நீ உன் தகுதிக்கு தகுந்த மாதிரி ஒரு பிச்சைக்காரியை கல்யாணம் செஞ்சுக்கோ” என்று அலட்சியமாக சொன்னவள் அதற்கு மேலும் நின்று வார்த்தையை வளர்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
போகும் வழியில் எல்லாம் அவளது நினைவை ஆக்கிரமித்து இருந்து குணசேகரன் தான். காப்பகத்தில் இருந்த நாட்களில் அவளோடு வளர்ந்தவன் அவன். பொறுப்பான பையன். உண்மையை சொல்வதானால் அவனால் தான் அவள் ஓரளவுக்கு மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு மீண்டதே. அவளுக்கு அவன் நல்ல நண்பன். அவளது நலம் விரும்பி. ஆனால் அவளது எதிர்கால கனவுகளுக்கு அவன் சரிப்பட்டு வர மாட்டான்.
அவன் நேசிக்கிறானே என்று அவனை அவள் மணந்து கொண்டால் அவனது வாழ்க்கை தான் வீணாகும். அவளது தேவைகளும் , எதிர்பார்ப்பும் பெரிது… அவளது தேவைக்காக அவன் ஓடுவதாக இருந்தால் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் ஓடுவதாக இருந்தாலும் கூட அவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை முழுதும்… அது அவள் தெரிந்தே அவனுக்கு செய்யும் துரோகம்.
நண்பனாக இருந்தவன் காதலனாக மாற நினைக்கிறான். நண்பனின் வாழ்க்கையை தானே வீணடித்து விடக் கூடாது என்பதற்காக அவள் ஒதுங்கிப் போகிறாள். வெல்லப் போவது யார்? அவனா? அவளா? விதியா?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here