
அத்தியாயம் 1
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி
ருசிப்பாக
கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக
ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு கண்களா
பிரம்மன் செஞ்சது சரியில்லையே
“அம்மாடி தாமரை என்னடா இன்னும் கிளம்பாம இருக்க… இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் அழைக்க வந்துடுவாங்க… கிளம்பும்மா” என்று மகளுக்கு ஒருமுறை நினைவு படுத்தி விட்டு கிளம்பினார் செல்லம்மா.
‘ம்ச்…. எவ்வளவு நேரத்தை கடத்தினாலும் இந்த கல்யாணத்தில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா?’ என்று சலிப்புடன் நினைத்தவள் கல்யாண பெண்ணுக்கே உரிய மலர்ச்சி எதுவுமின்றி கடனே என்று கிளம்பத் தொடங்கினாள்.
அவள் அப்படி இருந்தால் மற்றவர்கள் விட்டு விடுவார்களா என்ன? வயதில் மூத்த பெண்கள் அனைவரும் ஒன்று, கூடி சிரிக்காமல் இருந்தவளைப் பார்த்து அவர்கள் பேசிய பேச்சில் வாயை காது வரை இழுத்து சிரிக்கத் தொடங்கினாள் தாமரை. உம்மென்று இருந்தால் அதற்கு அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி இருக்குமே என்ற கவலையை விட இவர்களின் கேலியைத் தான் தாங்க முடியாமல் போனது அவளுக்கு.
எல்லாரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் சட்டென்று அந்த இடம் பரபரப்பானது.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க… ஏ..செல்வி அந்த ஜமுக்காளத்தை விரி… அப்படியே அண்ணன் கிட்டே சொல்லி அவங்களுக்கு உட்கார சேர் போட சொல்லு” வீட்டின் உள்ளே இருந்து செல்லம்மா குரல் கொடுக்க, வீடே பம்பரமாக சுழன்றது.
‘வந்துட்டாங்களா… இதுவரைக்கும் என் வீட்டு ஆட்களை எப்படியோ சமாளிச்சுட்டேன். இனி என்ன செய்யப் போறேனோ தெரியலையே’ என்று கவலை அவள் முகத்தில் அப்பிக் கொண்டது.
“நல்லா முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கணும்டி தாமரை” என்று அவளது குமட்டில் ஒரு குத்து விழ அவசரமாக முகத்தை சரியாக வைத்துக் கொண்டாள்.
பின்னே வந்து இருப்பது அவளை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் மணமகனின் அருமைப் பாட்டி செங்கமலம் ஆயிற்றே… கிழவி வெண்கல தொண்டையில் பேச ஆரம்பித்தால் காது சவ்வு கிழிந்து விடும். எனவே முடிந்த அளவு அவர் முன்பு அமைதியாகி விடுவாள். காதில் தண்டட்டி குலுங்க கிழவி பேசும் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச அந்த ஜில்லாவிலேயே ஆள் இல்லை எனும் பொழுது அவள் என்ன சுண்டைக்காய்…
“அடியே செல்லம்மா… பொண்ணு கழுத்தில் என்ன ஒரே ஒரு நகையை மட்டும் போட்டு இருக்கிற.. அந்த மாங்காய் மாலையையும், மரகதக் கல் பதிச்ச அட்டிகையையும் யாருக்கு போட நான் எடுத்துக் கொடுத்தேன்னு நினைப்பு உனக்கு” என்றார் அதிகாரமாக…
“அதெல்லாம் அப்பவே அவகிட்டே கொடுத்துட்டேன் ஆச்சி.. அவ தான் கிளம்பும் பொழுது போட்டுக்கிறேன் சொன்னா… அதான்…” என்று லேசாக இழுக்க
எண்பது வயதிலும் நடையில் கொஞ்சம் கூட தள்ளாட்டம் இல்லாமல் அவளை நெருங்கி வந்தவர் , மறுபடியும் குமட்டிலேயே குத்தினார்.
“என்னடி… என்னோட பேரன்… ஆம்பிளை சிங்கம் …”
‘அப்புறம் எதுக்கு அவனுக்கு என்னைக் கட்டி வைக்கறீங்க… காட்டில் ஏதாவது பொம்பளை சிங்கத்தை தேடி கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டியது தானே’
“அவனை கட்டிக்க ஊருக்குள் நான், நீன்னு எத்தனை குமரிகள் அடிச்சுக்கிட்டு இருக்காங்க தெரியுமா?”
‘சத்தியமா அந்த வரிசையில் நான் இல்லை’
“அவளுகளில் ஒருத்தியை பார்த்து பேசி இருந்தா, இந்நேரம் அவளுங்களே பறந்துக்கிட்டு போய் மண்டபத்தில் உட்கார்ந்து இருப்பார்கள்… நீ என்னடான்னா” என்று அவர் நீட்டி முழக்க…
மீண்டும் வாயை காதுவரை இழுத்து சிரித்து சமாளித்து வைத்தாள்.
“எதுக்கும் கல்யாணம் முடியற வரை நீ தலையை குனிஞ்சே நில்லு… இப்படி அஷ்டகோணலாய் சிரிச்சு வச்சா என் பேரன் பயந்துடுவான்”
‘ஆமாமா..அப்படியே உன் பேரன் பயந்துட்டாலும்… அவன் பயந்தா கூட எனக்கு சந்தோசம் தான். அப்படியாவது இந்த கல்யாணம் நிக்கட்டும்’ என்று உள்ளுக்குள் நினைத்தவள் வெளியே ஈயென்று இளித்து வைத்தாள்.
இவள் இப்படி மனம் நொந்து போகும் அளவுக்கு அவளை திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆள் ஒன்றும் சாதாரணமானவன் கிடையாது.
சங்கர பாண்டியன்…
முப்பது வயது கட்டிளங்காளை… வருடா வருடம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடும் வீரன். சொந்தமாக பண்ணை வைத்து இருக்கிறான். ஆடு,கோழி,மாடு…என்று அது தவிர மீதம் இருக்கும் விவசாய நிலங்களில் விவசாயமும் செய்து வருகிறான். அந்த ஊரில் ஓரளவுக்கு வசதியானவன் தான் ஆனால் அவன் வீடு ஏதோ பாழடைந்த பேய் பங்களா போலவே இருக்கும்.
சிதிலமடைந்து காணப்படும் அந்த வீட்டில் ஏதேனும் பழுது வந்தால் கூட ஏதேனும் மராமத்து பணிகள் செய்து சரி செய்வான். மற்றபடி அந்த வீட்டை இடித்து விட்டு புது வீடு கட்டும் எண்ணமே அவனுக்கு கிடையாது.
‘சரியான கஞ்சப் பிசிநாறி’ என்று மனதுக்குள் அவனைத் திட்டித் தீர்த்தாள். எவ்வளவு தான் மனதை திசை திருப்ப முயன்றாலும் அந்த வீடு அவள் நினைவை விட்டு அகல மறுத்தது. அந்த ஊரில் அவனது வீட்டுக்கு என்று ஒரு தனி பெயர் உண்டு.
‘கோட்டை வீடு’… மனதுக்குள் அந்த வீட்டை நினைத்தாலும் கூட அவள் உடம்பெல்லாம் பதறும். அப்படி ஒரு வீடு அது. ஊரில் உள்ள எல்லாரும் அந்த வீட்டைப் பற்றி பெருமையாக சொன்னாலும் அந்த வீட்டை பற்றி நினைத்த மாத்திரத்தில் அவளுக்கு தோன்றுவது பயம் மட்டுமே.
தாமரையின் சொந்த ஊரில் பள்ளிகள் பத்தாம் வகுப்பு வரை மட்டும் தான் உண்டு. அதற்குப் பிறகு படிப்பதற்கு அவனது ஊருக்குத் தான் போயாக வேண்டும். ஒருமுறை அந்த வீட்டை பார்த்து பயந்தவள் அதன்பிறகு அந்த வழியில் செல்லவே மாட்டாள். ஒருநாள் அவள் வழக்கமாக செல்லும் வழியில் இருந்த மரப்பாலம் இடிந்து விழுந்து விட வேறு வழியின்றி அன்று அந்த வழியாகப் போனாள். அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.