சஹாரா சாரல் பூத்ததோ 10

0
1473

அடுத்த நாள் விடிந்ததும் முதல் வேலையாக அவளுக்கு தெரிந்த தோழிகளுக்கு எல்லாம் போன் செய்து தேன் நிலவிற்காக தான் கேரளா செல்வதை குழந்தை போல குதூகலத்துடன் சொல்லிக் கொண்டு இருந்த மனைவியை கண் கொட்டாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

காலையில் எழுந்தது முதல் இப்படி தான் ரப்பர் பந்து போல துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தாள். தாயின் எதிரில் நின்று அவரை மேலும் கீழுமாக தெனாவெட்டாக பார்த்து வைத்தாள் தாமரை.

“ஹுக்கும்… கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சே… அட்லீஸ்ட் பக்கத்து ஊருக்காகவது போய் இருக்கியா? ஹ்ம்… இல்லையில்ல… சுத்த வேஸ்ட்.. என்னோட புருசனைப் பார்த்தியா … என்னை கேரளாவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார்.” என்றாள் பெருமை பொங்க…

மகளின் மகிழ்ச்சியை கலைக்க விரும்பாமல் அவள் பெருமையாக பேசுவதை சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார் செல்லம்மா…

“அதுக்கெல்லாம் என்னை மாதிரி அதிர்ஷ்டம் வேணும் செல்லம்மா… நீயும்… உன் புருஷனும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… நான் வேணும்னா என்னோட புருஷன்கிட்டே சிபாரிசு பண்ணி உனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும் திருப்பதி, திருச்செந்தூர், காசி.. இந்த மாதிரி கோவிலுக்கெல்லாம் டூர் போக ஏற்பாடு செய்ய சொல்லட்டுமா?” என்றாள் நக்கலாக.

“அடியே நீ சொன்ன ஊருக்கெல்லாம் போக எங்களுக்கு தெரியாதா? இத்தனை நாளா கூடவே நீ இருந்து தொலைச்சியே… பூனையை மடியில் கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையா… உன்னை கூடவே வச்சுக்கிட்டு நாங்க வெளியூருக்கு போய்ட்டு வர முடியுமா? அதுதான் உன்னை பத்தி விட்டாச்சே… இனி பாரு.. வார வாரம் ஒவ்வொரு ஊருக்கா போறது தான் எங்க வேலை”

“காலம் போன கடைசியில் லொள்ளா உனக்கு… அதெல்லாம் எங்கேயும் போகக்கூடாது… நான் மட்டும் தான் போவேன்…”

“ஏனாம்…”

“அப்ப தானே உங்ககிட்டே வந்து பெருமை பீத்திக்க முடியும்”

“அடிக் கழுதை… ஒழுங்கா ஓடிரு… கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மேல கை வைக்கக் கூடாதுன்னு பார்க்கிறேன். இல்லைன்னா நீ பேசுற பேச்சுக்கு வாயை கிழிச்சு இழுத்து வச்சு தைச்சிடுவேன்” என்றவர் அத்தோடு நில்லாமல் அவளை அடிப்பதற்கு தோதாக கட்டைகளை தேடவும்…. விட்டால் போதுமென்று அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்தவள் கணவனிடம் தாயைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினாள்.

“பாருங்க.. நாம ரெண்டு பேரும் கேரளாவுக்கு கிளம்பி போறோம்னு அம்மாகிட்டே சொன்னா… என்னை அடிக்க வர்றாங்க”

“நீ அது மட்டும் தான் சொன்னியா?”என்றான் சிரித்துக் கொண்டே…

‘ஐயோ… என்ன இப்படி கேட்கிறார்? ஒருவேளை அம்மாவும் நானும் பேசினதை கேட்டு இருப்பாரோ?’ என்று முழித்தவள் தன்னை சமாளித்துக் கொண்டு பேசினாள்.

“அது வந்து… சும்மா கொஞ்சம் அம்மாவை வம்பு இழுத்தேன்…”

“அதுக்குத் தான் அடிக்க வந்து இருப்பாங்க…”

“அதெல்லாம் முடியாது.. நீங்க எனக்கு தான் சப்போர்ட் செய்யணும்”

“நீ தப்பு செஞ்சா எப்படிடி நான் சப்போர்ட் செய்ய முடியும்?”

“அவ்வளவு தான் உங்களுக்கு என் மேல் இருக்கும் காதலா?” என்று கண்கள் கலங்க அவள் கேட்ட விதம் அவனை வெகுவாக பாதிக்க… அவளை ஆறுதல் படுத்த வேண்டும் என்ற நோக்கில் நெருங்கியவனை கண்களால் பொசுக்கி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் தாமரை.

சங்கரபாண்டியன் நினைத்து இருந்தால் ஒரே எட்டில் அவளை தாவிப் பிடித்து அணைத்து ஆறுதல் சொல்லி இருக்க முடியும். ஆனால் அது அவன் வீடு அல்லவே… மாமனார், மாமியார் எப்பொழுது வேண்டுமானாலும் அங்கே வருவதற்கு சாத்தியங்கள் இருந்ததால் அறைக்கு வரும் பொழுது அவளை சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அவன் அறைக்குள் சென்று விட்டான்.

சற்று நேரம் கழித்து அறைக்குள் வந்தவளிடத்தில் கோபத்திற்கான அறிகுறியே இல்லாதது கண்டு ஆச்சரியமானான் அவன். அறைக்குள் நுழைந்தவள் உற்சாகமாக பாட்டு பாடிக் கொண்டே  கேரளா செல்வதற்கு வேண்டிய பொருட்களை ஒரு பெட்டியில் அடுக்கத் தொடங்கினாள்.

“உங்களுக்கு என்னவெல்லாம் எடுத்து வைக்கணும்னு சொல்லுங்க.. கையோடு அதையும் எடுத்து வச்சிடறேன்” என்று சொன்னபடி பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்த மனைவியை கண்டவனின் காதல் மேலும் பெருகியது.

‘இவ்வளவு தான் அவள் கோபம்… நிமிடத்தில் கரைந்து போய் விட்டதே… என் மீது அத்தனை அன்பா அவளுக்கு’ என்று எண்ணியவன் பெட்டிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்து அவளை கலைப்பதிலேயே குறியாக இருக்க… செல்ல சிணுக்கத்துடன் அவனிடம் இருந்து விலக விரும்பாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் தாமரை.

“ஏன் ராசாத்தி” என்று காதலுடன் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“என்னது ஏன்?”

“என் மேல கோபமா போனியே.. நான் எவ்வளவு தவிச்சு போனேன் தெரியுமா?”

“ஹா ஹா… என்னோட கோபம் அவ்வளவு தான்… மிஞ்சிப் போனால் ஒரு பத்து நிமிஷம்… அப்புறம் நானே சரியாகிடுவேன். அதுதான் என்னோட சுபாவம்”

“வட போச்சே” என்று அவன் தலையில் கை வைத்துக் கொள்ள அவளோ காரணம் புரியாது முழித்தாள்.

“அதில்லை ராசாத்தி… நீ கோபமா முறுக்கிக்கிட்டு இருப்ப… உன்னை தாஜா பண்ணி சமாதானம் செய்யலாம்… அப்படியே உன்னை கொஞ்சம் நல்லா கவனிச்சா… நீ ராத்திரிக்கு என்னை நல்லா கவனிப்பன்னு நினைச்சேன்” என்று சொல்லி குறும்பாக கண் சிமிட்ட… மனைவியின் கைகளால் முதுகில் சிலபல அடிகளை பரிசாக பெற்றுக் கொண்டான்.

“ஏய்…ராட்சசி வலிக்குது விடுடி” வலிப்பது போல அவன் நடிக்க…

“அப்படித் தான் அடிப்பேன்” என்று அவள் அடித்த அடிகளை எல்லாம் சற்று நேரம் அமைதியாக வாங்கிக் கொண்டவன் அடுத்த நேரம் அவளுடன் கை கலப்பில் ஈடுபட… எந்த நேரம் சண்டை கூடலாக மாறியதோ இருவருக்கும் தெரியாது.

அன்றைய இரவுப் பொழுதில் இருவரும் ட்ரெயினில் கேரளாவை நோக்கி பயணப்பட்டனர். புதிதாக மணம் புரிந்தவர்கள்…. காதலோடு மணந்து கொண்டவன்… ஆளில்லா ட்ரைன்… அங்கே காதலுக்கு பஞ்சம் இருக்குமா என்ன? இனிப்பை தேடி உண்ணும் எறும்பைப் போல… வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் அவளுடன் தித்திப்பாக கழித்தான் சங்கர பாண்டியன்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here