சஹாரா சாரல் பூத்ததோ 11

0
1131

கேரளாவில் விடியற்காலை நேரத்தில் இறங்கியவர்கள் குளிர் என்ற காரணத்தை சொல்லிக் கொண்டு ஒரே சால்வையில் இருவரும் இழைந்தபடியே நடந்து வந்து டாக்சி பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய ஹோட்டலை அடைந்தார்கள். கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டியபடி… கிளம்பித் தயாரானார்கள்.

கேரளாவிற்கு வந்த பிறகும் கூட சங்கர பாண்டியன் வேஷ்டி சட்டை அணிந்து இருக்க… லேசாக முகத்தை சுருக்கினாள்.

“என்னங்க இது வெளியூர் வந்து இருக்கோம்… இங்கேயும் வேஷ்டி சட்டை தானா? உங்க வயசு ஆண்கள் எல்லாம் ஜீன்ஸ் பேண்ட் போட்டு சுத்தறாங்க…. நீங்க என்னடான்னா?”

“எங்கே வந்தா என்ன? வந்து இருப்பது சங்கரபாண்டியன்…. அவனோட அடையாளம் வேஷ்டி சட்டை தான். ஊருக்கேத்த மாதிரி அடையாளத்தை மாத்திக்கிட்டே இருக்க முடியாது ராசாத்தி” என்று தன்மையாக சொன்னாலும் அதில் இருந்த உறுதி அவளுக்கு தெளிவாகவே புரிந்தது.

“அதுக்கில்லைங்க…. வந்து…”

“சொல்லு ராசாத்தி… என்கிட்டே என்ன தயக்கம்?” தாமரையை மேலும் பேச சொல்லி ஊக்கினான் சங்கரபாண்டியன்.

“எனக்கு உங்களை ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் போட்டு பார்க்கணும்னு ஆசையா இருக்கு” என்று தயங்கி தயங்கி சொன்னாள் தாமரை.

கண்டிப்பாக திட்டப் போகிறான் என்ற பயம் வேறு அவளுக்கு.

“அவ்வளவு தானே ராசாத்தி… உனக்காக வேணும்னா அதெல்லாம் போட்டு காட்டறேன்” என்று அவன் இலகுவாக சொல்லி விட அவளது மனம் அவன் செய்கையில் மேலும் கனிந்தது.

கணவன் தனக்காக எதை செய்யவும் தயாராக இருக்கிறான் என்பது அவளது வேலையை சுலபமாக்கி விடும் என்பதால் உடனே பரபரக்க ஆரம்பித்தாள் தாமரை.

“ஊர் சுற்றி பார்க்க அப்புறம் போகலாம்ங்க… சாப்பிட்டு முடிச்சதும் நல்லதா நாலு டிரஸ் எடுத்து உங்களுக்கு போட்டு பார்க்கணும்” என்று படபடத்தவளை ரசித்தவன் அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றான்.

இதனால் பின்நாளில் அவர்களின் வாழ்நாளில் ஏற்படப் போகும் துன்பம் குறித்து அறிந்து வைத்து இருந்தால் அவன் கொஞ்சம் கவனமாகவே இருந்து இருப்பான்…. அவளுக்காக அவன் விட்டுக் கொடுக்க… அதுவே அவர்கள் விஷயத்தில் தவறாகிப் போனது. சாப்பிட்டு முடித்ததும், கணவனை அழைத்துக் கொண்டு பெரிய மாலுக்கு சென்றவள் அங்கே வித விதமாக இருந்த ஆடைகளை அவனுக்காக எடுத்து வைத்தாள் தாமரை.

ஜீன்ஸ் பேண்ட், ட் ஷர்ட்,கோட் ,சூட்…. உள்ளிட்ட வகைகளும் அதில் அடக்கம் அவள் செய்வது அத்தனையும் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தவன் அதில் இருந்து எட்டு உடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டான். பணம் கட்டியதும்…. அதில் இருக்கும் உடைகளில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொடுத்து ட்ரையல் ரூமிலேயே அவனை மாற்றி விட்டு வர சொன்னவள் அவனது வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

அவனுக்காக காத்திருந்த அந்த நொடிகளில் சினிமாவில் எல்லாம் இது மாதிரி காட்சிகளில் கிராமத்து இளைஞன் நாகரீகமான உடைகளை அணிய முயற்சி செய்யும் பொழுது நடைபெறும் கோமாளித்தனங்கள் அத்தனையும் கண் முன்னே வந்து போக இதழோரம் குறுஞ்சிரிப்புடன் கணவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

சில நொடி காத்திருப்புக்கு பின் உடை மாற்றும் அறையை திறந்து கொண்டு வெளியே வந்த கணவனைப் பார்த்து மெய் மறந்து போனாள் தாமரை. இளம் நீல நிற சட்டையும், அதற்கு தோதாக அவன் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டும், கண்களில் அணிந்து இருந்த கூலிங்கிளாசும் பார்ப்பவரை மயக்கும் வண்ணம் இருந்தது. சிங்கத்தின் கம்பீரத்துடன் நடந்து வந்த கணவனை இமைக்காமல் அவள் ரசிக்க… மனைவி இருக்கும் நிலை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் சங்கரபாண்டியன்.

அவனது நடை…. அந்த கூலிங்கிளாசை ஸ்டைலாக அவன் அணிந்து இருந்த பாங்கு எல்லாமே சொன்னது ஒன்றே ஒன்றைத் தான். இவன் இதை எல்லாம் அணிந்து அலுத்துப் போனவன் என்பதே அது.

திறந்த வாய் மூடாமல் ஆவென்ற பார்வையுடன் தன்னை மறந்து பார்த்துக் கொண்டு இருந்த மனைவியின் முகத்தை பருகியவாறே அவள் அருகில் வந்தவன் அவளது இடையில் கை கொடுத்து தன்னோடு இழுத்துக் கொண்டான்.

“போகலாமா டார்லிங்” கணவனின் புதிய பரிணாமம் கண்டு அவள் வாயடைத்துப் போய் இருக்க… அன்று முழுக்க அவள் ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பதை போலவே அவனுடன் வெளியே சுற்றி வந்தாள் தாமரை.

கேரளாவின் இயற்கை அழகு அவளை தன்னிலை மறக்க செய்தது. பனி படர்ந்த மேக கூட்டங்கள் கை எட்டும் தூரத்தில் இருப்பதை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தவள் அன்று முழுவதும் ஊர் சுற்றி விட்டு சோர்ந்து போய் அறைக்கு திரும்பிய பிறகு கணவனிடம் அந்த கேள்வியை கேட்டாள்.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?”

“எம்எஸ்சி  அக்ரி” என்று அமர்த்தலாக சொன்னவனைக் கண்டு வாய் பிளந்தாள் தாமரை.

“நிஜமாவா?”

“ம்” என்று மெல்லியதான தலை அசைப்பு மட்டும் அவனிடம் இருந்து.

“அப்புறம் ஏன் இப்படி?” அவள் பார்வை அவனது உடையை சுட்டிக் காட்ட… அதன் பொருள் உணர்ந்தவனாய் மென்நகையுடன் பேசத் தொடங்கினான்.

“நான் படிச்ச படிப்பு என்னோட வாழ்க்கையை நிலையை மாத்துறதுக்காக தான் ராசாத்தி… என்னோட வாழ்க்கை முறையையோ… பழக்க வழக்கத்தையோ அது மாத்தக் கூடாது. அதை நான் விரும்புறதும் இல்லை. என்னோட அடையாளம் இது தான். நான் படிப்புக்காக டெல்லியில் கூட கொஞ்ச நாள் தங்கி இருந்தேன் ராசாத்தி. அப்போ அங்கே எல்லாம் ஸ்டார் ஹோட்டல் போனா…. தேவைப்பட்டா கோட் சூட் போட்டது உண்டு. மற்றபடி எங்கேயும் என்னுடைய அடையாளத்தை மாத்திக் காட்ட நான் முயற்சி செஞ்சது இல்லை.

ஊரில் இருக்கும் பொழுது கூட நான் வேஷ்டி சட்டையைத் தான் ரொம்பவே விரும்பறேன். விவசாயம் செய்றவனுக்கு அதுதான் அழகு… கோட் சூட் போட்டு எல்லாம் என்னால விவசாயம் பண்ண முடியாது” என்று அழுத்தமாக சொன்னவனை வியப்புடன் பார்த்தாள் தாமரை.

“நான் நீங்க படிக்காதவர்ன்னு நினைச்சேன்” என்றாள் தயக்கத்துடன்

“தெரியுமே” என்றான் அவன் குறுஞ்சிரிப்புடன்…

“அப்புறமும் ஏன் சொல்லலை?” குழந்தை போல உதட்டை பிதுக்கிக் கொண்டு கோபம் காட்டினாள் அவனது மனையாள்.

“அவசியம் இல்லைன்னு தோணுச்சு…. எனக்கு உன்னை ரொம்பவே பிடிக்கும். அதே மாதிரி உனக்கும் என்னை பிடிக்கணும்ன்னு ஆசைப் பட்டேன். உனக்கு என் மேல வர்ற காதல்  என்னோட படிப்பைப் பார்த்தோ…. சொத்தைப் பார்த்தோ வரக்கூடாதுன்னு நினைச்சேன். அதுக்குத்தான்” என்று அவன் தெளிவாக உரைக்க அவளுக்குத் தான் என்னவோ போல இருந்தது.

அதற்கு காரணம் ஆரம்பத்தில் அவள் அந்த திருமணத்தை மறுத்ததற்கு அதுவும் கூட ஒரு காரணம் தான். அவளின் முக சிணுக்கத்தை புரிந்து கொண்ட கணவன் அவளை தன்னை நோக்கி நிற்க வைத்து அவளின் கண்ணோடு கண் கலந்தவாறு பேசத் தொடங்கினான்.

“இதோ பாரு ராசாத்தி… இப்படி எல்லாம் நீ நினைச்சதால உன்னை நான் தப்பா நினைப்பேன்னு நினைச்சு தானே விசனப்படுற” என்று அவளின் மனதை படித்தவன் போல கூற… அவளின் பார்வையும் அதை ஆமோதித்தது.

“உன்னோட நினைப்பில் தப்பு எதுவும் இல்லையே ராசாத்தி.. .நீ படிச்சவ… உன்னை மாதிரியே படிச்ச மாப்பிள்ளை வேணும்னு ஆசைப்பட்டு இருப்ப… அதுல ஒண்ணும் தப்பு இல்லை… கல்யாணத்துக்குப் பிறகு என்னை நீ தள்ளியா வச்சுட்ட?… நல்லபடியா குடும்பம் நடத்துற தானே… அப்புறம் என்ன வருத்தம்” என்று பேசி அவளின் மனக் கவலையை அவன் அகற்ற… நிம்மதியுடன் அவனது தோள் சாய்ந்து கொண்டாள் தாமரை.    

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here