
தேன்நிலவு முடிந்து ஊருக்கு வந்த தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் பிரியாமல் எந்நேரமும் தங்கள் காதல் உலகத்திலேயே சுற்றிக் கொண்டு இருந்தனர்.
வந்தவர்கள் முதலில் தாமரையின் வீட்டுக்கு சென்று விட…. ஒருநாள் முழுக்க தூங்கி ஓய்வெடுத்தனர் களைப்பு தீர… அன்று இரவு உறங்கும் பொழுது சங்கர பாண்டியன் பேச்சு வாக்கில் நாளை அவனது வீட்டிற்கு செல்வது குறித்து பேச… தாமரையின் உள்ளம் யோசனையானது.
‘எதையாவது செய்யணுமே? முதலில் ஏதாவது செஞ்சு தள்ளிப் போடுவோம்.. அப்புறம் ஒருநாள் இவர் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது சொல்லி புரிய வச்சுக்கலாம்’ என்று எண்ணியவள் அதை செயலாற்றவும் செய்தாள்.
பேசிக் கொண்டே கணவனை நெருங்கிப் படுத்தவள் அவன் நெஞ்சில் விரல்களால் விளையாடியவாறே அவன் முகம் பார்த்தாள்.
“என்ன சொல்லணும் ராசாத்தி?” என்று அவள் கணவன் கேட்க மெல்ல பேச்செடுத்தாள்.
“இன்னும் நம்ம குல தெய்வத்தோட கோவிலுக்கு பொங்கல் வைக்கவே இல்லை. அப்புறம் மறுவீட்டு விருந்து அது இதுன்னு நிறைய இடத்துக்கு அலைய வேண்டி இருக்கும். அதெல்லாம் முடிச்சுட்டு அப்புறமா உங்க வீட்டுக்கு போகலாமா?”என்றாள் கண்களில் ஆர்வம் கொப்பளிக்க… அவள் முகத்தையே ஒரு நிமிடம் உற்று நோக்கியவன் பெரிதாக எந்த விவாதமும் செய்யாமல் சட்டென்று தலை அசைத்து ஒத்துக் கொண்டான்.
அவளுக்கோ மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. சங்கரபாண்டியன் மறுத்து பேசுவான் …. எப்படியாவது அவனை சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்று அவள் எண்ணி இருந்ததற்கு மாறாக அவன் கேட்ட உடனே ஒத்துக் கொள்ளவும் மகிழ்ச்சியுடன் அவனது கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டவள் அவனை கட்டிக் கொண்டு உறங்கியும் போனாள்.
ஆனால் உறங்கிய பின்னர் கணவன் சிறிது நேரம் அவள் முகத்தையே யோசனையாக பார்த்துக் கொண்டு இருந்ததை அவள் அறியாமல் போனாள்.
குல தெய்வ கோவிலுக்கு போய் வந்த பின்னர், வரிசையாக உறவினர்கள் வீட்டிற்கு சென்று வர… மேலும் பத்து நாட்கள் கரைந்தது. இந்த நாட்களில் எல்லாம் சங்கரபாண்டியன் அவளை ஒரு நொடி கூட விட்டு அகலாமல் காதலால் குளிப்பாட்டினான்.
நாள் தவறாமல் அவளுக்கு தினமும் பூ வாங்கிக் கொண்டு வருவான். நினைத்தால் உடனே கடைக்கு கூட்டி சென்று அவளுக்கு புது உடைகளும், நகைகளும் வாங்கிக் குவித்தான். அவளுக்கு ஒரு பொருள் பிடித்து இருப்பதாக அவள் கண்களால் தெரியப்படுத்தினால் கூடப் போதும். அடுத்த நிமிடமே அதை வாங்கி அவள் கரங்களில் கொடுத்து விடுவான் சங்கரபாண்டியன்.
இது அத்தனையும் தாண்டி ஒரு வழியாக அந்த நாளும் வந்து சேர்ந்தது. அவர்கள் வாழ்வில் பிரச்சினையும் வந்து சேர்ந்தது.
“இன்றைக்கு சாயந்திரம் நம்ம வீட்டுக்கு போகலாம் ராசாத்தி… கிளம்பி தயாரா இரு” என்று சொன்னவன் கிளம்பி வெளியே சென்று விட…. அன்று மாலை அவன் வீடு திரும்பும் பொழுது தாமரைக்கு தலைவலி வந்து இருந்தது.
கட்டிலை படுத்து தூங்குவது போல நடித்துக் கொண்டு இருந்தவளை யோசனையுடன் பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட, வீட்டு வாசலில் செங்கமலம் அவனை பிடிபிடியென பிடித்துக் கொண்டார்.
“ஏன்டா… கல்யாணம் ஆகி மாசக் கணக்கு ஆகுது…. இன்னும் வீட்டுக்கு வராம இப்படி மாமனார் வீட்டில சீராடிக்கிட்டு இருக்கியே… சொந்த வீட்டுக்கு வரும் எண்ணம் இருக்கா இல்லையா உனக்கு?” என்று எகிற, அவரது தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சம் சமாதானம் செய்யத் தொடங்கினான் சங்கர பாண்டியன்.
“என்ன பாட்டி எதுக்கு இவ்வளவு கோபம்? புது இடம்னா அவளுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குமேன்னு…”
“அப்படின்னு அந்த கொழுப்பெடுத்த கழுதை உன்கிட்டே சொன்னாளா?”
“இல்லை பாட்டி… நானா தான்” “டேய் உன் பேச்சு ஒண்ணும் சரி இல்லை சொல்லிட்டேன். ஒழுங்கா மரியாதையா இன்னைக்கே வந்து சேர்….” என்றார் மிரட்டலாக
“இன்னைக்கு கிளம்பலாம்ன்னு தான் நினைச்சோம் பாட்டி. அவளுக்கு தீடீர்னு தலைவலி சோர்ந்து போய் படுத்து இருக்கா… அவளுக்கு குணமாகட்டும்… நல்ல நாளா பார்த்து சீக்கிரமே நம்ம வீட்டுக்கு அவளை கூட்டிக்கிட்டு வந்திடறேன்”
“எனக்கு என்னவோ நீ செய்றது எதுவும் நல்லதா படலை… அம்புட்டுத் தான் சொல்வேன்… அந்த பைத்தியக்காரி பேச்சை கேட்காதே” என்று பேரனை எச்சரித்தவர் செல்லம்மா எவ்வளவோ வற்புறுத்தி சாப்பிட சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட அங்கிருந்த அனைவருமே வருத்தம் கொண்டனர்.
“மாப்பிள்ளை… எங்களுக்குன்னு இருக்கிறது எங்க பொண்ணு ஒருத்தி தான். அவளோட நீங்க இங்கே எத்தனை நாள் தங்கினாலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை… அதே நேரம் அப்பத்தா சொல்றதும் சரிதானே…. அவரோட பேச்சுக்கும் நீங்க மரியாதை கொடுக்கணும் இல்லையா?” என்று தயங்கி தயங்கி பேசினார் அய்யாதுரை.
கல்யாணம் முடிந்த பிறகு தங்களது வீட்டிலேயே பெண்ணும் மாப்பிள்ளையும் தங்கி இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் வீட்டு பெரியவரான செங்கமலம் இப்படி கோபத்தோடு செல்வது மகளின் வாழ்க்கையை பாதிக்குமே என்று எண்ணி அஞ்சினார்கள்.
அதே நேரம் வெளிப்படையாக மருமகனிடம் அவரது வீட்டிற்கு கிளம்பிப் போகும்படியும் அவர்களால் சொல்ல முடியாமல் தவிக்க… சங்கரபாண்டியன் அவர்களின் மன நிலையை எளிதில் புரிந்து கொண்டான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா… பாட்டியை நான் சமாளிச்சுக்கறேன்… தாமரைக்கு உடம்பு சரியாகட்டும். நாளைக்கே கிளம்பிடறோம்” என்று ஆறுதல் கூற… மருமகன் தவறாக எடுத்துக் கொள்ளாமல் இதமாக பேசிய விதம் அவரிடத்தில் அவனது மதிப்பை உயர செய்தது.
அன்று இரவு வேலைகளை முடித்துக் கொண்டு வேண்டுமென்றே தாமதமாக திரும்பியவன் உறங்குவது போல நடித்த மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் உறங்கி விட தாமரைக்கு சுரீல் என்றது. வழக்கமாக அவள் அப்படித் தூங்கினால் விட்டு விடுபவன் அல்லவே அவன். அவளை தூக்கி நெற்றியில் முத்தமிட்டு அவளை அள்ளி நெஞ்சில் போட்டுக் கொண்டே உறங்குவான்.
அப்படி இருக்க , கணவனின் இன்றைய செய்கை வருத்தம் அளிக்க… அழுத படியே உறங்கிப் போனாள் தாமரை. அதன் பிறகு அவள் மாறி இருந்தால் கூட பின்நாளில் அவர்களது வாழ்வில் ஏற்படப் போகும் துன்பத்தில் இருந்து அவள் தப்பி இருக்கலாம். அப்படி செய்யாமல் போனது தான் அவளது பிழை.
அடுத்த நாள் அவளுக்கு வயிற்று வலி வந்தது… அதற்கு அடுத்த நாள் கீழே விழுந்து காலில் சுளுக்கு ஏற்பட்டது. அதற்கும் மறுநாள் அவளது புடவை தீப்பற்றிக் கொண்டது. இது அனைத்தையும் மௌனமாகவே கவனித்து வந்த சங்கரபாண்டியன் அடுத்த அதிரடியாக செயல்பட்டான்.