சஹாரா சாரல் பூத்ததோ 13

0
1224

அடுத்த நாள் காலை எழுந்ததும் அவளுக்கு முன்னரே குளித்து தயாராக காத்திருந்த கணவனை கேள்வியாக பார்த்தாள் தாமரை. தானாக முன் வந்து அவனிடம் பேசவும் அவளுக்குத் தயக்கம்…

குற்ற உணர்வின் காரணமாக இடைப்பட்ட நாட்களில் அவள் பேசாமல் இருக்க… சங்கரபாண்டியனும் அவளிடம் பேச முற்படவே இல்லை.

“ராசாத்தி… எழுந்திருடா… நேரமாச்சு. கிளம்பணும் இல்லையா?” கணவன் இயல்பாக பேசி விட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறையாக மகிழ்ந்தவள் அவனது பேச்சின் உட்கருத்தை உணர்ந்து அப்படியே தேங்கி நின்றாள்.

“எங்கே போறோம்?”

“என்னடா ராசாத்தி மறந்துட்டியா… இன்னைக்கு தமிழ் வருஷப்பிறப்பு… நம்ம அம்மன் கோவிலில் விசேஷமா இருக்கும் இல்லையா…. கிளம்புடா போகலாம்” என்றதும் புள்ளி மானென துள்ளிக் குதித்து கிளம்பினாள்.

பச்சை நிற பட்டுபுடவையில் கழுத்தில் மரகதக் கல் பதித்த அட்டிகையை அணிந்து கொண்டு உயிர் பெற்று வந்த சிலை போல இருந்தவளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு. கணவனின் பார்வை தன்னை விட்டு அகலாமல் தன் மேலேயே நிலைத்து இருப்பதை உணர்ந்தவளை வெட்கம் ஆட்கொண்டது.

அன்னையும் தந்தையும் பின்னால் வருவதாக சொல்லி விட சில நாட்கள் இடைவெளிக்குப் பின் கிடைத்த கணவனின் அருகாமை அவளை பித்தம் கொள்ள செய்தது.

அவள் மனதில் கோவிலுக்கு போனதோ… அம்மனை தரிசனம் செய்ததோ எதுவுமே பதியவில்லை. ஊரார் தங்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை புகழ்ந்து பேசியது எல்லாம் வேறு ஏதோ மாய உலகில் நடந்த சம்பவங்களாகவே தோன்றின அவளுக்கு.

அர்ச்சனை முடிந்ததும் கோவில் பிரகாரத்தில் ஓரமாக இருவரும் சற்று நேரம் அமர்ந்தனர். சங்கரபாண்டியனிடம் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு. கோவிலுக்கு வந்தாலும் சரி… வீட்டிலாக இருந்தாலும் சரி அவளுக்கு நெற்றி வகிட்டில் அவன் தான் குங்குமம் வைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பான்.

இன்று அவன் கோபத்தை மறந்து குங்குமம் வைத்து விடுவானா என்று ஏக்கத்துடன் அவனையே பார்க்க… அவனும் கண்கள் மின்ன குங்குமத்தை எடுத்து அவளது வகிட்டில் வைத்து விட… அவளையும் அறியாமல் அவள் கண்கள் கண்ணீரை சுரந்தது.

“ம்ச்… கோவிலுக்கு வந்து எதுக்கு அழுகை?” என்று அவனுடைய உரிமையான அதட்டல் அவளுக்கு கோபத்தை தரவில்லை. மாறாக மனதிற்கு இதத்தையே அளித்தது.

‘இல்லை… அவர் என்னை ஒரேடியாக வெறுத்து விடவில்லை… இன்னமும் அவருக்கு என் மேல் நேசம் இருக்கிறது’ என்று எண்ணி மகிழ்ந்து போனாள் தாமரை.

இரண்டு நாட்களாக தான் அவளை புறக்கணித்ததால் தான் இப்படி சின்ன விஷயத்திற்கு எல்லாம் உடைந்து போகிறாள் என்பதை புரிந்து கொண்டவன் கண்களாலேயே அவளுக்கு ஆறுதல் கூற… அவளது அழுகை மேலும் அதிகமானது.

அவளுக்கு கணவனின் தோளில் சாய்ந்து வேண்டுமட்டும் அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் இருப்பது கோவிலாயிற்றே… தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் அழுகையினூடே பேசினாள்.

“சீக்கிரம் கிளம்பலாம்… எனக்கு வீட்டுக்குப் போகணும் போல இருக்கு”

“சரிடா…” என்றவன் அதன் பிறகு மௌனமாகி விட வண்டியில் அவனோடு பயணிக்கும் பொழுதும் அவள் மனம் முழுக்க இன்பத்தில் மிதந்து கொண்டு இருக்க… போகும் பாதையை கவனிக்கத் தவறினாள் தாமரை.

வண்டி நேராக அவனது வீட்டிற்கு போய் நின்றது. சிரித்த முகத்துடன் பைக்கை விட்டு இறங்கியவள் அந்த வீட்டைப் பார்த்ததும் பேய் அறைந்தது போல ஆகி விட்டாள்.

“கொஞ்ச நேரம் இருடா… அப்பத்தாவை ஆரத்தி எடுக்க சொல்றேன்”

“மாட்டேன்… நான் இந்த வீட்டுக்கு வர மாட்டேன்…. வரவே மாட்டேன்” அவள் முகம் எங்கும் பயத்தின் ரேகைகள். அவளது அந்த பதிலை அவனும் எதிர்பார்த்து தானே இருந்தான். மௌனமாக அவளை உற்றுப் பார்த்தவன் தெளிவான குரலில் பேசத் தொடங்கினான்.

“இது தான் நீ வாழப் போற வீடு ராசாத்தி…. இனி இங்கே தான் நீ இருந்தாக வேண்டும்” என்றவனின் குரலில் இருந்த கட்டளை அவளை அடி பணிய சொல்ல அவளோ மிரண்டு பின் வாங்கினாள்.

“நான் மாட்டேன்… இந்த வீட்டுக்குள் வரவே மாட்டேன்… இ…இது… பேய் வீடு…” என்று அவள் சொல்லி வாய் மூடும் முன்னர் அவளது கன்னத்தை பதம் பார்த்து இருந்தது சங்கர பாண்டியனின் கை.

ஒரே அடி தான்… அடித்த வேகத்தில் சுழன்று போய் நான்கடி தள்ளிப் போய் விழுந்து விட்டாள் தாமரை.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட வீட்டைப் பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லுவ…. பல்லை உடைச்சுடுவேன் ராஸ்கல்… என்னோட அப்பாவும், அம்மாவும் வாழ்ந்த இந்த வீட்டை கோவில் மாதிரி நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீ எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பேசுவ? இனி இது தான் உன் வீடு… இங்கே தான் நீ இருந்தாகணும். புரிஞ்சுதா?” என்று கர்ஜிக்க அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.

யோசனையுடன் குனிந்து அவளைப் பார்த்தவன் கண்கள் மூடிய நிலையில் அப்படியே இருந்தவளைப் பார்க்க… ஏதோ விபரீதம் என்று புரிந்தது. வேகமாக அவளை அள்ளி மடியில் போட்டுக் கொண்டவன் கன்னத்தை தொட்டு உலுக்கினான்.

“ராசாத்தி…. எழுந்திருடா”

“…”

“இப்படி எல்லாம் பயமுறுத்தாதே ராசாத்தி… உன்னை அடிச்சது தப்பு தான். மாமன் இனி உன்னை அடிக்க மாட்டேன்… கண்ணைத் திறந்து பாருடா” என்று அவள் தவித்துப் புலம்ப… அவளிடமோ எந்த எதிரொலியும் இல்லை. நொடியும் தாமதிக்காமல் அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவளை தூக்கிக்கொண்டு ஓடினான் சங்கரபாண்டியன்.

அவன் முகத்தில் இருந்த பதட்டத்தையும், அவன் கைகளில் துவண்டு கிடந்த தாமரையையும் பார்த்த மருத்துவர்கள் உடனடியாக அவளை கவனிக்க ஆரம்பிக்க அறையின் வெளியே திக் திக் மனதுடன் காத்திருந்தான் சங்கரபாண்டியன்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here