சஹாரா சாரல் பூத்ததோ 15

0
1208

சங்கரபாண்டியன் தாமரையை அதன் பிறகு எந்த விதத்திலும் தன்னுடைய வீட்டிற்கு வந்து தங்கும்படி வற்புறுத்தவில்லை. தினமும் இரவு நேரத்தில் அவள் அருகிலேயே இருப்பான். ஆனால் அவனுக்கும், அவளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும்.

சிறிய இடைவெளி தான். தாமரை கொஞ்சம் மனது வைத்திருந்தால் கூட அந்த இடைவெளியை நொடிப் பொழுதில் குறைத்து இருக்கலாம். ஆனால் அவள் அதை செய்யவில்லை. அவனை சமாதானம் செய்வதற்காக அவள் கொஞ்சம் இறங்கி வந்தாலும் எங்கே அவளை அந்த வீட்டிற்கு வந்து விட சொல்லி வற்புறுத்துவானோ என்று எண்ணியே அவனுடன் சமாதானமாகி விட யோசித்தாள் தாமரை.

சின்ன வயதில் இருந்தே அவளுக்கு பேய் பயம் உண்டு. வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் அவள் உண்மையில் பயந்த சுபாவம். கோவில் திருவிழா நேரத்தில் சாமியாடிக்கு அருள் வந்து உக்கிரமாக ஆடுவதைப் பார்த்தே பயந்து போய் காய்ச்சலில் படுத்தவள் அவள்.

அப்படி இருக்கையில் அவள் மனதில் பேய் வீடு என்று பதிந்து இருக்கும் ஒரு வீட்டில் அவளை தங்க சொன்னால் நிலைமை என்னவாவது? அவள் ஆரம்பத்தில் சங்கரபாண்டியனை மறுத்ததற்கு முக்கிய காரணம் அவனது வீடு தான்.

அவன் வீடு இருக்கும் தெருப்பக்கம் செல்வதற்கே அத்தனை தூரம் யோசிப்பவளை அந்த வீட்டிற்கே போய் வாழச் சொன்னால்? அவனுடன் பேசப் பேச அவனை அவளுக்கு பிடித்துப் போனாலும் அந்த வீட்டை மனதில் வைத்தே திருமணத்தை எதிர்த்து வந்தாள் தாமரை.

அவனை அவளுக்கு துளிகூட பிடிக்காமல் இருந்து இருந்தால் நிச்சயம் அந்த திருமணத்தை எப்பாடுபட்டாவது நிறுத்தி இருப்பாள். ஆனால் அவளுக்குத் தான் அவனை பிடித்து தொலைத்ததே! அவனது வீடு அவளைப் பொறுத்தவரை சஹாரா பாலைவனம்… அந்த கொடிய பாலைவனத்தில் ஒருநாள் ஒரு நொடி கூட அவளால் நிம்மதியாக வாழ முடியாதே… இதை எல்லாம் எண்ணித்தான் அவள் அந்த திருமணத்தை மறுத்தது.

அவன் படிக்காதவன் என்று மட்டம் தட்டினாள்… தன்னுடைய படிப்பை சாக்காக வைத்து அவனைத் துரத்தினாள். கண்டிப்பாக அவளுக்காக அவன் காத்திருக்க மாட்டான். வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய் விடுவான் என்று அவள் நினைத்திருக்க… அவள் படிப்பு முடிந்ததும் மொத்த ஊரையும் அவள் வீட்டிற்கு அழைத்து வந்து அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டான் அவன்.

அவனை மறுக்க சொல்லி ஒரு மனம் போராட… அந்த போராட்டத்துடனே தான் அவன் கைகளால் தாலியை வாங்கிக் கொண்டாள் தாமரை. தாலி கட்டிய பின்னர் அவள் முகம் பார்த்து அவன் நடந்து கொள்ளவும் அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

‘இவன் என்னை நேசிக்கிறான்…. நான் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வான்… அந்த வீடு எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால் எனக்காக அந்த வீட்டை இடித்து கட்டி விட மாட்டானா… அல்லது வேறு வீட்டை இதே ஊரில் வாங்கத் தான் அவனால் முடியாதா? அவன் என் மீது வைத்திருக்கும் காதல் நிச்சயம் அவனை அதற்கு சம்மதிக்க வைக்கும் என்று உறுதியாக எண்ணியவள் மறந்து போனது ஒரே ஒரு விஷயத்தை தான்.

அவளுக்குத் தான் அது பேய் வீடு. அவனுக்கோ அது அவனை பெற்றவர்கள் வாழ்ந்து மறைந்த கோவில். அதில் சின்ன தூசி விழுந்தால் கூட பொறுக்க மாட்டாதவன் அவளுக்காக அதை இடித்து விடுவான் என்று அவள் நம்பியதே பெரும் முட்டாள்த்தனம் இல்லையா? ஆனால் இதுநாள் வரை இருவரும் இது குறித்து மனம் விட்டு பேசாததால் ஒருவரின் மனதில் உள்ள எண்ணம் மற்றவருக்கு புரியாமல் போனது. நாட்கள் நகர்ந்தன. மசக்கையினால் தாமரை சோர்ந்து போய் கிடந்த நேரத்தில் எல்லாம் தாயாய் அவளைத் தாங்கினான் சங்கரபாண்டியன்.

அவளின் முகம் பார்த்து அவன் ஒரு வார்த்தைக் கூட பேசாவிட்டாலும் நேராநேரத்திற்கு அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான். வீடு முழுக்க மாங்காயால் நிரப்பினான். அவள் சாப்பிடாமல் சோர்ந்து போய் படுத்து இருந்தால் மாமியாரிடம் சொல்லி அவளை மிரட்டி உண்ண வைத்தான்.

இது அனைத்தையுமே செய்தவன் மறந்தும் அவளிடம் சகஜமாக  பேசவில்லை. வீட்டுக்கு வந்துவிடுமாறு ஜாடையாகக் கூட பேசவில்லை .இது எல்லாவற்றையும் விட தாமரை அறியாத விஷயம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால் அன்றைய நிகழ்வுக்குப் பிறகு சங்கரபாண்டியன் அந்த வீட்டில் சாப்பிடுவது இல்லை. அவளது சாப்பாடு செலவிற்கு என்று தாராளமான ஒரு தொகையை மாமனாரிடம் வற்புறுத்தி கொடுத்து வருகிறான்.

“என்னுடைய மனைவியும், பிள்ளையும் மாதக்கணக்கில் மற்றவர் வீட்டில் சாப்பிடுவதை நான் விரும்பல மாமா… நீங்க அவளை பெத்தவங்களா இருக்கலாம். ஆனா ஒரு கணவனா அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்ய வேண்டியது என்னோட கடமை… தயவு செஞ்சு இதை தடுக்காதீங்க” என்று உறுதியுடன் சொல்ல அய்யாத்துரையும் மருமகனின் மனதை புரிந்து கொண்டு மறுத்துப் பேசாமல் வாங்கிக் கொண்டார்.

‘எவ்வளவு அருமையான புருஷன் கிடைத்தும் இந்தப் பெண் இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்து நிற்கிறாளே’ என்ற கவலை தாமரையின் பெற்றோர் இருவரின் மனதையும் அரிக்கத் தொடங்கியது. மருமகனின் பேச்சை மீறி மகளை கண்டிக்கவும் முடியாமல் இறைவனிடம் தங்களது கோரிக்கையை வைக்கத் தொடங்கினார்கள் இருவரும்.

மசக்கையினால் பெரும்பாலும் அறைக்குள்ளேயே பொழுதை கழித்த தாமரைக்கு அந்த விஷயம் தெரியாமல் போனது. உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி விடும் கணவன் சாப்பிட்டானா என்ற கேள்வி தொண்டை வரை வந்தாலும் அவனிடம் கேட்க மனமில்லை அவளுக்கு.

எப்படியும் தாயும்,தந்தையும் அவனை நன்றாகவே கவனிப்பார்கள் என்ற எண்ணம் இருக்கவே அவள் அமைதியாகவே இருந்தாள். ஆயிரம் பேர் இருந்தாலும் கணவனை , மனைவி உபசரித்தால் கணவனுக்கு ஏற்படும் நிம்மதி, வேறு யார் உபசரித்தாலும் வராது என்பது அவளுக்கு தெரியாமல் போனது. முதல் நான்கு மாதங்கள் மௌனமாகவே கழிந்தது.

திருமணம் ஆன புதிதில் எந்த அளவுக்கு அந்த வீடு கலகலப்பாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக இந்த நான்கு மாதமும் அமைதியாகவே கழிந்தது. வீட்டில் யார் முகத்திலும் முன்பு இருந்த சந்தோசம் இல்லை. எந்த வேலையும் நிற்காமல் தொய்வில்லாமல் நடந்தாலும், எல்லாமே இயந்திரகதியில் தான் நடந்தது.

ஐந்தாவது மாதம் ஆரம்பித்த பிறகு தாமரைக்கு வாந்தி, மயக்கம் குறைந்து இருக்க… மெல்ல அறையை விட்டு வெளியேறி வீட்டின் பின்பகுதியில் இருந்த தோட்டத்திற்கு வந்தாள் தாமரை. கணவனின் பாராமுகத்தினாலோ, மசக்கையினாலோ உடல் மெலிந்து கன்னத்து எலும்புகள் துருத்தியாவாறு மாசுபடிந்த ஓவியம் போல நின்று கொண்டு இருந்தவளை தூரத்தில் இருந்து பார்த்த சங்கரபாண்டியனுக்கு கண்கள் கலங்கியது.

அவளிடம் பேச சொல்லி மனது துடித்தாலும் தன்னை பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டை பேய் வீடு என்று கூறிய வார்த்தைகள் அவன் நெஞ்சை வாள் கொண்டு அறுக்க…. மௌனமாகவே அவளின் அருகில் சென்றவன் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த பூவையும், பழங்களையும் அவள் அருகில் வைத்து விட்டு சத்தமிடாமல் வெளியே செல்ல… தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் செல்லும் கணவனையே கண்களில் கண்ணீரோடு வெறித்துப் பார்த்தாள் தாமரை.

ஓடிப் போய் அவனை தடுத்து நிறுத்த சொல்லி அவள் கால்கள் கெஞ்சின… ஆனால் அவளது ஆழ்மனதில் ஏற்பட்டு இருந்த பயம் அவளை மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க விடாமல் செய்ய… அப்படியே நின்று விட்டாள் தாமரை. ஆனால் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

நாட்கள் மேலும் நகர…. வயிற்றில் குழந்தை அசைவதை உணர்ந்தவள் முதன்முதலில் அந்த விஷயத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்ள துடியாய் துடித்தாள். எப்பொழுதும் நேரத்திற்கு வந்து விடுபவன் அன்று கொஞ்சம் வேலையின் காரணமாக இரவு தாமதமாக வர…. வேகமாக அவன் முன்னே வந்து வழியை மறித்தபடி நின்றாள் தாமரை. வெகுநாட்களுக்குப் பிறகு மனைவியின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தவன் ஒரு நிமிடம் தன்னை மறந்து அவளை நெருங்கினான்.

இமைக்காத பார்வையுடன் தன்னை நெருங்கும் கணவனைக் கண்டதும் உள்ளம் படபடக்க அவனையே சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் தாமரை. தலைமுதல் கால் வரை மனைவியை பார்வையால் பருகியபடி அவளை நெருங்கி நின்றான் சங்கரபாண்டியன்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here