எதையோ தன்னிடம் சொல்லி விட தவிப்புடன் அவள் நிற்பது புரிய… அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘இப்பொழுது கூட என்னிடம் பேச மாட்டாரா?’
‘நீ தானே கூப்பிட்ட… நீ தான் பேசணும்’ என்று வீம்புடன் அவன் மௌனமாக சற்று நேரம் நின்றான்.
கண்கள் கலங்க உதடு துடிக்க பரிதவிப்புடன் நிற்கும் மனைவியின் கோலம் மனதை வாட்ட, அவளை கைபிடித்து அறையில் இருந்த கட்டிலில் அமர வைத்தான் சங்கரபாண்டியன்.
‘இப்போ சொல்லு’ எனும் விதமாக பார்வையை அவள் மீது செலுத்தியபடி அவன் இருக்க… தட்டுத்தடுமாறி பேசத் தொடங்கினாள் தாமரை.
“பாப்பா…கு… குழந்தை முதன்முதலா இன்னைக்கு என்னை எட்டி உதைச்சான்”
அவள் எதையோ சொல்லப் போகிறாள் என்று அவன் காத்திருக்க… அவள் குழந்தையைப் பற்றி சொன்னதுமே உடம்பெல்லாம் சிலிர்த்துப் போனது அவனுக்கு. அவனையும் அறியாமல் அவன் பார்வை மெல்ல அவளின் வயிற்றுப்பகுதிக்கு போக….வெட்கத்துடன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் தாமரை.
தாய்மையின் அழகை பறை சாற்றியபடி லேசாக மேடிட்ட வயிற்றுடன் மனைவியை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது. அவளது காலின் கீழே முழங்காலிட்டு அமர்ந்தவன் , புடவையை விலக்கி விட்டு மிக மென்மையாக அவளது வயிற்றில் முத்தத்தை பதிக்க…. வெகுநாட்களுக்குப் பிறகு கிடைத்த முத்தத்தால் அவளின் மேனி சிலிர்த்தது. அதே சிலிர்ப்பை அவனது குழந்தையும் உணர்ந்ததோ என்னவோ … தனது தந்தைக்கு செல்லமாக ஒரு உதை கொடுக்க…. வயிற்றுக்குள் இருந்தாலும் தந்தையின் தொடுகையை உணர்ந்து கொண்ட அந்த செய்கையை எண்ணி வியந்து போனாள் தாமரை.
அதைப் பற்றி எல்லாம் சங்கரபாண்டியன் யோசித்துக் கொண்டு இருக்கவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு கிடைத்த மனைவியின் அருகாமையையும், குழந்தையின் அருகாமையையும் இழக்க விரும்பாமல் அவளது வயிற்றின் மீது கை வைத்தபடி குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான் தகப்பனாக.
என்ன பேசினான் என்பது யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால் ஏதேதோ கதைகள் பேசினான். மனைவியைப் பற்றி… அவனைப் பற்றி… என்று ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தவன் ஒரு இடத்தில் தொண்டை கரகரக்க அப்படியே மௌனமாகி விட்டான்.
“இன்னும் நாலு மாசத்தில் நீ வெளியே வந்துடுவ… இந்த விஷயம் உன்னோட தாத்தாவுக்கும், அப்பாயிக்கும் தெரிஞ்சா எவ்வளவு சந்தோசப்படுவாங்க தெரியுமா? அவங்க உயிரோட இருந்து இருந்தா இந்நேரம் திருவிழா மாதிரி கொண்டாடி இருப்பாங்க. ஊருக்கே விருந்து வச்சு… கோவிலில் கிடா வெட்டி பூசை செஞ்சு… இதை எல்லாம் பார்க்க அவங்களுக்கு கொடுத்து வைக்கலை… அவங்களுக்கு மட்டுமா? எனக்கும் தான்…
நான் தான் ராசியே இல்லாதவன். என்னைப் பெத்தவங்க கூடவும் இருக்க முடியல… என்னோட குழந்தை உன் கூடவும் சந்தோசமா இருக்க முடியலை” என்று கண்ணீர் குரலில் பேசியவன் அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் அறையை விட்டு எழுந்து வெளியே சென்று விட்டான்.
அவன் சென்று வெகுநேரம் தாண்டிய பிறகும் கூட அப்படியே கல் போல உறைந்து நின்றாள் தாமரை. வயிற்றில் இருந்து அவளது குழந்தை உதைத்த பிறகு தான் தன்னுணர்வுக்கு மீண்டாள்.
அவளை திருமணம் செய்ததைத் தவிர அவன் செய்த குற்றம் தான் என்ன? திருமணம் முடிந்த அடுத்த நொடியில் இருந்து அவளை காதலால் குளிப்பாட்டியவன் இன்று இந்த அளவிற்கு நொந்து போய் பேசுகிறான் என்றால் அதற்குக் காரணம் அவள் அன்றி வேறு யார்?
தன்னுடைய பயத்தினால் மட்டுமே அவன் இந்த அளவிற்கு வருந்துகிறான் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிய… அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள் தாமரை.
பயத்தோடு அவளால் அந்த வீட்டில் இந்த நிலையில் வாழ முடியாது. அதே நேரம் கணவனின் நிம்மதியை குலைத்து விட்டு தாய் வீட்டிலேயே வசிக்கவும் அவளது மனசாட்சி அவளுக்கு இடம் கொடுக்கவில்லை. ஏதேதோ யோசித்தபடி உறங்கியவளுக்கு வெகுநேரம் கழித்து வந்து, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த கணவனின் கண்ணீர் முகத்தைப் பற்றி தெரியாமல் போனது.
மறுநாள் ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு செல்ல வேண்டிய இருந்ததால் அவள் கிளம்பி தயாராக இருக்க… சங்கரபாண்டியனுக்கு அப்பொழுது ஒரு அவசர வேலை வந்து சேர்ந்தது.
“அத்தை… பண்ணையில் நம்ம மாடு ஒண்ணு குட்டிப் போடப் போகுது… ஆனா ஏதோ சிக்கலா இருக்கும் போல.. கன்னுக்குட்டி வெளியே வர மாட்டேங்குது… நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன். நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வரப் பார்க்கிறேன். ஒருவேளை நான் வரத் தாமதம் ஆனா நீங்க கொஞ்சம் அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்துடுங்க” என்றான் கெஞ்சலாக
“அடடா… இதுக்கு எதுக்கு மாப்பிள்ளை இவ்வளவு விளக்கம் எல்லாம் சொல்லிக்கிட்டு….. நீங்க போய் வேலையைப் பாருங்க… நான் அவளை கூட்டிட்டு போய்ட்டு வர்றேன்” என்றார் செல்லம்மா தன்மையாக…
கணவன் உடன் வராதது வருத்தமாக இருந்தாலும் அவனது சூழ்நிலை புரிந்ததால் அன்னையுடன் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றாள் தாமரை. அங்கே அவள் காத்திருக்கும் நேரத்தில் அதே மருத்துவமனையில் அவர்களது உறவுக்காரப் பெண் ஒருத்திக்கு குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வர…செல்லம்மா தான் போய் பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார்.
“அந்த பொண்ணுக்கு பத்து வருசமா குழந்தையே இல்லாம குழந்தை பிறந்து இருக்கு… நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன் தாமரை… நீயும் கூட வா”
“இல்லம்மா.. எனக்கு அசதியா இருக்கு… நீங்க போய் பார்த்துட்டு வாங்க”
“டாக்டர் கூப்பிட்டா என்னை வந்து கூப்பிடு.. நான் போய்ட்டு ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்” என்று சொல்லி விட்டு நகர….அடுத்த நிமிடமே அவளுக்கு டாக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.
மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு டாக்டர் அம்மாள் அவளிடம் “ உங்க கூட வந்து இருக்கிறவங்கள கொஞ்சம் வர சொல்லுங்கம்மா”
“எ…எதுக்கு டாக்டர்?” என்றாள் கலவரமாக…
“பயப்பட ஒண்ணுமில்லைமா… உங்க உடல்நிலையைப் பத்தி சொல்லணும்…” என்று அவர் சொன்ன விதம் ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு அச்சமூட்ட சட்டென்று அந்த பொய்யை சொன்னாள்.
“என் கூட யாரும் வரல டாக்டர்”
“எப்பவும் உங்க வீட்டுக்காரர் வருவாரே உங்களோட”என்றார் டாக்டர் நம்பாமல்…
“பண்ணையில் ஒரு மாட்டுக்கு பிரசவம் பார்க்க போய் இருக்கார் டாக்டர்” என்று உண்மையை சொன்னாள் தாமரை.
‘நல்லவேளை அம்மாவை இவங்களுக்கு தெரியாது’ என்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.
“என்ன டாக்டர் எதுவும் பிரச்சினையா? நீங்க என்கிட்டயே சொல்லலாம்” பதட்டத்தை மறைத்துக் கொண்டு.
“சிக்கல் எல்லாம் இல்லைமா… இன்னைக்கு ஸ்கேன் செஞ்சு பார்க்கும் பொழுது வயித்தில் தண்ணி கம்மியா இருக்கு… தண்ணினா… பனிக்குட நீர்… அது போதுமான அளவு இருந்தா தான் குழந்தை ஆரோகியமா இருக்கும். உங்களுக்கு அது கம்மியா இருக்கு… இப்பவே இப்படி இருந்தா… இன்னும் நாள் ஆனா இன்னும் குறையும்… அது கொஞ்சம் ஆபத்து”
“இப்போ என்ன செய்யணும் டாக்டர்” அவள் முகமெங்கும் பயத்தில் வேர்த்து வழியத் தொடங்கி இருந்தது.
பயப்பட வேண்டாம்மா… பிரசவ சமயத்தில் ரொம்ப கம்மியா இருந்தா நார்மல் டெலிவரி நடக்க வாய்ப்பு இல்லை…. சிசேரியன் தான் செஞ்சு ஆகணும்.மற்றபடி வேற எந்த பயமும் வேண்டாம்” என்று அவர் தேற்றி அனுப்பினாலும் அவள் முகத்தில் தெளிவில்லை.
இது குறித்து அப்புறமாக அவள் கணவரிடம் பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டார் டாக்டர்.
வெளியே வந்ததும் தாயிடமும் மற்றவர்களிடமும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக பொய் சொன்னவள் குழந்தைக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயத்திலேயே இருந்தாள்.
வெளியே சொல்லி மற்றவர்களையும் கலவரப்படுத்தி விடக்கூடாது என்று எண்ணி யாரிடமும் அதைப் பற்றி மூச்சுவிடவும் இல்லை அவள்.ஏற்கனவே தன்னுடைய பயத்தால் தன்னுடைய வீட்டார்கள் படும் துன்பம் போதும்.மேற்கொண்டு அவர்களை சோதிக்க வேண்டாம் என்ற எண்ணியவள் அந்த விஷயத்தை அப்படியே மறைத்து விட்டாள்.