சஹாரா சாரல் பூத்ததோ 17

0
142

அத்தியாயம் 17

நாட்கள் நகர்ந்தன… இப்பொழுது தாமரைக்கு ஒன்பதாம் மாதம் நடக்கிறது. சங்கரபாண்டியன் நாட்கள் செல்ல செல்ல மனைவியை ஓட்டிக் கொண்டே திரிந்தான். அவள் முகத்தில் சின்ன மாறுதல் வந்தால் கூட அவளை விடவும் அதிக கவலை அவனுக்குத் தான் இருந்தது. முன்பு போல அவளிடம் பேசாமல் இருப்பதில்லை அவன். தினமும் இரவில் அவள் சுடுநீரில் குளித்து விட்டு வந்ததும் அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் பிடிவாதமாக அவளது கால்களை அமுக்கி அவளை தூங்க வைத்த பிறகு, குழந்தையுடன் பேசிய பிறகு தான் அவன் தூங்குவான்.

என்ன தான் அவள் மீது கோபம் இருந்தாலும் அவனது அப்பத்தா நாள் தவறாமல் வீட்டுக்கு வந்து அவளுக்கு கசாயம் கொடுத்து விட்டுப் போவார். அது மட்டும் இல்லாமல் அவர் வரும் நேரத்தில் அவளுக்கு ஓய்வெடுக்க அனுமதி கிடையாது. வேண்டுமென்றே வீட்டை குப்பை செய்து கூட்ட சொல்லுவார். நன்றாக இருக்கும் துணிகளை அழுக்காக்கி துவைக்க சொல்லுவார்.

ஒருமுறை சங்கரபாண்டியனின் கண் எதிரே அவர் வேண்டுமென்றே தாமரையை வேலை வாங்க கொதித்துப் போய் விட்டான் அவன்.

“அப்பத்தா… உங்களுக்கு அவ மேல கோபம் இருக்கும்னு தெரியும். அதுக்காக இப்படியா…. புள்ளதாச்சி பொண்ணை வேலை வாங்குவீங்க… உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? கொஞ்சம் அமைதியா இருந்தா என்னோட பொண்டாட்டியை இஷ்டத்துக்கு வேலை வாங்குவீங்களா…. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க…” என்று அதட்ட தாமரை உட்பட மொத்த வீடும் அவனைப் பார்த்து கேலியாக சிரித்தது.

“அடேய்! பேராண்டி… இந்த மாதிரி நேரத்தில் நல்லா குனிஞ்சு , நிமிர்ந்து வேலை பார்த்தா… சுகப்பிரசவம் ஆகும்டா.. அதுக்குத்தான்…”

அவர் சொல்வது உண்மை தான் என்பது புரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லை அவனுக்கு.

“இல்ல பாட்டி … நீங்க பொய் சொல்லுறீங்க… ஏதோ ஒண்ணு இரண்டு வேலைன்னா பரவாயில்லை… இப்படி எல்லா வேலையையும் என் பொண்டாட்டி தலையில் கட்டினா என்ன அர்த்தம்?”

“போடா போக்கத்தவனே…. வந்துட்டான் எல்லாம் தெரிஞ்ச பெரிய மனுஷனாட்டம்… உனக்கு பிள்ளைன்னா எனக்கு கொள்ளுப் பேரன் இல்லையா? எனக்கு பாசம் இருக்காது?… பிள்ளைத்தாய்ச்சியா இருக்காளேன்னு தான் விட்டு வச்சு இருக்கேன். இல்லைன்னா இந்நேரம் அவளை நம்ம வீட்டுக்கு தரதரன்னு இழுத்துட்டுப் போய் இருப்பேன் தெரியுமா?” என்று அங்கலாய்க்க அந்த இடமே கொஞ்ச நேரம் அமைதியாகி விட்டது. மீண்டும் உரத்த குரலில் செங்கமலமே பேச்சைத் தொடங்கினார்.

“ஏன்டா பேராண்டி உன் பொண்டாட்டிக்கு ஒன்பதாம் மாதம் பிறக்கப் போகுது… எப்போ வளைகாப்பு செய்யப் போற?”

“ஏற்கனவே நல்ல நாள் பார்த்தாச்சு அப்பத்தா… வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு… அன்னைக்கே வைச்சுக்கலாம்ன்னு இருக்கோம்”

“இன்னும் அஞ்சு நாள் தானேடா இருக்கு… அதுக்குள்ளே எப்படிடா முடியும்?” என்றார் கேள்வியாக…

“எல்லாம் முடியும் அப்பத்தா… எல்லாம் தயார்… உங்க பேத்தி வந்து புது புடவையைக் கட்டிக்கிட்டு மனையில் உட்கார வேண்டியது மட்டும் தான் பாக்கி” என்றான் விளையாட்டாக…

“அவளை கூட்டிக்கிட்டு வெளியே கடைத்தெருவுக்கு ஒண்ணும் போகக் காணோம்”

“வீட்டுக்கே எல்லா புடவையும் வரவழைச்சு வாங்கியாச்சு அப்பத்தா.. இந்த மாதிரி நேரத்தில் அவளை அலைய விடக் கூடாது இல்லையா” என்றான் கரிசனமாக…

“வீட்டு பெரிய மனுஷி என்னை ஒரு வார்த்தையாவது கேட்டியா? அது சரி… எனக்கு எங்கே இருக்குது மரியாதை? மரியாதை எல்லாம் கிலோ என்ன விலைன்னு இல்ல நீ கேட்கிற?” என்று சலித்துக் கொள்ள… வேகமாக வந்து பாட்டியின் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சினான்.

“என்ன அப்பத்தா…என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்ட… நான் உன் மேல உசுரையே வச்சு இருக்கேன் தெரியுமா?” என்றான் போலியாக கண்ணீரை துடைத்தபடி

“சரி சரி… போதும்டா.. ரொம்ப ஐஸ் வைக்காதே…” என்றவர்கள் அதன்பிறகு வளைகாப்பு குறித்த வேலைகளை குறித்து பேச… இடையில் பாட்டியும், பேரனும் மட்டுமாக தனித்து செல்வதை கவனித்த தாமரை ஏதோ தோன்ற… அவர்கள் அறியாமல் அவர்களின் பின்னோடு போய் நின்றாள்.

“ஏன் பாட்டி…. நாள் நெருங்கி கிட்டே இருக்கு… ஒண்ணும் பயமில்லையே… எல்லாம் நல்லபடியா நடந்து முடியும் தானே… முன்னே மாதிரி அவ கலகலப்பாக இருக்கிறதே இல்லை… எனக்கு என்னவோ பயமா இருக்கு”

“நீ ஏன் ராசா கவலைப்படுற.. அதெல்லாம் நல்லபடியா பிள்ளையை பெத்து எடுப்பா… பொதுவா பொண்ணுங்க மனசு இந்த நேரத்தில் புருசனை ரொம்பவே தேடும். நீ உன்னோட கோபத்தை விட்டுட்டு அவ கூட கொஞ்சம் அனுசரணையா இரு ராசா” என்று சொல்ல சற்று நேரம் அந்த இடம் ஊசி விழுந்தால் கூட கேட்குமளவுக்கு அமைதியாக இருந்தது.

“எனக்கு அவ மேல கோபம் எல்லா இல்லை அப்பத்தா… வருத்தம் தான்… அவளுக்கு அந்த வீடு மேல இருக்கிறது வெறுப்பு இல்லை… பயம்… ஒருவேளை அவ வெறுத்து ஏதாவது பேசி இருந்தா… அவளை அடிச்சு இழுத்துட்டுப் போய் அந்த வீட்டில் குடும்பம் நடத்தி இருப்பேன். ஆனா அவ பயப்படுறா அப்பத்தா… அவ பயத்தை போக்கணும்னா அந்த வீட்டுக்குப் போனா தான் முடியும். அங்கே வரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறவளை என்ன செய்ய சொல்றீங்க? முன்னே மாதிரி இருந்தா கூட பரவாயில்லை இப்போ அவ ரெண்டு உசுரு… இந்த நேரத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம்னு தான் அமைதியா இருக்கேன்”

“அதெல்லாம் சரிதான் ராசா… ஆனா நீ சந்தோசமா இல்லையே… இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் அல்லாடிக்கிட்டு இல்ல இருக்க… சரியா சாப்பிடாம… தூங்காம.. ஆளே இளைச்சு போய்ட்டியே”

“என்னோட சந்தோசத்துக்கு என்ன குறைச்சல் அப்பத்தா… மனசுக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணம் செஞ்சுகிட்டேன். இதோ இன்னும் கொஞ்ச நாளில் எங்க உலகத்தை அழகாக்க இன்னொரு குட்டி ஜீவன் வரப் போகுது”

“அது மட்டும் போதுமா ராசா” என்றார் செங்கமலம்… அவர் குரலில் அவரையும் அறியாமல் பேரனுக்கான பரிதவிப்பு இருந்ததை கண்டு கொண்டான் சங்கரபாண்டியன்.

“அப்பத்தா… இப்போ நீ கலங்குற அளவுக்கு எதுவுமே நடக்கல… தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்காதே…” என்றான் ஆறுதலாக…

“என்ன செய்ய சொல்லுற ராசா.. உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது இன்னும் உன்னைக் கட்டிக்கிட்ட மகராசி நம்ம வீட்டில் வந்து விளக்கேத்தலையே… உங்க அப்பனும், அம்மாவும் அவ வரவை எதிர்பார்த்து இருப்பாங்களே.. செத்த பின்னாடியும் அவங்களுக்கு நிம்மதி இல்லைனா எப்படிப்பா?” அவர் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

“வாழ்க்கை இப்படியே போய்டாது அப்பத்தா…. கண்டிப்பா ஒருநாள் எல்லாம் மாறும்” என்று கூறியவன் பாட்டியின் கண்களை துடைத்து விட்டு வீட்டுக்குள் அழைத்து செல்ல… தாமரை மட்டும் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை.

அவளது அருமைக் கணவனின் வருத்தம் அவளையும் தாக்கியது. ‘என் மேல் உயிரையே வைத்து இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன்? அவர் மேலும் மேலும் புண்படுத்திக் கொண்டு தான் இருக்கிறேன். என்ன செய்தால் அவர் முன் போல மகிழ்ச்சியாக இருப்பார்?… அந்த வீட்டுக்கு நான் சென்றால் அவர் சந்தோசமாக இருப்பார்… ஆனால் நான்? பயத்திலேயே செத்து விடுவேனே?’

கண்டதையும் யோசித்து அவள் குழம்பிக் கொண்டு இருக்கையிலேயே நாட்கள் மெல்ல நகர்ந்தது. விடிந்தால் அவளுக்கு வளைகாப்பு… கணவனை எப்படியாவது சமாதானம் செய்து அவனது நிம்மதியை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் வலுத்தாலும் அதை எப்படி செயல்படுத்துவது என்று புரியாமல் திணறினாள் தாமரை.

அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில் எந்த விதமான கருத்து வேறுபாடுகளோ மனஸ்தாபங்களோ, சண்டையோ இல்லையே… அவன் மனம் குளிர வேண்டுமானால் அவனது வீட்டுக்கு செல்வது ஒன்று மட்டுமே வழி…

ஆனால் அந்த பேய் வீட்டுக்கா? குப்பென்று பய உணர்வு அவள் உடல் எங்கும் அலை அலையாய் பொங்கத் தொடங்கியது. இரவு முழுக்க தூங்காமல் யோசித்துக் கொண்டே இருந்தவள் விடியலின் பொழுது ஒரு முடிவை எடுத்தாள்.

 

 

 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here