
இன்னும் இரண்டு எபியில் கதை முடிஞ்சுடும். படிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம்.
விடிந்ததில் இருந்தே வீடு பரபரப்பாக இருந்தது. வளைகாப்பு வேலைகளை பார்க்க வேண்டி சங்கரபாண்டியன் முன் கூட்டியே மண்டபத்திற்கு சென்று விட வீட்டில் செல்லம்மா மகளை தயார் செய்து கொண்டு இருந்தார். நிறை மாதமாக தாய்மையின் பூரிப்புடன் இருந்த மகளை வாத்சல்யத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார் செல்லம்மா… அன்னையிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள் தாமரை.
“ஏன்மா… நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா?” ஒரு நிமிடம் மௌனமாக அவளை அளவிட்டவர் தொடர்ந்து பேசினார்.
“உன்னோட புருஷன், என்னையும் உங்க அப்பாவையும் பேய்னு சொன்னா நீ என்ன செய்வ?
இப்போ நாம இருக்கிற இந்த வீட்டை பேய் வீடுன்னு சொல்லி ஒதுக்கி வச்சா… என்ன செய்வ?
இந்த வீட்டை இடிச்சு தள்ளிட்டு புதுசா ஒரு வீட்டை கட்ட சொன்னா என்ன செய்வ?” என்று நிதானமாக ஒவ்வொரு கேள்வியாக வினவ… தாமரைக்கு முதலில் வந்தது ஆத்திரம் மட்டுமே…
“அது எப்படிம்மா அவர் அப்படி சொல்லுவார்? என்னைப் பெத்து வளர்த்தவங்க நீங்க…. நான் இருந்த வீடு இது… எப்படி அவர் அப்படி சொல்ல முடியும்?” என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாரானாள் தாமரை.
“உன்னால் முடியுதே… இப்போ நீ மாப்பிள்ளைக்கு செஞ்சுக்கிட்டு இருக்கிறது அப்படிப்பட்ட கொடுமையைத் தானே” என்று அவர் நிதானமாக கேட்க… நெஞ்சில் அடி வாங்கியது போல அதிர்ந்து போனாள் தாமரை.
“நல்லா யோசிச்சு பாரு தாமரை… உனக்கு எப்படி நாங்களும் இந்த வீடுமோ.. அதே மாதிரி தானே மாப்பிள்ளைக்கும். இன்னும் சொல்லப் போனா… அவர் சின்ன வயசிலேயே பெத்தவங்கள இழந்தவர்… அவர்கிட்டே இருக்கிறது அவங்களோட நினைவுகள் மட்டும் தான்.
அதையே நீ ஒரு குறையா சொன்னா அவரால எப்படி தாங்க முடியும்?” செல்லம்மாவின் ஒவ்வொரு கேள்வியும் அவளது நெஞ்சை குத்தீட்டியாய் மாறி குத்திக் கிழித்தது.
“அம்மா” என்று உடல் பதற கண்கள் கலங்க அவள் இருந்த கோலம் அவளது மாற்றத்தை தெரிவிக்க செல்லம்மா நிம்மதியானார்.
‘இனி பயமில்லை… அவள் வாழ்வை அவளே செப்பனிட்டுக் கொள்வாள் என்ற நம்பிக்கை எழுந்தது அவருக்கு. அலங்காரம் முடித்து மகளை அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே உள்ள மண்டபத்திற்கு அழைத்து செல்ல அவள் கண்கள் ஆவலுடன் கணவனைத் தேடியது.
அவர்களின் திருமணத்திற்கு முதல் நாள் எப்படி எல்லா வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்தானோ அதே போல இன்றும் எல்லா வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்து கொண்டு இருந்தான்.
வளைகாப்பு வைபவம் தொடங்கிய பிறகும் கூட அவன் கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் அலைந்து கொண்டே இருக்க… தாமரை தவிப்புடன் இருந்தாள்.
தன்னுடைய மனமாற்றத்தை கணவனிடம் உடனே பகிர்ந்து கொள்ள விரும்பினாள். ஆனால் அவனோ வேலைகளில் மூழ்கி இருக்க… பரிதவித்துப் போனாள் தாமரை. ஒருவழியாக கடைசியில் தான் வந்து சேர்ந்தான் சங்கரபாண்டியன்.
சம்பிரதாயப்படி அவனும் தன்னுடைய மனைவிக்கு சந்தனம் பூசி, கையில் தங்க வளையல் அணிவித்தவன் மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்க பேச்சிழந்தான். கண்களில் கரை காணா காதலை தேக்கியவாறு அவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டு இருக்க ஸ்தம்பித்து போனான் சங்கரபாண்டியன்.
கடந்த சில மாதங்களாக அவள் அவனிடம் கொஞ்சம் பேசுகிறாள் தான். ஆனால் கண்களில் வழியும் இந்த காதல்…. சுனாமியாய் அவனை வாறி சுருட்டி அடித்தது. திருமணம் ஆன புதிதில் அவன் அவள் மேல் காட்டியது காற்றாற்று வெள்ளம் என்றால் இப்பொழுது அவள் அதையும் மிஞ்சி விட்டாள் என்றே தோன்றியது. இருவரும் ஒருவரை ஒருவர் கண்களாலேயே விழுங்க… சுற்றி இருந்தோரின் நகையொலியில் இயல்புக்கு மீண்டு வந்தனர்.
தாமரையை விட சங்கரபாண்டியனின் முகம் அதிக வெட்கத்தை சுமந்து இருக்க…. அதற்கும் கேலியும் , கிண்டலும் செய்தார்கள் ஊரார்கள்.
கணவனிடம் தனித்து பேசும் தருணத்திற்காக அவள் காத்துக் கொண்டு இருக்க… சங்கரபாண்டியன் என்ன நினைத்தானோ விழா முடிந்ததும் தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு அங்கே சென்று விட்டான். உறவினர்கள் மறுக்க… உடனடியாக வந்து விடுவதாக சொல்லி கிளம்பியும் போய் விட அவன் கிளம்பி சென்ற பிறகு தான் தாமரைக்கு விஷயமே தெரியவர மிகவும் நொந்து போனாள் தாமரை.
சற்று நேரம் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்றவள் சங்கரபாண்டியனின் வீட்டிற்கு செல்லப் போவதாக கடிதம் எழுதி மேசையின் மீது வைத்து விட்டு , யாரும் தடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் பின் வாசல் வழியாக சென்று விட்டாள்.
அங்கே நடக்கப் போகும் விபரீதம் தெரிந்து இருந்தால் நிச்சயம் அவள் அப்படி கிளம்பி இருக்க மாட்டாள். அவள் டேபிளின் மீது எழுதி வைத்திருந்த காகிதம் காற்றில் பறந்து ஜன்னல் வழியாக வெளியே விழுந்தது விதியின் குற்றம் தானே… விதி யாரை விட்டது? காதல் மணாளனிடம் தன்னுடைய மனமாற்றத்தை கூற ஆசைப்பட்டு அவள் செல்ல… அங்கே அவளுக்கும் முன்னதாக அவளது விதி காத்துக் கொண்டு இருந்தது.