சஹாரா சாரல் பூத்ததோ 2

1
1840

அத்தியாயம் 2

பயந்து பயந்து அந்த வீடு இருக்கும் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தாள் தாமரை. அவளுக்கு முன்னரே மற்றவர்கள் சென்று இருக்க, இவள் மட்டுமாக தனித்து அந்த வீதியில் சென்று கொண்டு இருந்தாள்.

‘இதோ இன்னும் பத்தடி தூரம் தான்.. அந்த வீடு வந்து விடும்… அந்தப்பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாது’ என்ற எண்ணத்துடன் வேகமாக நடக்கத் தொடங்கியவள் சரியாக வீட்டு வாசலை தாண்டும் பொழுது பதட்டத்தில் அவளது கால் வழுக்கி கீழே விழுந்து விட்டாள். அவள் பயத்தில் வேகமாக எழ முயல, பதட்டத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டே இருந்தாள். அவளின் பயம் மேலும் அதிகரித்தது.

‘ஒருவேளை நாம நடந்து வரும் பொழுது பேய் தான் தள்ளி விட்டுடுச்சோ… அதே பேய் தான் என்னை இப்ப எழுந்திரிக்கக் கூட விட மாட்டேங்குது. இனி இந்தப் பக்கம் வரவே கூடாது ஆண்டவா… ஒழுங்கா வீடு போய் சேர்ந்துட்டா ஆத்தோர பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கணும்’ என்றெல்லாம் உள்ளுக்குள் ஆண்டவனுடன் மன்றாட அவளது வேண்டுதல் இறைவனின் செவிகளில் விழுந்ததோ இல்லையோ விழ வேண்டியவனின் காதில் விழுந்து தொலைந்தது.

“யார் நீ?”

அவளின் முதுகுப்புறத்தில் கேட்ட கனத்த குரலில் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு… மீண்டும் எழ முயன்றவளால் முடியாமல் போகவே பரிதாபமான முகத்துடன் நிமிர்ந்து எதிரில் நின்றவனைப் பார்த்தாள்.

அப்படியே காவல் தெய்வம் கருப்பண்ணசாமியின் தோற்றத்தை கொண்டிருந்தான். கிடா மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு வேட்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு கண்கள் ரத்த நிறத்தில் ஜொலிக்க நின்றவனைக் கண்டு அவளது இதயம் நூறு மீட்டர் வேகத்தில் ஓடத் தொடங்கியது.

“கீ…கீழே …வி..விழுந்து…” என்று அவள் வார்த்தைகளை தந்தியடிக்க… விருட்டென்று அவள் முன்னால் வந்து நின்றவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளை எழுந்து நிற்க வைத்தான்.

“கீழே விழுந்தா எழுந்து நிற்கணும்.. அதை விட்டுட்டு நடுரோட்டில் நாட்டியம் என்ன வேண்டி இருக்கு” என்றான் அதட்டலாக…

‘நான் நாட்டியம் ஆடினேனா? இவன் அதை பார்த்தானா…. எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டால் அதுக்கு எதுக்கு இத்தனை கிண்டல்’ என்று மனதுக்குள் எண்ணியவள் கடுகடுவென்ற முகத்துடன் அங்கிருந்த செல்ல முற்பட அவன் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

“நீ செல்லத்துரை அய்யாவோட பொண்ணு தானே?” என்றான் கூர்பார்வையுடன்.

‘நீ கேட்டா பதில் சொல்லணுமா? போடா ‘ என்று அலட்சியப்படுத்தி விட்டு நகர முனைய அவன் வார்த்தைகளை சவுக்காக மாற்றி சுழற்றியடித்தான்.

“இது தான் உன் வீட்டில் சொல்லிக் கொடுத்தாங்களா? ஊர்க்காரங்க பேசினா நின்னு பதில் சொல்லக் கூட முடியாத அளவுக்கு திமிரா உனக்கு?”

‘எனக்கு திமிரா? அதை இந்த காட்டான்  சொல்றான் பாரு’ என்று எண்ணி முறைத்துக் கொண்டே அவனைப் பார்க்க அவனோ நெருப்பை முழுங்கியது போல காட்டத்துடன் நின்று கொண்டு இருந்தான்.

“என்னை மனசுக்குள்ளே திட்டி தீர்க்கறியோ” என்று வேட்டியை மடித்து கட்டியவாறே அவள் முகம் பார்க்காமலே கேட்க வாயை பிளந்து கொண்டு நின்றாள் தாமரை.

“இப்படி ரோட்டில் நின்னு வாயை பிளக்காதே.. ஒழுங்கா நடந்து வீடு போய் சேர்” என்றவன் அதன்பிறகு நொடி கூட அங்கே நில்லாமல் வீட்டுக்குள் சென்று விட இப்பொழுது அவளுக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது. வந்தது உண்மையிலேயே மனிதன் தானா.. அல்லது பேய் பிசாசா என்று விழுந்தடித்துக் கொண்டு வேகமாக வீடு வந்து சேர்ந்த அந்த நாளை என்றுமே மறக்க மாட்டாள் தாமரை.

இப்பொழுது அதே ஆளை(பேயை!)த் தான் மணக்கப் போகிறாள் தாமரை. இன்னமும் அவன் மனிதன் தானா அல்லது பேயா என்ற சந்தேகம் அவளுக்கு இருக்கிறது என்பது வெளியே யாருக்கும் தெரியாது. பின்னே அவன் நடந்து கொண்ட விதத்தை வைத்து யாராலும் அவனுக்கு மனிதன் என்ற பட்டத்தை கொடுக்க முடியாதே…

அதன் பிறகு அந்த வழியாக செல்ல வேண்டும் என்று பயந்தே தொடர்ந்து மூன்று நாட்கள் வயிற்றுவலியை பொய்யாய் உருவாக்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்து விட்டாள் என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

அதன் பிறகு எல்லாமும் ஒழுங்காகத் தான் போய்க் கொண்டு இருந்தது. அவளது பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையிலும்.

பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்த விஷயத்தை வீட்டினரிடம் பகிர்ந்து கொள்ளும் ஆவலோடு வீட்டிற்குள் துள்ளிக் குதித்த படி ஓடி வந்தவளை முதலில் எதிர்கொண்டவன் ஹாலில் அவளையே பார்வையால் துளைத்தபடி தோரணையாக அமர்ந்து இருந்த சங்கர பாண்டியன் தான்.

‘இவன் எங்கே இங்கே வந்தான்’ என்ற கேள்வியை முகத்தில் தாங்கியபடி அவள் உள்ளே சென்று விட அவளது அம்மா சொன்ன சேதியில் அவளுக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

“சீக்கிரம் போய் புடவையை மாத்திக்கிட்டு வந்து நில்லு.. உன்னை பொண்ணுப் பார்க்கத் தான் அந்த தம்பி வந்து இருக்கு”

“எ..என்ன” என்று கேட்டவளுக்கு அம்மா சொன்ன செய்தி நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

“என்னடி… அப்படியே கனாக் கண்டுக்கிட்டு இருக்க… போய் புடவையை மாத்திட்டு வந்து நில்லு” என்று அம்மா விரட்ட.. கால்களை அழுத்தமாக ஊன்றி தன்னுடைய மறுப்பை தெரிவித்தாள்.

“முடியாதும்மா… நான் இப்போ தான் ஸ்கூல் முடிச்சு இருக்கேன். காலேஜ் படிக்காம இதுக்கெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன்…”

“ஏய்.. மெதுவா பேசுடி.. அந்த தம்பி காதில் விழுந்துட போகுது… அப்பா வேற வீட்டில் இல்லை… எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.. முதலில் புடவையை மாத்திக்கிட்டு வந்து நில்லு…”

“அந்தக் கதையே இங்கே வேணாம்… இந்த மாதிரி காட்டானுக்கு எல்லாம் படிப்போட அருமை எப்படித் தெரியும்? இப்போ நீங்க சொல்றீங்களா.. இல்லை நான் போய் சொல்லட்டுமா” என்று கொஞ்சம் சத்தமாக பேசியபடி அவள் வெளியே வர, அங்கே அவன் அமர்ந்து இருந்த இடம் காலியாக இருந்தது.

வாசல் தாண்டி வேக நடையுடன் வெளியே சென்று கொண்டு இருந்தவன் ஒரே ஒரு நொடி திரும்பி தன்னுடைய கூர்பார்வையால் அவளைப் பார்த்த அந்த பார்வையை கண்டிப்பாக இந்த ஜென்மத்திற்கும் அவள் மறக்க மாட்டாள். அப்படி ஒரு உக்கிரம் நிறைந்த பார்வை அது.

‘சரிதான் போடா’ என்று அலட்சியப்படுத்தியவளுக்கு அப்பொழுது தெரியாமல் போனது விதியின் விளையாட்டு.

Facebook Comments

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here