சஹாரா சாரல் பூத்ததோ 4

0
1548

அத்தியாயம் 4

அவள் வீடு வரையிலும் நடந்து வந்தவன் பத்திரமாக அவள் வீட்டின் உள்ளே சென்றதும் அப்படியே போய் விடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அதை பொய்யாக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

‘இப்போ எதுக்கு உள்ளே வர்றான்… ஐயோ வீட்டில் அப்பா இருக்கார் போலவே’ என்ற பயத்துடன் இருந்தவள் அவன் உள்ளே வருவதற்குள் வாசலை மறித்து நின்றாள்.

“எங்கே போறீங்க…?” என்று கேட்டவளின் கைகளை அசால்ட்டாக தள்ளி விட்டு வீட்டிற்குள் நுழைந்தவனின் கோபம் அவனது முகத்திலேயே தெரிந்தது.

“உள்ளே போக வேண்டாம்…நில்லுங்க” என்று மறுபடியும் அவன் முன்னே வந்து நின்றவளை அவன் பார்த்த பார்வையில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது.

“வயசுப்பொண்ணு இவ்வளவு நேரமா வீடு திரும்பல.. அதைப் பத்தி உங்க அப்பாவுக்கு கொஞ்சாமாவது அக்கறை இருக்க வேணாம்… வழியை விடு.. அவரை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்” என்று அவன் எகிற அவனை விட அதிகமாகவே அவள் எகிறினாள்.

“எங்க அப்பாவையே கேள்வி கேட்பீங்களா? அவரை விட இந்த உலகத்தில் யாருக்கும் என் மேலே அக்கறை இருக்க வாய்ப்பு இல்லை… என் அப்பாவை பேசுற வேலை எல்லாம் வேண்டாம்… ஒழுங்கா திரும்பிப் போங்க” என்று அவள் வார்த்தைகளை கடித்துத் துப்ப அவனோ ஒரேயொரு நிமிடம் அவளை முறைத்தவன் பின் இலகுவாக தோள் குலுக்கினான்.

“இன்னும் எவ்வளவு இப்படி ஈர ட்ரெஸ்ல எனக்கு தரிசனம் தர்றதா உனக்கு ஐடியா?” என்று அவன் புருவம் உயர்த்தி மிடுக்காக கேட்க அதற்கு மேலே அங்கே நிற்பாளா அவள். வீட்டின் உள்ளே போகும் முன் அவனை கண்களால் எச்சரித்து விட்டே போனாள்.

அதற்கெல்லாம் அவன் அடங்கி நடந்து விடுவானா என்ன?…. தாமரை மெல்ல பூனை பாதம் வைத்து வீட்டுக்குள் செல்ல அவள் உள்ளே நுழைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்தே அங்கே வேகமாக உள்ளே நுழைந்தவன் அறைக்குள்ளே பேச்சு சத்தம் கேட்கவும் அங்கே போனவன் அங்கே கண்ட காட்சியில் ஒரு நிமிடம் பேச முடியாமல் சிலையாகிப் போனான்.

தாமரையின் தந்தை செல்லத்துரை காலில் கட்டுடன் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்க, அவருக்கு அருகில் அவர் மனைவி அழுது கொண்டு இருந்தார். அழுது கொண்டே திரும்பியவர் இவனைப் பார்த்ததும் பதறிப் போய் எழுந்தார்.

“வாங்க தம்பி… என்ன இந்த நேரத்தில்” என்றார் முந்தானையால் முகத்தை அழுந்த துடைத்தபடி…

“அய்யாவுக்கு என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்லை தம்பி.. மழை ரொம்ப பெஞ்சுது இல்லையா… இந்த தாமரை புள்ள இன்னமும் வரலையேன்னு விசனப்பட்டுகிட்டு வண்டியை எடுத்துக்கிட்டு போனார். மழை நேரம் பாருங்க… ரோட்டோரம் கொட்டி வச்சு இருந்த மண்ணு சறுக்கி கீழே விழுந்துட்டார்… காலில் எலும்பு உடைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாங்க” என்று வருத்தத்துடன் கூறியவரை ஆறுதல் வார்த்தைகள் கூறி அமைதிப் படுத்தினான்.

“தம்பி.. இந்த பொண்ணை வேற இன்னும் காணலை.. எனக்கு இவரை தனியா விட்டுட்டும் போக முடியாது… ஒரு எட்டு போய் என்ன ஆச்சுனு பார்த்துட்டு வர முடியுமா?” என்றார் கெஞ்சலாக…

“உங்க பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாங்களே… பார்க்கலையா” என்றான் ஒன்றுமறியாதவன் போல…

“அப்படியா.. எப்போ தம்பி நான் பார்க்கலையே…”

“அவங்களுக்கு பிறகு தான் நான் உள்ளே வந்தேன்… மழை பெய்யுது இல்லையா.. நனைஞ்சு போய் இருப்பாங்க… அதுதான் வேற டிரெஸ் மாத்திட்டு வரப் போய் இருப்பாங்க போல” என்றான் எதுவுமே அறியாதவன் போல….

அவன் சொல்லி முடிக்கவும், வேறு உடையை மாற்றிக் கொண்டு தாமரை உள்ளே வரவும் சரியாக இருந்தது. தந்தையின் கால்களில் கட்டைப் பார்த்ததும் பதட்டமாக ஓடி வந்தாள் தாமரை.

“அப்பாவுக்கு… என்ன ஆச்சு”

“ஒண்ணுமில்லை… வண்டியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டுடுச்சு”

“என்னம்மா ஒண்ணுமில்லைன்னு சொல்றீங்க.. காலில் எவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்காங்க”

“மயிரிழை அளவுல எலும்பு முறிஞ்சு இருக்கு… அதனால மாவுக்கட்டு போட்டு இருக்காங்க… பயப்பட ஒண்ணுமில்லை தாமரை”

“வாங்கம்மா எதுக்கும் ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டு போகலாம்”

“ம்ச்…சும்மா உளறாதே” என்றான் அதட்டலாக….

‘என்னோட அப்பாவுக்கு என்ன ஆச்சோன்னு நான் பதறிக்கிட்டு இருக்கேன்.. இவன் என்னைப் பார்த்து உளறுறேன்னு சொல்றான்’ என்று கோபத்தோடு எண்ணியவள் அவனது முகத்தைப் பார்த்ததும் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

“கொஞ்சம் அறிவோட பேசறியா? அவர் இப்போ தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்து இருக்கார்… மருந்து சாப்பிட்டு தூங்கிட்டு இருக்கிறவரை மறுபடி இந்த மழை நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு இழுத்துக்கிட்டு சுத்தப் போறியா” என்று அதட்டியவன் அத்தோடு சென்று இருக்கலாம். அப்படி இல்லாமல் அடுத்தடுத்து வேண்டிய உதவிகள் எல்லாவற்றையும் செய்து விட்டு வெகுநேரம் கழித்தே வீடு கிளம்பினான்.

“தம்பி… எதுவுமே சாப்பிடாம போறீங்களே” என்றார் உபசாரமாக…

‘இந்த அம்மா கொஞ்சம் சும்மா இருந்தா தேவலை…. இவன் சும்மாவே உரிமை கொண்டாடுவான்…இனி கேட்கவே வேணாம்’ என்று அவள் மனதுக்குள் தாயை திட்ட அவள் நினைத்ததைப் போலவே தான் அவனும் பேசி வைத்தான்.

“பரவாயில்லை அத்தை.. நம்ம வீடு தானே.. கல்யாணத்திற்கு அப்புறம் விருந்தே சாப்பிட்டுக்கிறேன்” என்று தங்கள் திருமண விஷயத்தை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தி விட்டே நகர… தாமரை அதிர்ந்தே போனாள்.

Facebook Comments
Previous PostArooba Mohini 6
Next PostNew website launched
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here