சஹாரா சாரல் பூத்ததோ 5

0
1765

அத்தியாயம் 5

அதன் பிறகு அந்த வீட்டில் சங்கர பாண்டியனின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அப்படி வருபவன் ஒருநாள் கூட அவளிடம் பேச முயற்சி செய்தது இல்லை. வீட்டிற்கு வருவான்  வந்ததும் அவளது தந்தையைப் பார்த்து பேசுவான். தாயிடம் நலம் விசாரிப்பான்.

தன்னுடைய வீட்டு மாடு குட்டி போட்டதாக சொல்லி சீம்பால் கொண்டு வருவான்… அவனது அப்பத்தா செய்து கொடுத்து அனுப்பியதாக ஆட்டுக்கால் சூப் கொண்டு வருவான்… இப்படி அவனது வருகைக்கு பின்னால் ஏதேனும் சின்ன காரணம் ஒன்றும் இருக்கும்.

அவளது வீட்டிற்கு வருவதற்காகவே இது போன்ற காரணங்களை ஏற்படுத்திக் கொண்டானோ என்ற சந்தேகம் அவளுக்கு வரத் தொடங்கி இருந்தது. இருப்பினும் இது பற்றி யாரிடம் கேட்க முடியும்?. அவளும் அமைதியாகவே கல்லூரிக்கு போய் வந்து கொண்டு இருக்க… அவளது கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு இறுதியில் அவளுக்கு தலைவலி ஆரம்பம் ஆனது.

அவளது கடைசி பரீட்சைகளுக்காக அவள் இரவில் கண் விழித்து மும்மரமாக படித்துக் கொண்டு இருக்கும் பொழுது மகளுக்காக சூடான பாலை எடுத்துக் கொண்டு வந்த செல்லம்மா மகளின் அருகில் அமர்ந்து கொண்டார்.

மகள் பாலை குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவர் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

“ஏன் தாமரை இன்னும் எத்தனை நாளில் பரீட்சை எல்லாம் முடியுது…”

“இன்னும் ஒரு பதினைஞ்சு நாள் மா… எல்லா பரிட்சையும் முடிஞ்சுடும்” இதை எதற்காக கேட்கிறார் என்பதை அறியாமல் அவள் எதார்த்தமாக சொல்ல ஒன்றுமே பேசாமல் எழுந்த செல்லம்மா அவளின் தலையை ஆதுரமாக தடவி விட்டு அங்கிருந்து செல்ல… அவரது செய்கையை அசட்டை செய்து விட்டு படிக்கத் தொடங்கினாள்.

நாட்கள் இறக்கை கட்டி பறக்க கல்லூரியில் கடைசி பரிட்சையை எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே சங்கர பாண்டியன் உட்பட ஊரின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்க… அவர்களை பார்த்ததும் முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவளைக் கண்டதும் வேகமாக செல்லம்மா வந்து அவளை இழுத்துக் வீட்டின் உள்ளே செல்ல அவளும் மறுத்து பேசத் தோன்றாது அவர் பின்னாலேயே சென்று விட்டார்.

“சீக்கிரம் முகம் கழுவிட்டு இந்த புடவையை கட்டு”

“அம்மா… என்ன நடக்குது… எதுக்கு இத்தனை பேர் வந்து இருக்காங்க”

“ம்ச்… உன்னை பரிசம் போட வந்து இருக்காங்க… சும்மா தொணதொணக்காம  சீக்கிரம் கிளம்பு” என்று அவளின் முதுகில் கையை வைத்து குளியல் அறைக்குள் தள்ளி விட… தாமரைக்கு கோபம் வந்தது.

‘என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க இவங்க… வெளியே வந்து பேசிக்கிறேன்’ என்று எண்ணியவள் முகத்தை கழுவிக் கொண்டு வெளியே செல்ல அங்கே அவளுக்காக காத்திருந்தது அவளது அன்னை அல்ல… சங்கர பாண்டியனின் பாட்டி செங்கமலம்.

‘ஐயோ.. இந்தக் கிழவியா.. பேசியே காதில் ரத்தம் வர வச்சிடுமே…’ என்று எண்ணியவள் அறைக்குள் நுழைந்து கண்களால் தாயை தேடினாள்.

“என்ன பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க.. சீக்கிரம் கிளம்பு… அங்கே எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க”

“இல்ல… அம்மா…”

“ஏன் உங்க அம்மாவை பார்த்து பத்து வருஷம் ஆச்சா… எல்லாம் இங்கே தான் இருக்காங்க… அப்புறம் பார்த்துக்கலாம்…. இப்போ கிளம்பு” என்று சொன்னவர் குமட்டில் ஒரு குத்து விட , இந்த கிழவியிடம் கோர்த்து விட்டு சென்ற தாயை மனதுக்குள் தாளித்து கொண்டாள்.

அன்னையிடம் வாதாடி தடுத்து விடலாம் என்று நினைத்தவளால் செங்கமலத்திடம் ஒரு வார்த்தை மறுத்து பேச முடியவில்லை. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அவள் கன்னத்தில் ஒரு குத்து விழுந்தது. எல்லாமே மிரட்டல் தான். ஒரு நொடி அவள் தயங்கினாலும் குமட்டிலேயே குத்து விழுந்தது.

அன்னையை திட்டியபடியே நொந்து போய் தயாரானவள் சபையில் வந்து பரிசம் போடும் முன் தன்னுடைய விருப்பமின்மையை சொல்லி விடலாம் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து கிளம்பி வீட்டில் எல்லாரும் முன் அழைக்கப்படும் தருணத்திற்காக காத்திருக்க… அவளின் எண்ணவோட்டம் தெரிந்து தானோ என்னவோ பரிசம் போடும் முன் அவளை மேடைக்கு யாருமே கூப்பிடவில்லை.

எல்லாம் முடிந்த பின் பொம்மையென அவள் சபைக்கு நடந்து வர செங்கமலம் தன்னுடைய கையில் பட்டுப்புடவை அடங்கிய தட்டை தான் தரக்கூடாது என்று மறுத்து பேசி சங்கர பாண்டியனை விட்டு அவளிடம் எடுத்து தர சொன்னார்.

தட்டை அவன் கையில் இருந்து வாங்கும் பொழுது வேண்டுமென்றே அவன் விரல்கள் யாருக்கும் தெரியாமல் அவள் கைகளை உரச, நிமிர்ந்து உக்கிரத்துடன் ஒரு பார்வை பார்த்தாள் தாமரை.

உன்னோட பார்வைக்கு எல்லாம் அசருவேனா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டவன் யாரும் அறியாமல் அவளை பார்த்து குறும்புடன் கண் சிமிட்ட இவள் தான் பயத்தில் தலையை குனிந்து கொள்ள வேண்டியதாக போயிற்று.

புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவளுக்கு பின்னாலேயே வந்த அவனது பாட்டியின் குத்துகளுக்கு பயந்து மீண்டும் தயாராகி வர… எந்தவித சலசலப்பும் இன்றி பரிசம் போடும் நிகழ்வு இனிதே நடந்தேறியது.

வந்து இருந்த எல்லாருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க… அவளது அன்னையும், தந்தையும் அவர்களை கவனிக்க சென்று விட.. அவர்கள் எல்லாரும் கிளம்பி செல்லும் வரையிலும் அவளால் தன்னுடைய தாயிடமும் தந்தையிடமும் தனித்து பேச முடியவில்லை.

அதன் பின் சோர்ந்து போய் இருந்த அவளது பெற்றோர் மகளின் முகத்தை வைத்தே அவள் எதையோ பேச விரும்புவதை புரிந்து கொண்டு பரிவுடன் அவளின் தலை கோதி விசாரித்தனர்.

“என்னடாம்மா?”

“அப்பா.. இ.. இந்த கல்யாணம் வேண்டாம்ப்பா”

“என்ன விளையாடுறியா… பரிசம் போட்டுட்டு போற வரைக்கும் வாயில் கொளுகட்டையா வச்சு இருந்த… ஏற்கனவே அவங்க வீட்டில் வந்து கேட்டப்ப மேல படிக்கணும்னு சொன்ன… அந்த தம்பியும் ஒண்ணும் மறுப்பு சொல்லலை.. இப்போ தான் படிப்பு முடிஞ்சு போச்சே.. அப்புறம் என்ன?”

“இப்ப வேண்டாம்ப்பா…”

“சும்மா பித்து பிடிச்சு உளறாதே கழுதை… கல்யாணத்தை செஞ்சுக்கிட்டு உனக்கு வேண்டிய மட்டும் படிக்கலாம்ன்னு மாப்பிள்ளை சொல்லிட்டார். அதனால தேவை இல்லாம குழம்பாதே…. எனக்கு கை, கால் எல்லாம் அசந்து போச்சு” என்றவர் மனைவியின் புறம் திரும்பி கல்யாண வேலைகள் குறித்து பேசத் தொடங்கவும் அதன்பிறகு அவளால் அவரிடம் மறுத்து பேச முடியவில்லை. அவளும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள். பலன் என்னவோ சுழியம் (0) தான். அப்படி இப்படி என்று நாட்கள் கடக்க இதோ பெண் அழைப்புக்கு ஆட்களும் வந்தாகி விட்டது.

அவளது மறுப்பிற்கான உண்மை காரணம் யாருக்கும் தெரியவில்லை.அது அவள் மட்டுமே அறிந்த விஷயம்.எல்லாரும் அவள் படிப்பதற்காக திருமணத்தை தள்ளிப் போட நினைக்கிறாள் என்று எண்ணி அசிரத்தையாக இருக்க… அவள் மனமோ இருதலை கொள்ளி எறும்பாக அலை பாய்ந்தது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here