சஹாரா சாரல் பூத்ததோ 6

0
1273

அத்தியாயம் 6

நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்பி கோவிலுக்கு அழைத்து செல்லபட்டாள் தாமரை. இயல்பான சந்தன நிற மேனிக்கு அரக்கில் பார்டர் வைத்த பட்டுப்புடவையில் செப்புச்  சிலையென காட்சி அளித்தாள் தாமரை.

ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் கூடி இருந்தனர். எல்லாரின் முன்னிலையிலும் அமர வைக்கப்பட்டு இருக்க… கண்கள் அவளையும் அறியாமல் அவனைத் தேடத் தொடங்கியது. ஓரக்கண்ணால் சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு அவனது தரிசனம் மட்டும் கிடைத்த பாடில்லை.

எங்கோ தொலைவில் அவன் குரல் கேட்க தன்னையும் மீறி எழுந்த ஆவலுடன் பார்வையை உயர்த்திப் பார்க்க வாசல் புறமிருந்து காய்கறிகளை மூட்டை, மூட்டையாக உள்ளே வந்து கொண்டு இருக்க, அவர்களை வேலை ஏவியபடியே அவனும் ஒரு மூட்டையை சுமந்து கொண்டு வந்து சேர, அவனையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் தாமரை.

‘விடிஞ்சா கல்யாணம்… நிற்கிற கோலத்தைப் பார்… எஞ்சினுக்கு கரி அள்ளிப் போடுறவன் மாதிரி எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு இருந்தா எப்படி? கல்யாண மாப்பிள்ளைனா தனியா தெரிய வேண்டாமா?’ என்றெல்லாம் எண்ணியபடி அவனையே உறுத்துப் பார்க்க, அவளது குமட்டில் விழுந்த குத்தில் அவசரமாக முகத்தை ஒழுங்காக வைத்துக் கொண்டாள்.

“வீட்டில் இருந்து கிளம்புற வரை அம்புட்டு அட்டகாசம் செஞ்சுட்டு இங்கே வந்ததும் என் பேரனை வச்ச கண்ணு வாங்காம பார்க்கறியா? கண்ணை நோண்டிடுவேன்… ஒழுங்கா மரியாதையா தலையை குனிஞ்சு அடக்க ஒடுக்கமா உட்கார்… கல்யாணம் முடியற வரை உன்னை கட்டி மேய்க்கிறது ரொம்ப பெரிய வேலையா இருக்கும் போலவே” என்று செங்கமலம் கொஞ்சம் சத்தமாகவே கூற சுற்றி இருந்தோர் மத்தியில் இப்படி அவர் பேசவும் தாமரைக்கு கொஞ்சம் வெட்கமாகிப் போனது.

‘சே… இத்தனை பேர் இருக்கும் பொழுது இப்படியா இந்த கிழவி மானத்தை வாங்கும்.. இரு கிழவி வீட்டுக்கு வந்ததும் உனக்கு காபியில் உப்பு அள்ளி போடுறேன்’ என்று அவசர சபதம் ஒன்றை இயற்றியவள் அதன்பிறகும் மறந்தும் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து அவளை கோவிலுக்கு அருகில் இருந்த அவர்களின் பண்ணை வீட்டிலேயே  இரவு தங்க சொல்லி விட மற்ற உறவினர்கள் அனைவரும் உறங்கி விட, அவள் மட்டும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.

பெண்கள் எல்லாரும் உறங்கி இருக்க, ஆண்கள் ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் அலைந்து வேலை செய்து கொண்டு இருப்பது அவளுக்கு புரிந்தது. அந்த இருட்டு வேளையில் எல்லாரையும் விட சங்கர பாண்டியனின் குரல் ஓங்கி ஒலிக்க, அவசரமாக எழுந்து அமர்ந்தாள் தாமரை.

‘சுத்தம் இன்னும் தூங்கப் போகலையா… நாளைக்கு தாலி கட்டும் பொழுது மேடையில் தூங்கி விழலாம்ன்னு எண்ணம் போல’ என்று நினைத்தவள் ஓசை படாமல் எழுந்து மெல்ல குரல் கேட்ட திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

‘அப்படி என்ன தான் செய்கிறான்?’ என்ற எண்ணத்துடன் அவள் மெதுவாக எட்டிப் பார்க்க , அவனோ கொஞ்சம் கூட நிற்காமல் பம்பரமாய் சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“டேய் … காலையில் வந்து இருக்கிற எல்லாருக்கும் தாம்பூல பை கொடுக்கணும்.. தயாரா? காலையில் சமையலுக்கு தயிர் வேணும்… பாலை காய்ச்சி உறைக்கு ஊத்தி வைச்சிடுங்க… சமையலை சாப்பிட்டு ஒருத்தர் ஒரு குறை சொல்லிடக் கூடாது. அப்படி இருக்கணும் ருசி .வேற ஏதாவது சாமான் வேணும்னா சொல்லுங்க… அப்புறம் காலையில் மணமேடையில் தாலி கட்டப் போகும் பொழுது உப்பு இல்லை.. பருப்பு இல்லைன்னு சொல்லக் கூடாது.. நாளைக்கு பூரா நான் நகர முடியாது” என்று யாருக்கோ உத்தரவிட்டுக் கொண்டு இருந்தான் சங்கர பாண்டியன்.

அவர்களிடம் பேசி முடித்தவன் அப்படியே கொஞ்சம் தள்ளிப் போய் தூரத்தில் விறகுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த  இடத்திற்கு போனவன் அங்கு மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்த விறகுகளில் இருந்து சிலபலவற்றை அனாயாசமாக தூக்கி தோளில் வைத்து அடுப்புக்கு அருகில் கொண்டு வந்து போடத் தொடங்கினான்.

ராட்சசன் போல எல்லா வேலைகளையும் நிமிடத்தில் அவன் செய்து கொண்டு இருக்க… அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் தாமரை.

“டேய்… மிச்ச வேலையை நீங்க பாருங்க… நான் போய் கொஞ்ச நேரம் தூங்கறேன். அடுப்பை ராத்திரியே பத்த வச்சிடாதீங்க… விடியற்காலை நாலு மணிக்கு சாமி கும்பிட்ட பிறகு சமைக்க ஆரம்பிச்சா போதும். அதுக்குள்ள காய்கறி எல்லாம் வெட்டி தயாரா வச்சுக்கங்க” என்றவன் வேகமாக அவள் இருக்கும் திசைப்பக்கம் வர அரண்டு போனாள் தாமரை.

‘இவன் என்ன இந்தப் பக்கம் வர்றான்” என்று எண்ணியவள் அவசரமாக இருட்டில் மறைந்து நின்று கொள்ள… சில நிமிடங்கள் கழித்து எந்த சத்தமும் இல்லாததால் அங்கிருந்து நகர முயன்றவளை இரு வலிய கரங்கள் பின்னிருந்து அணைத்தன.

பயத்தில் அலறப் போனவளின் வாயை ஒரு கையால் மூடியபடி அவள் காதோரம் மெல்ல முணுமுணுத்தது சங்கர பாண்டியனே தான்.

“தூங்காம இந்த நேரத்தில் எதுக்கு ஒளிஞ்சு நின்னு என்னைப் பார்த்துக்கிட்டு இருக்க ராசாத்தி?” என்றான் சரசமாக…

ஏற்கனவே அவன் திடீரென்று அப்படி நடந்து கொண்டதில் பயந்து போய் இருந்தவள் அவனது பேச்சை கேட்டதும் கோபம் சுள்ளென்று ஏறத் தொடங்கியது.

“ஆமா… இவரு பெரிய மன்மதன் இவரை ஒளிஞ்சு நின்னு ரசிச்சு பார்த்தாங்க… ராத்திரியில் தூங்க விடாம செஞ்சுட்டு பேச்சைப் பாரு”

“நான் ஒண்ணுமே செய்யலையே தாமரை… உன்னை தூங்க விடாம செய்ற வேலை எல்லாம் நாளையில் இருந்து தான் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்” என்றான் அவன் அவளை சீண்டும் விதமாக…

“பேசுற பேச்சைப் பாரு…  ராத்திரி தூங்குற நேரத்தில் இப்படி அண்டாவையும், குண்டாவையும் உருட்டினா நாங்க எப்படி அமைதியா தூங்குறதாம்?”

“ஓ.. உன்னோட தூக்கத்தை கெடுத்துட்டேனா… கல்யாண வேலை எல்லாத்தையும் ஒத்தையா நானே நின்னு பார்க்கிறேன் மா.. அதான்.. இனி சத்தம் இருக்காது.. நீ போய் தூங்கு.. காலையில் நேரமா எழுப்பி விடுவாங்க”

“என்னை சொல்லிட்டு நீங்க மறுபடி மரத்தை வெட்ட கிளம்பிடாதீங்க… போய் ஒழுங்கா தூங்குங்க” என்றாள் மிரட்டலாக…

அவளது உரிமையான கோபத்தை ரசித்தவன் கைகள் இரண்டையும் கட்டி அவள் முன்னே பவ்யமாக நின்று கொண்டு பேச ஆரம்பித்தான்.

“உத்தரவு மகாராணி” என்றவனின் குரலில் இருந்த கேலியில் கோபம் வரவும் வேகமாக அங்கிருந்து நகர முயல…. அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது அவள் அவன் பிடியில் இருப்பது.

“நான் போகணும் விடுங்க…”

“கல்யாணத்துக்கு முதல்நாள் தனியா மாட்டி இருக்க.. உன்னை சும்மா விட்டா நாளைக்கு வரலாறு என்னைப் பத்தி தப்பா பேசாது” என்று சொல்லிக் கொண்டே அவளது முகம் நோக்கி அவன் குனிய வேகமாக அவனை தள்ளி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள் தாமரை.

பின்னாலேயே அவனது சிரிப்பு சத்தம் அவளை துரத்தி வருவது போல பிரமை ஏற்பட… போர்வையை முகம் வரை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கி விட்டாள் தாமரை.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here