சஹாரா சாரல் பூத்ததோ 7

0
1420

அத்தியாயம் 7

விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி சுபயோக சுப நேரத்தில் சங்கர பாண்டியன், தாமரையின் திருமணம் இனிதே நடந்தேறியது. நினைத்ததை சாதித்து முடித்து விட்ட திருப்தியுடன் முகம் எங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க எல்லா சடங்குகளிலும் பங்கேற்றான் சங்கர பாண்டியன்.

எதேச்சையாக திரும்பி அருகில் இருப்பவளின் முகத்தைப் பார்க்க, அதில் ஏதோ இனம்புரியாத ஒரு வருத்தம் இருப்பதைக் காணவும் அவன் மனம் துணுக்குற்றது.

‘ஏன் இவ இப்படி இருக்கா?’ என்று எண்ணியவன் மற்றவர் அறியாமல் அவள் கையை லேசாக அழுத்த, அவனை நிமிர்ந்து பார்த்தாள் தாமரை.

‘என்ன ஆச்சு?’ என்று கண்களால் அவன் கேட்க.. சட்டென முகம் மலர்ந்தது அவளுக்கு.

‘ஒன்றுமில்லை’ என்று தலையை அசைக்க  அவனும் அதற்கு மேல் அவளை கேள்வி கேட்டு குடையவில்லை.

‘அசதியாக இருக்கும்’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

‘எப்படியாவது அவனிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கி விட வேண்டும்’ என்று எண்ணினாள் தாமரை.

கிராமத்தில் நடக்கும் திருமணத்திற்கு கேலிக்கு பஞ்சமா என்ன? ஆண்களை விட பெண்கள் பேசிய கேலிப் பேச்சில் அவளது முகம் சிவந்து விட சங்கர பாண்டியனும் அவளது முகச் சிவப்பை வைத்த கண் வாங்காமல் ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

வெகுநேரம் கழித்தே தாமரை உணர்ந்தாள் அங்கே அவனது பாட்டி செங்கமலம் இல்லாததை…

சாப்பிட்டு முடித்து கை கழுவும் இடத்தில் மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் மென்குரலில் அவள் விசாரிக்க அவன் முகம் முழுவதுமாக மலர்ந்தது விட்டது.

“உங்க பாட்டி எங்கே ஆளையே காணோம்”

“சபையில் நிற்க சங்கடப்பட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“அவங்க சொன்னா.. நீங்க விட்டுடுவீங்களா?”

“தாத்தா  இறந்ததில் இருந்து அவங்க அப்படித் தான் இருக்காங்க தாமரை”

“மத்த நாளும் இன்னைக்கும் ஒரே மாதிரியா.. வீட்டு பெரியவங்க அவங்க ஆசிர்வாதம் நமக்கு முக்கியம் இல்லையா?” என்று உரிமையாய் அவள் சாட அவனோ கனிவான முகத்துடன் அவளை நோக்கினான்.

“இத்தனை நாள் நான் சொல்லிப் பார்த்துட்டேன்… கேட்கலை… நீ வேணா சொல்லிப் பாரு” என்று அவன் பொறுப்பை அவள் புறம் தள்ள .. அவள் வேகமாக தலையை ஆட்டினாள். அந்த நொடி சங்கர பாண்டியனுக்கு அவளை இன்னும் கூடுதலாக பிடித்துப் போய் விட… அருகில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டவன் அவசரமாக ஒரு முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்து விட்டு ஒன்றுமறியாதவன் போல முன்னே சென்று விட தாமரையை வெட்கம் சூழ்ந்து கொண்டது.

‘திருடன்… என்ன வேலை செய்றான் பாரு.. யாரவது பார்த்து இருந்தால் என்ன ஆகுறது?’ என்று அவனை செல்லமாக திட்டிக்கொண்டே அவள் அவனை பின்தொடர… சங்கர பாண்டியனோ மிகவும் உல்லாசமான மனநிலையில் இருந்தான்.

திருமணம் முடிந்ததும் எல்லாரும் கிளம்பி அவனது வீட்டிற்கு செல்ல முற்பட தாமரையின் முகம் பயத்தில் வெளிறத் தொடங்கியது. அதை கவனித்து விட்ட  சங்கர பாண்டியன் என்ன என்று கேட்க…

பயந்து கொண்டே அவனுக்கு பதில் சொன்னாள் தாமரை.

“எங்க வீட்டுக்கு போகலாமே… எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு” என்று அவள் சொல்ல அவளை கனிவுடன் பார்த்தான் சங்கர பாண்டியன்.

‘புது இடத்திற்கு வர பயப்படுறா போல’ என்று எண்ணியவன் அவனது பாட்டியை நேரடியாக அவளது வீட்டிற்கு வர சொல்லி விட்டு நேராக தாமரையின் வீட்டுக்கே செல்வது என்று முடிவு செய்தான்.

“அதெப்படி கல்யாணம் முடிஞ்சதும் நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போறது தானே முறை” என்று கூட்டத்தில் சிலர் முணுமுணுக்க …சங்கர பாண்டியன் முறைத்த முறைப்பில் அவர்கள் கப்பென்று வாயை மூடிக் கொள்ள தாமரைக்கு சந்தோசமாக இருந்தது.

‘ஒத்தைப் பார்வையில் ஊரையே அடக்கிடுவார் போல’ குறைபட்டுக் கொள்வது போல கணவனின் ஆளுமையை எண்ணி பெருமை கொண்டாள் தாமரை.

மனைவியின் பார்வை மாற்றத்தை கண்டுகொண்ட சங்கர பாண்டியன் கண்களில் மின்னல் தெறிக்க அவளை ஆவலுடன் பார்த்தவாறே அவளை நெருங்கினான். அவனது பார்வையின் வேகம் தாங்க முடியாமல் அங்கே இருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள் தாமரை.

மனம் முழுக்க சந்தோஷத்தில் மிதந்தது அவளுக்கு… ஊரையே அடக்கி ஆளும் கணவன் தன்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்கிறான் என்பதில் அவளுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சி அல்ல நிம்மதி. இவனை எப்படியும் மாற்றி விடலாம் என்று நினைத்தாள் தாமரை. ஆனால் அது அத்தனை சுலபமானது இல்லை என்பது அவளுக்கு புரியவில்லை.

ஆரத்தி எடுத்து தாமரையும், சங்கர பாண்டியனும் அவளது வீட்டிற்கு அழைத்து வரப்பட… அங்கே வீட்டுக் கூடத்தில் எல்லாரையும் வேலை ஏவிக் கொண்டிருந்த செங்கமலம் கண்ணில் பட்டார். கணவன் உடன் வருகிறானா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவள் வேகமாக அவரின் முன்னே போய் நிற்க, அவரோ கேள்வியாக பார்த்தார்.

“இங்கே என்ன செய்றீங்க?” என்றாள் அதட்டலாக…

“ம்… சட்டி பானை செய்யுறேன்.. கேட்கிறா பாரு கேள்வி.. கல்யாண வீடுன்னா ஆயிரம் வேலை இருக்கும்… அதை எல்லாம் யார் பார்க்கிறது?”

“அது எங்களுக்கும் தெரியும்… எங்களை ஆசிர்வாதம் செய்யக் கூட உங்களுக்கு நேரமில்லையா?” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கேள்வி கேட்டவளை சங்கர பாண்டியனின் விழிகள் சுவாரஸ்யத்துடன் அளவிட்டன.

“என்னடி கழுத்தில் தாலி ஏறினதும் என்னையே கேள்வி கேட்கறியா? அம்புட்டு தைரியம் யாரு கொடுத்தது உனக்கு? எனக்கு மண்டபத்துக்கு வரணும்னு தோணினா வருவேன்.. இல்லேன்னா வர மாட்டேன். அதை எல்லாம் நீ ஏன்டி கேட்கிற?”

“இனிமே நான் தான் கேட்பேன்… உங்க பேரன் கையால தொங்கத் தொங்க தாலி வாங்கி இருக்கேன். நான் கேட்காம எதிர் வீட்டுக்காரியா கேட்பா?”

“நேத்து வரை பிள்ளை பூச்சி மாதிரி இருந்துட்டு இப்ப இந்த பேச்சு பேசறியா? வாயை மூடிக்கிட்டு போய்… புதுப்பொண்ணா அடக்கமா உட்காரு”

“அதுக்கு வேற ஆளைப் பாரு கிழவி” என்று வேண்டுமென்றே குனிந்து மற்றவர் கேட்காதவண்ணம் முணுமுணுக்க… செங்கமலம் ஒரு நிமிடம் அயர்ந்தே போனார்,

“அடேய்! சங்கரா… பொண்ணு ரொம்ப அமைதியா இருக்கான்னு நினைச்சு தானே உனக்கு கட்டி வச்சேன். இவ என்னடான்னா இந்த வாய் அடிக்கறாளே… பொண்ணை மாத்தி எதுவும் தாலி கட்டிட்டியா பேராண்டி”

சங்கர பாண்டியன் எதுவுமே பேசவில்லை. மௌனமாக முகத்தில் குறுஞ்சிரிப்புடன் நடப்பவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“அங்கே என்ன கேள்வி? என்கிட்டே பேசுங்க”

“என்னடி செய்யணும்னு சொல்ற… தாலி கட்டின உடனே என்னையே அதிகாரம் செய்றியா?”

“பின்னே… பார்த்துகிட்டே இரு கிழவி… இரண்டே நாளில் உன்னை அந்த வீட்டில் ஒரு ஓரமா ஒதுக்கி வைக்கிறேனா இல்லையா பாரு… மிச்சம் இருக்கிற காலம் பூரா நீ மூலையில் அடங்கித் தான் உட்கார்ந்து ஆகணும்”

“நான் எதுக்குடி மூலையில் அடங்கி உட்காரணும்? அதுக்கு வேற ஆளைப் பாரு”

“ஆசீர்வாதம் செய்யவே வரக் காணோம்..இதுல பேச்சைப் பாரு”

“என்னடி வாய் ரொம்ப நீளுது… வீட்டுக்கு வா… வாயிலேயே சூடு வைக்கிறேன்”

“ஆமாமா.. நீங்க வைக்கிற வரை நான் சும்மா இருப்பேனா…” என்று அவளும் மல்லுக்கட்ட உறவினர்கள் அனைவரும் இவர்களின் சண்டையை சுவாரசியமாக  வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.

இவர்களின் பேச்சு எந்த அளவிற்கு நீண்டு இருக்குமோ தெரியாது. மூச்சிறைக்க அங்கே ஓடி வந்த செல்லம்மாவை பார்த்ததும் தான் தாமரை கொஞ்சம் அமைதியானாள்.

“ஏன்டி தாமரை.. என்ன இங்கே சத்தம்? புதுபொண்ணா லட்சணமா வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்டியா?” என்று தாயார் கடிந்து கொள்ள, முகத்தை சட்டென்று பாவமாக வைத்துக் கொண்டாள் தாமரை.

“இல்லம்மா… ஆசீர்வாதம் செய்யாம வந்துட்டாங்க.. அதான்” என்று அவள் தயக்கத்துடன் இழுக்க… செங்கமலத்தின் மனம் நிம்மதியானாலும் செல்லம்மாவால் அப்படி நினைக்க முடியவில்லை. திருமணம் முடிந்த உடனே இப்படி வாய் துடுக்காக பேசினால் யார் தான் பொறுத்துக் கொள்வார்கள். என்ற நினைவுடன் மகளை கண்டிப்புடன் பார்த்தார் செல்லம்மா…

“என்ன தாமரை? இப்படியா நடந்துக்கிறது? எல்லாரும் என்ன நினைப்பாங்க?”

“இல்லம்மா… சும்மா விளையாட்டுக்கு.”

“என்ன விளையாட்டுக்கு?” என்று தாய் அதட்டவும் அவள் கண்களில் தவிப்பை காணவும் பொறுக்க மாட்டாமல் சங்கரபாண்டியன் எழுந்து வந்தான்.

“அத்தை அவ சும்மா விளையாட்டுக்கு தான் பேசினா.. நீங்க ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படறீங்க”

“இல்லை மாப்பிள்ளை … அது வந்து” என்று தயக்கத்துடன் இழுத்தவரின் பார்வை அவனது பாட்டியின் மீது படிந்தது.

திருமணமாகி வந்த அன்றே தன்னுடைய மகள் அந்த வீட்டின் மூத்தப் பெண்மணியிடம் வம்பு வளர்த்தால் எந்த தாய் தான் பொறுத்துக் கொள்வார். இதனால் மகளின் வாழ்வில் சிக்கல் வந்து விடுமோ என்று அவர் அஞ்ச… அதை புரிந்து கொண்டான் சங்கரபாண்டியன்.

“ஏன்டா… வந்த அன்னைக்கே என்னை இந்த பேச்சு பேசுறா உன் பொண்டாட்டி… பார்த்துக்கிட்டு சும்மா இருக்க… அவளுக்கு பரிஞ்சுக்கிட்டு வந்து வேற பேசுற…” என்று தன்னுடைய கோபத்தை பேரனின் பக்கம் திருப்ப… செல்லம்மா தவித்துப் போனார்.

‘வந்த முதல் நாளே சண்டையை இழுத்து விட்டுட்டாளே’ என்று மகளை ஆத்திரத்துடன் பார்க்க, சங்கரபாண்டியனோ இயல்பாக பேசி பிரச்சினையை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டான்.

“அட… அப்பத்தா… இதுக்கெல்லாம் சீரியஸ் ஆகலாமா? கல்யாண மண்டபத்தில் உங்ககிட்டே தான் முதலில் ஆசிர்வாதம் வாங்கணும்னு துடியா துடிச்சா… ஆனா நீங்க அங்கே இல்லையா… அதுதான்”

“யாரு இவளா?” முகவாயில் கை வைத்து தாமரையை அவர் ஏற இறங்க பார்த்த விதம் அவரது நம்பிக்கையின்மையை காட்ட…

“ஆமா பாட்டி… என்கிட்டே இப்ப தான் சொன்னா… வீட்டுக்கு மூத்தவங்க… எத்தனை தலைமுறை பார்த்தவங்க.. அவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கினா தான் நம்ம வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு என்கிட்டே சொன்னா பாட்டி” என்று சரடு திரித்தான் சங்கர பாண்டியன்.

‘இதெல்லாம் நான் எப்ப சொன்னேன்?’ என்று தாமரை யோசனையில் மூழ்க… நைசாக அவளின் கையைப் பற்றி செங்கமலத்தின் கால்களில் விழுந்தவன், மற்றவர் அறியாமல் அவளை இழுத்துக் கொண்டு வந்து விட்டான் சங்கரபாண்டியன்.

“இதோ பாரு தாமரை உன்னோட துடுக்குத்தனத்தை எல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோ.. அதுவும் அப்பத்தா முன்னாடி…. ரொம்ப குறைச்சுக்கோ…” என்று அவன் பாடம் எடுக்கத் தொடங்க… அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“இத பாருங்க… காலையில் சீக்கிரமா எழுந்துட்டேன்…. நேத்து நைட்டும் சரியா தூங்கல… இப்ப எனக்கு கிளாஸ் எல்லாம் எடுக்காதீங்க.. எதுவும் மண்டையில் நிற்காது. என்னை கொஞ்சம் விட்டீங்கன்னா தனியா போய் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு வந்துடுவேன்….” என்றாள் கெஞ்சுதலாக

அவள் தலையை ஒற்றைப் பக்கமாக சாய்த்து குருவி போல கேட்ட விதத்தில் தன்னை இழந்தான் சங்கரபாண்டியன். ஆனால் சுற்றிலும் சொந்தங்கள் சூழ்ந்து இருக்க, அவளையே பருகியபடி அவன் அனுப்பி வைக்க, சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாமல் வேகமாக ஓடி விட்டாள் தாமரை.

மற்ற சடங்குகள் முடிந்தவுடன் இருவரையும் உறங்க சொல்லி அனுப்பி விட இருவரும் இனி தங்கள் வாழ்நாளில் நடக்கப் போகும் இனிமையான விஷயங்களை எண்ணி கனவு கண்டபடியே உறங்க… விதியின் கணக்கோ வேறாக இருந்தது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here