சஹாரா சாரல் பூத்ததோ 9

0
1291

காலையில் உணவு சாப்பிட வந்த பொழுது கணவன், மனைவி இருவருக்குள்ளும் நடந்த செல்ல சீண்டல்களையும் பெரியவர்கள் கண்டும் காணாமல் நகர்ந்து விட… யாரும் அருகில் இல்லாத தைரியத்தில் மனைவியின் மீது அதிகமாக ஈஷியபடியே உணவை உண்டு முடித்தான் சங்கரபாண்டியன்.

வீட்டுப் பெரியவர்கள் அனைவருக்கும் அவர்களது இந்த சீண்டல்கள் ரொம்பவும் பிடித்து இருந்தது. தாமரை திருமணம் முடியும் வரை ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்ததை அவளது தாயும், தந்தையும் உணர்ந்தே இருந்தார்கள். திருமணம் முடிந்த பிறகு ஒழுங்காக இருப்பாளா அல்லது சண்டை வளர்த்து வைப்பாளோ என்ற பயம் அவர்களுக்கு இருந்து கொண்டே இருந்தது. கல்யாணம் முடியும் வரையிலும் இருந்த அவர்களது பயம்… வீட்டிற்கு வந்ததும் செங்கமலத்திடம் அவள் வம்பு இழுத்த விதத்தில் அவர்களின் பயம் மேலும் உறுதியாகியது.

முதலிரவு அறைக்குள் அவளை அனுப்பி வைத்த பின்பும் கூட செல்லம்மாவிற்கு உள்ளுக்குள் பயம் இருந்து கொண்டே இருந்தது. காலையில் நாணச் சிகப்புடன் தாயை எதிர்கொண்ட மகளின் முகம் அவளது மனதை உணர்த்தி விட அப்பொழுது தான் அவருக்கு மூச்சே வந்தது.

இப்பொழுது மகள் கணவனுடன் வாழ்வதைப் பார்த்ததும் அவர்களுக்கு சந்தோசம் மேலும் அதிகமாகியது. உணவை உண்டதும் தாயின் வற்புறுத்தலால் கணவனை நாடி அறைக்குள் வந்தவள் அடுத்த நொடி அவனது இறுகிய அணைப்புக்குள் இருந்தாள் தாமரை.

“அச்சோ விடுங்க… உடம்பெல்லாம் வலிக்குது” என்று பொய்யாய் சிணுங்க ஒரு நிமிடம் தயங்கியவன் அவளது முகத்தை உற்றுப் பார்க்க அவளது கள்ளத்தனம் நிறைந்த பார்வை அவளை மனதை அவனுக்கு சொல்லிவிட… நொடியில் குறும்புத்தனத்துக்கு மாறி விட்டான்.

“உடம்பு தானே வலிக்குது… நானே உனக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்… ஒத்தடம் கையால் வேணுமா? உதட்டால் வேணுமா?” என்று கேட்டபடியே அவளை நெருங்கியவன் அறை முழுக்க அவளது சிணுங்கல்களால் நிரப்பினான்.

எத்தனை முறை பேசியும் அவனுக்கு பேச்சு ஓயவில்லை. மனைவியை விட்டு ஒரு நொடி கூடப் பிரியாமல் அவளது புடவை முந்தானையைப் பிடித்துக் கொண்டே சுற்றினான். அன்று முழுக்க அவளது அறையை விட்டு வெளியேறவே அவன் அனுமதிக்கவில்லை. வெளியே போய் மற்றவர் முகத்தில் விழிக்கக்கூட அவளுக்கு வெட்கமாக இருந்தது. இருபத்து நாலு மணி நேரமும் மனைவியை ஒட்டியபடியே இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.

அந்த வெட்கம் எல்லாம் அவளுக்கு மட்டும் தான். அவனுக்கு அதெல்லாம் இல்லை. இருபத்திநாலு மணி நேரமும் அவளை கொண்டாடினான். ஒரு மனிதன் இத்தனை தூரம் தன்னை நேசிக்க முடியுமா என்று அசந்து போனாள் தாமரை. அவனது மூச்சுக் காற்றிலும் தன் மீதான காதலை உணர்ந்து கொண்டாள். அவள் மனம் கர்வம் கொண்டது.

‘நான் பயந்தது போல விஷயம் ஒன்றும் அத்தனை கடினமானதாக இருக்காது போல… எப்படியும் இவனிடம் பேசி தன்னுடைய மனதை புரிய வைத்து விடலாம்’ என்ற நம்பிக்கை தோன்றவே மன கிலேசங்கள் எதுவுமின்றி முழுமனதுடன் கணவனுடன் அவளை ஒண்ட செய்ய … அவளின் அந்த இணக்கம் அவனை மேலும் பித்தாக்கியது.

இரவுப் பொழுதில் கூடல் முடிந்த பின் களைத்துப் போய் கிடந்த மனைவியை அள்ளி தன்னுடைய நெஞ்சில் போட்டுக் கொண்டவன் எப்பொழுதும் போல கதைகளை பேச.. அவனிடம் பேச இது தான் சரியான தருணம் என்று எண்ணி ஏற்கனவே தயார் படுத்தி வைத்திருந்த வார்த்தைகளை கோர்வையாக அவனிடம் சொல்லி விட்டாள்.

“என்னங்க… எனக்கு ஒரு ஆசை சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?”

“சொல்லுடா ராசாத்தி…. உன்கிட்டே போய் நான் கோபப்படுவேனா” என்றான் அவளது நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டபடி…

“வந்து…”

“ம்ம்ம்… சொல்லு ராசாத்தி”

“தப்பா எடுத்துக்காதீங்க.. என்னோட கூடப் படிச்ச சில பொண்ணுங்களுக்கு எனக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிடுச்சு… அவங்க எல்லாம் புருஷனோட ஒரு வாரம் வெளியூர் போய் தங்கிட்டு வருவாங்க… இந்த ஹனிமூன்னு சொல்வாங்களே… அது தான்… நாமளும் அது மாதிரி கிளம்பிப் போகலாமா” எங்கே  திட்டி விடுவானோ என்று பயந்து பயந்து சொன்னவள் அவனது அமைதியான பாவனையில் அரண்டு போய் விட்டாள்.

‘அய்யய்யோ.. இவர் என்ன இதுக்கே இப்படி யோசிக்கிறார்.. அப்புறம் என்னோட பிளான் எல்லாம் என்ன ஆகுறது?’ என்ற ரீதியில் முகம் சிணுங்க அவளது கன்னத்தை தட்டி இயல்புக்கு கொண்டு வந்தான் சங்கரபாண்டியன்.

“உன்னோட பிரண்ட்ஸ் எல்லாம் எந்த ஊருக்கு போனாங்க”

“அவங்க..ஊட்டி, கொடைக்கானல் போனாங்க” என்று சொல்லும் பொழுது அவளையும் அறியாமல் அவள் முகத்தில் மெல்லியதாக பொறாமை உணர்வு வந்து போனதை குறித்துக் கொண்டான்.

“ம்ம்ம்… எத்தனை நாள் போய் இருப்பாங்க”

“அது ஒரு வாரம் வரைக்கும் இருந்துட்டு வந்தாங்க” என்றாள் சன்னமான குரலில்.. அவன் விசாரித்த தோரணையிலேயே நம்பிக்கை விட்டுப்  போனது. இவன் நிச்சயம் நம்மை அழைத்து போக மாட்டான் என்று…

“சரி ராசாத்தி … உன் இஷ்டப்படியே போகலாம்… ஒண்ணு இல்லே… இரண்டு வாரம் போய்ட்டு வரலாம். கேரளா உனக்கு பிடிக்கும் தானே” என்று அவன் கேட்ட கேள்வியில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றாள் அவள்…

“ஐ…. கேரளா.. நான் இதுவரைக்கும் வெளியூர் எங்கேயும் போனதில்லை… என்னோட பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் பெருமையா சொல்லிப்பேன்” என்று சின்னக் குழந்தை போல குதித்த மனைவியைக் கண்டு ரசித்தான் அவன்.

“நீ கேட்டதை நான் செஞ்சுட்டேன் ராசாத்தி… மாமாவுக்கு எதுவும் பரிசு இல்லையா?” என்றவனின் தாபம் நிறைந்த பார்வை அவனது தேவையை சொல்லாமல் சொல்ல…. விருப்பத்துடன் அவனது கழுத்தில் மாலையாகி கொண்டவள் அவனது விருப்பத்திற்கு வளைந்து கொடுத்தாள்.

சும்மாவே அவள் மீது பித்தாக இருந்தவன் அவள் காட்டிய நெருக்கத்தில் கள்ளுண்ட வண்டாக மாறிப் போனான்.

கணவனின் தேவையை நிறைவேற்றிய பின் எப்பொழுதும் போல அவன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கியவளின் முகத்தில் நிம்மதி இருந்தது.

‘தான் எண்ணி வந்த காரியம் மிக சுலபமாக நடந்து விடும் போல இருக்கிறதே ’என்ற மகிழ்ச்சியுடன் உறங்கியும் போனாள். அவளது கணவனின் உண்மை சொரூபம் தெரியாமல்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here