சஹாரா சாரல் பூத்ததோ Final

0
1668

ஏற்கனவே டாக்டர் மூலம் அவளது பிரசவம் சிக்கலாக இருக்கும் என்ற விஷயம் தெரிய வந்ததில் இருந்தே பயந்து கொண்டு இருந்தான். இப்பொழுது இப்படி ஒரு சம்பவம்.. அதுவும் அவனது வீட்டில் வைத்து… ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதன் பிறகு அவள் சுத்தமாக இந்த வீட்டை வெறுத்து விடுவாளே என்று எண்ணி அஞ்சியவன் ஊரில் உள்ள எல்லா கடவுளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இருந்தான்.

அவனை அதிகம் சோதிக்காமல் சீக்கிரமே குழந்தையின் அழுகுரல் அவனை ஈர்த்தது.

‘என்னோட குழந்தை’ அவன் உடலில் உள்ள ஒவ்வொரு நாடி நரம்பிலும் புதிதாக ரத்தம் பாய்ந்தது போன்ற உணர்வு.

தாமரையை உடனடியாக பார்க்க வேண்டும் என்று அவன் உடல் பரபரக்க… மருத்துவரும் நர்ஸ்சும் வெளியே வந்தார்கள்.

‘ரொம்ப காம்பிளிகேட் ஆகும்னு நினைச்சேன். பட் … கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா நடந்துடுச்சு… அம்மாவும் பொண்ணும் ,நல்லா இருக்காங்க… நீங்க போய் பாருங்க” என்று சொன்னவர் நகர்ந்து விட நர்சின் கைகளில் துவாலைக்குள் சுருண்டு கிடந்த அந்த சிறிய உருவத்தைப் பார்த்ததும் அவனுக்கு கண்கள் நிறைந்து போனது.

உருவத்தில் அப்படியே அவனையே உரித்து வைத்த மாதிரி இருந்தாள் அந்த சின்ன தேவதை… மகளை வாங்கி கொஞ்சியவன் வீட்டுக்குள் வேகமாக நுழைந்த மாமனாரையும், மாமியாரையும் ,அப்பத்தாவையும் பார்த்தவன் குழந்தையை அவர்களிடம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான்.

எல்லாரும் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்க… சங்கரபாண்டியன் மட்டும் மனைவியைத் தேடிப் போனான். சோர்ந்து போய் படுத்து இருந்தவளின் அருகில் அமர்ந்தவன் அவளின் நெற்றியில் கலைந்து இருந்த கேசத்தை ஒதுக்கி விட்டு அவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

“எனக்கு என்ன சொல்லன்னே தெரியல ராசாத்தி… குழந்தை அப்படியே என்னை மாதிரியே இருக்கா… ஆனா வாய் மட்டும் உன்னை மாதிரி குருவி வாய்… குட்டியா அழகா இருக்குடி” என்று சொல்லிக் கொண்டே போக அசதியாக இருந்தவள் லேசாக சிரித்து வைத்தாள்.

“ஏன்டி யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்த?” என்றான் சட்டென்று…

“சொல்லாமலா… வீட்டில் இங்கே போறேன்னு எழுதி வச்சுட்டுத் தானே வந்தேன்”

“என்னது எழுதி வச்சியா? எங்கே வச்ச?”

“டேபிளில்…”

“அங்கே எந்த பேப்பரும் இல்ல… உன்னை காணாம எல்லாரும் தவிச்சு போய்ட்டோம்… எதுக்குடி இங்கே கிளம்பி வந்த… இந்த வீட்டைத் தான் உனக்கு பிடிக்காதே” என்றவனின் குரலில் இருந்த வருத்தம் அவளுக்கு புரியத் தான் செய்தது.

“இப்போ தான் புத்தி தெளிஞ்சது” என்றவள் அன்னையுடன் நடந்த தன்னுடைய உரையாடலை தெரிவிக்க சங்கரபாண்டியனின் முகம் பிரகாசமானது.

“அப்படின்னா இப்போ இந்த வீட்டை பார்த்தா உனக்கு பயமா இல்லையா?”

“வீட்டுக்குள் காலடி எடுத்து வச்ச உடனேயே என்னுடைய குழந்தையை பத்திரமா எனக்கு கொடுத்து இருக்கு இந்த வீடு… இந்த வீட்டை வெறுக்கிறதா? வாய்ப்பே இல்லை” என்று சொன்னவனை மூச்சு முட்ட இழுத்து முத்தமிட்டான் சங்கரபாண்டியன்.

அவன் மனதில் இருந்த பேரும் பாரம் இறங்கியது போல ஒரு உணர்வு.

“அப்படின்னா இனி இந்த வீட்டிலேயே இருப்ப தானே தாமரை… உனக்கு பயம் இல்லையே?”

“பயமா எனக்கா? நான் யார் தெரியுமா? சங்கரபாண்டியன் பொண்டாட்டி… அவரைப் பார்த்தா ஊரே நடுங்கும் தெரியுமா?” என்றாள் கண்களில் சிரிப்புடன்.

“ஆனா அவன் உன்னைப் பார்த்து நடுங்குறானாமே” என்று அவளை வாறத் தொடங்கினான்.

“உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எங்களுக்குத் தான் பயமா இருக்கு இப்ப” என்று டைமிங்கில் பேசியபடி உள்ளே வந்தார் செங்கமலம்.

“என்னடி வாயாடி… இந்த வீட்டுப் பக்கமே வர மாட்டேன்னு சொன்ன… இப்ப என்னடான்னா இங்கேயே வந்து பிள்ளையை பெத்துக்கிட்ட”

“அப்போ எனக்கு இந்த வீடு சஹாரா பாலைவனம் மாதிரி இருந்துச்சு… அதான் அப்படி சொன்னேன்”

“இப்போ…”

“இப்போ சிவாஜி படத்தில் வர்ற மாதிரி சஹாரா சாரல் பூத்ததோன்னு நானும் என்னோட புருசனும் டூயட் ஆடப் போறோம். போதுமா”

“பச்சை உடம்புக்காரி மாதிரியா பேசுற” என்று அவர் மோவாயில் கை வைத்து அதிசயிக்க… அந்த நேரம் பார்த்து அவர்களின் செல்ல தேவதை அழத் தொடங்கினாள். தானும் அங்கே இருப்பதை நினைவுறுத்த… குழந்தையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு எல்லாரும் வெளியேற… சங்கரபாண்டியன் வெளியேற மறுத்து பிடிவாதமாய் அங்கேயே அமர்ந்து இருக்க அவளுக்கு கூச்சமாகிப் போனது.

“குழந்தை அழறா”

‘அப்படியா’ என்று ஒரு பார்வை அவன் பார்த்து வைக்க அவள் முகம் சிவந்து போனது.

“வெளியே போங்க…” என்று அவள் கூற தலை அசைத்து மறுத்தான் அவன்.

“மாசக் கணக்கில் என்னை காய விட்ட இல்ல… உனக்கு இனி இருக்கு கச்சேரி” என்றவனின் பார்வை சொன்ன சேதி பாவை அவளுக்கு புரியாதா என்ன?

“மாமா… ப்ளீஸ்!” என்று அவள் சிணுங்க அதற்கு மேலும் அவளை சோதிக்காமல் அறையை விட்டு வெளியேறியவன் போகும் முன் அவளைப் பார்த்து குறும்புடன் கண் சிமிட்டவும் மறக்கவில்லை.

எத்தனை அருமையான வாழ்க்கையை கடவுள் தனக்கு கொடுத்து இருக்கிறார். தன்னுடைய மடத் தனத்தினால் அதை இழந்து விட இருந்தேனே என்று எண்ணி வருந்தியவள் இனி எங்கள் வாழ்வில் என்றும் இனிமை மட்டுமே நிறைந்திருக்க ஆசீர்வாதம் செய் இறைவா என்று வேண்டிக்கொள்ள… தூரத்தில் கோவிலின் மணியோசை கேட்டது அவளுக்கு.

இனி அந்த வீட்டைப் பார்க்கும் பொழுது அவளுக்கு பயம் வராது…. தன்னுடைய வாழ்க்கையை முன்பை விட அதிக காதலுடன் அந்த வீட்டில் வாழப் போவதை உறுதியாக நம்பினாள் தாமரை. அவனது கணவன் அவன் மீது காட்டிய காதலை விட பலமடங்கு அவனுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உதிக்க… இதழோரம் குறுஞ்சிரிப்புடன் எதிர்காலத்தை எண்ணி வெட்க நகை பூத்தாள் தாமரை.

பயம் என்னும் உணர்வு எல்லாருக்கும் இருப்பது தான். வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லாரும் அந்த பயத்தை கடந்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் படுவார்கள்.அப்படி கடந்து விட்டால் அதன்பிறகு அவர்கள் வாழ்க்கையில் இன்பம் மட்டுமே எஞ்சும்.இனி தாமரை, சங்கரபாண்டியனின் வாழ்க்கையிலும் இன்பம்… இன்பம்… இன்பம் மட்டுமே…

….. சுபம்….

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here