சா(ரளை)லை கற்கள்

0
150

மன்னவனவனுடன்
மண நாள் கொண்டாட
கைகோர்த்து கதை பேசி
இதழோடு இளநகை பூசி
நடைபெயின்றேன் … நால்வழிச் சாலையில்..

நடந்து சென்ற பாதையில்
பள்ளம் தோண்டிய பாதகர்கள்
பணியை சரியாய் செய்யவில்லை…

கல்லும் சரளும் மண்ணும்
கலந்து மரண படுக்கையாய் தான்
தெரிந்ததென் கண்களுக்கு…

சாலையில் சிறு கல் இருந்தாலும்
அதை அகற்றிவிட்டே நகரும் நங்கை நான்…

என்னவாயிற்று.. எனக்கின்று?
மன்னவனிடமிருக்கும் கைகளை பிரிக்க மணமில்லயோ?

சரசரக்கும் பட்டும்
பளபளக்கும் பவளமும்
மினுமினுக்கும் பொண்ணும்
கமகமக்கும் பூவும்
இதயத்தின் இனிமையும்
கண்ணனவன் மொழியும்..
எனை மோனத்தில் தள்ளியதோ?

யாரும் கண்டுகொள்ளா..
கற்களை என் கண்களும்
ஒதுக்கினவோ??

அதை கடந்து சென்ற அடுத்த கணம்..

ஆ….வென்ற அலறலிலே
அலைமோதும் நெஞ்சமுடன்
திடுக்கிட்டு திரும்பி பார்த்தோம்…

புத்தம் புது ராயல் என்பீல்ட்..
அச்சரளை கற்களிலே சடாரென வழுக்கி..
சாலைவிட்டு விலகி
விழுந்தது சற்று தொலைவில்…

அதில் ஆரோகணித்திருந்த..
காளையவன்.. காயமுற்று
ரத்தமது வெள்ளமாய் வழிந்தோட..
புத்தம்புதிய பட்டுச் சட்டை…
சிவப்பு நிறம் பூசி கொள்ள…
தங்க கரையிட்ட வேட்டி அவனை விட்டு
தரை பரச…
கண்ணிமைகள் போராடி
களைத்துப் போய் ஓய்வெடுக்க
இதயத்துடிப்பதுவோ..
நிற்கவோ ஓடவோவென
மதில்மேல் பூனையாக
தவித்தபடி காத்திருக்க…

பார்த்த கணம் நெஞ்சந்தனில்
பாரம் ஏறி அழுத்தியதே..
அவன் உடையும்..
சிதறிய உடமையும்..
அவன் கடந்து வந்த பாதை தனை சொன்னதுவே…

பட்டு சட்டை வேட்டி…
அவன் புது மாப்பிள்ளை
என முறசடிக்க…
சிதறிகிடந்த
குல்பி பாணை …
அவனின் அவளுக்காக
என கதறியள…

பார்த்திருக்கும் கூட்டம்
காணொளி பதிவு செய்ய..
கைபேசி தாங்கி நிற்க…

அவசரமாய் அவசியமாய்…
108 ஐ வரவழைத்தேன்…

மருத்துவமனை தனில் சேர்த்து..
நொடிகளை யுகங்களாய் கோர்த்து…
காத்திருந்த வேளை தனில்..
கன்னியவள் வந்தடைந்தாள்…

பெண்ணவளின் ஓலமதை
செவி அதுவும் தாங்கவில்லை..
மணப்பெண்ணின் புது கோலம்
மடைமாறி திசை மாறி
அலங்கோலம் ஆனவிதம்
கண்களுக்கு சகிக்கவில்லை..

அன்னையவள் ஓடி வந்து…
அரற்றிய மொழிகள்
மொழி மறக்கச் செய்தனவே..

சுற்றம் சில வந்து
சின்னவளை தூற்றினவே…

ராசியற்ற பெண்ணிவளே..
நம்பிள்ளை வாழ்வதனை அழித்தாலோ?

வார்த்தைகள் வாளாய்
அவள் நெஞ்சருக்க…

கேட்டிருந்த என் இதயம்
கேலியாய் சிரித்ததுவே…
அவள் வாங்கும் திட்டெல்லாம்
பாவியான என் கணக்கே…
என்றிதயம் இடித்துரைத்ததுவே..

என்னவனின் ஆறுதல்கள்
செவி தாண்டி செல்லவில்லை..

பெண்ணவளின் நிலை கண்டு
என் மனமும் ஆறவில்லை..

சின்னஞ்சிறு கல்தானென்று
கடந்து சென்றது என் குற்றம்…
பணியை பார்த்து செய்யாமல்
சரளை கற்களை தூவியது
பணியாளர் குற்றம்…
விபத்தை கண்டபின்பும்
விரைவாக உதவியளியாமல்
கைபேசியில் பதிவு செய்த
இரக்கமற்ற மனிதர் குற்றம்..

பாதையை பார்த்து
பதமாய் ஓட்டாமல்
பறந்து வந்தது அவன் குற்றம்…

ஏதும் செய்யா பேதையவள்
குற்றவாளி ஆனதுமேன்?

ராசியற்ற முண்டமென
வசை கேட்கும் நிலையும் ஏன்?

என்னென்ன கனவுகள் சுமந்து
மங்கையவள் மணம்புரிந்தாள்…?

கன்னியவள் காதலும்
காதலனும் திரும்புவரோ?

காலம் தான் சொல்லவேண்டும்…!!

என்னால் இயன்றது பிராத்திப்பதும்
அலட்சியம் தவிர்த்து
சிறு குறைகளை களைவதும் தான்..?

நீங்கள் என்ன செய்வீர்கள்??!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here