சித்திரையின் சிதறல்கள்

0
91

தகிக்கும் ஆதவனுடன்
கூட்டனி அமைத்து
உயிர் உரிஞ்சும்
அக்னி நட்சத்திரமா
சித்திரை?

திடீரென கருமேகம் சூழ
கோடை இடி இடிக்க
சடசடவென சாரல் தூவி
குளம் நிறைக்கும்
கோடை மழையா
சித்திரை?

பள்ளி விடுமுறையில்
படை சேர்ந்து ஊர் சுற்றி
காடு மேடளைந்து
கருத்துப்போகும்
கிராமத்து பொடியன்களா
சித்திரை?

விடுமுறை காலத்திலும்
பல் திறன் வகுப்புகளில்
சொன்னதை செய்யும்
ரோபோக்களாய் சுற்றும்
நகரத்து நம்பிகளா
சித்திரை?

ஊர் காக்கும் தெய்வத்துக்கு
ஊர் கூடி படையலிட்டு
பலியிட்டு நேர்த்திகடன்
செலுத்தும் திருவிழாவா
சித்திரை?

கொடியேற்றி ஊர்கூடி
வடம்பிடித்து தேர் இழுத்து
கொண்டாடும் தீர்த்தவிழாவா
சித்திரை?

மீனாட்சி மணம்முடித்து
அழகர் வைகை இறங்கும்
சடங்கு தானா
சித்திரை?

வருடப்பிறப்பென்று
பஞ்சாங்கம்
பற்பல கணித்து
ஜோசியமும் ஜாதகமும்
பலன் பார்த்து
ஏங்கிநிற்கும் காலம் தானா
சித்திரை?

எத்துனை எத்துனை நினைவுகள்
சுற்றி வந்து கதைத்தாலும்
அத்தனையும் உண்மையாக
சித்திரையின் சிதறல்களாய்
நெஞ்சிருக்க..!!

தமிழ் தாயின் தொன்மையும்
காலம் கணிக்கும் அறிவையும்
பெளர்ணமி கிர்த்திகை
தீபாவளி பண்டிகை
முன்கூட்டி கணித்து வைக்கும்
முன்னோர்தம் அறிவல்லவோ
சித்திரை?!!

ஆண்டுக்கொரு பெயர்வைத்து
அறுபதில் சுற்று முடித்து
மீண்டும் தொடங்கும்
அறிவியலை உணர்த்தும்
சித்திரை!!

பாரம்பர்யத்தை
கலாச்சாரத்தை
தொன்மையை
கலைகளை
கடவுளை
வழிபடும்
முறைகளை
வாழ்வின் நெறிகளை
உணர்த்தும் நாள்
சித்திரை!!

உலகத் தமிழர்களை
ஒன்றினைக்கும்
தன்னம்பிக்கை விதைக்கும்
புத்தொளி கொடுக்கும்
எதிர்காலத்தின் மீதான
கனவுகளை விதைக்கும்
உன்னத நாள் சித்திரை!!

சித்திரை திருநாள்
நல்வாழ்த்துகள்…

இனியாவது நம் பிஞ்சுகள்
கருகாதிருக்க
கடவுள் அருளட்டும்

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here