சித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு

0
68

சித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு

received_856645294673719

“யேய் சாலாட்சி! உன்புள்ளகிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்துதா? இந்த வருஷப்பொறப்புக்காவது வரானா? இதோட ரெண்டு வருஷமாச்சு! வரவுமில்ல, எந்த தகவலுமில்லை. என்ன புள்ளைங்களோ! இப்படியா பெத்தவங்களைப் பார்க்க வராம இருப்பாங்க? என்ன வேலையோ என்ன வெளிநாடோ போ. ஒன்னும் நல்லாயில்லை. அந்தக் காலம் மாதிரியா இருக்கு இப்போ. ஹ்ம்ம் எல்லாம் நீ குடுக்கிற இடம் தான்.” குத்தாலம்மா புலம்ப ஆரம்பித்தார்.

இது இப்போதெல்லாம் தினமும் நடக்கும் ஒன்று தான். தினமும் விசாலாட்சி தன் வெளிநாட்டில் இருக்கும் தன் மகனிடம் இருந்து எதுவும் தகவல் வராதா என்று காத்திருப்பதும் அவரது மாமியார் குத்தாலம்மா தன் ஆசைப்பேரன் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஆதங்கத்தை இப்படித் தீர்த்துக் கொள்வதும்.

விசாலாட்சி குத்தாலம்மாவின் சொந்த தம்பி மகள். சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தன் மகன் சிவநேசனுக்கே திருமணம் முடித்து வைத்தார். சிவநேசனுக்கு விசாலாட்சிக்கும் ஒரே பிள்ளையாய் அஷ்வந்த். படிப்பில் வெகு சுட்டி. அவனுக்கு ஏழு வயது இருக்கும் போது சிவநேசன் காலமானார்.

தன்மகன் மற்றும் அத்தையின் பொறுப்பை கையில் எடுத்த விசாலம் அன்றிலிருந்து இன்று வரை தன் கடமையைச் சரியாக செய்து விட்டார். சில வீடுகளில் சமையல் வேலை செய்து போராடி தன் பையனை படிக்க வைத்தார். எப்பாடு பட்டாவது தன்‌மகன் அச்சுவை படிக்க வைத்து ஆளாக்க வேண்டுமென்பது அவரது பெரிய ஆசை. அதற்காக தன் ஒரே சொத்தான சொந்த வீட்டைக் கூட விற்றுவிட்டு படிக்க வைத்தார்.

மகனும் தாயின் ஆசை உணர்ந்து கஷ்டப்பட்டு படித்து பொறுப்புணர்ந்து நடந்து கொண்டான். கணிணி துறையில் முதுகலைப் பட்டம் பெற்று வெளிநாட்டில் வேலை கிடைத்து அவன் சென்று இரண்டு வருடங்கள் ஆகின்றது. அவன் அங்கேயே செட்டில் ஆகிவிடுவானோ என்ற பயம் வந்தது.

ஏனென்றால் அச்சு வெளிநாடு சென்ற இந்த இரண்டு வருடங்களில் அவன் திரும்பி வருவதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஒருவேளை மகன் அங்கேயே இருந்துவிடுவானோ என்ற பயம் இப்போதெல்லாம் விசாலத்தை மிரட்டியது. காத்திருப்பதே அவருக்கு தினப்படி வேலையானது.

“விசாலம் உனக்குத் தெரியுமா! பக்கத்து தெரு ஊர்மிளாவோட புள்ளை வெளிநாட்டுக்குப் போனானே, அங்கேயே எவளையோ கட்டிக்கிட்டானாம். அவன் போய் ஒரு வருஷம் தானே ஆச்சு. அதுக்குள்ள இங்க இருக்கிற ஆத்தா அப்பனை மறந்து அங்க கல்யாணம் பண்ணியாச்சு. நம்ம பையன் போய் ரெண்டு வருஷமாச்சே, என்னனு கேளு. நம்ம தம்பி நல்லவன் தான். ஆனா பாரு அந்த ஊரு மனுஷங்க எப்படியோ. ஏனோ சொல்லனும்னு தோணுச்சு. அதான் வந்தேன். ஊருபட்ட வேலையிருக்கு. வரட்டா?” வந்த வேலை முடிந்தது என்று பத்து வைத்து விட்டு கிளம்பினார் பக்கத்து வீட்டு மங்களா.

குத்தாலம்மா கிடைத்தது வாய்ப்பு என்று புலம்பித் தொடங்கினார். “எனக்கு அப்போவே தெரியும் இதெல்லாம் நடக்கும்னு. சொன்னேனே அவன் இங்கேயே இருக்கட்டும்னு. கேட்டியா? இப்போ பாரு எம்புள்ளையும் போய் எம்பேரனும் எங்கிட்ட இல்லாம நான் போறவழிக்கு நிம்மதி இல்லாம. கடவுளே. என் உசிர எடுத்துக்கோ” நிறுத்தாமல் புலம்பித் தள்ளினார்.

விசாலம் கலங்கவே இல்லை. அவருக்கு நம்பிக்கை தன் மகன் மேல். எப்படியும் அச்சு அப்படி செய்ய மாட்டான் எனத் தெரியும். இன்னும் இரு தினங்களில் வரப்போகும் சித்திரை வருடப்பிறப்பிற்கான வேலைகளில் தன்னை மூழ்கடித்தார்.

சித்திரை முதல்நாள். காலையிலிருந்தே மனம் படபடத்தது. ‘கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்கனுமே. என் மகனை நல்லா வச்சுக்கோ’ மனதார வேண்டியபடி பூஜை வேலைகளைப் பார்க்க வாசலில் யாரோ பெல்லடித்தார்கள். படுத்திருந்த குத்தாலம்மா குரல் கொடுக்க விசாலம் வெளியே சென்று கதவை திறந்தவர் அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றுவிட்டார்.

சிரித்தபடி நின்றிருந்தான் அவரது அச்சு. “அச்சுக்கண்ணா! வந்துட்டியா! வா வா சொல்லவே இல்லியே டா வரேன்னு. வாவா. அத்தை யாரு வந்துருக்காங்கன்னு பாருங்க. நம்ம அச்சு வந்தாச்சு” சிறுபிள்ளையாய் துள்ளிக் குதித்தார் விசாலம்.

“அம்மா நான் ஒரேயடியாக வந்துட்டேன்மா. இனி அங்கே போகப் போறதில்லை. அதான் நான் வீடு வாங்க பணம் சேர்த்திட்டு வந்துட்டேன். எங்கம்மா கஷ்டப்பட்டு வாங்கின வீட்டை எப்படியாவது திரும்ப வாங்கனும்னு ரெண்டு வருஷமா வராம சம்பாதிச்சு பணத்தோட வந்துட்டேம்மா’ அழுகையினூடே சொன்னான் மகன்.

‘பாத்தீங்களா! இதுதான் என்‌மகன். ஏதோ சொன்னீங்களே! என்மகன் வந்துட்டான் எனக்காக.’ என்ற அர்த்தத்துடன் குத்தாலம்மாவைப் பார்க்க அந்த முதியவருக்குப் புரிந்தது. பொக்கை வாயுடன் பூவாய்ச் சிரித்தார் பேரனை அணைத்தபடி.

இதிலுள்ள படம் எங்க @Aishwarya வரைந்தது. ❤️?

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here