சினிமா கூத்து

0
104

காலை 5.30..

மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 300க்கும் மேல் மக்கள் கூடி இருந்தனர்.

பறை, செண்டமேளம் என்று சத்தம் ஊரையே எழுப்பியது. இளைஞர் கூட்டத்தின் விசிலும் கத்தும் சப்தமும் அந்த ஏரியாவை அந்த தியேட்டர் முன்பு குவியச்செய்தது.

தன் தலைவர் படம் ரிலீஸ் என்று ரசிகர்கள் கூட்டம் காலை ரசிகர் ஷோ பார்க்க நிறைந்து கொண்டிருந்தது.

தன் பலத்தை காட்ட ஆள் உயர கட் அவுட், பட்டாசு என்று கலைகட்டியது சத்யா தியேட்டர். தியேட்டர் இருப்பது கூட தெரிய அளவுக்கு பல ஃப்ளெக்ஸ்கள் சுற்றி இருந்தது.

‘தலைவர் வாழ்க…. தலைவர் வாழ்க…’

“கும்தலக்கடி கும்மாவா… தலைவருன்னா சும்மாவா…”

“தலைவருக்காக உயிரையே கொடுப்போமுங்க….”

“தலைவர் வந்தாலே சரவெடி தான்..”

இப்படி எத்தனையோ வசனங்களும் சத்தங்களும் அந்த இடத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.

தியேட்டரில் இருந்த 200 மீட்டருக்கு முன்னால் பேரிகார்டர் வைத்து காவல் துறையினர் ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தனர்.

ஆட்டம் பாட்டு இசை என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்தனர். தியேட்டர் உரிமையாளர் மற்றும் ஆப்பரேட்டர் தயார் நிலையில் இருந்தனர்.

காலை 6.30க்கு தியேட்டருக்குள் ரசிகர்கள் புகுந்தனர்.தியேட்டர் உள்ளேயும் அதே சத்தம் கூரையை பிளப்பது போல இருந்தது.

சரியாக 7.00 மணிக்கு படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் அத்தனை பேரும் எழுந்து நின்று கத்தினார்…

தியேட்டரில் இருந்த சீட்டில் யாருமே அமரவில்லை. கலர் பேப்பர்கள் பறந்தன. விசில் சத்தம் அருகில் இருப்பவர்கள் காதை கிழித்தது.

இந்த நேரத்தில நம்ம ஹீரோ என்ட்ரி வந்தா எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும். அந்த அளவுக்கு கொண்டாட்டம்.

இடைவேளை விட்ட உடனே ரசிகர்கள் கூட்டம் முந்தி அடித்துக்கொண்டு பாப்கார்ன் ஐஸ்கிரீம் சிப்ஸ் கூல்டிரிங்க்ஸ் என்று ஒரு கை பார்த்தனர்.

தியேட்டர் உரிமையாளர் சிவக்குமார். உழைப்பால் உயர்ந்த மனிதர். தியேட்டரில் டிக்கெட் கிழித்து ஆட்களை உள்ளே அனுப்பும் வேலை பார்த்தவர். இன்று தமிழகத்தில் 13 தியேட்டருக்கு சொந்தகாரர். கடின உழைப்பின் மூலம் இத்தனை சொத்துக்கள்.

அநியாயமாக சம்பாதிக்காதவர். தியேட்டர் உரிமையாளர் சங்கம் நிர்ணயம் செய்யும் கட்டணம் மட்டுமே.முறைப்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதி.

தியேட்டர் கேண்டீனில் கொள்ளை அடிக்காதவர். தரமான பொருட்கள் மட்டும் விற்பனை. அதுவே தியேட்டர் எப்போதும் நிரம்பி வழிய காரணமாக அமைந்தது.

அழகான குடும்பம். நல்ல வசதி. மகிழ்ச்சியான வாழ்க்கை என்றாலும் அவரை 20 வருடமாக ஒரு விசயம் மனதை குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. அந்த ஆதங்கத்தை கொட்டி தீர்க்க ஆசைப்பட்டார். இன்றுவரை முடியவில்லை.

இடைவேளை நேரத்திலும் தியேட்டர் வெளியே பட்டாசு சப்தமும் புகையும் சாலையில் செல்லும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அனைத்தும் முடிந்து உள்ளே சென்ற ரசிகர்கள் கூட்டம் விளம்பரங்கள் ஓட வேண்டாம் படத்தை போடுங்க என்று கூச்சலிட்டனர்..

படம் ஆரம்பித்தது.

முதல் பகுதி காதல் ரொமான்ஸ் காமெடி என்று சென்றாலும் இரண்டாம் பகுதி விருப்பமான காட்சிகளில் ஆரவாரத்தை குறைத்து வைத்தது.

சில இடங்களில் ரசிகர்கள் தன்நிலை மறந்து படத்தில் மூழ்கினர்.

அமர்ந்து இருந்த சிலர் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று நினைத்து கொண்டே சீட்டின் நுனியில் அமர்ந்தனர்.

தீடீரென அச்சமயத்தில் தியேட்டர் விளக்குகள் ஒளிர்ந்தது. படம் முடிய போகிறது என்று பலர் நினைத்தனர்.

‘ஓகோ.. அப்போ ரெண்டாவது பாகம் படத்தை எடுக்க போறாங்க. கிளைமாக்ஸ் இன்னும் வரவில்லை. ஹீரோ அடுத்து என்ன பண்ண போகிறார்?’ இது போன்ற எண்ணங்கள் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் இரண்டாம் பகுதி படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் தான் ஆகியிருந்தது. அப்போது பலருக்கும் புரியவில்லை. யோசித்து நிதானித்து கொள்ளகூட அவகாசம் அங்கு இல்லை.

ஸ்கீரின் அடைக்கப்பட்டது. ரசிகர்கள் கூச்சல் அதிகமாகியது.

” படத்தை போடுங்கடா….” என்று நவீன கெட்ட வார்த்தைகள் உருவாகியது.பலரும் ஆபாச வார்த்தைகளால் தியேட்டரை இரண்டு நிமிடங்கள் வறுத்தெடுத்தனர்.

* . இப்போ மட்டும் படம் போடல…??? **** தியேட்டர் இருக்காது”. இதுபோன்று பல வார்த்தைகளும் கொலை மிரட்டலும் வந்தது.

அதுவும் ஆப்ரேட்டருக்கு குடும்பத்தோடு சேர்த்து கொலை செய்வதாக மிரட்டல் சப்தங்களை வெளியே வந்தது.

உடனே ஆப்ரேட்டர் ஸ்கிரீனை ஆன் செய்தார். மின்விளக்குகள் நிறுத்தப்பட்டது.படம் ஓட தயாரானது.

“படம் பார்க்கும்போது இடையூறு நடந்ததற்கு வருந்துகிறோம்” என்ற வசனம் தோன்றியது.
ரசிகர்கள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

அப்போது நமது ஹீரோவின் முகம் ஸ்கிரீனில் தோன்றியது. ஆனால் மீண்டும் கூச்சல்.

ஆம். அந்த ஸ்கிரீனில் தோன்றியது நமது கதையின் நாயகன் சிவக்குமார் அவர்களின் முகம் தான்.

சிவக்குமார், “படத்தை விறுவிறுப்பான இடத்தில் நிறுத்தியதுக்கு மன்னிச்சிடுங்க. நீங்க என்னைய திட்டினாலும் தியேட்டரை சேதப்படுத்தினாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் சில நிமிடங்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு பண்ணுங்க” என்றார்.

ஆத்திரம் அடைந்த சிலர் இருக்கைகளை உதைக்க துவங்கினர்.

அப்போது ஒரு வீடியோ அந்த ஸ்கிரீனில் ஓட ஆரம்பித்தது. அது இன்று காலை 5.30க்கு தியேட்டர் வெளியில் நடந்த செயல்கள் ஓடியது. மொத்த கூட்டமும் அமர்ந்தது.

யாரும் கூச்சல் போடவில்லை.

அவர் என்ன சொல்ல போகிறார் என்றும், வீடியோ எது சம்பந்தப்பட்ட வீடியோ என்றும் பலர் குழம்பிப்போய் இருந்தனர்.

அருகில் இருக்கும் கடைகள் திறந்தவர்கள் முகம் சுழிப்பு, வாக்கிங் போறவங்களுக்கு இடைஞ்சல் என்றும், பட்டாசு சப்தம், விடியற்காலையில் அருகிலுள்ள வீடுகளின் அதிருப்தி அடைந்த சிலர் என்று 8.14 நிமிடங்கள் அந்த வீடியோ ஓடியது. முக்கியமாக பால் அபிஷேகம் செய்ததும் பதிவாகி இருந்தது.

அங்கு அமர்ந்திருக்கும் பலரும் அதை தவறு என்று நினைத்தனர். சிலர் இதை வீடியோ எடுத்தது தவறு என்றும், இது சகஜம் தானே என்றும் ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர்.

அப்போது சிவக்குமார், “இதெல்லாம் தவறுன்னு நான் சொல்லுவேன்னு நினைச்சீங்களா? கட்டாயம் கிடையாது” இதெல்லாம் உங்க விருப்பம்.

சில நேரங்களில் நாம பண்ணுற மகிழ்ச்சியான சில விசயங்கள் சுற்றி இருக்கறவங்களுக்கு அசௌகரியத்தை தர தான் செய்யும்.

இத மக்கள் ஏத்துகிட்டாங்க. முக்கியமான விசேச நாட்களில் வெளியாகும் படம். அல்லது பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகரின் படம் ரிலீஸ் ஆகுற அன்றைக்கு மட்டும் தான் இதெல்லாம் நடக்கும்னு மக்கள் தெரிஞ்சு உணர்ந்துட்டாங்க”

“கட்அவுட்க்கு பால் அபிஷேகம் பண்றது தப்பு தான். சாப்பாடு இல்லாம பால் இல்லாம இறக்கும் குழந்தைகள் மிக அதிகம். ஆனா அது உங்க சொந்த விசயம். அதுல நான் தலையிடல”

“நான் இப்போது இந்த படத்தை பாதியில நிறுத்தி நான் பேசுவதையும் இந்த வீடியோவையும் போட காரணம் பல ஆண்டுகளாக தொடர்ந்து என் மனதில் உறுத்தும் இந்த ஆதங்கத்தை பற்றி தான்” என்று சொல்லும் போது தான் பலருக்கும் ஞாபகம் வந்தது. படத்தின் முக்கியமான கட்டத்தில் இந்த வீடியோவை ஓடிக்கொண்டிருந்தது என்பது.

யோசித்து முடிப்பதற்குள் ஒரு மனிதர் லுங்கி கட்டிக்கொண்டு நடந்துவரும் வீடியோ ஓட ஆரம்பித்தது.

தன் கைகளில் ஆரஞ்சு கலர் கையுறை, முகத்தில் மாஸ்க், காலுறை மாட்டிக்கொண்டு ஒரு பக்கெட் மற்றும் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு தியேட்டர் ஆண்கள் கழிவறைக்குள் நுழைகிறார் அந்த மனிதர்.

சிறுநீர் கழிக்கும் சிங்கில் சிகரெட் துண்டுகளை தன் கையால் எடுத்து பக்கெட்டில் போட்டார். சிலர் துப்பிய பப்புள்காம் ஒட்டிக்கொண்டு வர மறுத்த போதும் வலுக்கட்டாயமாக எடுத்தார்.

சுவற்றில் பாக்பராக் மற்றும் வெற்றிலை போட்டு எச்சில் துப்பியதை துடைத்தார்.

ஒவ்வொரு சிங்கிலும் தண்ணீர் ஊற்றி பினாயில் போட்டு கழுவுவதை படம் பிடித்து அதை திரையில் ஓட்டிக்கொண்டு இருந்தார் சிவக்குமார்.

அனைவருக்கும் மனதில் வலிக்க ஆரம்பித்தது. சிலர் முகம் சுழிக்கவும் செய்தனர்.

மீண்டும் சிவக்குமார் திரையில் தோன்றினார்.
“இப்போ நீங்க பாக்கறது இன்னைக்கு இன்டர்வெல் முடிஞ்ச அப்புறம் எடுத்த வீடியோ தான்.”

“இன்னும் சிலர் டாய்லெட் யூஸ் பண்ணிட்டு தண்ணி கூட ஊத்தாம வந்து இருக்கீங்க. அதையும் அவர் தான் சுத்தம் பண்ணுவார்.
வேலையை முடித்துவிட்டு தான் காலை சாப்பாடு.”

“ஒருநாள் வேண்டாம். ஒருமணிநேரம் அவர் கூட இருந்து அவர் செய்யற வேலையை எத்தனை பேர் வேடிக்கை பாக்க தைரியம் இருக்கும்?”

“என்னோட தியேட்டர்ல இருக்கற துப்பரவு பணியாளர் எல்லோருக்கும் கையுறை, முகமூடி வாங்கி கொடுத்து இருக்கேன். ஆனா முக்கால்வாசி தியேட்டரில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யறவங்க கையில் தான் எடுக்கறாங்க.”

“அதுவும் இந்த மாதிரி பப்புள்காம், சிகரெட் துண்டுகள் கிடக்கும் போது கழிவுநீர் போகமா உள்ளையே தேங்கி நிற்கும். அப்போ நீங்க தான் சொல்லுறீங்க தியேட்டரில பாத்ரூம் சரியில்ல. கேவலமா இருக்குன்னு”

“ஆன நிதர்சனம் என்னென்னு பாருங்க. என் மேல நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். ஆனா இங்க கஷ்டப்படுறது துப்பரவு பணியாளர் தான்”

நம்ம சந்தோஷத்துக்காக மத்தவங்கள தெரிஞ்சே கஷ்டப்படுத்துறது நியாயம் கிடையாது. இனிமேல் தயவுசெய்து இந்த மாதிரி எங்கேயும் பண்ணிடாதீங்க. அவங்களும் மனுஷங்க தான்”

படத்தை இப்படி பாதியிலே நிறுத்தி இப்படி பண்ணினதுக்கு மன்னிச்சிடுங்க.

இப்போ மீதிப்படம் தொடங்கும். இந்த ஷோ பிரச்சினை ஆனதால உங்க டிக்கெட் பணம் திரும்ப வாங்கிக்கோங்க. படம் முடிஞ்சதும் அதே டிக்கெட் கவுண்டர்ல பணம் தருவோம். வாங்கிக்கோங்க. மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டு அந்த ஸ்கிரீனில் இருந்து மறைந்தார் சிவக்குமார்.

தன் மனதில் இத்தனை வருடங்கள் இருந்த ஆதங்கத்தை அந்த வீடியோ மூலம் 30 நிமிடங்கள் கொட்டி தீர்த்தார்.

அந்த விறுவிறுப்பான இடத்தில் இருந்தே படம் மீண்டும் துவங்கியது. தியேட்டரில் அதன் பிறகு கைதட்டல் இல்லை. விசில் சப்தம் இல்லை.

அனல் பறக்கும் காட்சியில் கூட மயான அமைதி ரசிகர்கள் கூட்டத்தில்.

படம் முடிஞ்சதும் மக்கள் கூட்டம் வேகமாக வெளியே செல்லவில்லை. ஐந்து நிமிடங்கள் கழித்து கூட்டம் தியேட்டரில் இருந்து கலைந்தது. யாரும் தங்கள் பணத்தை திரும்ப பெறவில்லை.

“தம்பி… சார்… பணத்தை வாங்கிட்டு போங்க. ஐயா சொல்லி இருக்காங்க. சார்..
சார்..” என்று வாட்ச்மேன் சொல்ல சொல்ல அனைவரும் வேகமாக வெளியேறினார்கள்

அந்த தியேட்டரில் இருந்து சில ரசிகர் மன்ற முக்கிய உறுப்பினர்கள் டிக்கெட் கவுண்டர் போயி அங்கே இருந்த சிவக்குமாரிடம், மொத்த டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு,

” சார். அந்த பணம் எங்களுக்கு திரும்ப வேணாம். நீங்களும் கட்டாயம் வச்சுக்க மாட்டீங்கனு தெரியும். அதனால கழிவறை சுத்தம் செய்பவருக்கும், தியேட்டரை சுத்தம் செய்பவருக்கும் கொடுத்திடுங்க” என்றனர்.

“சார் நாங்க தியேட்டரில போட்ட குப்பைய நாங்களே எடுத்து ஓரமா போட்டு இருக்கோம். அதை மட்டும் எடுத்திட சொல்லுங்க. தலைவர் படத்தில ஒரு நல்ல பாடத்தை கத்து கொடுத்தீங்க. ரொம்ப நன்றிங்க சார்” என்று சொல்லிவிட்டு அனைவரும் சென்றனர்.

ஒரு மனிதனின் வலிகளில் மிகப்பெரிய மாற்றத்தை அந்த தியேட்டர் மட்டுமல்ல, பல தியேட்டர்களில் காண முடிந்தது….

(பின்குறிப்பு: ஒரு அலுவலகத்தில் கழிவறை சுத்தம் செய்யும் பாட்டியின் வேதனையே இந்த சிறுகதை எழுத காரணமாக அமைந்தது)

       -சேதுபதி விசுவநாதன்
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here