சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை

0
121

குதிரைகாரன் ;

தென்னையும் பனையும் போட்டி போட்டு உயரும் நதிகரையோரம் இதமான தென்றல் வீசிக்கொண்டு இருக்க அதை கிழித்துக் கொண்டு புயலென குதிரை ஒன்று வந்து கொண்டிருக்கிறது அதன் மேல் அமர்ந்திருப்பவனை பார்த்தால் எதோ அவசர செய்தியை கொண்டு செல்வது போல் தெரிகிறது அதுவும் இரவு பகல் பராமல் தொடர்ந்து பிரயாணத்தை மேற்கொண்டவன் என்று தெரிகிறது அவனுடைய கலைந்த கேசத்தையும் இரண்டு நாட்கள் தூசி படிந்த ஆடையும் கண்ணில் தெரிகின்ற சோர்வையும் பார்க்கும் போது

இருந்தும் ஏதோ ஒரு உந்துதல் அவனை போ போ என தள்ளுகிறது, அவனுக்கு இணையாக அவனுடைய குதிரையும் களைத்து இருந்தாலும் எஜமான விசுவாசம் காரணமாக தன் வலிமையெல்லாம் திரட்டி பாய முற்பட்டது

குதிரையின் திறனை அறிந்த அந்த
குதிரைகாரன் சற்றே ஆற்றோரத்தில் நிறுத்தி குதிரையை இளைப்பார விட்டாலும் தான் மட்டும் இளைப்பாராமல் சற்றே பரபரப்பாக அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான்

அதே நேரம் நதியில் ஒரு ஓடம் ஒன்று மெதுவாக அன்னம் போல் அசைந்து அசைந்து வந்தது அதை கண்டவுடன் இன்னும் பரபரப்படைந்த அந்த குதிரைகாரன் கைகளை தூக்கி காட்டி தன் அருகே வருமாறு சைகை செய்தான்

அதை கண்ட ஓடக்காரன் சற்றே வேகமாக அவனிருக்கும் இடம் வந்து சேர்ந்த உடன் ஏனப்பா மருது ஏதாவது முக்கிய செய்தியா, அரண்மனைக்கு போக வேண்டுமா என ஓடக்காரன் கேட்க, குதிரைகாரனின் பெயர் மருது என்றும் அவன் அரண்மனையில் ஊழியம் செய்பவன் என்றும் ஒருவாரு நம்மால் யூகிக்க முடிகிறது

ஆமாமப்பா உடனே போக வேண்டும் குதிரையை இன்னும் விரட்டினால் அது இறந்துவிடும் அதனால் அக்கரைக்கு சென்று வேறு குதிரை சம்பாதித்துக்கொண்டு அரசரை உடனே பார்க்க வேண்டும் என குதிரைக்கார மருது சொன்னான்

ஓடக்கரானும் உடனடியாக அப்படியா வா உன்னை அக்கரையில் விட்டு நானே குதிரையும் வாங்கி தருகிறேன் என கூறிய அடுத்த நொடி ஒரே தாவாக படகில் ஏறினான் மருது,

படகு செல்ல ஆரம்பித்தது ஓடக்காரன் ஏனப்பா மருது எதாவது அபாய செய்தியா என கேட்க, மருதுவும் ஆமாம் முனியா ஆபத்தான செய்தி தான் இருந்தாலும் நம் மன்னர் இருக்கும் வரை நமக்கு ஏது ஆபத்து என கூற, ஓடக்காரனும் ஆமாம் நமை காக்கும் கரங்கள் இருக்கு நமக்கென்ன பயம் என கூறினான், ஓடக்காரனின் பெயர் முனியன் என்றும் இருவரும் பேசிக்கொண்டதை பார்க்கும் போது அவர்களின் அரசன் மிக பெரிய வீரனாக தான் இருக்க வேண்டும்

இருவரும் அக்கரையை அடைந்து முனியன் மருதுவுக்கு எங்கிருந்தோ ஒரு குதிரையை கொண்டு வந்து குடுத்தான்,குதிரையில் ஏறிய மருது அடுத்த நொடி அக்கரையில் தன்னை பார்த்துக்கொண்டு நின்ற குதிரையை கண்டு அஞ்சாதே மீண்டும் வந்து உன்னை அழைத்து செல்வேன் அதுவரை ஓய்வெடு என கூறும் வண்ணம் தன் கரங்களை தூக்கி காட்டினான் அதை கண்ட குதிரையும் கணைத்து தன் சம்மதத்தை தெரிவித்து

புது குதிரை பாய தயாராகும் நேரம் முனியா என் குதிரையை பார்த்துக்கொள் திரும்ப வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறி முடிக்கும் முன் குதிரை பாய ஆரம்பித்தது

கோட்டை ;

இரண்டு நாளிகைகள் கடந்து மருது விரைவாக குதிரையில் வந்து கொண்டு இருந்த போது அவன் கண்களில் கோட்டையின் மதில் ஒன்று தெரிய ஆரம்பித்து வர வர கோட்டையின் முன் மதில் முழுவதும் தெரிந்தது

மண்ணால் ஆன கோட்டை தான் இருந்தாலும் அந்த மண்ணிற்க்கே உண்டான கம்பீரத்தை கலந்து கட்டப்பட்ட கோட்டையானதால் அது அழகும் கம்பீரமும் இரண்டும் சேர்ந்து எதோ இந்திரனின் அரண்மனை போல் தெரிகிறது

இரண்டு காத தூரம் வரை கோட்டையின் சுவர் நீண்டு கிடக்கிறது, மதில் மேல் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் கட்டப்பட்டு வீரர்கள் நின்று கொண்டு காவல் காத்துக்கொண்டு இருந்தனர்

வீரர்களை கண்டால் எதற்க்கும் அஞ்சாத சிங்கள்களாய் கோட்டை காவலுக்கு நிற்பதே பெருமையென எண்ணி முகத்தில் பூரிப்புடன் கண்காணித்து வந்து கொண்டிருக்கின்றனர்

ஆங்காங்கே மதில் மேல் வீரர்கள் காவல் நடை நடந்து கொண்டிருக்கின்றனர், நடையில் தெரிந்த உறுதி எந்த பகையையும் எதிர்க்கும் வல்லமை உண்டு என அறிவிக்காமல் அறிவித்துக் கொண்டு இருந்தது

நூறு வருடத்திற்க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் கோட்டை கதவுகளாக மாறி ஓங்கி உயர்ந்து கோட்டையின் கம்பீரத்திற்க்கு கம்பீரம் சேர்பதாய் எந்த ஒரு பகையையும் எதிர் கொள்ள தயாரான நிலையில் காத்திருக்கின்றன

மருதுவின் குதிரையின் வேகம் மெல்ல மெல்ல குறைந்தது கோட்டையின் அருகில் வர வர, கோட்டை வாசலில் இரு புறமும் நின்ற தலைவாசல் காவலர்கள் மருதுவை கண்டவுடன் தலை குனிந்து மரியாதை செலுத்தியபடி வந்த குதிரையை பிடித்தனர், வாயிற்காப்பாளர்கள் குதிரையை பிடித்த வேகத்தில் கீழே குதித்த மருது வேக வேகமான நடையில் காவல் தலைமையதிகாரியை பார்க்க சென்றான்,

காவல் அதிகாரி வாருங்கள் மருதுவே என முகமன்கூறி ஏனிந்த அவசர கோலம் அப்படி என்ன முக்கிய செய்தி என கேட்க மருதுவும் ஆம் தலைவரே முக்கிய செய்தி தான் உடனே மன்னர்பிரானை பார்க்க கோட்டைக்குள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேட்டபடி அரச முத்திரையை காட்ட

காவல் அதிகாரி அரச முத்திரையை பார்த்த உடன் அனுமதி வழங்கினார் உடன் மருது அரசவை கூடியுள்ளதா என கேட்க, காவல் அதிகாரி ஆம் மருது அரசவை கூடியுள்ள சரியான நேரத்தில் தான் நீரும் வந்துள்ளீர் விரைந்து செல்லவும் என சொல்லி வழியனுப்பினார்

கோட்டைக்குள் மருதுவோடு நாமும் செல்வோம், எங்கு திரும்பினாலும் காரை வீடுகள் கண்கவரும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டு இருந்தன, ஏதேனும் விசேஷம் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை காரணம் அந்த கோட்டையின் செல்வ செழிப்பு அப்படிபட்டது, சிறார்கள் அங்கும் இங்கும் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் விளயாடிக்கொண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு வீடுகளின் முற்றத்தில் அமர்ந்திருந்த பெரியவர்களின் முன் தங்க தாம்பாளத்தில் வெற்றிலை வைக்கப்பட்டு இருந்தன, வெள்ளியில் செய்த கிண்ணத்தில் நீரும் வைக்கப்பட்டு இருந்தன

அனைவரும் மருதுவையே பார்த்துக்கொண்டு இருந்தனர், ஒரு சிலர் பேச முயற்சி செய்ததை கண்டும் காணாமல் மருது குதிரையை சற்றே மித வேகத்தில் பாயவிட்டான் தன் எதிரில் தெரிந்த உயரமான மாளிகையை நோக்கி

அரசவை ;

மருது அந்த கோட்டைக்குள் இருந்த உயரமான மாளிகையை பார்த்தபடி சென்றவன் அதன் அருகில் சென்றவுடனே தன் குதிரையை விட்டு இறங்கினான்

மாளிகை எங்கும் மாவிலை கட்டப்பட்ட தோரணங்களும் அதனோடு பனகுறுத்தோலை தோரணங்களும் காற்றில் ஆடியபடியே மருதுவை வரவேற்றது, மாளிகையின் முன் இரண்டு பிரம்மாண்ட தூண்கள் நுழைவாயிலை தாங்கியபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தன, தரையெங்கும் வெண்ணிற பளிங்கு கற்கள் மின்னியபடி மாளிகைக்கு அழகூட்டியது,

மருதுவின் நடை வேகமாக இருந்ததால் நாமலும் அவனை பின் தொடரும் கட்டாயம் வருகிறது, விடு விடு வென அரசவை முற்றத்தை அடைந்த மருது தன் அரச முத்திரையை காட்டி மன்னரிடம் தான் வந்திருப்பதை சொல்லி உள் நுழைய அனுமதி வாங்குமாறு கேட்டான்

வாயில்காவலன் உள் சென்றான் அவன் பின் நாமும் செல்வோம் அரசவை அமர்ந்திருந்த பெருமகனார்களின் முகங்களை பார்க்கும் போது அறிவிலும் ஆற்றலிலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர், முகங்களில் அறிவு களையும் வீர களையும் தாண்டவமாடியது, மொத்தத்தில் அரசவை என்பது கலைமகளும் திருமகளும் குடி கொண்ட இடமாகவே இருக்கிறது

சற்றே நிமிர்ந்து பார்த்தால் கருங்கல்லிலான சிற்பங்கள் இரண்டு சிலம்பம் வைத்துள்ளதா என்பது போல் இரண்டு காவலர்கள் இருபுறமும் நிற்க, சற்று உயரமான மேடையில் பொன்னாலான அரியணையில் ஓர் இளைஞன் வெகு இயல்பாக அமர்ந்திருப்பதையும் அவன் அருகில் வலிமையும் உறுதியும் நிறைந்த ஒர் மனிதர் நின்று கொண்டிருப்பதையும் காண முடிகிறது

அந்த இளைஞனை பார்த்தால் ஓர் இருபத்திரண்டு பருவத்தினன் போல தான் தெரிகிறது, அரியணையில் அமர்ந்திருக்கும் தோரணையை பார்த்தால் ஏதோ வெகு சாகவாசமாக எதை பற்றியும் கவலை கொள்ளாத எதுவும் செய்யாதை போன்ற தோரணை தெரிந்தாலும் அந்த இளைஞனை பார்க்கும் போது அப்படி எதுவும் தெரியவில்லை காரணம்

நீள் வட்ட முகம், வெற்றியில் வட்ட பொட்டு, வில்லாக வளைந்த புருவங்கள், அம்பாக பாயும் விழிகள், முறுக்கிய மீசை, இரும்பு போன்ற மார்பு, திரண்டு எழுந்த கரங்கள், இரும்பு பிடியென கால்கள் பார்க்கும் போதே தெரிகிறது அந்த இளைஞன் ஒன்றும் சாமானியனானவன் இல்லை என்று

மெல்லிய பட்டாடை மார்பை மறைக்க வரிந்து கட்டிய வேட்டியுடன் ஒரு கால் முன் நீட்டி மறுகாலை மடக்கி அரியணையில் ஒரு பக்கம் சாய்ந்தவாறு தன் இடம் நின்ற அந்த மனிதரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்

நின்று கொண்டிருந்த மனிதரும் சாமானியனாக தெரியவில்லை சற்றே வயதில் மூத்தவராக இருந்தாலும் அவரின் கட்டு குலையாத தேகத்தையும் அதில் இருக்கும் தழும்புகளையும் பார்க்கும் போது அந்த மனிதர் ஓர் மகாவீரர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் ஏற்படவில்லை

வாயில் சேவகன் உள் நுழைந்ததும் மண்டியிட்டு தலை வணங்கி பிரபோ தங்களின் தரிசனம் நாடி ஓற்றர் படை தலைவர் மருது வேலர் வந்துள்ளார் என கூற, அந்த இளைஞனும் உள்ளே அனுப்பும் படி சைகை செய்து விட்டு அந்த மனிதரிடம் பேச ஆரம்பித்தார்

ஒற்றர் தலைவன் :

அனுமதி கிடைத்த அடுத்த நொடி ஓற்றர் தலைவன் மருது வேலர் அரசவைக்குள் புயலென புகுந்து அரியணையில் அமர்ந்திருந்த இளைஞனை கண்டவுடன் மண்டியிட்டு சிரம் தாழ்த்தி தன் வணக்கத்தை தெரிவித்தார்

அந்த இளைஞனோ மருது வேலரின் வேகத்தை கண்டும் காணாமல் ஒற்றர் தலைவரே இது என்ன அலங்கோலம்? அவ்வளவு அவசரமான காரியம் என்ன ? ஓய்வெடுக்க கூட முடியாத அளவிற்கு என வினவ

ஒற்றர் தலைவனோ பிரபோ அவசர செய்தி அதனால் நானே வந்தேன் என கூறினார்

மறுமொழியாக அந்த இளைஞன் என்ன அப்படி அவசர செய்தி என கேட்க

மருது பிரபோ ஓராண்டுக்கு முன் தாங்கள் துரத்தியடித்த பகை இன்று பலம் பொருந்தி வர இருக்கிறது, படையும் கிளம்பி விட்டது என கூறினார்

சாவகாசமான நிலையில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் எந்த பதட்டத்தையும் காட்டாமல் அட்டதிக்கும் அதிரும் வண்ணம் சிரிப்பொலி எழுப்பினார்

அரசவையே திகைத்து நின்றது காரணம் பலம் பொருந்திய பகைவன் வர இருக்கிறான் ஆனால் தலைவனோ ஏதோ விதூசகன் பேசியதை கேட்டு சிரித்து போல் சிரிக்கிறாரே என்று

மருதுவோ அதற்க்கு மேல் குழுப்பமும் திகைப்பும் சேர தன் தலைவனை கண்டார் மண்டியிட்ட வண்ணமே

அந்த இளைஞனோ சிரித்து முடித்த உடன் ஒற்றர் தலைவரே எழுந்திரியுங்கள், நீங்கள் கண்டவை கேட்டவைகளை விவரமாக கூறுங்கள் என ஆணையிட்டார்

மருதுவும் எழுந்து பிரபோ ஓர் ஆண்டுக்கு முன் தங்களை எதிர்க்க வந்து நதிகரையோரம் நடந்த போரில் காய்ந்த நதியில் பகைவனின் ரத்தமே ஆறாக அந்த நதியில் ஓட விட்டீர்களே அப்போது தப்பி ஓடிய பகைவனின் தலைவனை புறமுதுகிட்டு ஓடுபவனை கொல்லுதல் பாவம் என்று கருணைமிக்க உள்ளத்தால் மன்னித்தீர்களே

அந்த பகைவனே தன் வஞ்சத்தை தீர்க்க மீண்டும் மிகபெரிய படையோடு வந்து கொண்டிருக்கிறான் என கூறினார்

மீண்டும் எழுந்த சிரிப்பை கட்டுபடுத்திய அந்த இளைஞன் எப்போது இங்கு வந்து சேர்வான் என கேட்டார்

அதற்கு மருது மறுமொழியாக பிரபோ இன்னும் சில தினங்களே உள்ளன அதுவும் அவன் படை பலத்தை பார்க்கும் போது நமது கோட்டை தாக்குபிடிக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது என கவலை தோய்ந்த குரலில் பதில் சொன்னார்

மீண்டும் அந்த இளைஞன் புன்னகைத்தவாரே தன் அருகில் நின்றவரை ஏறிட்டு பார்த்து என்ன தளபதியாரே உங்கள் கருத்து என கேட்க

அருகில் நின்றவர் அந்த இளைஞனின் தளபதி என நமக்கு விளங்குகிறது, தளபதியோ எதுவும் சொல்லாமல் மெளனமான புதிர் புன்னகையை வீசினார்

இருவரின் புன்னகைக்கும் அர்த்தம் புரியாமல் மருதுவும் அவையோரும் திகைத்து நின்றனர்

அதுவரை அரியணையில் அமர்ந்திருந்த இளைஞன் தடால் என எழுந்தார், இப்போது தான் தெரிகிறது அந்த இளைஞனின் முழு உருவம் சுமார் ஆறடி உயரம், கைகள் கால் முட்டிவரை நீண்டு கிடக்க கம்பீரமாக எழ மார்பில் இருந்த ஒரு முனை பட்டாடை நழுவும் சமயம் அப்பட்டாடையை ஒரு கையால் கீழே விழாதபடி ஒற்றை கையால் சுழற்றி வைத்த படி மறு கையோ இடுப்பில் வைத்து நிமிர்ந்து நின்று

அவையோர்களே என்ற ஒற்றைகுரல் அமைதியான ஆண் சிம்மத்தின் கர்ஜனையாய் அவை எங்கும் எதிரொலித்தது

யார் இந்த இளைஞன் எதிரியின் வலிமையை கண்டு சற்றும் கவலைபடாமல் சிரித்தாரே?? எந்த ஒரு கோபமும் இல்லாமல் சாந்தம் பொருந்திய முகத்தோடு பேச ஆரம்பித்துள்ளாரே??

மாவீரன்:

யார் அந்த இளைஞன், அவனை பற்றி தெரிந்து கொள்ள சற்று காலத்தை கடந்து சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்

நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த பூமி, ஒரு காலை நேரம் சில இளம் வயதினர் தடிவரிசை பயிற்சி செய்து கொண்டிருந்தனர் அதில் ஓர் இளைஞனின் தடிவரிசை மட்டும் மற்றவர்களை விட வேகமாக இடமும் வலமும் மேலும் கீழுமாக சென்று கொண்டிருந்ததுகொண்டிருந்தது காற்றும் உள் நுழையவிடாபடி அவனின் தடிவரிசையானது இருந்தது, பயிற்சி முடிந்த உடன் அந்த இளைஞன் தன் தோழர்களை அழைத்துக்கொண்டு குதிரையில் ஏறி செல்ல ஆரம்பித்தான், வாருங்கள் நாமும் செல்வோம் அவர்களை தொடர்ந்து

அவர்கள் சலிக்காமல் நீண்ட தூரம் குதிரையில் ஆனந்தமாக பேசிக் கொண்டும் அவ்வப்போது போட்டி போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல பார்த்த போது எல்லாம் நமது இளைஞனே வெற்றி பெற்று வந்தான்

அப்படி ஒரு போட்டி நடந்த சமயம் பாய்ந்து கொண்டிருந்த நம் இளைஞனின் குதிரை தடால் என நின்றது உடன் வந்த தோழர்களின் குதிரையும் நிறுத்தப்பட்டது அவசர அவசரமாக

அங்கே அவர்கள் கண்ட காட்சி வியப்பை ஏற்படுத்தியது, ஒரு சிறு படை பெட்டகங்களை பாதுகாத்து எடுத்துக்கொண்டு சென்றது, அதை கண்ட நம் இளைஞன் ஆச்சரியபட்டு தன் நண்பர்களுடன் அவர்கள் அருகில் சென்று

நில்லுங்கள் என கட்டளையிடும் குரலில் கூறினான், அந்த சிறுபடையும் நின்றது

நம் இளைஞன் என்ன இது பெட்டகங்கள் யாருக்கு கொண்டு செல்வது என கேட்க

அதில் தலைவன் போல் இருந்தவன் சற்று முன் வந்து இவை இங்கே கப்பமாக வசூலிக்கப்பட்ட தங்கங்கள் இதை எங்களின் மகராஜர் அவர்களின் கஜனாவுக்கு கொண்டு செல்கிறோம் என கூறினான்

நம் இளைஞனோ பதில் மொழியாக யாருக்கு உரியதை யார் கப்பம் வசூலிப்பது, யார் குடுத்த உரிமை என சிங்கத்தின் கர்ஜனையில் கர்ஜிக்க

படை தலைவன் சற்றே நடுங்கி ஐயனே தாங்கள் யார் என்று எனக்கு தெரியாது இது காலம் காலமாக நடந்து வருகிறது என அஞ்சியவாரே கூறினான்

அதற்கு நம் இளைஞனோ இனி அப்படி நடக்காது, இவை அனைத்தும் இந்த மண்ணில் இருந்து பெறப்பட்டவை அதனால் இந்த மண்ணின் மைந்தர்களுக்கே சொந்தம் அதை கொண்டு சேர்ப்பது என் கடமை என கர்ஜித்து பெட்டகங்களை வைத்துவிட்டு திரும்பி பாராமல் ஓடவும் உத்தரவிட்டான்

உத்தரவை இட்ட வேகத்தில் தன் தோழர்களுக்கு பெட்டகங்களை கைபற்ற சமிஞ்ஞையில் உத்தரவிட்டு குதிரையை திருப்பினான்

சிறு படையின் தலைவனாவன் அதே இடத்தில் மண்டியிட்டு ஐயனே பெட்டகங்கள் இல்லாமல் போனால் எங்கள் தலை தப்பாது அதனால் தங்களின் பெயரையாவது கூறிப்பிடுங்கள் அதை வைத்தாவது எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்கிறோம் அபயம் அபயம் என கரங்களை நீட்டி அலறினான்

அபயம் அபயம் என்ற குரல் கேட்ட அடுத்த வினாடி பாய தயாராக இருந்த குதிரை சற்றே அரைவட்டமாக திரும்பியது, கடிவாளம் ஒரு கையில் இருக்க மறு கையோ இடுப்பில் வைத்த படி கம்பீரமாக நெஞ்சம் நிமிர்த்தி கண்ணில் உறுதி மின்ன கர்ஜனை தெரிக்கும் குரலில்

சென்று சொல் உன் ஹைதரிடம்

சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் நடுவில் இருக்கும் சின்னமலை எடுத்துக்கொண்டான் என்றும்

இரண்டு கிரி களுக்கு மத்தியில் இவனை ஈன்ற பூமி இருப்பதால் இவன் இயற்பெயர் தீர்த்தகிரி என்றும்

கடும் புனலையும் கரை கொண்டு ஆளும் காராள வம்சத்தை சேர்ந்தவன் என்றும்

சொல்லி உன் உயிரை காப்பாற்றிக்கொள் என அபயஹஸ்தத்தை காட்டியபடி குதிரையை பறக்க விட்டார் தீரன் சின்னமலை எனும் தீர்த்தகிரி காராளன்

அப்படி பட்ட தீரன் சின்னமலையே அரசவையில் பேச ஆரம்பித்தது

எதிர்பார்த்த யுத்தம்

பயமறியா சிங்கமென சிறுவயதிலேயே ஹைதரை எதிர்த்த மாவீரர் தீரன் சின்னமலை எனும் தீர்த்தகிரி பேச ஆரம்பித்தது

அறிவிற்சிறந்த அவையோர்களே உங்கள் முன்னால் யுத்த தகவலை கேட்டதும் நகைத்துவிட்டேன் அதற்கு முதலில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் காரணம் இது நாங்கள் எதிர்பார்த்த யுத்தம் என கூறினார்

அவையோர்களே அனைவரின் முகத்திலும் குழப்பமே எஞ்சி இருந்தது,

அனைவரின் குழம்பிய முகங்களை கண்ட தீரனார் உங்களின் குழப்பான முகங்களே தெரிவிக்கின்றன எப்படி இது எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் என்று கூறுகிறேன் என்பதை, நானும் தெளிவுபடுத்த கடமைபட்டுள்ளவன் தான்

அவையோர்கள் மறந்திருக்க மாட்டீர்கள் ஓர் ஆண்டிற்க்கு முன் கர்னல் மெக்ஸ்வெல் எனும் ஆங்கில தளபதி நமை எதிர்க்க வந்தது என கூற

அமைச்சர் குழுமத்தில் இருந்து ஆம் பிரபு, அந்த யுத்தத்தை எங்களால் மறக்கவே இயலாது காரணம் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்த யுத்தத்தில் தாங்களும் நமது தளபதியார் கருப்ப சேர்வையும் தீரத்தை என்னவென்று சொல்வது, பகைவனின் உதிரம் மட்டுமே நொய்யலில் வெள்ளமென பாய்ந்தது என கூறினார்கள்

தீரனார் தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தளபதி கருப்ப சேர்வையாரை கண்டு இளநகை புரிந்தார், சேர்வையாரோ ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத ஒன்றை அமைச்சர் குழுமம் பேசியது போன்று ஒரு தோற்றத்தில் ஏதோ பேச எத்தனித்தார்

சேர்வையாரின் பேச்சை கேட்க்கும் பொருட்டு தீரனாரும் அவையோரும் அமைதி காக்க, ஓர் அடி முன் வந்த சேர்வையாரோ அவையோர்களே என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் நம் மன்னருடன் இணைத்து புகழுமளவிற்க்கு நான் எதுவும் செய்யவில்லை, நமது மன்னர் இளம் வயதிலேயே தீரன் என்று அழைக்கப்பட்டார் அதற்கான காரணம் நான் சொல்லி உங்களுக்கு தெரியபோவது இல்லை என கூற

மொத்த அவையும் ஹைதருக்கு சேர வேண்டிய கப்பத்தை தீரனார் மீட்ட சம்பவத்தை அசைபோட்டது அதனால் அனைவரின் முகங்களிலும் வீர திருமகள் குடிகொண்டு இருந்தாள்

அப்படி பட்ட நம் மன்னருக்கு துணை வேண்டுமோ? என்றுமே வெற்றி திருமகள் நமது ஐயனின் அருகிலேயே வாசம் செய்து கொண்டிருக்கிறாளே என கூறினார் அதை கேட்ட அவையோர் பெருமித உணர்ச்சியில் தீரனார் வாழ்க, கொங்கின் புகழ் ஓங்குக என முழங்க ஆரம்பித்தனர்

தன்னை புகழ்வதை தடுக்க எண்ணிய தீரனாரோ அரியணை மேடையில் இருந்து இறங்கி வர பின்னே சேர்வையாரும் வர பார்க்க கரத்தை நீட்டி தடுத்து விட்டு தான் மட்டும் இறங்கி வந்தார் தீரனார், அவர் வருவதை கண்டதும் அவையே எழ பார்த்தது, கைகளை காட்டி அமரும்படி சமிஞ்ஞை காட்டி விட்டு பேச ஆரம்பித்தார் தீரனார்

ஆங்கில தளபதி நம் கொங்கு படையுடன் யுத்தம் புரிந்து புற முதுகிட்டு ஓடிய செய்தி அனைவரும் அறிந்ததே, அதே சமயம் நாம் ஓட விட்டது ஓர் அடிபட்ட நாகத்தை, அன்றே நாங்கள் எதிர்பார்த்தோம் விரைவில் சென்றவன் வலிமையான படையை திரட்டிக்கொண்டு வருவான் என்று கூறினார்

அவையோர் அமைதியாக தீரனாரின் மறு மொழிக்காக காத்திருந்தனர் தீரனாரும் அதை புரிந்து கொண்டு மேலே பேச ஆரம்பித்தார்

ஓடாநிலை:

அவையோர்களே அடிபட்ட நாகம் பழி தீர்க்க வராமலா போகும், நானும் சேர்வையாரும் அன்றே எதிர்பார்த்திருந்தோம் காரணம் நாம் மெக்ஸ்வெல் லிற்க்கு போட்டது உயிர் பிச்சை, அதை திருப்பி நமக்கு தர வருவான் என்றே எண்ணினோம் என தீரனார் கூறினார்

அவையோர்களின் முகத்தில் குழப்பம் நீங்கி தெளிவு பெற ஆரம்பித்தது காரணம் எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் என்பதால் யுத்திற்கான யோசனைகளும் சேனைகளும் தயாராக இருக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது

அவையோரின் முக குறிப்பை அறிந்த தீரனார் மீண்டும் பேச ஆரம்பித்தார், நாங்கள் எதிர்பார்த்தது மிகவும் தாமதமாக தான் நடந்துள்ளது இந்த யுத்தமானது ஆறு மாத காலத்திற்கு முன்னரே நடந்திருக்க வேண்டியது, பாவம் நமை எதிர்க்க பரங்கியர்களின் படை போதாது என சில துரோகிகளை சேர்த்து கொள்ள கால அவகாசம் தேவை பட்டது போல என நகைத்தவாரே கூறினார் தீரனார்

மேலும் தொடர்ந்தார் பரங்கியனுக்கு தேவைபட்ட கால அவகாசம் நமக்கு தேவையில்லை காரணம் கொங்கு மண்டலம் என்ன மான் கூட்டங்களையா ஈன்று எடுத்தது? சிங்கங்களேன இளைஞர் கூட்டத்தை அல்லவோ ஈன்று எடுத்துள்ளது, நமக்கா படை திரட்ட, பயிற்சி அளிக்க, கால அவகாசம் தேவை என கேட்க

ஒட்டு மொத்த அவையும் பெருமையுடன் தலை நிமிர்ந்து இல்லை இல்லை என ஒரு மித்த குரலில் பதில் சொல்லியது

பதிலை கேட்ட தீரனாரோ அமைதி கொண்ட முகத்தில் வீரம் பொருந்த பெருமிதம் மிளிர நிமிர்ந்து நின்றார்

சற்றே அவை அமைதியாகும் வரும் காத்திருந்த தீரனார் சேர்வையாரை காண, சேர்வையாரும் தன் மன்னனின் முக குறிப்பறிந்து தாமே முன் வந்து பேச ஆரம்பித்தார் அவையோர்களே இம் முறை படை கொண்டு வரும் வெள்ளையனை வெளியேற அனுமதிப்பதில்லை நம் மண்ணில் இருந்து என கர்ஜித்தார்

அவையே அந்த கர்ஜனையை கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது, மேலும் சேர்வையார் தொடர்ந்தார், இந்த முறை வரும் வெள்ளையனில் ஒருவர் கூட புற முதுகிட்டு ஓடாதவாரு வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது, வரும் யுத்தமானது இனி பரங்கியன் கொங்கு சீமைக்குள் கால் வைப்பதற்க்கு முன் ஒரு முறை அல்ல ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என கூறியவாரே தீரனாரை கண்டார்

அவை மொத்தமும் சேர்வையாரின் மொழி கேட்டு ஆனந்தத்தில் ஆகா ஆகா என ஆஹாரம் செய்தது

மேற்கொண்டு தீரனார் பேசலானார் அவையோர்களே இம்முறை போர் ஆனது வேறு எங்கும் நடத்த போவது இல்லை இதோ நாம் கோட்டை கட்டி ஆளும் இந்த பூமியிலேயே நடக்க போகிறது,

ஓடாநிலை என்றால் ஓடாது நிலைந்து நிற்பதாகும் அதற்கு உதாரணமாக நடக்க போகும் யுத்தமானது இருக்கவிருக்கிறது

நாம் ஓடாம் நின்று எதிரிகளை சிதறி ஓட விடாமல் அழிக்கவும், அழித்து நாம் இங்கு நிலைத்து நிற்பதை பரங்கியனுக்கு காட்டவும் இந்த போரை இங்கே நடத்த முடிவு செய்தோம்,

இனி ஓடாநிலை என்பது காரண பெயராகவே வரலாறு பதிவு செய்யும் என வீரம் தெரிக்கும் குரலில் கூறினார்

தீரனாரின் வீரம் மிகுந்த பேச்சை கேட்ட சேர்வையார் முதல் அவையோர் வரை மிக பெரிய ஆனந்த அமைதியில் மூழ்கினர், சிறிது வினாடியிலேயே உணர்வு பெற்ற சேர்வையார் தீரனார் வாழ்க என வெற்றி முழக்கமிட அடுத்த நொடியில் அவையோர்கள் அனைவரும் தீரனார் வாழ்க, ஓடாநிலை வாழ்க, கொங்கு வாழ்க என எழுப்பிய ஜெய கோசமானது வரும் போரின் வெற்றியை முடிவு செய்தது

கர்னல் மெக்ஸ்வெல்:

சரியாக இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலை நேரம்

கர்னல் மெக்ஸ்வெல் சுமார் ஆறடி உயரம் வெள்ளை சட்டையில் சிவப்பு நீண்ட பட்டை யுடன் மார்பில் பல வித பதங்கங்களை மாட்டியவாறு தன் படையின் முன்னே வந்து கொண்டிருக்கிறான் அவ்வப்போது தன் படைகளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வருகிறான்

சுமார் இரண்டாயிரம் காலாட்படைகள், ஏழுநூறு குதிரை வீரர்கள், பலம் வாய்ந்த பீரங்கிகள் என அனைத்து படை பிரிவையும் அழைத்துக்கொண்டு தான் பெற்ற அவமானத்திற்கு பலி தீர்க்க ஓடாநிலை அருகில் வந்து கொண்டிருந்தான்

உடன் வந்த லெப்டினல் கர்னல், கர்னல் சார் எனக்கு என்னவோ தவறாக தெரிகிறது என்றான்

கர்னல் என்ன தவறாக தெரிகிறது என கேட்க்க

லெப்டினல் கர்னல், அந்த தீர்த்தகிரியும் சாமானியன் கிடையாது என கூறி முடிக்கும் முன் கர்னல் மெக்ஸ்வெலின் சிவந்த முகம் இன்னும் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது என் முன் நம்எதிரியை புகழ உனக்கு என்ன தைரியம் என சப்தமிட அடுத்த வினாடி லெப்டினல் கர்னலின் குதிரை பின்னே சென்று விட்டது

கோபத்துடன் கர்னல் நொய்யல் ஆற்றங்கரை போரை நியாபகபடுத்திக்கொண்டு இம்முறை அந்த தீர்த்தகிரியின் தலையை எடுத்துக்கொண்டு நான் லண்டன் செல்வேன் என்றே மனதுக்குள் கருவிக்கொண்டே வந்து கொண்டிருந்தான், கோட்டையின் உச்சி பார்வையில் படலாயிற்று

கோட்டையின் உச்சி தெரிய ஆரம்பித்த இடத்திலேயே கூடாரங்களை போடுமாறு உத்தரவிட்டான்,

கூடாரங்கள் அமைய பெற்று அங்கிருந்த படியே மெக்ஸ்வெல் கோட்டையை கவனிக்க ஆரம்பித்தான்

அவன் மனதில் ஹாஹாஹஹாஹா மண்ணாலான கோட்டை அதுவும் பீரங்கிகள் பாதுகாப்பு இல்லாமல் வைத்துள்ளான் தீர்த்தகிரி இந்த சந்தர்ப்பம் போதுமே, ஒரே ஒரு பீரங்கி கொண்டு மொத்த கோட்டையையும் துவசம் செத்து விடலாம் பிறகு கோட்டையில் இருந்து வெளிவரும் குதிரை வீரர்களை மற்ற பீரங்கிகள் கவனித்துக்கொள்ளும், தேவையில்லாமல் இரண்டாயிரம் காலாட்படை அழைத்துக்கொண்டு வந்து விட்டோம் என்ற வெற்றி சிந்தனை அவன் நெஞ்சத்தில் அலையடித்துக்கொண்டிருந்தது

கூடாரங்கள் அமைய பெற்ற உடன், தன் கூடாரத்திற்க்கு திரும்பிய கர்னல் தன் லெப்டினல் கர்னல்களை அழைத்து வர உத்தரவிட்டான்

மெக்ஸ்வெல் தன் மனதில் உதித்த திட்டத்தை தன் லெப்டினல் கர்னல்களிடம் விலக்கிக்கொண்டு இருந்தான், அனைத்து உப தளபதிகளும் அருமையான திட்டம் அருமையான திட்டம் என புகழ்ந்து கொண்டிருந்தனர் ஆனால் ஒரு லெப்டினல் கர்னல் மட்டும் எந்த ஒரு முககுறியையும் காட்டாமல் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்

அவனை கண்ட மெக்ஸ்வெல் சற்றே தொண்டையை செறுமி என்ன ஜேம்ஸ் ஏதாவது சொல்ல வேண்டுமா என கேட்டான்

ஜேம்ஸ் என்ற லெப்டினல் கர்னல் எஸ் யுவர் ஹைனஸ் நீங்கள் அனுமதித்தால் பேசறேன் என்றான்

கர்னலும் கையை உயர்த்தி அனுமதி தர ஜேம்ஸ் என்ற லெப்டினல் கர்னல் நாம் நம் எதிரியை குறைத்து மதிப்பிடுகிறோம் என நினைக்கிறேன் என கூற

மெக்ஸ்வெல் தீப்பிழம்பாய் என்னை விட போர் திறனில் வல்லவனா நீ என ஆத்திரத்தில் கத்தினான்

எதுவும் பேசாமல் லெப்டினல் கர்னல் தலையை குனிந்த வண்ணம் வெளியேறினான், வெளியேறிய ஜேம்ஸ் நேராக கோட்டையை நோக்கி சென்று கோட்டையையே பார்த்துக்கொண்டு இருந்தான்

மெல்ல மெல்ல இருள் சூழ கோட்டை மதிலில் சில இடங்களில் மட்டுமே தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு காவல் நடமாட்டம் குறைந்திருப்பதை கவனித்துக்கொண்டு இருந்தான்

பூட்சின் ஒலி கேட்க அவனுக்கு தெரிந்து விட்டது வருவது மெக்ஸ்வெல் என்று, வந்த கர்னல் ஜேம்ஸ் என்று அழைக்க

திரும்பிய ஜேம்ஸ் ம் தன் வலது கையை உயர்த்தி வணக்கத்தை வைத்து காத்திருந்தான் கர்னலின் மொழிக்காக

ஜேம்ஸ் மற்ற லெப்டினல் கர்னல்கள் முன்னால் உன்னை அவமானபடுத்தி இருக்க கூடாது இருந்தாலும் அப்படி நீ அவர்கள் முன்னால் பேசியது தவறு என கூறினான்

லெப்டினல் கர்னல் ஜேம்ஸ் ஐ ம் சாரி யுவர் ஹைனஸ் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன் மன்னியுங்கள் என்றான்

மெக்ஸ்வெல் சரி போகட்டும் எதை வைத்து நீ சந்தேகபடுகிறாய் வரும் வழி எல்லாம் பார்த்தாயா நம் படை கண்டு அஞ்சி ஓடியவர்கள் தான் அதிகம் அது மட்டும் இல்லை சுற்றிலும் பார் ஏதோ புல் கட்டுகளை அடுக்கி வைத்து மிருகங்களை அதை சாப்பிட வைத்துள்ளார்கள் முட்டாள் மக்கள் என சிரித்த வண்ணம் கூற

லெப்டினல் கர்னல் ஜேம்ஸ் யுவர் ஹைனஸ் நமக்கு வந்த தகவல் படி தீர்த்தகிரி கோட்டையை விட்டு வெளியேற வில்லை ஆனால் யுத்ததிற்க்கு தயாராகவும் இல்லை காரணம் கோட்டையை பாருங்கள் பாதுகாப்பு குறைவாகவே இருக்கிறது அதனால் தான் சந்தேகம் என கூறினான்

கர்னலோ ஜேம்ஸ் நீ அதிகம் யோசிக்கிறாய், நாளை காலை பார் முதல் குண்டு கோட்டை சுவற்றை தாக்கிய உடன் அந்த தீர்த்தகிரி என் காலில் வந்து விழுவான் அவனுக்கு பயம் வந்து விட்டது என விண்ணும் மண்ணும் அதிர சிரித்தான் கர்னல் மெக்ஸ்வெல்

லெப்டினல் கர்னல் ஜேம்ஸ் யுவர் ஹைனஸ் ஏன் தாக்குதலை இப்போதே ஆரம்பிக்க கூடாது என கேட்க

கர்னலோ அவசரம் என்ன நாளை காலை வரை அந்த தீர்த்தகிரி சுகந்திரமாய் இருக்கட்டும் அதுவரை நீ போய் ஓய்வெடு என கூறி கர்னல் மெக்ஸ்வெல் கிளம்பினான்

லெப்டினல் கர்னல் ஜேம்ஸ் ஓ கோட்டையை திரும்பி பார்த்த வண்ணம் தன் கூடாரத்தை நோக்கி நடந்தான்

கோட்டை மந்திர புன்னகை பூத்துக்கொண்டிருந்தது அவர்களை பார்த்து

கொங்கு சீமையின் வரலாற்று போர்:

காலை நேரம் மெக்ஸ்வெல் தன் ஆணைகளை அவசர அவசரமாக பிறபித்துக்கொண்டு இருந்தான்

பீரங்கிகள் எல்லாம் தயார்படுத்தப்பட்டு வந்தன அதன் பின்னால் குதிரைபடை, காலாட்படை வீரர்கள் சிலர் அந்த பீரங்கிகளுக்கு பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தனர்

இருந்தும் கோட்டையில் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமலேயே காணப்பட்டது, ஜேம்ஸ் மட்டும் அதை கவலையோடு பார்த்துக்கொண்டு இருந்தான்

அனைத்து பீரங்கிகளும் கோட்டையின் முன் பகுதி முழுவதும் தகர்த்து எறியும் வண்ணம் நிறுத்தப்பட்டு இருந்தது

மெக்ஸ்வெல் தன் ஆணையை பிறப்பித்தான் பீரங்கிகளை இயக்க தயாராகும் படி, அடுத்த வினாடிக்குள் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் நடக்க ஆம்பித்தன

எங்கிருந்தோ வந்த பீரங்கி குண்டுகள் மெக்ஸ்வெல்லின் பீரங்கிகளை அழிக்க ஆரம்பித்தன, எந்த திசையில் இருந்து வருகிறது பீரங்கி குண்டுகள் என கண்டறியும் முன் பரங்கியனின் மொத்த பீரங்கிகளும் சேதமடைந்து விட்டன, அதற்க்கு பாதுகாவலாய் நின்ற வீரர்களின் சிரமும் கரமும் கால்களும் தனிதனியாய் கிடக்க அவர்களின் ரத்தம் தோய்ந்த சேதமடைந்த பீரங்கிகள் மெக்ஸ்வெல்லை அச்சபடுத்தின

சுற்றிலும் அடுக்கி வைக்கப்பட்ட புல் கூடாரங்களில் இருந்து பீரங்கிகள் வெள்ளையனின் குதிரைபடையை தாக்கியபடியே முன்னேறதுவங்கின, அப்போது தான் புரிந்தது கர்னல் மெக்ஸ்வெல்லிற்க்கு மீள முடியா யுத்த தந்திரத்தில் தான் மாட்டியுள்ளது என்பது

கர்னலின் குதிரைபடை யில் இருந்த குதிரைகள் பீரங்கிகளின் ஒலி கேட்டும் அதன் தாக்குதலை கண்டு அஞ்சியும் நாலா திக்கிற்க்கும் தறிகெட்டு ஓட ஒரம்பித்தன,

இயங்கி கொண்டு வந்த பீரங்கிகளின் பின்னால் இருந்து எங்கிருந்தோ பறந்து வந்த அம்புகள் காலாட்படையை சேத படுத்த ஆரம்பித்தன

தறிகெட்டு ஓடிய குதிரைகளின் முக்கால் பாகமானது கோட்டையை நோக்கியே ஓடின, கோட்டையின் உச்சியில் இருந்து முரசறையும் சப்தம் நாலா திக்கும் கிளம்ப கோட்டை கதவுகள் திறக்கப்பட்டு அஞ்சா நெஞ்சன் தீரன் சின்னமலை தன் பெயருக்கு ஏற்ப பூரண போர் கோலத்துடன் தன் குதிரை படையை அழைத்துக்கொண்டு தறிகெட்டு வரும் வெள்ளையனின் குதிரைபடையை சம்கரிக்க ஆரம்பித்தார்

ஓடாநிலை கோட்டை முன் எதிரிகளின் உதிரம் வினாடிக்கு வினாடி தெறிப்பது அதிகரிக்க ஆரம்பித்து, நடக்கும் சூழலை உடனே உணர்ந்த கர்னல் தன் காலாட்வீரர்களை முன்னேற உத்தரவிட்டான் அதற்க்குள் காரியம் கை மீறியது வலதும் இடதுமாய் கருப்ப சேர்வையாரின் தலைமையில் இடியென கொங்கின படை வெள்ளையனின் மேல் விழுந்தது

பார்க்கும் இடமெல்லாம் வெள்ளையனின் உதிரமே பாய ஆரம்பித்தது, பதறி நின்றான் கர்னல் மெக்ஸ்வெல், இனியும் பார்த்து பலனில்லை என்று படைகளை திரும்ப அழைக்கும் நோக்கோடு உத்திரவை பிறபிக்கும் எண்ணம் கொண்டு திரும்பிய போது

காலகண்டனாய் வெண்ணிற புரவியில் காய்ந்த உதிரம் கவசமெங்கும் காண ஆங்காங்கே சில துளி ரத்தம் கவசத்தில் இருந்து சிதறியபடி கரத்தில் இருந்த வாளில் ரத்தம் சொட்ட சொட்ட தீரன் சின்னமலை தன்னை நோக்கி வருவதை பார்த்தான், சிதறிய ரத்தமும் தீர்த்தகிரி காராளனின் ரத்தம் அல்ல தான் துணைக்கு அழைத்து வந்த வீரர்களின் ரத்தம் தானேன்று உடனடியாக புரிந்து கொண்டான் கர்னல் மெக்ஸ்வெல்

கர்னலும் தீர்த்தகிரி காராளனை எதிர் கொள்ளும் வண்ணம் தன் வாளை உறுவினான், உறுவிய வேகமே சொல்லாமல் சொல்லிவிட்டது கர்னலின் கதையை, தீரனார் பாய்ந்து வந்த அடுத்த நொடி தன் வாளை இடியென இறக்கினார் கர்னல் மீது, கர்னலும் தீரனாரின் வாள் வீச்சில் தப்பவும் தடுக்கவும் மட்டுமே திறன் கொண்டு இருந்தான், எதிர் தாக்குதல் செய்ய இடம் கொடுக்கவே இல்லை தீரன் சின்னமலையார்

ஒரே நேரத்தில் உயர்ந்த இரு வாட்களும் ஏக சமயத்தில் இறங்க வினாடி நேரத்தில் கர்னலின் வாளை மின்னலென தடுத்த தீரனாரின் வாள் அடுத்த வினாடியின் மெக்ஸ்வெல்லின் தலையை எடுத்தது

கர்னல் மெக்ஸ்வெல் தலை துண்டாக மண்ணில் விழுந்த அடுத்த அடுத்த நிமிடங்களில் சுற்றி நின்ற பகைவர்களுக்கு வெலவெத்து விட்டது, தோன்றிய திக்கில் எல்லாம் ஓட ஆரம்பித்தார்கள், தீரனாரின் குதிரைபடை ஒருவரையும் விடாமல் வேட்டையாடி வெற்றியை தீரனாரின் திருக்கரங்களில் சமர்பித்தனர்

முற்றும்

இதன் பின் தான் இரு ஆண்டுகள் கழித்து அசைக்க முடியாத பீரங்கி படைகளுடன் வந்த வெள்ளையன் ஓடாநிலை கோட்டையை முற்றிலும் தகர்த்து எறிந்தான், சேர்வையாரின் வேண்டுகோளுக்கு இணங்க தீரனார் ஓடாநிலை விட்டு வெளியேறி சமையல்காரனால் காட்டி குடுக்கப்பட்டு சங்ககிரி மலையில் ஜீலை 31,1805 ஆம் ஆண்டு உயிர் நீத்தார்.ஆனால் இறுதி வரை வெள்ளையனின் எந்த ஒரு கட்டளைக்கும் அடிபணியாமல், எந்த சமரசத்துக்கும் உட்படாமல் நின்று, என்றும் நம் மனதை வென்று நின்றார் தீரன் சின்னமலை ( எ ) தீர்த்தகிரி பாளையக்காரர்.

(இத நா போடரதுக்கு காரணமே என்னோட முகநூல் சொந்தம் பரணிவேல் அண்ணாதான்.எங்க சைட்ல சித்திரைதிருநாளுக்கு எதாவது எழுதனும் ஐடியா குடுங்கனு கேட்டதுக்கு இந்த இத போட சொல்லி ஐடியா குடுத்தது அவருதான் இதனுடைய பாராட்டும் அவரையே சேரும்❤❤❤)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here