தணலை எரிக்கும் பனித்துளி 1

3
5084

ஹாய் மக்களே,

எந்த காரணத்திற்காக இப்போ இந்த கதையை எழுத ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியல.. எதில் இருந்தோ தப்பிச்சு ஓடுற மாதிரி ஒரு மாற்றத்திற்காக இதை ஆரம்பிச்சு இருக்கேன். குட்டி நாவல் தான்..சோ எபி பெருசா இல்லைன்னு யாரும் சண்டைக்கு வர கூடாது.

அத்தியாயம் 1

விடியற்காலை நேரம்… மரங்கள் பூத்துக்குலுங்கி மரங்கள் பூமாரி பொழிய… மெல்லியதாய் உடலை வருடி செல்லும் தென்றலை ரசித்தபடி தன்னுடைய காலை நேர ஜாகிங்கை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் கெளதம். எத்தனை நாட்கள் ஆயிற்று இந்த இதத்தை அனுபவித்து….

கெளதம் தன்னுடைய மேற்படிப்பை அமெரிக்காவில் முடித்து விட்டு போன வாரம் தான் இந்தியா திரும்பி இருக்கிறான். அமெரிக்காவின் செயற்கை அழகு இத்தனை நாட்களாக எப்போதடா இந்தியா திரும்புவோம் என்று அவனை ஏங்க வைத்திருந்தது. சொந்த மண்ணின் மீது அவனுக்கு இருந்த பற்று அந்த அளவிற்கு அலாதியானது.

அந்த காரணத்தினால் தான் அவனுக்கு அங்கேயே வேலை கிடைத்த பொழுதும் கூட அதை உதறித் தள்ளி விட்டு இங்கேயே வந்து விட்டான். உண்மையை சொல்லப் போனால் அவன் அமெரிக்கா சென்றது அங்கே இருக்கும் வசதிகளை எண்ணிப் பார்த்து தான். படிப்பு முடிந்ததும் அங்கேயே செட்டில் ஆகி விடுவதும் தான் அவனுடைய அப்போதைய எண்ணமாக இருந்தது. ஆனால் போய் கொஞ்ச நாளிலேயே அவனுக்கு அந்த வாழ்க்கை முறை பிடிக்காமல் போய் விட்டது.

பின்னே எப்படி பிடிக்கும்?          

காலையில் எழுந்ததும் அம்மா கையால் காபி குடித்து, அப்பாவுடன் அன்றைய நிகழ்வுகளை கலந்து பேசியபடியே காலை உணவை உண்டு… பாட்டி, தாத்தாவிடம் செல்லம் கொஞ்சி இருவரையும் வம்புக்கு இழுத்து… என்று அதுநாள் வரை வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வந்தவன் அவன். படிக்கும் காலத்தில் உடன்படித்த மற்ற நண்பர்கள் வெளிநாட்டில் போய் படித்து விட்டு அங்கேயே செட்டிலானால் தான் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று சொன்னதை நம்பி போனவனுக்கு அங்கே போன சில மாதங்களிலேயே புரிந்து விட்டது. தன்னால் அங்கே தொடர்ந்து தங்க முடியாது என்பது புரிந்து போய் விட நல்ல பிள்ளையாக படிப்பை மட்டும் முடித்து விட்டு போன வாரம் தான் ஊருக்கு திரும்பி இருக்கிறான் கெளதம்.

அடுத்த வாரம் அவனது நண்பனின் கம்பெனியிலேயே உயர்ந்த பதவி காத்துக் கொண்டு இருக்கிறது. அதில் போய் சேர்ந்து கொள்ள வேண்டியது மட்டும் தான் பாக்கி.

ஜாகிங் முடித்து நேராக வீட்டுக்கு வந்தவனை எதிர்கொண்டார் அவனது தாய் மரகதம். மகனின் மீது அதீத பாசம் கொண்டவர். மகனின் ஒவ்வொரு செயலையும் எண்ணி எண்ணி பூரித்து போய் விடுவார். வெகுநாட்கள் குழந்தையே இல்லாமல் பத்து வருடத்திற்கு பிறகு பிறந்த மகன் கெளதம். அவன் சிரித்தாலும் அவருக்கு அழகு, முறைத்தாலும் அழகு… அவன் எது செய்தாலும் அதைப் பற்றி நாலு வார்த்தை ஊராரிடம் பெருமையாக பேசாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. அந்த அளவிற்கு மகன் மீது பாசம் அதிகம்.

கெளதம் கொஞ்சம் கோபக்காரன்.அப்படி அவன் கோபமாக பேசினால் கூட என் பிள்ளையை யார் கோபப்படுத்தியது என்று தான் அவர் திட்டுவார்.அந்த அளவில் இருந்தது அவரது அன்பும், பாசமும்.

அவர் அப்படி இருக்க, கௌதமின் தந்தை ராஜன் அவருக்கு அப்படியே எதிரானவர். பாசத்தில் எந்த குறையும் வைக்க மாட்டார். அதே நேரம் அளவுக்கு அதிகமாக மகனை பாராட்டவும் மாட்டார். ஊரே அவன் செய்த செயலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் அவரது பாராட்டு ஒற்றை தலை அசைப்பு மட்டுமே. மற்றபடி மனிதர் நல்லவர் தான். கலகலப்பான பேர்வழியும் கூட…

“வா கெளதம்… போய் குளிச்சுட்டு வந்துடு.. டிபன் ரெடியா இருக்கு. எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்.”

“சரிமா…ஒரு பத்து நிமிஷத்தில் வந்திடறேன்” என்று இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறியவன் சொன்னதைப்  போல பத்தே நிமிடத்தில் குளித்து தயாராகி கீழே வந்து விட்டான்.

“அம்மா … ரொம்ப பசிக்குது… காலையில் என்ன டிபன்?…”

“உனக்கு பிடிச்ச வெங்காய தோசை செஞ்சு இருக்கேன் கெளதம்… ஓடி வா.. சூடா சாப்பிடுவ”

“ஆமா கெளதம் சீக்கிரம் வா.. நீ வந்து உட்கார்ந்த பின்னாடி தான் உங்கம்மா எங்க எல்லாருக்கும் டிபனை கண்ணில் காட்டுவா போல” என்றார் ராஜன் கிண்டலாக.

“ஆமாண்டா பேராண்டி” என்று கோரசாக கூறி மரகதத்தின் பிபியை மேலும் எகிற வைத்தார்கள் கௌதமின் தாத்தாவும் பாட்டியும்

“அத்தை… மாமா.. நீங்களும் அவரோட சேர்ந்து என்னை வம்பு இழுக்கறீங்களா?” என்று பொய்யாக முறைத்தபடியே இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவர் கேட்க…

செல்லத்தாயும் ,ராமசாமியும்  இப்பொழுது வெளிப்படையாக நடுங்கிக் காண்பித்தார்கள்.

“பாரு…பாரு… நீ இருக்கும் பொழுதே எப்படி மிரட்டுறா பாரு.. நீ அமெரிக்காவில் படிக்கப் போய் இருந்த இத்தனை வருசமும் எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பாடு போடுறா.. அதுவும் கூட கஞ்சி தான். என்னம்மா இப்படி செய்யுறன்னு கேட்டா… என்ன சொல்றா தெரியுமா? உங்க ரெண்டு பேருக்கும் வயசாகிடுச்சு… இந்த வயசுக்கு மேல இட்லி ,தோசை எல்லாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகுறது கஷ்டம். அதனால இதையே சாப்பிடுங்கன்னு சொல்லிட்டா” என்று முகவாயில் கை வைத்து பேசியபடியே அங்கலாய்த்த பாட்டியை ரசித்து மகிழ்ந்தான் கெளதம். அவர் சொன்ன அனைத்துக்கும் அவரது கணவனும், மகனும் ஆமா சாமி போட தனியாளாக மாட்டிக் கொண்டு முழித்த தாயைப் பார்த்து சிரிப்பு பீறிட்டு எழுந்தது அவனுக்கு.

“டேய் கௌதம் இவங்க சொல்றதை நம்பாதேடா.. நான் அப்படி எல்லாம் செய்யவே இல்லை. வேணும்னே எல்லாரும் என் மேல பழி போட்டு உன்னையும் என்னையும் பிரிக்கப் பார்க்கிறாங்க” என்ற பதட்டத்துடன் சொன்ன மரகதம் கொஞ்சம் விட்டால் அழுது விடுவார் போல தோன்ற உடனடி நடவடிக்கையில் இறங்கினான் கெளதம்.

“என்ன எல்லாருமா சேர்ந்து என் அம்மாவை டீஸ் பண்ணுறீங்களா? என்னோட செல்ல அம்மாவைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீங்க எல்லாரும் தான் ஏமாத்தறீங்க. மை மம்மி இஸ் ஆல்வேஸ் ஸ்வீட்” என்று செல்லம் கொஞ்சியவாறே அவரது தோள்களில் கை போட்டுக் கொள்ள இப்பொழுது கெத்தாக எல்லாரையும் நிமிர்ந்து பார்ப்பது மரகதத்தின் முறையானது.

“சரி சரி பேசினது போதும்.. மரகதம் எல்லாருக்கும் டிபனை எடுத்து வை” என்றார் ராஜன். எல்லாரும் பழைய நிலைக்கு திரும்பி கலகலப்பாக சிரித்து பேசியபடியே உண்டு முடிக்க மகனுடன் அமர்ந்து சற்று நேரம் பேசினார் ராஜன்.

“கெளதம்… அடுத்த வாரம் சென்னையில் வேலைக்கு ஜாயின் பண்ணிக்கிறதா முடிவு பண்ணிட்டியா?”

“ஆமாப்பா… என்ன தான் பிரண்டோட கம்பெனியா இருந்தாலும் அதுல நாம ரொம்பவும் சலுகை எடுத்துக்கக் கூடாது இல்லையா?”

“உண்மை தான் கெளதம்… ஏன் கெளதம் மறுபடி கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதே… நீ இந்த வேலைக்கு போய்த் தான் ஆகணுமா? கவர்மென்ட் வேலைக்கு முயற்சி செஞ்சா உனக்கு இருக்கிற திறமைக்கு சீக்கிரமே கிடைச்சுடும்”

“அப்பா… எத்தனை தடவை சொல்றது? எனக்கு அதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைப்பா… கொஞ்ச நாள் வேலை பார்க்கப் போறேன்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் நானே சொந்தமா பிசினெஸ் ஆரம்பிக்கப் போறேன்”

“பிசினஸ் செய்யுறது அவ்வளவு சுலபம் இல்ல தம்பி.. அதுல ஆயிரம் பிரச்சினை வரும்.கவர்மென்ட் உத்தியோகம்னா அந்த டென்ஷன் எல்லாம் இருக்காது.வேலையை ஒழுங்கா செஞ்சா போதும். சம்பளம் ஒழுங்கா வரும். பிசினஸ்ல லாபம் மட்டும் தான் வரும்னு உறுதியா சொல்ல முடியாதே…”

“அப்பா… எந்த தொழிலா இருந்தாலும் லாபமும் நஷ்டமும் சகஜம் தான்… முறையா செஞ்சா லாபம் வரப் போகுது. நீங்க அதெல்லாம் கவலையே படாதீங்க… நான் நல்லபடியா தொழில் செஞ்சு பெரிய ஆளா வருவேன்” என்றான் நம்பிக்கையுடன்.

மகனின் நம்பிக்கையை கெடுக்க மனமில்லாமல் அவர் அமைதியாகி விட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி தனக்கு வேண்டிய புது துணிகள், ஷூ உள்ளிட்ட சில பொருட்களை வாங்குவதற்காக கிளம்பி வெளியே போனான் கெளதம்.

கோயம்புத்தூரில் இருக்கும் பெரிய மாலில் நுழைந்தவனின் கண்கள் ஒரு தேர்ந்த வியாபாரியைப் போல அங்கிருந்த ஒவ்வொரு கடையையும் அலசி ஆராய்ந்தது. ஒவ்வொரு கடையிலும் பொருள் அடுக்கி வைத்திருக்கும் விதத்தில் இருந்து, கண்ணாடி அமைத்து இருக்கும் விதம் வரை என்ன காரணம் இருக்கக்கூடும் என்பதை மனதில் அலசியவாறே வந்தவன் தனக்கு வேண்டிய பொருட்களை நிதானமாக ஒவ்வொரு கடையாக ஏறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

அவன் இப்பொழுது வந்தது பொருட்களை வாங்குவதற்கு மட்டும் அல்லவே… திறமையாக தொழில் நடத்துவது என்றால் சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது அவன் நன்கறிந்த விஷயம்.

அடுத்த வாரம் வேலைக்கு சேர்ந்து விட்டால் அங்கே அவன் கற்றுக் கொள்ளப் போவது வேறுமாதிரியான அனுபவமாக இருக்கும் என்பதை எண்ணி ஆர்வமுடன் இருந்தான் கெளதம். இந்த வேலையினால் தன்னுடைய வாழ்க்கையே எதிர்பாராத திசையில் பயணிக்கப் போவதை அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை என்பது தான் நிஜம்.

ஆம்…. அங்கே அவனது வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைக்கப் போகும் ஒரு மங்கை இருக்கக்கூடும் என்று அவன் கனவு கண்டானா என்ன?

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 3 Average: 4.3]

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here