தணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 20

0
153

அத்தியாயம் 20
மொத்த வீட்டையும் தலைகீழாக மாற்றி இருந்தார்கள். கௌதமின் வீட்டுத்தோட்டத்தின் முன் பகுதியில் புதிதாக ஒரு குடிசை ஒன்று முளைத்திருந்தது. அன்று காலை அவன் வேலைக்கு சென்றிருந்த போது அந்த குடிசை இல்லை என்பது அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும். அவன் வெளியே கிளம்பிய பிறகுதான் அவசர அவசரமாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அது யாருடைய வேலையாக இருக்கும் என்பதை யோசிக்க பிரமாதமான மூளை தேவை இருக்கவில்லை. மருதாணியின் வேலையாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் எதற்காக இந்த ஏற்பாடு என்பது புரியாமல் கொஞ்சம் குழம்பினான்.
ஒரு வேளை வீட்டை விட்டு வெளியே வந்து தங்க முடிவு செய்துவிட்டாளோ என்று ஒரு நொடி தவித்துப் போனான். தான் இல்லாத நேரத்தில் மருதாணிக்கும், தன்னுடைய தாய்க்கும் இடையே ஏதேனும் வாக்குவாதம் நிகழ்ந்து … அதனால் இந்த முடிவை எடுத்திருப்பாளோ என்றெல்லாம் யோசித்து வெகுவாக கலங்கினான். ஆனால் வெளியே நின்று இப்படி கண்டதையும் யோசித்துக் குழம்பிக் கொண்டே இருப்பதை விட வீட்டிற்கு சென்று அவர்களிடமே கேட்டு விடுவது தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவன் காரை பார்க்கிங் ஏரியாவில் கூட நிறுத்தாமல் அவசரமாக இறங்கி வீட்டிற்குள் ஓடினான் கௌதம்.
ஆனால் வீட்டில் அவன் எதிர்பார்த்த காட்சிக்கு மாறாக வேறு ஒரு காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. டைனிங் ஹாலில் அமர்ந்து மருதாணி உணவு உண்டு கொண்டிருந்தாள். அவனின் பாட்டி பரிமாறிக் கொண்டு இருக்க, சற்று தொலைவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய தாயின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
கௌதம் வீட்டிற்குள் நுழைவதை அவர்களுக்கு முன்னே பார்த்துவிட்ட மரகதம் வேகமாக மகனை நோக்கி சென்றார் .
“இந்தா பாருடா தம்பி.. இந்த வீட்டுல உன்னையும் , என்னையும் பிரிக்கிறதுக்கு பெரிய சதியே நடக்குது. யார் என்ன சொன்னாலும் அதெல்லாம் அப்படியே கேட்டு தலையாட்டிடாதே. எதுவா இருந்தாலும் எங்க அம்மா சொல்ற படி தான் நடக்கும்ன்னு சொல்லிடு. சொல்றது புரியுதா? என்னைக் கேட்காமல் எதையும் செய்ய வேண்டாம். அவங்க சொல்ற எதையும் செய்யணும்னு நமக்கு அவசியம் இல்லை”

கௌதமிற்கு தாய் சொல்வதில் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. மற்ற இருவரும் ஏதேனும் சொல்வார்களா என்று எண்ணி அவர்கள் முகத்தையே சற்று நேரம் கூர்ந்து பார்த்தான். ஆனால் பாட்டியும் சரி மருதாணியும் சரி அவர்கள் இருவரையும் கண்டு கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. சாப்பிடுவதிலும், பரிமாறுவதிலும் முனைப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டார்கள். வேறுவழியின்றி மீண்டும் தாயின் முகத்தையே சோகத்துடன் பார்த்தான் கௌதம்.

” என்னம்மா சொல்றீங்க நீங்க சொல்றததுல எனக்கு எதுவுமே புரியல… சொல்றத கொஞ்சம் புரியும்படி தெளிவாக சொன்னால்தானே புரியும்.  என்ன பண்ணி உங்களையும் என்னையும் பிரிக்க பார்க்கிறாங்க? யாரை சொல்றீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டான் கவுதம்.

“எல்லாம் இந்த வீட்டுக்கு புதுசா வந்து இருக்குற மகாராணி தான். உங்க பாட்டிய கூட சேர்த்துக்கிட்டு எனக்கு எதிராக சதி பண்ணுறா தம்பி … வாசலில் புதுசா ஒரு குடிசையை போட்டு வச்சு அங்கே தான் உன்னை தங்க வைக்கும்னு புதுசு புதுசா  சொல்றாங்க… நீ போய் எதுக்காக அங்கே தங்கணும்? காட்டுல வாழ்ந்த அவளுக்கு வேணும்னா குடிசையில தங்கறது  சாதாரண விஷயமாக இருக்கலாம். நீ எதுக்கு தங்கணும்?  நீ வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்டவன்.”என்று பொரியத் தொடங்கினார்.
” இரண்டு பேரும் அப்படி சொல்லி இருந்தா அதில் ஏதாவது காரணம் இருக்குமே அம்மா அதை கேட்டீர்களா?” என்று கேட்க இப்பொழுது மரகதத்தை முந்திக்கொண்டு பேச வந்தார் செல்லம்மா.
” ஏன் கௌதம் மருதாணி ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருந்தாளாமே… அவங்க முறைப்படி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாசம் பையனுக்கு பொண்ணு வீட்டிலேயே தங்க வைக்கிற மாதிரி சடங்கு ஏதோ இருக்குன்னு” என்று கேட்க கௌதமின் தலை தானாகவே ஆடியது.

” ஆமாம் பாட்டி என்கிட்ட சொல்லியிருந்தா ஆனா அதுக்கும் இந்த குடிசைக்கு என்ன சம்பந்தம்?”

“கௌதம் முதல் விஷயம் என்ன தான் உனக்கும் மருதாணியும் அவங்க கிராம வழக்கப்படி கல்யாணம் நடந்து இருந்தாலும் இன்னும் நம்ம ஊர் வழக்கப்படி கல்யாணம் நடக்கல இல்லையா… அது வரைக்கும் உங்க ரெண்டு பேரையும் ஒரே வீட்டில் இருக்க வைக்கிறது சரிப்பட்டு வராது. அதனாலதான் உன்னை வெளியே தங்க வைக்கிறதுக்கு இந்த ஏற்பாடு பண்ணினேன். அதுமட்டுமில்லாம வீட்டுக்கு வந்த மருமகள… வயசு பொண்ணை தனியா தங்க வைக்கிறத நாலு பேரு பார்த்தாங்கனா வேற மாதிரி சொல்லுவாங்க. ஊரு வாய்க்கு அவலாகக்  கூடாதுனு தான் அப்படி ஒரு முடிவு செஞ்சேன்.

அது மட்டும் இல்லாம இந்த கல்யாண சடங்கு எல்லாம் செய்றதுக்கு அந்த பொண்ணு வீட்டு ஆட்கள் யாரும் இல்லையே… அதனால கல்யாணம் முடியற வரை நானும் உங்க தாத்தாவும் பொண்ணு வீட்டு ஆளுங்க தான்.

 உன்னை வீட்டுக்கு வெளியிலேயே தங்கவைக்க ஏற்பாடு பண்ணி இருக்கிறதும் அதே காரணத்தை மனதில் வைத்துதான். நீ சாப்பிடுறது எல்லாம் இங்கதான். தூங்கும் நேரம் மட்டும் அங்க போய் படுத்துக்கோ ” என்று சொல்ல அடுத்து பேச வந்த மரகதத்தின் பேச்சு பாட்டியின் நியாயமான வாதத்தில் அங்கே எடுபடாமல் போனது.

“கௌதம் அப்படின்னா அவங்க சொல்ற மாதிரி நீ வெளியே இருக்க குடிசையில்தான் தங்கிக்க போறியா ? உனக்கு ஏன் தம்பி இந்த தலையெழுத்து… நாங்க சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணி இருந்தா உனக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை வந்திருக்குமா?” என்று பேசத் துவங்க மருதாணியின் முகத்தில் இருந்த புன்னகை மாறாவிட்டாலும் பாட்டியின் முகம் கடுக்கத் தொடங்கியது. மருதாணியை கண் ஜாடை காட்டி வீட்டிற்குள் செல்ல சொன்னவர் வேகமாக மருமகள் முன் வந்து நின்றார்.

” ஏன்டி உனக்கு இத்தனை வயசு ஆகுது… அறிவு இருக்கா இல்லையா? இந்த வார்த்தையை நீ கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா பரவால்ல. இப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனிமே என்ன நடந்தாலும் சரி அவ தான் உன் மருமக. அவளை வச்சிக்கிட்டே இப்படி எல்லாம் பேசுறே அந்த பொண்ணு மனசு சங்கடப்படும்னு தெரிய வேண்டாம். அந்த பொண்ணுக்கு கேட்க யாருமே இல்லாமல் இருந்தால் இப்படிதான் பேசுவியா?

  உன் பையனுக்கு நீ எந்த மாதிரி பொண்ண எதிர்பார்க்கிற? பணக்காரியாவா?

அப்படி நீ நினைக்கிற மாதிரி ஒரு பணக்காரி இந்த வீட்டுக்கு வந்து இருந்தா இப்போ உன் பையன் முகத்துல இருக்குற சந்தோஷமும் நிம்மதியும் அப்போ இருக்காது. உனக்கு அது தான் வேணுமா?

இத்தனை நாள் உன் பையன் உன்னை விட்டு தனியே காட்டில் தானே இருந்தான்.அப்போ எல்லாம் சும்மா தானே இருந்த… கொஞ்ச நாளைக்கு தனியா தங்க வைக்க என்னவோ ரொம்ப பண்ணுற” என்று கேட்க அவரது கேள்விக்கு அதிர்ந்து போய் நின்றார் மரகதம்.

“இல்லத்த… நான் பணக்காரியா பாக்கல … ஆனா…” என்று பேசத் தொடங்கிய மருமகளை நோக்கி ஒற்றை  விரல் உயர்த்தி எச்சரித்தார் செல்லம்மா.

” இனிமேல் அதை பத்தி பேசி பிரயோஜனமில்லை மரகதம். அதை தயவுசெய்து புரிஞ்சுக்கோ. உன் மகனுக்கு அவதான் பொண்டாட்டி.. அவளுக்கு நீதான் மாமியார் . இத நினைச்சு உன் பையனே வருத்தப்படாம  சந்தோஷமா ஏத்துக்கிட்டான். நீ  எதையாவது பேசி பேசி உன் மகனோட சந்தோஷத்தை கெடுத்து அவன் வாழ்க்கையை நாசமாக்கிடாதே” என்று சொல்லி விட்டு செல்ல…

‘ அப்படின்னா இந்த வீட்டில் எனக்கு எதை பேசவும் உரிமையே இல்லையா?’ என்று கோபத்துடன் அங்கிருந்து சேரில் போய் அமர்ந்து கொண்டார் மரகதம்.
கெளதம் அதே நேரம் திருட்டுத்தனமாக வீட்டின் பின்புறத்தை பயன்படுத்தி மருதாணியைத் தேடி மொட்டை மாடிக்கு சென்றான்.

காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த மருதாணியின் கவனத்தை கவராமல் பூனை நடை போட்டு அவளுக்கு அருகில் சென்றவன் பின் பக்கமிருந்து அவளை ஆவலுடன் அணைத்துக் கொண்டான்.

யாரோ என்று எண்ணி பயத்தில் கத்தப் போனவளின் வாயை கைகளால் மூடியவன் அருகில் இருந்த வாட்டர் டேங்கின் கீழாக யாரும் பார்க்க முடியாத வண்ணம் அவளை இழுத்துக் கொண்டு நுழைந்தான்.
“நீங்களா? நான் பயந்தே போனேன்..” பயத்தில் படபடத்த அவளது கண்களை ரசித்தபடியே அவளது காதோர பூனை முடிகளை ஒரு விரல் கொண்டு அளந்தான்.
“எதுக்கு பயம்? நம்ம வீட்டில் யார் வந்து என்னோட மகாராணி மேல கை வைக்கப் போறாங்க?”அவன் குரல் குழைந்தது.
“அய்யயோ… நீங்க என்ன இவ்வளவு பக்கத்தில்.. வீட்டில் யாராவது பார்த்திடப் போறாங்க?”அவள் குரலில் மெல்லிய பதட்டம்…
“யாரும் வர மாட்டாங்க… அப்படியே வந்தாலும் நாம இருக்கிற இடத்தை பார்க்க மாட்டாங்க.. அப்படியே பார்த்தாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க…”ஒற்றை விரல் அவள் நெற்றியில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தது.
“ம்ச்!… உங்களுக்கு எல்லாம் விளையாட்டு தான்… விடுங்க நான் போறேன்” என்றவள் எழுந்து போக முயற்சித்தவள் நகர முனைய, அவன் விட்டால் தானே!
“மனு…” கரகரப்பாய் காதோரம் அவன் குரல்…
“…”
“நீ யாரோ… நான் யாரோ அப்படிங்கிற ஒரு நிலைமையில் இருந்தாக் கூட பரவாயில்லை… கல்யாணம் எல்லாம் முடிஞ்ச பிறகு கூட சைவமா இருக்க சொன்னா எப்படிடி?”
“ஆங்… இன்னும் உங்க முறைப்படி கல்யாணம் நடக்கவே இல்லை… அதுவும் இல்லாம இன்னும் எங்க குல வழக்கப்படி நீங்க சடங்கை முடிக்கவே இல்லை”
“ஏய்! இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி… எந்த ஊர்லயும் இப்படி மாப்பிள்ளையை கொடுமை படுத்த மாட்டாங்க”
“ஓ!… எங்க ஊர் பழக்க வழக்கம் எல்லாம் உங்களுக்கு கொடுமையா தெரியுதோ?” மருதாணியின் மூக்கு நுனி சிவக்கத் தொடங்கியதுமே கௌதமிற்கு மண்டையினுள் மணி அடித்தது.
“அப்படி சொல்லல செல்லம்”
“வேற எப்படி சொன்னீங்க?”முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.
“ஏய்! என்னடி வாய்க்கு வாய் பேசிட்டே இருக்கே.. மனுசன் நிலைமை தெரியாம” முன்னதை சத்தமாகவும், பின்னதை வாய்க்குள்ளேயும் முணுமுணுத்துக் கொண்டான்.
“என்ன சொன்னீங்க”
“ஹும்… வெண்ணை சொன்னேன்.. ஏன்டி.. நானே யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமாக பொண்டாட்டியை பார்க்க வந்து இருக்கேன். கிடைச்ச அஞ்சு நிமிஷத்துலயும் பேசியே நேரத்தை ஓட்டிடுவ போல… உன்னை கட்டிகிட்டதுக்கு நான் சாமியாராவே இருந்து இருக்கலாம்டி.. கட்டின பொண்டாட்டி கிட்டே ஒரேயொரு முத்தம் வாங்க இம்புட்டு போராட்டமா?” என்று கேட்டவன் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
சற்று நேரம் மருதாணியிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே மெதுவாக திரும்பி ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். முகம் சிவந்து போய் அவனைப் பார்க்கவே முடியாமல் வெட்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அவன் அவளிடம் எதிர்பார்த்தது இதைத் தானே…
“மனு” வார்த்தைகளுக்கு வலிக்காமல் மெல்லிய சாரலாய் அவளை அழைத்தவன் மெதுவாக அவளது கரங்களை பற்றிக் கொண்டான்.
“ஏதாவது பேசு…”
“…”
“அட்லீஸ்ட் என் கண்ணைப் பாரேன்” அவன் குரல் கெஞ்சியது… காதல் அங்கே கொஞ்சியது.
‘ம்ஹும்’ லேசாக தலை அசைத்து மறுத்தவளின் பார்வை வேறு பக்கம் இருக்க கைகளால் அவளது முகத்தைத் திருப்பி தன்னைப் பார்க்க வைத்தான்.
கண்கள் பட்டாம்பூச்சி போல நொடிக்கொரு முறை ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.
யாரும் வராததை உறுதி செய்து கொண்டவன் அவள் இதழ் பூக்களில் மெல்ல தேன் அருந்தினான். ஒரு முத்தத்தில் முடிந்து விடக் கூடியதா அவனது தாகம்…
மீண்டும்… மீண்டும் அவள் அவனுக்கு தேவைப்பட்டாள். கண்கள் சொருகி சுக மயக்கத்தில் இருந்தவளின் இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டவன் அவள் கழுத்தடியில் முகம் புதைக்க… மருதாணி பதறி விலகினாள்.
“மனு… என்னடி” மிட்டாயை பறி கொடுத்த குழந்தையாய் அவன் முகம்.
“நான் கீழே போறேன்” துணிகளை கூட எடுக்காமல் வீட்டினுள் ஓடி விட்டாள் மருதாணி. அவளின் வெட்கம் அவனது தாபத்தை மேலும் தூண்டி விட்டது.
“ஹ்ம்… இந்த ஒரு வாரத்தை எப்படி கடந்து வரப் போறேனோ தெரியலை… கொல்றாளே…ப்ச்! எவன்டா இந்த சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் கண்டு பிடிச்சவன். கைல கிடைச்ச மவனே செத்த…”அவளை முழுதாக தீண்டவோ, உணரவோ முடியாமல் போன ஆதங்கத்தை திட்டித் தீர்த்தான்.
மிச்சம் இருக்கும் ஒரு வாரத்தை கடந்து ஊரறிய அவர்களின் திருமணமும் முடிந்து விட்டால் அவர்கள் இருவரையும் சேர விடாமல் தடுக்கப் போவது யார் என்று எண்ணி மனதை தேற றிக் கொண்டவன் அடுத்து நிகழப் போவதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
ஊரறிய அவர்கள் இணைந்தாலும் உள்ளத்தின் இணைவு? இப்பொழுது இருக்கும் அவர்களின் நெருக்கம் அப்படியே நிலைக்குமா?

 

 


 

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here