தணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 21

0
143

அத்தியாயம் 21
கெளதம் திருட்டுப் பூனை போல எப்பொழுதும் மருதாணியின் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான். அவளுடன் ஒரு நொடிப்பொழுது தனிமை கிடைத்தாலும் ஆக்டோபஸ் போல அவளை இழுத்து வளைத்துக் கொள்வான். மருதாணி ஒன்றும் லேசுபட்டவள் இல்லையே… பாட்டியுடன் சேர்ந்து கொண்டு மற்றவர் அறியாமல் அவனை சீண்டிக்கொண்டே இருந்தாள். பெரியவர்கள் அதை எல்லாம் கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொள்ள… மருதாணிக்கு அது இன்னும் வசதியாகிப் போனது.
“இன்னிக்கு மருதாணி வச்சு விடுங்க” என்று சொன்னபடி அவனுக்கு அருகில் தன்னுடைய காலை நீட்டினாள். அவளது பளிங்கு கால்களில் இருந்து பார்வையை திருப்ப முடியாமல் அவதிபட்டவன் மிகுந்த பிரயாசையுடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
இரண்டு கைகளிலும் மருதாணி வைத்திருந்தாள். கண்களில் அவனை சீண்டும் மையல் … மோகனப் புன்னகையாக..
“கைக்கு வைக்கிறதுக்கு முன்னாடி காலுக்கு வச்சு இருக்க வேண்டியது தானே?”
“அப்போ தோணலை… இப்போ தான் தோணுச்சு”
“எப்படியும் இன்னொரு கைக்கு வேற யாரோ தானே வச்சு இருப்பாங்க… அவங்களையே காலுக்கும் வச்சு விட சொல்லு” சிக்க மாட்டேன் என்பதாக அவன் நழுவப் பார்க்க…
“கைக்கு பாட்டி வச்சு விட்டாங்க.. அவங்களைப் போய் என்னோட காலை தொட்டு மருதாணி வைக்க சொல்ல முடியுமா? வயசுல பெரியவங்க இல்லையா?” கிள்ளை மொழி பேசி அவனை வட்டத்துக்குள் சிக்க வைத்தாள் அவள்.
“நம்ம தெரு முனையிலேயே பார்லர் இருக்கு.. அங்கே சொன்னா போதும். அஞ்சே நிமிஷத்துல வந்து உனக்கு பிடிச்ச டிசைன்ல மெஹந்தி போட்டு விடுவாங்க” நீ போட்ட வட்டத்தில் நான் சிக்க மாட்டேன் என்பதாக அவன் நழுவப் பார்க்க.. விடுவாளா அவள்…
“மெஹந்தி எல்லாம் நம்ம கல்யாணத்தப்போ பார்த்துக்கலாம்… இப்போ நீங்க வச்சு விடுங்க”
“அது…”
“அப்போ… வச்சு விட மாட்டீங்களா?” விழிகளை சோழியாக சுழற்றினாள் மருதாணி.

“வேண்டாம் மனு… நீ என்னை ரொம்ப உசுப்பேத்துற … பின்னால உனக்குத் தான் கஷ்டம்.” என்று சொன்னவன் தன்னுடைய மனதை அடக்கும் பொருட்டு கைகளால் பின்னந்தலையை கோதிக் கொண்டான்.
“சரி ஒன்னும் வேண்டாம் போங்க…” கோபம் போல முகத்தை திருப்பிக் கொண்டு நகர முயன்றாள்.
“சரி சரி… வா வச்சு விடறேன்” என்று சொன்னவன் அவளது கைப் பிடித்து மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். ஊஞ்சலில் அவளை அமர வைத்தவன் அவளது காலுக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொரு விரலாக பற்றி மருதாணியை வைத்து விட ஆரம்பித்தான்.
நொடிக்கு நொடிக்கு அவன் உள்ளத்தில் தாபம் அதிகரிக்கத் தொடங்கியது. மஞ்சளும் ரோஜாவும் கலந்த நிறத்தில் மருதாணியின் பாதங்கள் இருக்க… பூப்போல அதைப் பற்றி மருதாணி வைத்து விடத் தொடங்கினான்.
முழுமையாக இரண்டு பாதங்களிலும் ஏனோதானோவென்று மருதாணியை வைத்து விட்டவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். பின் கழுத்தை கோதிக் கொண்டான். ஆனாலும் அவனது மூச்சின் வெப்பம் குறைந்தபாடில்லை.
மெதுவாக எழுந்து போனவன் மொட்டை மாடிக் கதவை சாற்றி விட்டு மீண்டும் அவளருகே வந்தான்.
“இப்போ உன்னோட முறை” என்றானே பார்க்கலாம்…அவள் மிரண்டு விழித்தாள்
“என்ன… என்னோட முறை?”
“உன்னோட கையிலும், காலிலும் மருதாணி பூசியாச்சு இல்லையா?”
“ஆ… ஆமா…”
“அதே மாதிரி இப்போ என்னோட உடம்பில் மருதாணி வாசம் வேணும்… பூசி விடு” என்றான் கிறக்கமாக
“எ… என்ன?”
“உன் காதுல சரியா தான் விழுந்துச்சு… பூசி விடு” என்று சொன்னபடி அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து முன்னேறினான்.

“விளையாடாதீங்க” விளையாட்டுத்தனம் மறைந்து பின்னோக்கி நகர முயன்றாள். கால்கள் இரண்டிலும் மருதாணி… நடந்தால் அது அழிவதோடு மொட்டை மாடி முழுக்க மருதாணியின் காலடித் தடம் பதிந்து போய் விடும்.
“இதுவரை நீ விளையாண்ட… இனி நான் விளையாடப் போறேன்” அதுவரை அவனை சீண்டி விட்டுக் கொண்டிருந்தவளுக்கு பயம் வரத் தொடங்கியது.
‘சும்மா இருந்தவரை சொறிஞ்சு விட்டோமோ’ காலம் கடந்து யோசிக்கத் தொடங்கினாள்.
சுவற்றில் அவளை சாய்த்து அவளது இருபுறமும் கைகளால் அணை கட்டியவன் கண்களால் காதல் மொழி பேசினான். மருதாணியின் முகம் அவளது பேருக்கு ஏற்றார்போல் மாறி இருந்தது.
கைகளால் அவளது இடையை வளைத்தவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான். காற்றும் கூட எங்கள் இருவருக்கும் இடையில் வரக்கூடாது என்று நினைத்தவனைப் போல அத்தனை இறுக்கத்துடன் இருந்தது அவனது அணைப்பு.
அவள் கைகளில் மருதாணி… அவனை தொட்டு விலக்கினால் அவன் மேலும் பட்டுவிடும். யாரேனும் அதைப் பார்த்து விட்டு என்னவென்று கேட்டால் எப்படி விளக்கம் சொல்வது?
ஆரம்பத்தில் பயந்து விலக முற்பட்ட மருதாணி, அவனது ஆக்கிரமிப்பில் விலக முடியாது தவித்தவள் சில நொடிகளுக்குப் பிறகு அவனுடன் இழையத் தொடங்கினாள். மனதுக்கு இனியவனின் அணைப்பு… கசக்குமா என்ன? அவள் உடலில் ஹார்மோன்கள் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்தது.
அணைப்பு இறுகிப் போய் அவனது கரங்கள் மெல்ல உயர்ந்து அவளது தோளை வருடத் தொடங்கியது. அவன் அவளுள் புதைய… அவள் அவனால் கரையத் தொடங்கினாள்.
மாதுளை முத்துக்களின் சாற்றை அள்ளி தெளித்தார் போல இருந்த அவளது உதடுகள் மெல்ல அவன் வசம் வந்தது. அவர்கள் இருவரையும் விட்டு பிரிய முடியாமல் காதல் அங்கே தடுமாறியது.
வீட்டின் கீழிருந்து கேட்ட மரகதத்தின் குரலில் இருவரும் தன்னிலை மீண்டனர். அவளை விலக்க மனமில்லாமல் தன்னுடைய பிடியிலேயே நிறுத்தி வைத்து கொண்டான்.
அவன் மனதின் ஓரத்தில் குற்ற உணர்ச்சி அவ்வபொழுது எட்டிப் பார்த்தது. அவளது ஊருக்கு அவன் வந்த காரணத்தை இன்னும் அவளிடம் சொல்லாமல் இருப்பது அவனுக்கு ஏதோவொரு விதத்தில் மனதை போட்டு அழுத்தியது.
“மனு… உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா… கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன். ஆனா முடியல…”
“நானும் உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்”
‘அவன் அவளிடம் சொல்ல நினைத்தது அவன் அவளது கிராமத்திற்கு வந்த வேலை குறித்து… அவள் அவனிடம் சொல்ல நினைப்பது என்ன? அவன் எதற்காக அவளது கிராமத்திற்கு வந்தான் என்பது தெரிந்தால் அவளது மனநிலை இப்படியே நீடிக்குமா?’
“ஓ… நீயும் சொல்லணுமா… லேடிஸ் பர்ஸ்ட்… இல்லையில்லை… பொண்டாட்டி பர்ஸ்ட்.. சொல்லுங்க மேடம்” என்றான் அவளது இடையை தன்னை நோக்கி வளைத்தபடி…
“இப்படி செஞ்சா நான் எப்படி பேசுறதாம்?” சிணுங்கலாய் வந்தது அவள் குரல்.
“நான் ஒண்ணுமே செய்யலையே மனு…” அவளுக்கு காதலை பயிற்றுவிக்க தொடங்கினான் கெளதம். காதலின் முதல் படி பொய் பேசுவது தானே… விளையாட்டாய் அவள் மீது கைகளை போட்டவன் வாய் கூசாமல் புளுகினான்.
“நீங்க இப்படி பக்கத்தில் இருந்தா எனக்கு சொல்ல வர்றது மறந்துடுது” அவள் கண்கள் அவனை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் பார்வையிட்டது.
“உனக்கு பரவாயில்லை… என்னோட நிலைமை இன்னும் மோசம்… நீ பக்கத்தில் இருந்தா எனக்கு உன்னைத்தவிர வேற எதுவுமே தெரிய மாட்டேங்குது. என்ன செய்றது நீ தான் வேணும்னே என்னை பழி வாங்கறியே?”
“நான் என்ன செஞ்சேன்?”
“அம்மாடி… என்ன நடிப்பு… இத்தனை நாளும் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தின… அம்மியில மசாலா அரைச்சு கொடு, இட்லிக்கு மாவு ஆட்டிக் கொடு, அப்புறம் முறுக்கு மாவு மில்லுக்கு போய் அரைச்சு வாங்கிட்டு வா… இதை எல்லாம் கூட நான் மன்னிச்சுடுவேன்டி… மொட்டை மாடியில் காயப் போட்ட வத்தலுக்கு என்னை காக்கா விரட்ட வச்சீங்க பாரு.. அதை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்… இதுல எல்லாத்துலயும் என் பாட்டியும் உன் கூட கூட்டு வேற”
“இதை தான் உங்க கிட்டே முன்னாடியே சொன்னேனே…”அவனது பேச்சையும், அவனோடு சேர்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
“கட்டின புருசனை இப்படி எல்லாம் கொடுமை செய்ற… கேட்டா…”
“சடங்குன்னு சொல்வேன்” அவன் தொடங்கியதை சின்ன சிரிப்போடு முடித்து வைத்தாள் அவள்.
“ஏய் என்னடி உனக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?”
“என் புருசன் மாதிரி இருக்கு” கிறக்கத்துடன் சொன்னாள் மருதாணி.
அவ்வளவு தான். அவனது பேச்சு அப்படியே நின்று போனது.
“ஏய்! என்னடி உசுப்பி விடுற..” என்றபடி அவளை நெருங்க… அவள் அவனது கைகளுக்கு சிக்காமல் மானாக ஓடிப் போனாள். இதற்கு இடையில் சொல்ல வந்த விஷயத்தை அவனும் சொல்லவில்லை. அவளும் சொல்லவில்லை.
நாட்கள் வேகமாக ஓடி கல்யாண நாளும் நெருங்கியது. பிரம்ம முஹூர்த்தத்தில் அவளது கழுத்தில் முறைப்படி மீண்டும் தாலி கட்டினான் கெளதம். நெருங்கிய உறவுகள் ஒரு சிலர் மட்டுமே அங்கே வந்து இருந்தார்கள். நின்று பேசக் கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து வேலைகள் வரிசையாக இருந்து கொண்டே இருந்தது. கல்யாணம் என்றால் சும்மாவா?.
அத்தனை வேலைகள். பணம் கொடுத்தால் அதை எல்லாம் ஆள் வைத்து செய்யலாம் தான். ஆனால் மரகதம் வேண்டுமென்றே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தார். ஒரு நிமிடம் அவர் ஓய்வாக இருந்தாலும் கூட அவரிடம் வம்பு பேச யாராவது வந்து நின்றார்கள்.
வெளிநாட்டில் படித்த பையனுக்கு இப்படி ஒரு பெண்ணா? என்று முகம் சுளித்தார்கள். அப்படி வம்பு செய்ய முயற்சி செய்தவர்களில் பாதி பேர் மருதாணியின் அழகை கண்டு பிரமித்து வாய் மூடினாலும் வேண்டுமென்றே வம்பு வளர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
கௌதமின் சொந்தங்கள் நிறைய பேர் அவனுக்கு தங்கள் பெண்ணைக் கொடுக்க காத்திருக்க… ஒன்றுமே இல்லாத மருதாணியை அவன் மணந்து கொண்டது அவர்களின் ஆற்றாமையை தூண்டி விட்டது. மரகதத்தின் காதுபடவே பேசித் தீர்த்தார்கள். வீட்டில் உள்ள மற்றவர்கள் அதை அலட்சியப்படுத்தினாலும் மரகதத்தால் அப்படி ஒதுக்க முடியவில்லை.

அங்கிருந்து கிளம்பி எல்லாரும் ரிசப்ஷன் ஏற்பாடு செய்து இருந்த மண்டபத்தை அடைந்தனர்.
பிரத்யேகமான அலங்கரிப்பில் மருதாணி அப்ஸரசாக நிற்க… கெளதம் கந்தர்வனைப் போல தோன்றினான்.
கௌதமின் உறவுகளோடு, அவன் உடன் படித்தவர்கள் என்று அத்தனை பேரும் வந்து வாழ்த்தினார்கள்.
அங்கேயும் ஒரு சிலர் மரகதத்திடம் வம்பு பேச… மேடையில் இருந்தே அன்னையின் முகம் மாறுவதை கண்டு கொண்ட கெளதம் பாட்டியிடம் கண்ணை காட்டினான். செல்லம்மாவும் புரிந்து கொண்டு அதன் பிறகு மரகதத்தை தன்னுடனே வைத்துக் கொண்டார். வம்பு பேச முயன்றவர்களும் அவர் கொடுத்த கொடுப்பில் வாயை மூடிக் கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடி விட அதன் பின்னர் எந்த சலசலப்பும் இன்றி எல்லாம் இனிதாக நடந்தேறியது.

கெளதம், மருதாணி இருவரும் தங்கள் இருவருக்கு மட்டுமேயான பிரத்யேக உலகில் மகிழ்ச்சியாக சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
கெளதம் காலையில் திருமணம் முடிந்த பிறகில் இருந்து மருதாணியின் கையை விடவே இல்லை.
கெளதம் முகம் முழுக்க மகிழ்ச்சி…
மருதாணியின் முகம் முழுக்க பூரிப்பு…
அவனது ரகசிய சீண்டல்கள்….
அவளது செல்ல சிணுங்கல்கள்…
மருதாணியின் முகத்தில் வெட்க தவிப்பு
அவனுக்கோ வேட்கை தவிப்பு…
கெளதம் தங்களுக்கான தனிமைக்காக ஆவலுடன் காத்திருந்தான். அவர்களுக்கே தெரியாமல் அவர்களது பொருட்களுடன் அவர்களின் மகிழ்ச்சியை குலைக்கப் போகும் பொருளையும் எடுத்துக்கொண்டு அவர்களின் வீடு நோக்கி சென்றார்கள்.

 

 

 

Madhumathi Bharath Tamil Novels

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here