தணலை எரிக்கும் பனித்துளி 2

2
2232
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

அத்தியாயம் 2

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி அளவில் வீட்டை விட்டு பெட்டி, படுக்கையுடன் கிளம்பிக் கொண்டு இருந்தான் கெளதம். மரகதத்தின் கண்ணில் இருந்து எப்பொழுதும் போல கண்ணீர் ஆறாக பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தது.

“மரகதம்… இப்போ எதுக்கு இப்படி கண்ணில் ஜூஸ் பிழியற? அவன் அமெரிக்காவுக்கு போனப்போ அழுதே… அதுலே ஒரு நியாயம் இருக்கு… பிள்ளை தொலைதூரம் போறானேன்னு அழுத… இப்ப என்ன வந்துச்சு? இந்த இருக்கிற கோயம்புத்தூர்… காரை எடுத்தா… ஒரு மணி நேரத்தில் போய்ட்டு வந்துடலாம்… அதுக்குக் கூடவா அழணும்?”என்று கிண்டலின் ஊடே மனைவியை கடிந்து கொண்டார்.

“நீங்களே தான் சொல்றீங்களே… பக்கத்தில் தான் இருக்குன்னு… இங்கே இருந்தே வேலைக்கு போனா ஆகாதா? வீட்டில் பைக் இருக்கு,கார் இருக்கு…அதுல போய்ட்டு வரட்டுமே… இப்ப தான் என் பிள்ளை அமெரிக்காவில் இருந்து வந்தான்.மறுபடியும் என்கிட்டே இருந்து அவனை பிரிச்சு வைக்கறீங்களே?” என்றார் அழுகுரலில்…

“அடி பைத்தியம்… பிள்ளை தினமும் வேலை பார்த்து களைச்சு போய் வருவான். அதே களைப்போட ஒரு மணி நேரம் வண்டியை ஒட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தா பிள்ளை உடம்பு என்ன ஆகும்? பையன் மேல அக்கறை இருக்கிறவ பேசுற பேச்சா இது?”

“இருந்தாலும்…”அவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் பொழுதே கெளதம் வந்துவிட அவர்களின் பேச்சு தடைபட்டது.

“என்னம்மா.. வழக்கம் போல புலம்பலா?” என்றவன் முகத்தில் இருந்த கேலியை உணர்ந்து கொண்ட மரகதத்துக்கு மகனிடம் தன்னுடைய கோபத்தை காட்ட முடியவில்லை. சோகமாக முகத்தை வைத்துக் கொண்டார்.

“அம்மா… முதன்முதலா வேலைக்கு வெளியூர் போறேன்.. அந்த நேரம் பார்த்து இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டா… என்னால அங்கே போய் நிம்மதியா வேலை பார்க்க முடியுமா? என்னோட தங்கம் இல்ல..சிரிச்ச முகமா வழி அனுப்பி வைங்கம்மா” என்றான் தாயின் தாடையைப் பிடித்து கொஞ்சியவாறு…

மகனுக்காக தன்னுடைய கண்ணீரை மறைத்துக் கொண்டவர் முயன்று வருவித்த புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

“பார்த்து பத்திரமா போய்ட்டு வா கெளதம்… ஒழுங்கா சாப்பிடணும்… வேலை வேலைன்னு உடம்பை கெடுத்துக்க கூடாது…கண்ட கண்ட சாப்பாடை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே…அப்புறம்”

“அம்மா… நான் என்ன சின்ன பிள்ளையா?… என்னை நினைச்சு கவலைப்படாதீங்க.. நான் பத்திரமா இருந்துப்பேன். எனக்கு ராஜேஷ் அவனோட கம்பெனி குவாட்டர்ஸ்ல வீடு கொடுத்து இருக்கான்மா…. சாப்பாடை பத்தியும் கவலை இல்லை… பக்கத்திலேயே கம்பெனி மெஸ் இருக்கு… ஸோ… என்னைப் பத்தி கவலைப்படாம நிம்மதியா இருங்க… வாரக் கடைசியில் உங்களைப் பார்க்க ஓடி வந்திடறேன்” என்று தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச… மனமே இல்லாமல் மகனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் மரகதம்.

வேண்டிய உடைகளை ஒரு பெட்டியில் அடுக்கிக் கொண்டவன் வீட்டினர் அனைவரிடமும் விடைபெற்று கோயம்புத்தூர் நோக்கி செல்ல மரகதத்தின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது மகனின் பிரிவை எண்ணி…

காரை மிதமான வேகத்தில் ஓட்டி வந்தவன் சில மணி நேரங்களில் ராஜேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

“வெல்கம் கெளதம்…” என்று நண்பனைக் கட்டி தழுவி ராஜேஷ் வரவேற்றான்.

“வாடா.. முதலில் வீட்டுக்கு வந்து காபி குடி… ராமையா.. அந்த பெட்டியை வீட்டுக்குள்ளே எடுத்துட்டு வாங்க” என்று சொன்னவன் கௌதமின் கைகளை விடாமல் பற்றியபடி வீட்டுக்குள் அழைத்து சென்றான்.

“கடைசி வரை ஒரு டென்ஷன் இருந்துகிட்டே இருந்தது கெளதம்…நீ வருவியோ மாட்டியோன்னு”

“ஏன் ராஜேஷ்… நான் தான் இன்னிக்கு வரப் போறதா நேத்திக்கே போனில் சொன்னேனே…”

“நீ என்னோட கம்பெனியில் வேலைக்கு வர சம்மதிச்சதே என்னால இன்னும் நம்ப முடியலைடா… காலேஜ்ல டாப்பர் நீ… நீ வருவியோ மாட்டியோன்னு கடைசி நிமிஷம் வரை ஒரு டென்ஷன் இருந்தது. உன்னை பார்த்த பிறகு தான் அது குறைஞ்சது…”

“வா..தம்பி…நீ தான் கௌதமா?” என்று ஏற இறங்க கௌதமை பார்வையிட்டவர் வைர நகைகள் கழுத்தில் மின்ன போஸ் கொடுத்தார். ஏதோ கிராமத்து பண்ணையார் அம்மாவைப் போல இருந்த அந்த அம்மாவின் பார்வையே சொல்லாமல் சொன்னது அவருக்கு கௌதமை பிடிக்கவில்லை என்று.

‘ஏன் இப்படி பார்க்கிறாங்க?’ என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவர் தொடர்ந்து பேசினார்.

“ஒரு வாரமா என்னோட பையன் நீ வேலைக்கு சேரப் போறதைப் பத்தி சொல்லி சொல்லி ஓய்ஞ்சு போயிட்டான். எங்க கம்பெனியில ஒரு நாளைக்கு புதுசா நூறு பேர் சேருவாங்க.. ஒழுங்கா வேலை செய்யலைனா நாங்களே வேலையை விட்டும் அனுப்புவோம். அப்படி இருக்க.. ஏன் இப்படி குதிக்கறான்னு தான் எங்களுக்கு புரியல… சிநேகிதம் வேற… தொழில் செய்யுற இடத்தில வேலைக்கு சேருறது வேறனு இந்த பையனுக்கு இன்னும் புரியலையேன்னு எனக்குத் தான் ஒரே கவலையா போச்சு” என்று அவர் இடக்காக பேச.. அவர்  என்ன சொல்ல வருகிறார் என்பது கௌதம்க்கு தெளிவாக புரிந்தது. உடல் விரைப்புற ராஜேஷின் பக்கம் அழுத்தமான பார்வையை செலுத்தினான் கெளதம்.

“அம்மா.. கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீங்க… இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…நீ உள்ளே வாடா கெளதம்”

“ராஜேஷ் நீ சொன்னதுக்காக மட்டும் தான் நான் இங்கே வந்தேன். இன்னிக்கு ஒருநாள் நான் தங்க ஒத்துகிட்டதே உன் மனசு வருத்தப்படக் கூடாதேன்னு தான்….”

“என்னடா இப்படி சொல்ற…அம்மா ஏதோ….”

“ராஜேஷ் நான் அம்மா சொன்னதுக்காக எல்லாம் இந்த முடிவை எடுக்கல… வேலையில் சேர்ந்த பிறகு முதலாளியும்,தொழிலாளியும் ஒரே வீட்டில் இருக்கிறது நல்லது இல்லை… அதே சமயம் எனக்கு பிரைவசி ரொம்ப முக்கியம்டா… அடுத்தவங்க வீட்டில் இருந்தா அது சரிப்பட்டு வராது.” என்று அழுத்தமாக பேசியவனை மறுக்க முடியாமல் அப்படியே ஒத்துக் கொண்டான் ராஜேஷ்.

அவனுக்கு கவுதமைப் பற்றித் தெரியும். அவன் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் இருந்து மாற்றுவது கடினம்… அதே நேரம் தன்னுடைய தாயின் செயலையும் கண்டிக்க முடியவில்லை அவனால். ஆயிரம் தான் இருந்தாலும் நண்பனின் முன்னிலையில் தாயைக் கண்டிக்க முடியவில்லை அவனால்.

ராஜேஷிற்காக சில நிமிடங்கள் மட்டும் அங்கிருந்தவன் அதன் பிறகு நண்பன் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் கிளம்பி சென்று விட்டான் தன்னுடைய குவாட்டர்ஸ்க்கு.

கெளதம் அப்படித் தான் … ரோஷக்காரன்.. யாரும் அவனை குறைவாக பேசிவிட்டால் அவர்களை ஒரு வழியாக்கி விடுவான். பார்வையால் கூட யாரும் தன்னை குறைவாக நினைப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எப்பொழுதும் தலை நிமிர்ந்து நிற்பதை மட்டுமே விரும்புவான். அடுத்தவர்கள் தன்னைப் பற்றி குறைவாக ஒரு வார்த்தை சொன்னாலோ… ஏன் பார்வையால் வெளிப்படுத்தினால் கூட அவனால் தாங்க முடியாது. யாருக்காகவும் அவன் தலை குனிந்து நிற்க மாட்டான். அது அவனது சுபாவமும் இல்லை.

எதிலும் நேர்மை… கண்டிப்பு… நெருப்பு போன்றது அவனது கோபம். அத்தனை எளிதில் அதை அணைக்க முடியாது. இப்பொழுது ராஜேஷின் அம்மா பேசிய பேச்சுக்களால் அவன் ஒன்றும் துவண்டு போய் விடவில்லை. ஆனால் இனி ராஜேஷ் தலைகீழாக நின்றாலும் அவன் வீடு இருக்கும் திசைப்பக்கம் கூட கெளதம் எட்டிப் பார்க்க மாட்டான் என்பது ராஜேஷிற்கு நன்றாகவே புரிந்து போனது.

வீட்டிக்கு வந்த நண்பனை சரியாக உபசரிக்க முடியாமல் இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தத்துடன் நுழைந்தவன் அவனது அம்மாவிடம் முகம் கொடுத்து பேச மறுக்க, அவனது அம்மாவிற்கு கெளதமின் மீது ஏற்கனவே இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது.

இது எதையும் கண்டு கொள்ளாமல் கெளதம் தன்னுடைய குவாட்டர்சினுள் நுழைந்தான். வீடு ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு இருக்க… அப்படியே தொப்பென்று படுக்கையில் விழுந்தான்.

இரவு தாமதமாகி விட்டதால் வரும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டு வந்திருந்தவன் அடுத்த நாள் முதல் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டான்.

இனி வரும் நாட்களில் தன்னுடைய முழு கவனமும் தன்னுடைய வேலையில் மட்டுமே இருக்கே வேண்டும் என்ற உறுதியுடன் படுக்கையில் அசந்து போய் உறங்கினான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here