தணலை எரிக்கும் பனித்துளி 3

0
1807
thanalai erikum panithuli madhumathi bharath Tamil novels

கெளதம் வேலையில் சேர்ந்து நாட்கள் மின்னலென கடந்து இருந்தது. காலையில் ஐந்து மணிக்கு எழுபவன் ஜாகிங்கை முடித்து விட்டு ஆறு மணிக்கு திரும்புவான். காபி குடித்தபடியே செய்தித்தாள்களை ஒரு வரி விடாமல் வாசிப்பான்.

மெஸ்ஸில் இருந்து வந்த உணவை வீட்டிலேயே முடித்து விட்டு சரியான நேரத்திற்கு கிளம்பி ஆபிசுக்கு சென்று விடுவான். அங்கே போன பிறகு வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் அவன் மனதில் இருக்காது.

மதிய சாப்பாட்டையும் அங்கேயே பத்து நிமிடத்தில் முடித்து விட்டு மீண்டும் வேலைகளில் மூழ்கி விடுவான். அதன் பிறகு மாலை ஐந்து மணி ஆனதும் நேராக வீட்டிற்கு சென்று குளித்து விட்டு முதல் வேலையாக வீட்டிற்கு போன் செய்து பேசி விடுவான்.

ஒருநாள் அவன் பேசாவிட்டாலும் அவனது அன்னை பயந்து போய் விடுவார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே மறக்காமல் போன் செய்து பேசி விடுவான்.

கௌதம் கம்பெனியில் சேர்ந்த பிறகு அனாவசியமான செலவுகள் குறைக்கப்பட்டு, லாப விகிதம் அதிகரித்து இருப்பதை உணர்ந்த ராஜேஷ் வீட்டில் எப்பொழுதும் கௌதமின் புகழையே பாடிக் கொண்டிருந்தான். அவனது அம்மா விசாலத்தின் இருந்து காதுகளில் இருந்து புகை வருவது தெரிந்தாலும் அவன் அதை நிறுத்தவில்லை.

“ஏன்மா… அன்னிக்கு அவனை அப்படி பேசுனீங்களே… இப்போ பாருங்க..எந்த அளவுக்கு திறமையா வேலை செய்றான்னு”

“போதும்டா..சும்மா நிறுத்து… அவன் என்ன சும்மாவா செய்றான்? நாம சம்பளம் கொடுக்கலை…”

“இதுக்கு முன்னாடி நம்ம கிட்டே வேலை பார்த்தவங்களுக்கும் கூட நாம சம்பளம் கொடுத்தோமே அம்மா… அவங்களில் யாருமே இதை செய்யலையே” என்று ஆணித்தரமாக கேட்ட மகனின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

“அதுக்கு இப்போ என்ன செய்யணும்னு சொல்ற… அடுத்த முறை அவன் வரும் பொழுது அவன் காலில் விழுந்து கும்பிடணுமா”

“ஹ்ம்ம்… இனி நீங்க காலில் விழுந்து கும்பிட்டாலும் கூட அவன் நம்ம வீட்டுப்பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான். அவன் ரோஷக்காரன்மா” என்று சொன்னவன் அங்கே நிற்கப் பிடிக்காதவன் போல படியேறி சென்று விட்டான் ராஜேஷ்.

‘இவனால என்னோட பிள்ளை என்கிட்டேயே எரிஞ்சு விழறான்…. எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைச்சா இவனுக்கு கெட்ட பேர் வாங்கித் தராம விட மாட்டேன்’ என்று வெஞ்சினத்தோடு எண்ணிக் கொண்டார்.

இது எதையும் அறியாமல் கெளதம் தன் போக்கில் தன்னுடைய அன்றாட வேலைகளை கவனித்து வந்தான்.

சில நாட்கள் கழித்து கம்பெனியின் வருடாந்திர கூட்டம் நடைபெற அந்த நிறுவனத்தின் பங்குதாரர் என்ற முறையில் விசாலமும் அங்கே வந்து இருக்க, அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் தலை அசைத்து விட்டு தன்னுடைய வேலைகளை பார்க்கப் போன கௌதமைக் கண்டதும் அவரது ஆத்திரம் அதிகமானது.

‘இவனை எதுவுமே செய்ய முடியலையே’ என்று ஆத்திரத்துடன் பற்களை கடித்தார்.

கூட்டம் நல்லபடியாக தொடங்கியது.

ராஜேஷின் தந்தை இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி இருந்த நிலையில் அவருடைய கனவுத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்பது குறித்து பேச்சு எழுந்தது.

என்னோட கணவர் ஆரம்பிச்சு வச்ச அந்த திட்டம் அப்படியே கிணத்தில் போட்ட கல்லு மாதிரியே இருக்கு…ராஜேஷ் இப்போ கம்பெனியோட எம்டி நீ தானே… அந்த திட்டத்தை ஏன் இன்னும் அப்படியே வச்சு இருக்கீங்க? அதை தொடர்ந்து நடத்தினா நம்ம கம்பெனிக்கு எத்தனை கோடி லாபம் வரும் தெரியும் தானே?”

“அம்மா… அதை நான் மறக்கல… அதுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தையும் செஞ்சுட்டு தான் இருக்கேன். ஆனா அந்த மக்கள்…” என்று தயக்கத்துடன் இழுக்க விசாலத்தின் மனதில் அந்த விபரீத எண்ணம் தோன்றியது.

“ஏன் தம்பி… உனக்கு நேரம் இருக்காது அப்படிங்கிறது எனக்குத் தெரியாதா? நம்ம கம்பெனியில் இத்தனை பேர் இருக்காங்க இல்லையா… அதில் நல்ல ‘திறமையான’ ஒருத்தரை அனுப்பி இந்த வேலையை முடிக்க சொல்லலாம் இல்லையா?” என்றவரின் பார்வை கெளதம் இருந்த திசை நோக்கி திரும்பியது.

அங்கே இருந்த மற்றவர்களுக்கு அவர் யாரை சொல்கிறார் என்பது புரிந்ததோ இல்லையோ கௌதமிற்கும் ராஜேஷிற்கும் தெளிவாகவே புரிந்தது. விசாலம் யாரை சொல்கிறார் என்று.

நண்பனின் முகம் மாறுவதை கவனித்த ராஜேஷ் வேகமாக முன் வந்து பேசினான்.

“அப்படி எல்லார் கிட்டயும் இந்த பொறுப்பை கொடுத்திட முடியாதும்மா… இந்த டிபார்ட்மென்ட் ஆட்கள் கிட்டே மட்டும் தான் கொடுக்க முடியும்”

“நீ சொல்றது சரி தான் தம்பி.. ஆனா இந்த இரண்டு வருசமா அவங்க ஏதாவது செஞ்சு இருந்தா இந்நேரம் இந்த வேலை முடிஞ்சு இருக்கணுமே” என்று கொஞ்சமும் தளராமல் பேச… ராஜேஷ் ஊமையானான்.

“என்னைக் கேட்டா அந்த வேலையை நீ கெளதம் கிட்டே கொடுக்கலாம்ன்னு சொல்வேன். ஏன்னா இங்கே வந்ததில் இருந்து ஒவ்வொரு வேலையையும் எவ்வளவு திறமையா செய்றார்ன்னு நீதானே எனக்கு சொல்லிட்டே இருக்க… அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பா இந்த வேலையையும் அவர் செஞ்சு சிறப்பா  முடிப்பார்” என்றார் கண்களில் நக்கலை தேக்கியபடி.

“இல்லம்மா..அது வேண்டாம்” என்று அவன் தாயிடம் மறுத்து பேச… அவனை இடைபுகுந்து தடுத்தான் கெளதம்.

“நான் செய்றேன் சார்” என்று எழுந்து நின்று தன்னுடைய கணீர் குரலில் சொன்னதைக் கேட்டு விசாலத்தின் முகத்தில் வெற்றிப் புன்னகை வந்து போனது.

“கெளதம்… அது நீங்க நினைக்கிற மாதிரி ஆபிஸ் வேலை இல்லை… பழங்குடியின கிராமத்தில் தங்கி வேலை பார்க்கணும்… சாப்பாடு, வேலை, தங்குற இடம் எல்லாமே கஷ்டம்”

“எதுவா இருந்தாலும் நான் சமாளிச்சுக்கிறேன் சார்… என் மேல உங்க அம்மா வச்சு இருக்கிற நம்பிக்கையை நிச்சயம் பொய்யாக்க மாட்டேன்” என்று அலட்டல் இல்லாமல், அதே சமயம்  விசாலத்தின் குரலில் இருந்த நக்கல் கொஞ்சமும் குறையாமல் பதிலடி கொடுக்கும் விதமாக அவன் பேச விசாலத்தின் முகம் இறுகிப் போனது.

“அப்புறமும் என்ன தயக்கம் ராஜேஷ்? பொறுப்பை கெளதம் கிட்டே கொடு… உங்க எல்லாராலயும் இரண்டு வருசமா முடிக்க முடியாததை இந்த தம்பி இரண்டே மாசத்தில் முடிச்சுடுவார்” என்று சொல்ல கௌதமனின் முகம் யோசனையானது.

அப்படி என்றால் இரண்டு மாதம் தான் எனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் கெடு என்று குறித்துக் கொண்டவன் மீட்டிங் முடியும் வரை பொறுமையாக காத்திருந்து அதன்பிறகு எல்லாரும் கலைந்து சென்ற பின் ராஜேஷின் அருகில் சென்று அந்த திட்டத்தின் விவரங்களை கேட்டான்.

“தம்பி ரொம்ப ஆர்வமா இருக்கார் போல இருக்கே ராஜேஷ்… சீக்கிரம் எல்லா விவரங்களையும் சொல்லு…. நானும் பார்க்கத் தானே போறேன்… உன் பிரண்டோட வேகத்தை… போன சுருக்கில் என்னால் முடியாதுன்னு சொல்லிட்டு ஓடி வரப் போறாரா இல்லையானு பாரு” என்றவரின் குரலில் இருந்த கேலியை உணர்ந்து கொண்ட கௌதமின் முகம் இறுகிப் போனது.

“கெளதம் நீ பொறுமையா இரு…நான் இதைப் பத்தி அப்புறமா உனக்கு முழு விவரமும் சொல்றேன்… அதுக்கு அப்புறம் யோசிச்சு…”

“ஆமாமா.. பொறுமையா யோசிச்சு..அவரால முடியுமா இல்லையானு பார்த்து… அப்புறமா..” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் நக்கலை கூட்டிக்கொண்டே போக…கௌதமிற்கு அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.

“அதெல்லாம் வேண்டாம் சார்… நீங்க எல்லா விவரங்களையும் எனக்கு மெயிலில் அனுப்பிடுங்க.. நான் லஞ்ச் டைமில் அதை பார்த்துட்டு ஆபிஸ் முடிஞ்சதும் உங்ககிட்டே ரிப்போர்ட் செய்றேன்” என்று சொன்னவன் அங்கே நிற்காமல் விடுவிடுவென்று கிளம்பி விட ராஜேஷிற்கு நிலைமையை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை.

“ஏன்மா இப்படி செஞ்சீங்க?” என்றான் அடக்க மாட்டாமல்…

“தம்பி… நான் எதுவும் தப்பா செய்யலையே? எனக்கு என் கணவரோட ஆசை நிறைவேறணும். அதுக்காக கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருத்தனை அனுப்பப் போகிறேன்..அவ்வளவு தான்.அதுக்கு மேல… இதுல வேற எந்த நோக்கமும் எனக்கு இல்லை” என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேற… ராஜேஷிற்கு தான் கவலையாக போனது.

நண்பனை சிக்கலில் மாட்டி விடுகிறோமோ என்று…

“யோசனை எல்லாம் அப்புறம் ராஜேஷ்… முதலில் அந்த பையன் கேட்ட மாதிரி மெயில் அனுப்பு… வந்து சாப்பிடு… மீட்டிங் மறுபடி ஒருமணி நேரத்தில் ஆரம்பிச்சுடும் இல்லையா?” என்று நினைவுறுத்த… வருவது வரட்டும் என்று எண்ணியவனாக விவரங்களை கௌதமிற்கு மெயில் செய்து விட்டு சாப்பிடத் தொடங்கினான்.

அதே நேரம் மெயிலை திறந்து பார்த்த கெளதம் அதில் இருந்த விவரங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான். இறுதியாக அதில் குறிப்பிட்டு இருந்த விஷயம் தான் அவனை கொஞ்சம் கலவரப்படுத்தியது என்றே சொல்லலாம்.


Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Previous PostMMK episode 6
Next PostMMK 7 Epi teaser
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here