அத்தியாயம் 12
இரவு உணவை கௌதமிற்க்காக தயாரித்து வைத்து விட்டு வெகுநேரம் காத்திருந்தாள் மருதாணி. மதியம் அவளது அத்தை கண்ணம்மா வந்து போன பிறகு வீட்டை விட்டு கிளம்பியவன் அதன் பிறகு இதுவரை வீட்டிற்கு வந்து சேரவில்லை. கெளதம் அங்கே வந்த இத்தனை நாட்களில் ஒருநாள் கூட இப்படி தாமதமாக வந்தது கிடையாது. பழகாத இடம்… அதிலும் காட்டுப் பகுதி என்பதால் எப்பொழுதும் ஆறு மணிக்கு மேல் அவன் வெளியே செல்வது கிடையாது.
‘எனக்குத் தெரியாதா? நான் என்ன குழந்தையா?’ என்பது போல அசட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் வீணாக இதுவரை எந்த ஆபத்திலும் போய் சிக்கிக் கொண்டதில்லை. தெளிவானவன். அப்படிபட்டவன் இன்று இரவு எட்டு மணி ஆகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை.
கெளதம் எங்கே சென்று இருக்கிறான் என்பதை தேடி செல்லவும் முடியாது… யாரிடமும் விசாரிக்கவும் முடியாது. முதலில் அவன் செல்லுமிடங்கள் எதுவும் அவளுக்கு தெரியாது என்பது ஒருபுறம் அவளை மருட்ட… அவனைத் தேடிக் கொண்டு அவள் செல்வதை பார்க்கும் ஊர் மக்கள் என்ன வேண்டுமானாலும் கதையைக் கட்டி விடக் கூடும்.
‘ஒருவேளை முத்தையாவிற்கு அவனை அடித்தது கெளதம் என்று தெரிந்து போய் அவனுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கௌதமை எதுவும் செய்து விட்டானோ?’ என்ற கவலை வேறு அவளுக்கு வந்தது.
‘இன்னும் சற்று நேரம் காத்திருக்கலாம். அப்பொழுதும் அவன் வரவில்லை எனில் அவனைத் தேடிக் கொண்டு கிளம்பி விட வேண்டியது தான்’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சோர்ந்த நடையுடன் வீட்டுக்குள் நுழைந்தான் கெளதம்.
“எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று அவள் முகம் பார்க்காமல் சொன்னவன் உள்ளே சென்று படுத்து விட..மருதாணி அதிர்ச்சியானாள்.
அதீத களைப்பு அவன் முகத்தில் இருந்ததை அவள் உணர்ந்து கொண்டாலும்… அவளது முகம் பார்க்காமல் அவன் பேசி சென்ற விதமே அவள் மனதை பாதித்தது.
அவன் பத்திரமாக வீட்டுக்கு திரும்பியதே போதும் என்று தோன்ற , தான் மட்டுமாக சாப்பிட மனமின்றி சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு படுத்து விட்டாள் மருதாணி. ஏனோ… அவனுடன் கலகலப்பாக சிரித்து பேசாமல் தான் மட்டுமே தனியே உணவை உண்ண அவள் விரும்பவில்லை. அவனது பேச்சு தன்னை இத்தனை தூரம் பாதித்து இருப்பதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ… வீட்டின் உள்ளே உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த கௌதமால் உணர முடிந்தது.
அவனுக்கு வலித்தது.
‘அவளும் சாப்பிடாமலே படுத்து விட்டாளே… பசி தாங்குவாளா? என்னால் தானே பட்டினியாக படுக்கிறாள்… இந்தப் பெண்ணை ஏமாற்றி விட்டேனா நான்?’அவன் மனம் அதிர்ந்தது.
‘இவளை இந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்பதையே இத்தனை நாள் உணராமல் போனேனே… என்னையும் தானே நான் ஏமாற்றிக் கொண்டேன்… அவள் யாரையோ திருமணம் செய்து கொண்டால் எனக்கென்ன? இதயத்தை கசக்கிப் பிழியும் வலி ஏன் தோன்றுகிறது?’
இதுநேரம் வரை வீட்டுக்குத் திரும்பாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். மருதாணி அவனுக்காக காத்திருப்பாள் என்ற காரணத்திற்காக மட்டுமே வீட்டுக்கு திரும்பி இருக்கிறான். அப்படி இல்லையெனில் அவனுக்கு இருக்கும் மன உளைச்சலுக்கு இரவு முழுக்க கூட அந்த காட்டை சுற்றி இருப்பான். சுற்றி அலையும் காட்டு விலங்குகளை கண்டு அவன் அஞ்சவில்லை. அவன் மனம் அவனை கேள்விகளால் திணறடித்துக் கொண்டிருந்தது. அதனிடம் இருந்து தப்பியோடும் வழி தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
மருதாணியை வேறு ஒருவனுக்கு விட்டுக் கொடுப்பது என்பது அவனால் முடியாத காரியம். மருதாணிக்கும் அவன் மேல் ஒரு வித ஈர்ப்பு இருப்பதை அவன் அறிவான். ஆனால் தன்னைப் பற்றிய உண்மையை அறிந்தால் அதன் பிறகு மருதாணி தான் இருக்கும் திசை பக்கம் கூட வருவாளா என்பது சந்தேகம் தான்.
தான் இந்த ஊருக்கு வந்ததன் நோக்கம் என்ன? அந்த ஊர் மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு சமூகத்திற்கு தெரியபடுத்துவதற்காக என்று பொய் சொல்லி அவளையும், அவளது ஊராரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயம் தெரிந்தால் அதன் பிறகு அவளின் மனநிலை எப்படி மாறும் என்பதை அவனால் ஊகிக்கவே முடியவில்லை.
அவளை முதன் முதலாக அவன் பார்த்த பொழுது இரும்பைப் போல அல்லவா இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக பேசி… அவளை உருக்கி அல்லவா மருதாணியை அவன் மாற்றி இருக்கிறான். கடந்த சில நாட்களாகத் தான் அவளும் அந்த கூட்டை விட்டு வெளியேறி அவனிடம் இயல்பாக நடந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்.
கெளதம் அங்கே வந்த நாட்களில் மருதாணியின் நம்பிக்கையைப் பெற்று அவள் மூலம் அவர்கள் ஊரில் தயாரிக்கும் பொருட்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டான். ராஜேஷ் சொல்லி அனுப்பி இருந்த மூலிகை செடிகளின் விதைகளையும் கூட கைப்பற்றி இருந்தான். அவன் மேல் இருந்த நம்பிக்கையின் காரணமாக மருதாணி அவனிடம் எதையுமே மறைக்கவில்லை.
மருதாணி ஏதோ அவன் தன்னைப் பற்றியும், தனது கிராம பழக்கங்களையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறான் என்று எண்ணியே அவனுக்கு எதையும் மறைக்காமல் தெரிவித்தாள். அவன் அங்கே வந்து தங்கி இருப்பது அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகத் தானே…தலைவரும் அதை தெரிந்து தானே தன்னுடைய வீட்டில் அவனை தங்க வைத்து இருக்கிறார்.எனவே ஒளிவுமறைவு இன்றி அவன் கேட்ட அனைத்தைப் பற்றியும் அவள் தகவல் தெரிவித்தாள்.
மருதாணியின் மனதில் இருந்த ரணத்திற்கு கௌதமின் அருகாமை நல்ல மருந்தாக இருந்தது. அவனும் அவளிடம் எதையும் கேட்டுக் கிளறாமல் முடிந்தவரை அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயன்றான். அதுவே அவனுக்கு வினையாகப் போனது. ஒருவேளை அவன் அவளிடம் அவளைப் பற்றி கேட்டு இருந்தால் பிற்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகளை அவன் தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவனுக்குத் தெரியாமலேயே அவன் சுழலுக்குள் சிக்குண்டு போனான்.
அதே நேரம் ராஜேஷ் தன்னுடைய வீட்டில் விசாலத்திடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
“அம்மா ஏன்மா நீங்க இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறீங்க? கெளதம் அந்த ஊருக்கு போன வேலையை கிட்டத்தட்ட முடிச்சுட்டான். இதுவரை அவன் நமக்கு அனுப்பின விவரங்களே அதிகம். அவனை ஊருக்கு திரும்பிட சொல்லிடலாம்”
“டேய் ! ராஜேஷ்…உன்னோட பிரண்டு அங்கே போய் இரண்டு மாசம் தங்கி எல்லா வேலையும் தெரிஞ்சுக்கிட்டு தான் திரும்பி வருவேன்னு பிடிவாதமா சொல்லிட்டு போய் இருக்கான். நீ என்னடான்னா ஒரே மாசத்தில் திருப்பி கூப்பிடறியே? அப்படி அவன் உடனே திரும்பி வரலைன்னா என்ன அர்த்தம்? இன்னும் அவனுக்கு அந்த ஊரில் ஏதோ வேலை இருக்குனு தானே அர்த்தம்?”
“இருக்கலாம் அம்மா… ஆனா எனக்கு மனசு கேட்க மாட்டேங்குது… ஒவ்வொரு நாளும் சாப்பிடும் பொழுதும்… தூங்கும் பொழுதும் அவனை நினைச்சு கவலையா இருக்கு… என்னோட காலேஜில் டாப்பர்(Topper) மா அவன்… எத்தனையோ கம்பெனிகள் அவனுக்கு வேலை கொடுக்க தயாரா காத்துக்கிட்டு இருக்காங்க. அங்கே போனா இவன் ராஜா மாதிரி இருக்கலாம். அதை எல்லாம் விட்டுட்டு இப்படி எனக்காக காட்டில் கிடந்து கஷ்டப்படுறானே?”
“என்னடா சும்மா கஷ்டபடுறான் கஷ்டபடுறான்னு சொல்லிட்டு இருக்க… சும்மாவா போய் இருக்கான்… நாம சம்பளம் கொடுக்கிறோம். அவன் வேலை செய்றான்… அவ்வளவு தான்.. சும்மா கண்டதையும் போட்டு குழப்பிக்காம.. போய் வேலையைப் பாரு” என்று சொன்னவர் அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டு நகர்ந்து விட ராஜேஷிற்குத் தான் நிம்மதி வந்தபாடில்லை.
விசாலத்திற்கோ கோபம் அதிகமாகி இருந்தது.
‘இந்த கெளதம் பய.. போன வேகத்தில் உடனே திரும்பிடுவான்னு பார்த்தா.. ஒரு மாசம் அங்கே தாக்குப் பிடிச்சுட்டானே.. அது கூட பரவாயில்லை.. இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்தா எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சுட்டு வருவான் போலவே… அது கூடாது… கூடவே கூடாது. அந்தப் பய ஜெயிச்சு என் முன்னாடி நெஞ்சு நிமிர்த்தி நிற்கவே கூடாது.என்னைப் பார்க்கவே நிமிர முடியாம கூனிக்குறுகிப் போய் தான் நிக்கணும்.அதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்’ என்று வன்மமாக நினைத்தவர் மெல்ல மகனிடம் சென்று பேச்சுக் கொடுத்தார்.
“ஏன் ராஜேஷ்… நீ இவ்வளவு தூரம் சொல்றதைப் பார்த்தா… எனக்கும் அந்தப் பையனை நினைச்சு கவலையா இருக்கே… ஆமா அந்த தம்பி எங்கே இருக்கான்? அந்த ஊரில் தான் ஹோட்டல், லாட்ஜ் எதுவும் இல்லையே?” என்றார் பாவமாக…
அன்னையின் மனது புரியாமல் வேகமாக பேசத் தொடங்கினான் ராஜேஷ்.
“அந்த ஊரிலேயே ஒரு வீட்டில் தங்கி இருக்கான்மா…”
“அச்சச்சோ… தனியாவா?”
“அந்த வீட்டில் ஒரு பொண்ணும் இருக்கும்மா… அந்த பொண்ணு தான் இவனுக்கு சாப்பாடும் கொடுத்துட்டு வருது”
“அந்த பொண்ணோட குடும்பம் அதை தடுக்கலையா தம்பி… ஏன்னா இந்த மாதிரி மக்கள் ரொம்பவும் கவுரவம் பார்ப்பாங்களே? திடீர்னு கௌதமை வீட்டை விட்டு அனுப்பிட்டா?”
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காதும்மா… அந்த வீட்டில் அந்த பொண்ணு மட்டும் தான்.பெத்தவங்க எல்லாம் முன்னாடியே இறந்துட்டாங்க போல…”
“ஓ… அந்த பொண்ணு வீடு பெருசு போல… அந்த பொண்ணு ஒரு அறையிலும்..கெளதம் ஒரு அறையிலும் தங்கிப்பாங்களா?” இமை கொட்டி அவர் கேட்ட விதத்தில் உண்மையாக அவர் அப்பாவித்தனமாக த் தான் இருக்கிறார் போலும் என்று நம்பி ஏமாந்து போனான் ராஜேஷ்.
“அட நீங்க வேற… அது ஒரு சாதாரண வீடும்மா… கௌதமுக்கும்.. அந்த பொண்ணுக்கும் இடையில் ஒரு கூரை தடுப்பு தான்… அதுவும் அந்த பொண்ணு சிரமப்படுதேனு அவன் கட்டிக் கொடுத்தது தான்”
“அந்தப் பொண்ணுக்கு எப்படியும் ஒரு முப்பது வயசு இருக்காது”
“அந்தப் பொண்ணுக்கு இன்னும் இருபது வயசு கூட ஆகி இருக்காதுன்னு கெளதம் சொன்னான் மா”
ராஜேஷ் ஒவ்வொரு விஷயமாக சொல்ல சொல்ல விசாலத்தின் மனதுக்குள் திட்டம் ஒன்று தோன்றியது.கௌதமை எல்லார் முன்னிலையிலும் தலை குனிய வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தவருக்கு வழி கிடைத்து விட்டது.
ராஜேஷிற்குத் தெரியாமல் ஒரு ஆளை ஏற்பாடு செய்து கெளதம் இருக்கும் ஊருக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டார். அவருக்கு ஏற்கனவே அறிமுகமாக குமரனை தனியே அழைத்து பேசியவர் அங்கே போனதும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்து விட்டு காத்திருக்கத் தொடங்கினார்.
அவருக்கு சந்தோசம் தாள முடியவில்லை.ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார். ராஜேஷ் எதுவும் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாதே… அவர் கண் முன்னே காட்சிகள் விரிந்தது.
கெளதம் எல்லார் முன்னிலையிலும் தலையைக் கூட உயர்த்த முடியாமல் அவமானத்துடன் நின்று கொண்டு இருக்க… சுற்றி இருந்த அத்தனை பேரும் அவனைப் பார்த்து தூற்றிக் கொண்டு இருக்க..விசாலமோ அவனது நிலையைக் கண்டு எக்காளச் சிரிப்பு சிரிக்கிறார்.
‘ஆஹா!… ஆஹா!… எத்தனை அற்புதமான காட்சி அது!’
தேவைக்கு அதிகமான பணத்தை குமரனிடம் கொடுத்து அனுப்பியவர் அவன் கொண்டு வரப் போகும் நல்ல செய்திக்காக காத்திருந்தார்.