தணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 13

0
601

 

பொழுது விடிந்த பிறகும் கூட படுக்கையை விட நகராமல் அப்படியே சுருண்டு படுத்திருந்தான் கெளதம்.  அவனுக்கு வெளியே கிளம்பிப் போகவே மனமில்லை. சீக்கிரமாக வெளியே கிளம்பிப் போய் வேலையை முடித்தால் அடுத்து என்ன நடக்கும்? ஊரை விட்டு கிளம்ப வேண்டுமே… மருதாணியை விட்டு எப்படி போவது?

மருதாணியின் கண்களில் எந்த அளவிற்கு நேசத்தைக் கண்டானோ அதே அளவிற்கு நேர்மையையும் பார்த்து இருக்கிறான். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சுய மரியாதையை இழக்க அவள் தயாராகவே இல்லை. அவளது கண்கள் எதிரில் நிற்பவரை கூறு போடும் வாள் போல மின்னியதைக் கண்டு இருக்கிறான். அவளுக்கு தான் செய்து இருக்கும் இந்த ஏமாற்று வேலை தெரிந்தால் அதன்பிறகு என்னாகும் என்பதை நினைக்கக் கூட அவனுக்கு பயமாக இருந்தது.

இருவரும் வாய் மொழியாக தங்களின் நேசத்தை பகிர்ந்து கொள்ளவில்லை தான். ஆனால் காதலை தெரிவிக்க பாஷைகள் வேண்டுமா என்ன? ஒற்றைப் பார்வை போதாதா? நாளை அவளுக்கு உண்மை தெரிந்த பின் அவளை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனையே அவனை முடக்கிப் போட்டது என்று சொல்லலாம்.

அவளுக்கு அந்த ஊர் மனிதர்களின் மீது ஏதோவொரு விஷயத்தில் வெறுப்பு இருப்பதை அவன் அறிவான். அதற்காக தான் அவளிடம் உண்மையை மறைத்ததை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்ற உண்மை அவனை உறைய வைத்தது.

விடிந்து வெகுநேரம் கடந்தும் கெளதம் வெளியே வராததால் தயங்கி தயங்கி வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தாள் மருதாணி. கெளதம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

‘நேற்று வெகுநேரம்  வரை வெளியே சுற்றிக் கொண்டு இருந்தாரே.. இரவில் பூச்சி எதுவும் கடித்து விட்டதா? ஒருவேளை ஜுரமா?’என்று ஏதேதோ எண்ணி அஞ்சியவள் நொடியும் தாமதிக்காது அவன் அருகில் சென்று நெற்றியில் கைகளை வைத்துப் பார்த்தாள்.

‘சூடு தெரியவில்லையே’ அவள் நெற்றியில் இருந்து கரத்தை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மெல்ல கண்களை திறந்து பார்த்தான் கெளதம். சட்டென்று அவன் முழித்துக் கொள்வான் என்பதை எதிர்பாராத மருதாணி நாணம் கொண்டாள்.

‘அச்சோ! இப்படி அவர் தூங்கிட்டு இருக்கும் பொழுது உள்ளே வந்து அவரை தொட்டு பார்த்ததை தப்பா எடுத்துப்பாரோ’ தன்னை அவனுக்கு புரிய வைத்து விடும் வேகத்தோடு அவன் கண்களை சந்தித்தவள் பேச்சிழந்தாள்.

‘என்ன பார்வை இது’

கண்களால் தன்னிடம் எதை யாசிக்கிறான்? புரியவில்லை அவளுக்கு…

நெற்றியில் படிந்து இருந்த அவளது கரத்தின் மீது தன்னுடைய கரத்தை வைத்து அழுத்தியவன் அவளது கரத்தை விடாமல் மெல்ல எழுந்து அமர்ந்தான்.

“மனு… எப்பவும் என்னோடவே இருப்ப தானே?”

‘என்ன கேள்வி இது? சம்பந்தமேயில்லாமல்.. உடம்பில் சூடு கூட இல்லையே? ஒருவேளை உள்க்காய்ச்சலா இருக்குமோ?’ என்ற ரீதியில் அவள் கவலையுடன் அவனைப் பார்க்க… அவன் முகத்திலோ கவலையும், பிடிவாதமும் சரிபாதியாக கலந்து இருந்தது.

‘நீ பதில் சொல்லியே தீர வேண்டும்’ என்ற பாவனை அவன் முகத்தில் …

‘என்னாச்சு இவருக்கு’ குழப்பம் அவள் முகத்தில் … அவளது மனநிலை தெளிவாக தெரிந்தாலும் எதையும் வாய் விட்டு சொல்ல முடியாத நிலையில் தவித்தான் கெளதம்.

‘இவளுக்கு உண்மை தெரிந்தால் என்னை வெறுத்து விடுவாளோ?’ மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றது அவன் மனம்.

“மிச்சம் இருக்கிற வாழ்நாள் முழுக்க என்னோடவே இருப்ப தானே?” அவனது கேள்வியில் அத்தனை தவிப்பை உணர முடிந்தது அவளால்.

இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் அவள் தான் திணறினாள்.

‘வாழ்நாள் முழுக்க ஒரு ஆணுடன் இருப்பது என்றால்?’ அவள் மனதில் உற்சாகம் குமிழியிட்டது. ரப்பர் பந்தைப் போல துள்ளி குதிக்க சொல்லி அவள் மனம் பரபரத்தது. கன்னங்கள் அந்தி வானமாய் சிவந்தது.

அவள் முகமே அவனுக்கு அவளது மனதை படம் பிடித்து காட்டினாலும் கௌதமிற்கு அது போதவில்லை. அவளின் உள்ளங்கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அழுத்தினான்.

“வாய் திறந்து சொல்லு மனு… இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் வேண்டாம்” அவனின் குரலில் லேசான கெஞ்சல் இருந்ததோ…

இத்தனை நாட்கள் இல்லாமல் இதென்ன புதிதாக என்ற கேள்வி எல்லாம் அவள் மனதில் எழவே இல்லை. அவன் வெளிப்படையாக கேட்பதே அவளுக்கு சந்தோசமாகத் தான் இருந்தது. இனி அனாவசிய கவலைகளுக்கு இடம் இல்லையே. இப்படி இருக்குமோ… அப்படி இருக்குமோ என்ற சந்தேகங்கள் இனி அவளுக்கு தோன்றாது.

“இதென்ன அசட்டுத்தனமான கேள்வி” அவள் குரலில் இருந்த துள்ளல் அவள் மனதை அவனுக்கு உணர்த்தியது.

‘இந்த கேள்விக்கு பதில் உனக்குத் தெரியாதா?’ என்ற ரீதியில் அவளது பார்வை அவனை துளைத்தது.

அவளது உள்ளங்கையில் நடுவிரலால் கோலமிட்டபடியே கண்களால் கெஞ்சினான்.

‘ப்ளீஸ்!’

“நீங்க கூப்பிட்டா உங்க கூடவே வரப் போறேன்… இதுக்கு எதுக்கு இத்தனை தவிப்பு”

“ம்ஹும்… எனக்கு அது போதாது… என்ன நடந்தாலும் என்னை விட்டு பிரியக்கூடாது. என் கூடவே இருக்கணும்.”

அவனது பேச்சைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது.

‘ஊரார் எங்களை பிரித்து விடுவார்கள் என்று பயம் போல’

அவள் ஏற்கனவே அறிந்தவரையில் கெளதம் வீட்டில் யாருமே அவனுக்கு எதிராக நிற்க மாட்டார்கள். அப்படி இருந்தும் அவன் இத்தனை தூரம் அஞ்சுகிறான் எனில் அது தன்னுடைய ஊராரை நினைத்து மட்டுமே இருக்க முடியும் என்று அசட்டுத்தனமாக எண்ணியவள் அவனைப் பார்த்து சம்மதமாக தலை அசைத்தாள்.

“சத்தியம் பண்ணு” அவன் கரங்கள் லேசான நடுக்கத்துடன் அவள் புறம் நீண்டது.

‘இதென்ன சின்னப்பிள்ளைத்தனம்’… என்று நினைத்தாலும் அவன் கேட்டதை செய்ய தயங்கவில்லை அவள்.

அவனது கரத்தில் இருந்த அவளது வெண்பஞ்சு விரல்களை மென்மையாக தீண்டினான். உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓட… கையை உருவிக்கொண்டு ஓட முயன்றாள்.

“இப்போ தானே கூடவே இருப்பேன்னு சொன்ன… உடனே போகப் பார்க்கறியே?” அவன் குரலில் இருந்த குற்றச்சாட்டு புரியாமல் விழித்தவள் உடனே சுதாரித்தாள்.

“அதுக்காக இப்படியே உங்க கையை பிடிச்சுக்கிட்டே இருந்தா வேலை எல்லாம் யார் செய்றதாம்? கையை விடுங்க…”

“ம்ஹும்… மாட்டேன்” அவளை தன் அருகில் இழுப்பதிலேயே அவன் குறியாக இருக்க…அவள் முகம் புன்னகையை பூசிக் கொண்டது.

“என்னாச்சு இன்னிக்கு உங்களுக்கு?”

“என்னமோ ஆச்சு… கிட்டே வா காதில் சொல்றேன்” என்றவனின் பார்வை பேசிய பாஷையில் சிவந்தாள். அவனிடம் இருந்து பிடியை உருவிக்கொண்டு வேகமாக ஓடியவள் வாசலில் நின்று கொண்டு இருந்த புதியவனைப் பார்த்து திகைத்தாள்.

அவள் ஒன்றும் அவனைக் கண்டு பயந்து விடவில்லை.

அவள் இருப்பது அவள் வீட்டில்… பேசிக் கொண்டிருந்தது அவளது மனம் கொய்தவனிடம்… இதில் அஞ்சுவதற்கு என்ன இருக்கிறது?

“யார் நீங்க?”நிமிர்வுடன் கேட்டவளை அலட்சியமாக பார்த்தவனின் பார்வை கட்டிலில் இருந்து பதட்டத்துடன் எழுந்து கொண்டிருந்த கௌதமிடம் நிலைத்தது.

“நான் கெளதம் சாரை பார்க்க வந்தேன்”

“ஓ… உள்ளே வாங்க” என்றவள் அத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்று  விட கெளதம் வேகமாக அவன் அருகில் வந்தான்.

“என்ன விஷயம் குமரா? எதுக்கு நீ இப்போ வந்த? எதுவா இருந்தாலும் போனில் பேசி இருக்கலாமே?”அவன் குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.

“நானா வரலை… விசாலம் மேடம் தான் அனுப்பி வச்சாங்க”விசாலத்தின் பெயரைக் கேட்டதும் அவன் முகத்தில் இருந்த எரிச்சல் இன்னும் அதிகமானது.

“ என்ன விஷயம்?” உணர்ச்சி துடைத்த முகத்துடன் கேட்டான்.

“நீங்க வந்த வேலை எந்த அளவில் இருக்குனு என்னை பார்த்துட்டு வர சொன்னாங்க.. அதான் நானும்…” என்று பேசிக் கொண்டே வந்தவன் கௌதமின் முகத்தில் தெரிந்த கொலைவெறியில் வாயை கப்பென்று மூடிக் கொண்டான்.

“இரண்டு மாசத்தில் முடிச்சுடுவேன்னு சொல்லிட்டு தானே வந்தேன்… இப்போ ஒரே மாசத்தில் நீ வந்தா என்ன அர்த்தம்?”

“அவங்க தான்…”இழுத்தான் குமரன்.

“சொன்னாலும் நீ வரக் கூடாது. ஏன்னா இந்த வேலையை கொடுத்து இருக்கிறது கெளதம் கிட்டேன்னு அவங்ககிட்டே நான் சொன்னேன்னு சொல்லு… சொன்ன படியே வேலையை முடிச்சிட்டு வருவேன்.. அதுவரை யாரும் இந்தப் பக்கம் வரக் கூடாதுன்னு நான் சொன்னேன்னு சொல்லு”அதிகார தொனியில் உத்தரவிட்டவன் மருதாணியின் கொலுசொலியை உணர்ந்து பேச்சை நிறுத்தினான்.

“இஞ்சி டீ கொண்டு வந்து இருக்கேன்… இரண்டு பேரும் பேசிட்டு இருங்க.. காலை பலகாரம் ஒரு அஞ்சு நிமிஷத்தில் தயார் ஆகிடும்” வந்திருப்பவனை தனக்கு நெருக்கமானவன் என்று அவள் நினைப்பது கௌதமுக்கு புரிந்தது.

“அதெல்லாம் வேண்டாம். அவர் இதோ கிளம்பிட்டார்.. நான் அவரை வழி அனுப்பி வச்சுட்டு வந்திடறேன்” என்றவன் குமரனின் கைகளை விடாமல் இறுக்கி பிடித்தவாறு அங்கிருந்து வெளியேற கேள்வியாக அவனைப் பார்த்தவள் பார்வையால் இறைஞ்சினாள்.

“வெறும் வயிற்றில் வெளியே போக வேண்டாம்.. இதை குடிச்சுட்டுப் போங்க” அவளின் கெஞ்சல் அவனை அடுத்த அடி வைக்க முடியாமல் தடுக்க… வேகமாக டீயை உறிஞ்சி விட்டு குமரனை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.

அங்கே நடப்பது அத்தனையையும் குமரன் குறுகுறுவென்று இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் .

‘ஓஹோ..கதை அப்படிப் போகுதா! இந்த பெண்ணிற்கு இத்தனை சக்தியா?’

அலுவலகத்தில் கௌதம் யாருக்கும் அடிபணிந்து அவன் பார்த்தது இல்லை. உற்ற நண்பனான ராஜேஷிடம் கூட  அவன் இறங்கிப்போய் பேசியது கிடையாது.

‘ நான் வேலை செய்கிறேன். அதற்காக  நீ சம்பளம் கொடுக்கிறாய்’ என்ற பாணி தான் அதில் இருக்கும். அங்கே ராஜேஷ் ஏதாவது வேலை சொன்னால் கூட சாதாரணமாகத் தான் பேசுவான். முதலாளி என்று அதிகாரம் காட்டிப் பேசினால் தலைகீழாக நின்றாலும் அந்த வேலையை கௌதம் செய்ய மாட்டான். கௌதமிற்கு இந்த கம்பெனி இல்லாவிட்டால் எத்தனையோ கம்பெனிகள் வேலை தர தயாராக இருந்தார்கள்.

அவனைப் பொறுத்தவரை யாருக்கும் அடிபணிந்து போக வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவன் சம்பளம் கொடுக்கும் முதலாளியை இப்படி தூர தள்ளி நிறுத்தி வைத்திருப்பவன் இந்த பெண்ணிடம் எப்படி இந்தளவிற்கு பணிந்து போகிறான் என்று சில நிமிடங்கள் யோசித்தான் குமரன்.

 அவனது மூளை சற்று கோணலாக யோசித்தது. தேவதை போன்ற அழகான பெண்… அவளிடம் அடக்கி வாசிக்கிறான் இவன். காரணம் என்னவாக இருக்கக்கூடும்? அவனை இவள் மயக்கினாளோ இவளை அவன் மயக்கினானோ எப்படியோ இருவரும் மயங்கிப் போய் நிற்கின்றார்கள் .

இந்த விஷயத்தை உடனடியாக விசாலத்திடம் சொல்லிவிட வேண்டும் என்று அவனது உள்ளம் பரபரத்தது. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை விசாலத்தைப் போலவே குமரனுக்கும் கௌதமை பிடிக்காது. வந்த ஒரே மாதத்தில் எல்லோரையும் அவன் பக்கம் இழுத்து விட்டான் ஆபீஸில் வேலை பார்க்கும் உயர்மட்ட அதிகாரிகளில்  ஆரம்பித்து கடைக்கோடி ப்யூன் வரை எல்லோரும் கௌதம் சார்… கௌதம் சார்… கௌதம் சார் என்று புலம்ப இத்தனை நாட்களாக அதே கம்பெனியில் இருந்து வந்த தனக்கு கிடைக்காத மரியாதை கௌதமுக்கு கிடைப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 சில நேரங்களில் ராஜேஷிடம் கையெழுத்து வாங்குவதற்காக அவன் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் விசாலத்திற்கும் கௌதமை பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு இருந்தான். தன்னை போலவே அவரும் இருக்கிறார் எனும் பட்சத்தில் அவரிடம் சொன்னால் கண்டிப்பாக நிலைமையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார் என்பது குமரனுக்குத் தெரியும். அதற்காகத்தானே விசாலம்  இப்பொழுது மெனக்கட்டு குமரனை கௌதம் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை அவன் நன்றாக அறிவான்.

அவன் போனை எடுத்து விசாலத்திற்கு அழைக்க முயன்றான். ஆனால் கெளதம்  இருக்கும் இடத்தில் டெலிபோன் சிக்னல்கள் சரியாக இல்லாததால் நேரிலேயே போய் விஷயத்தை சொல்லிக் கொள்வோம் என்று நினைத்தவன் கெளதமை பார்த்து கோணலாக சிரித்தபடி விடைபெற்றுச் சென்றான். கௌதமிற்கு அவன் விடைபெற்றுச் சென்ற விதம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது

‘ எதற்காக அப்படி சிரித்தான்? என்ன காரணம்? குமரன்  காரணமே இல்லாமல் சிரிக்க கூடியவன் அல்ல…. இதன் பின்னால் ஏதோ சதி இருக்க வேண்டும் என்பதை  அவன் மனம் உணர்ந்து கொண்டது .சதி எத்தனையோ விதமாக செய்யலாம்… இந்த ஊராரிடம் தன்னைப்பற்றி போட்டுக் கொடுக்கலாம். ஆனால் அதைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனைப்பற்றி ஊராருக்கு தெரிந்து திட்டம் பாழடைந்தால் கம்பெனியினர் அவனை பெரிதாக கேள்வி கேட்க முடியாது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் குமரனை அனுப்பி வைத்து தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி அவன் கிளம்பி வந்த நோக்கத்தை வெற்றிகரமாக முடிக்க விடாமல் செய்தது கம்பெனியின் தவறு என்று அவர்கள் புறம் அம்பை திருப்பி விடலாம்.

 ஆனால் இவன் மருதாணியை வைத்து ஏதேனும் முயற்சி செய்வானோ என்று கௌதமிற்க்கு உள்ளூர கொஞ்சம் படபடப்பாக இருந்தது. ஏனெனில் மருதாணியை அவன் பார்த்த பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது. அது அதிர்ச்சியா… ஆச்சரியமா அனைத்தையும் தாண்டி அவன் கண்களில் இருந்த கள்ளத்தனம், கிளம்பும்போது அவன் சிரித்த சிரிப்பு…

எக்காரணம் கொண்டும் மீண்டும் இந்த ஊர் பக்கம் வரக்கூடாது என்று குமரனை மிரட்டி அனுப்பி வைத்தவன் யோசனை செய்தபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

விசாலம் கண்டிப்பாக அவனுக்கு இடைஞ்சல் செய்வதற்காகத் தான் குமரனை அனுப்பி இருக்க வேண்டும்…

‘என்ன திட்டம் தீட்டி இருப்பார்? எதுவாக இருந்தாலும் மறுபடியும் அவர் முயற்சி செய்வார். தனக்கு இருக்கும் கால அவசாகம் முடிவதற்கு முன் தன்னுடைய திட்டத்தை முடித்தாக  வேண்டும். அவர் மீண்டும் வந்து உண்மையை ஊராரிடம் சொல்லி விட்டால் நான் தோற்று விடுவேன் என்பதையும் தாண்டி மருதாணி எனக்கு கிடைக்கவே மாட்டாள் ’

எல்லாமாக சேர்ந்து  ஏதோ ஒரு வகையில் கௌதமிற்கு பயத்தை தோற்றுவித்தது. இவன் நடவடிக்கைகளைப் பார்த்தால் கூடிய சீக்கிரமே அவன் வருவான் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தவன் அங்கு இருந்தபடியே வீட்டிற்கு அழைத்து பேசினான்.

தாயின் வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும், “ அம்மா இங்க வந்த வேலை முடிய ரெண்டு மாசம் ஆகும் நினைச்சேன். பட் அதுக்கு முன்னாடியே முடிஞ்சிடும் போல இருக்கு. அனேகமா அடுத்த வாரமே நான் ஊருக்கு வந்துடுவேன்னு நினைக்கிறேன்” என்ற செய்தியில்  பெற்றோரின் மனம் மகிழ்ந்தது.

“ ரொம்ப நல்லது … சீக்கிரமா நீ வர்றதை விட  எனக்கு வேற என்ன தான் சந்தோஷம் வேணும்” என்றவர் மேற்கொண்டு மகனின் உடல் நலம் விசாரித்து விட்டு போனை வைத்து விட மங்களத்திற்கு மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. எப்படியோ மகன் இன்னும் ஒரு வாரத்தில் தன்னிடம் வந்து சேர்ந்து விடுவான் என்று நினைத்தவர் வீட்டில் உள்ளவர்களிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக எல்லோரிடம் தேடித்தேடி போய் சொன்னார்.

அங்கேயோ கௌதம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

‘அம்மாவிடம் மருதாணியை பற்றி சொல்லி இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவங்களுக்கு தெரிஞ்சு தானே ஆகணும்? ஏதாவது தவறு செய்து விட்டேனா?’ என்ற விதத்தில் யோசித்தான். அடுத்த நிமிடமே அவன் மனம், ‘இல்லை மருதாணியை பற்றிய விஷயத்தை நேரில் போய் பேசுவதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் அம்மா என் மீது வைத்திருக்கும் பாசம் அப்படி… அவரால் ஒரு பழங்குடியினர் மகளை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்ளும்படி இங்கிருந்து நான் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். மருதாணி போட்டோவை காட்டி அவளைப் பற்றி எடுத்துச் சொல்லி அதன் பிறகு வீட்டிற்கு கூட்டிப் போவது தான் சரியாக இருக்கும்’ என்று நினைத்தவன் வீட்டிற்கு திரும்பினான்.

அங்கே வீட்டில் அவனுக்காக மருதாணி காத்துக் கொண்டிருந்தாள். எதையோ தன்னிடம் பேச நினைக்கிறாள் என்பதை அவளது முக பாவனையில் இருந்து புரிந்து கொண்டவன், “என்னமா” என்றான்.

மெல்ல அருகில் வந்தவள், “அவர்  உங்க நண்பர் நினைச்சேன்”

அவன் தனக்கு வேண்டாத விருந்தாளி என்பதை புரிந்து கொண்டதோடு மட்டும் இல்லாமல் அவனை உபசரிப்பு கொடுத்து வரவேற்றதை எண்ணி வருந்துகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

“நமக்கு தெரிஞ்சவங்க… நம்ம பேசுறவங்க.. எல்லாருமே நமக்கு நண்பராகவும் நம்ம நலம் விரும்பியாக இருக்கணும்னு அவசியம் இல்லையே” என்று கூற மருதாணி அதை ஆமோதித்தாள்.  ஏனெனில் அவளும் அவளுடைய உறவுகளால்  நிறைய அனுபவித்திருக்கிறாள் தானே.

“மருதாணி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் கௌதம் லேசான தயக்கத்துடன்…

“ என்ன விஷயம் சொல்லுங்க”

“ நான் வந்த வேலை எப்படியும் இந்த ஒரு வாரத்தில் முடிந்துவிடும்” என்று சொல்ல மருதாணியின் முகம் லேசாக வாடியது. கௌதமிடம் அதைக் காட்டினால் அவன் வருத்தப்படுவான் என்பது ஒருபுறமிருக்க… முகத்திலிருந்த வருத்தத்தைத் அவனுக்கு தெரியாமல் மறைப்பதற்கு மருதாணி வெகுவாக சிரமப்பட்டாள்.

“ சந்தோஷம்… அந்த வேலைக்காகத் தானே வந்தீங்க… வேலை முடிஞ்சா ஊருக்குப்  போய்த்தானே ஆகணும்” என்று முயன்று வரவழைத்த சிரிப்புடன்.

”மருதாணி எப்படியும் நான் போய் ஒரே வாரத்துல… இல்ல …அவ்ளோ நாள் எல்லாம் உன்னை விட்டுட்டு இருக்கிறது கஷ்டம். ஒரு ரெண்டு நாள்ல திரும்பி வர பார்க்கிறேன். இங்க இருந்து போக ஒரு நாள் என் குடும்பத்தில் சொல்லி  அவங்க சம்மதத்தை வாங்கிட்டு வரணும். அவங்களோட இங்க வர்றேன். நீ தயாரா எனக்காக காத்துக்கிட்டு இருக்கணும் புரிஞ்சுதா? அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுவாங்க . ஆனால் கல்யாணத்துக்கு நல்லநாள் பார்க்கிறேன் அப்படினு சொல்லி கொஞ்ச நாள் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கு.  ஆனா அதுவரைக்கும் உன்னை இந்த ஊர்ல தனியா இருக்க வைக்க  என்னால முடியாது. நீ பக்கத்துல இருந்தா நானும் கொஞ்சம் தைரியமாக இருப்பேன்.

 அதனால நான் மறுபடி வரும்போது உன்னையும் கையோடு கூட்டிட்டு  போயிடுவேன். சரிதானா?  நீ தயாரா காத்திருக்கணும்… வர மாட்டேன்னு அடம் எல்லாம் பிடிக்க கூடாது.” என்று கெஞ்சலும், கொஞ்சலுமாக சொன்னதும்  மருதாணியின் முகத்தில் ஒரு நிமிடம் கவலை மின்னல் போல் மின்னி மறைந்தது.

“ என்ன மருதாணி.. என்ன விஷயம்? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்று கேட்க அவளது பார்வை அவளையுமறியாமல் சுவற்றில் இருந்த தாய் தந்தையை புகைப்படத்தில் நிலைக்க கௌதம் அவளது மனநிலையை புரிந்து கொண்டான்.

“மருதாணி எனக்கு உன்னோட கஷ்டம் புரியுது மா.. ஆனா என்னால் இங்கேயே தங்கி இருக்க முடியாது டா… எப்படியும் இந்த ஊரை விட்டு நாம போய்த் தானே ஆகணும்”என்று கேட்க மருதாணியின் கண்களில் லேசாக கண்ணீர்.

“ இந்த ஊர்  மேல எனக்கு எந்த பாசமும் இல்லை. ஆனால் இந்த வீடு… இது என் பெத்தவங்க நியாபகார்த்தமா என் கிட்டே இருக்கிற ஒரே விஷயம். இது என் அப்பா, அம்மாவுடன் நான் வாழ்ந்த நாட்களின் அழகிய பொக்கிஷம். அவங்க நியாபகமா மிச்சம் இருக்கிறது இது மட்டும் தான்.

நான்தான் இந்த வீட்டோட உரிமைக்காரி. நான் இருக்கும் போதே என்னை வெளியே துரத்திட்டு உங்களை இந்த வீட்டில் குடி வச்சாங்க. ஆனா நானும் இந்த இடத்தை விட்டு போயிட்டா… இந்த வீட்டை இடித்துத் தள்ளவும் அவங்க தயங்க மாட்டாங்க. அதுதான் கவலையா இருக்கு” என்று சொல்ல கௌதம் ஆசுவாசமானான்.

‘ நல்லவேளை பெரிய பிரச்சனை எதுவும் இல்லை’ என்று நினைத்தவன் இதமாக அவளைப் பார்த்து சிரித்தான்.

“ இவ்வளவுதானே… சரி இந்த வீட்டு பத்திரம் எல்லாம் யார் பேர்ல இருக்கு?” என்று கேட்டான்.

“பத்திரம் எல்லாம் அப்பா பேர்ல தான் இருக்கு”

“ அப்புறமென்ன அப்பாவோட வாரிசு நீ.. ஸோ.. உனக்கு தான் முழு உரிமையும் இருக்கு.”

“நான் இல்லன்னா இந்த வீட்டை எதுவும் பண்ணி விடுவார்களோ என்று பயமா இருக்கு” என்று அவள் கலங்க  அவள் தோளை தட்டி ஆறுதல்  கூறினான்.

“ பயப்படாத… இந்த வீடு உனக்கு மட்டும் முக்கியம் இல்லை… இனி எனக்கும் முக்கியம்.  இதை பத்திரமா பாதுகாக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றவனின் முகம் அவளை இயல்பாக்கும் நோக்கத்துடன் குறும்பில் மிளிர்ந்தது.

“காலையில் எழுந்த உடனேயே கல்யாண விஷயமா பேசி இருக்கேன். அதுக்காக ஸ்பெஷலா எந்த கவனிப்பும் இல்லையா?” என்று கேட்டான் கண்களில் காதலை தேக்கியபடி.

“ கல்யாண விஷயத்தை பேசுவதற்காக மட்டுமே ஸ்பெஷலா எந்த கவனிப்பும் கொடுக்க முடியாது சாரே.. அதுல இன்னும் ஆயிரம் விஷயங்கள் இருக்கு. முதல்ல பேசணும். அப்புறம் பெரியவங்க முடிவு பண்ணனும். அப்புறம் நடக்கணும். இத்தனை விஷயம் இருக்கு. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி ?”என்றவள்  லேசாக சிவந்த முகத்துடன் அவனது பிடியிலிருந்து விலகிக் கொண்டு நகர முனைய விட்டு விடுவானா அவன்?

 சுண்டி இழுத்ததில் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் மருதாணி.

“ அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போக முடியாது மேடம். நான் கேட்டதுக்கு ஸ்பெஷலா.. பெருசா இல்லாட்டியும் ஏதோ சின்னதாவாவது கவனிச்சே ஆகணும்” என்றவன் பொய்யாக மிரட்டியபடி அவளது இடையை லேசாக அழுத்த மருதாணியின் முகம் இன்னுமாய் சிவந்தது.

“ கவனிப்பு எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான். கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சமும் கிடையாது …நிறையவும் கிடையாது” என்ற சொல்லி விட்டு  அவள்  ஓட கௌதமும் சிரித்த முகத்துடன் அவளை பின் தொடர்ந்தான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 2 Average: 4.5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here