தணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 14

0
572

குமரன் விசாலத்திடம் அங்கே தான் பார்த்த காட்சிகளை ஒன்று விடாமல் விலாவாரியாக பற்ற வைத்துக் கொண்டிருந்தான். அவன் சொல்ல சொல்ல விசாலத்தின் கண்கள் அதீத மகிழ்ச்சியில் பளபளக்கத் தொடங்கியது.

குமரன் அத்தோடு மட்டும் நிறுத்தாமல் மருதாணியும், கௌதமும் கட்டிலில் அமர்ந்து கொண்டு ஒருவரையொருவர் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகிய தருணத்தை தன்னுடைய மொபைலில் அவன் பதிவு செய்திருந்த கோணம்  காண்போரை முகம் சுழிக்க வைக்கும் விதமாக இருந்தது.

கௌதமும், மருதாணியும் ஒருவரையொருவர் அணைத்த நிலையில் இருந்த அந்த போட்டோவை விசாலத்திடம் ஒப்படைத்ததும் அவர்  முகம் இன்னும் பிரகாசமானது.

“இது ஒண்ணு போதும்… அவனை எப்படி சந்தி சிரிக்க வைக்கப் போறேன்னு பார்”

“மேடம்… என்னோட பிரமோஷன் பத்தி கேட்டு இருந்தேனே?” நேரம் பார்த்து தூண்டிலை வீசினான் குமரன்.

அவன் விடாக் கண்டனாக இருந்தால் விசாலம் அவனை விடவும் வித்தாரக் கள்ளி ஆயிற்றே… அவரா அவனிடம் சிக்குவார்.

“செஞ்ச வேலைக்கு ஒண்ணுக்கு பத்தா கூலி வேணும்னா  வாங்கிக்கோ… அவ்வளவு தான்.. அதுக்கு மேல கம்பெனி விஷயத்தில் எதுவும் நான் தலையிட மாட்டேன். கம்பெனி பொறுப்பு முழுக்க ராஜேஷ் கிட்டே தான் இருக்கு.” என்று பச்சையாக புளுகினார் விசாலம்.

‘கூலினா இன்னிக்கு ஒரு நாளோட போச்சு… பிரமோஷன்னா மாசா மாசம் கூடுதலா சம்பளம் கொடுத்து தொலைக்கணுமே’

குமரனுக்கும் அவரிடம் இருந்து பணம் வாங்குவதே பெரிது என்பது தெரிந்ததால் மேற்கொண்டு வழக்கடிக்காமல் அவர் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு போட்டோவை அவரிடம் ஒப்படைத்து விட்டான்.

அவன் சென்றதுமே அந்த போட்டோவை ஆசை தீரப் பார்த்தார்.

‘பணத்திலும், அந்தஸ்திலும், செல்வாக்கிலும் சிறந்தவனான அவரது மகனை விட குறைவான ஒருவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அறிவற்ற மக்கள் நிறைந்த உலகம் இது.

 இந்த ஊர் மட்டுமல்ல மொத்த உலகமும் அவனை  காறித் துப்பும்படி செய்யப் போவது இந்த போட்டோ தானே… இதை வீட்டு பூஜை அறையிலேயே வைத்து கும்பிடலாம்’  என்று எண்ணியவர் அதை வைத்து கௌதமை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கினார்.

அவரது மனக்கண்ணில் அந்த அருமையான திட்டம் மின்னி மறைந்தது.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’

‘அவன் அந்த ஊருக்கு போன வேலையை முடிக்க விடாம அந்த ஊர் மக்களே அவனை துரத்தி அடிப்பாங்க… செஞ்ச வேலையை முடிக்காம வந்ததுக்காக ஆபிசிலும் அவனை என்னோட காலில் விழுந்து  மன்னிப்பு கேட்க வைப்பேன்.

அவனோட சேர்த்து அவன் மேல ஆசைப்பட்ட அந்த பிச்சைக்காரியையும் ஊரே சேர்த்து காறி துப்பட்டும். அதுக்கு அப்புறம் அவனை அவள் திரும்பியும் பார்ப்பாளா? அவன் ஆசைப்பட்ட பெண்ணும் அவனுக்கு கிடைக்க மாட்டாள். ’

அவர் மனதில் இருக்கும் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள நல்ல நாள் பார்த்தார். அதிக நாள் தள்ளி வைக்காமல் உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தார். கௌதமிற்கு அதிக அவகாசம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சின்னதாக பொறி தட்டினாலும் கூட அவன் உஷாராகி விடுவான். அதற்கு இடம் கொடுக்கவே கூடாது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் தனியாக ஆள் வைத்து ரகசியமாக  செய்தார்.

எந்த விதத்திலும் தன்னுடைய பெயர் இதில் வெளிவந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதற்குக் காரணம் கெளதம் அல்ல.. அவர் பெற்ற மகன் ராஜேஷ்… அவனுக்கு மட்டும் விஷயம் தெரிந்து விட்டால் அதன் பிறகு இந்த ஜென்மத்தில் தன்னுடைய முகத்தில் விழிக்கவே மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். அதற்காகவே திரையின் பின்னால் இருந்து  சாதுர்யமாக காய்களை நகர்த்தத் தொடங்கினார் விசாலம் .

தேர்ந்த சகுனியைப் போன்ற அவரின் காய் நகர்த்தலை விதி ஒரு புன்சிரிப்போடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் ஊரில் கெளதம் தன்னுடைய வேலைகளை விரைந்து செய்து முடித்தான். மருதாணியிடம் எல்லா வேலைகளையும் முடித்த பின்னர் நேரம் பார்த்து அவளிடம் தான் இங்கே வந்ததற்கான காரணத்தை  சொல்லி விட வேண்டும் என்று நினைத்திருக்க , அடுத்த நாள் விடிந்ததும்  அவன் தலையில் இடி இறங்கியது.

விடியற்காலை நேரத்தில் மருதாணி வீட்டுக்கு வெளியில் இருந்த திண்ணையில் உறங்கிக் கொண்டிருக்க… அந்த நேரம் அவளது வீட்டுக்கு வந்த அந்த ஊர் ஆண்களும், பெண்களும் ஆத்திரமாக ஓடி வந்து அவளது தலைமுடியை கொத்தாகப் பற்றி தரையில் தள்ளி விட்டார்கள். உறக்கத்தில் இருந்தவளுக்கு என்ன நடக்கிறது என்பதே புரியாமல் திகைத்து விழிக்க… மீண்டுமாய் அவளது தலைமுடியை பற்றி தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றார்கள் ஊர் மக்கள்.

அவளது வீட்டு வாசலில் இருந்த புன்னை மரத்திலேயே அவளை கட்டி வைக்க முயல , அதற்கு  கயிறு எதுவும் இல்லாததால் அவளது தாவணியைக் கழட்டி அதிலேயே அவளை கட்டுவதற்காக அவளது தாவணியில் கை வைத்தான் முத்தையா. இதுநாள் வரை தன்னை நெருங்கக் கூட விடாமல் அவமானப்படுத்திய மருதாணியை அவமானப்படுத்த கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய வெறியையும் தீர்த்துக் கொள்ள முயன்றது அந்த மிருகம்.

வீட்டின் வெளியே கேட்ட கூச்சலினால், தூக்கம் கலைந்து  வெளியே வந்த கெளதம் பார்த்தது  அவளது மானம் பறி போகும் காட்சியைத் தான்.

மின்னலின் வேகத்தை தனதாக்கிக் கொண்டவன் அவர்களிடம் இருந்து மருதாணியை மீட்பதற்காக  அவளை நோக்கி ஓடினான்.

“விடுங்க அவளை… உங்க எல்லாரையும் எச்சரிக்கிறேன்… இன்னொரு அடி அவ மேல விழுந்தாக் கூட இங்கே இருக்கிற யாரும் உயிரோட வீடு போய் சேர மாட்டீங்க” என்று கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான் கெளதம்.

கௌதமைக் கண்டதும் அவர்களின் ஆத்திரம் அனைத்தும் அப்படியே அவன் புறம் திரும்பியது.

என்ன ஏது என்று காரணமே சொல்லாமல் ஆண்கள் அனைவரும் கௌதமின் மீது பாய சுதாரித்து கெளதம் அவர்களை விலக்குவதற்கு முன் அவன் மீதும் சரமாரியாக அடிகள் விழத் தொடங்கியது. இந்த நிலையில் தொய்ந்து விழுந்து விட்டால் தன்னை மட்டுமில்லாது மருதாணியையும் அடித்தே கொன்று விடுவார்கள் என்பது புரிய… அடிகளை தடுக்க முயன்றவாறே வெகுவாக முயன்று மருதாணியைப் பார்த்தான்.

தலை கலைந்து, உடைகள் கிழிந்து, வாயில் இருந்து ரத்தம் வழிய பரிதாபமான அவளது தோற்றத்தைக் கண்டதும் எங்கிருந்து தான் அவனுக்கு அத்தனை கோபம் வந்ததோ தெரியாது. அவனை பிடித்து வைத்திருந்தவர்களை எல்லாம் ஒரே அடியில் கீழே தள்ளி விட்டு அவளை நோக்கி விரைந்தான்.

ஆனால் அவளுக்கு அருகில் கூட செல்ல முடியாதவாறு கைகளில் கட்டையுடன் பெண்களின் கும்பல் அவளை சூழ்ந்திருக்க கொஞ்சம் நிதானித்தான்.

‘இது நிச்சயமா கம்பெனி விசயம் கிடையாது. அதுக்காகவா இருந்தா என்னை மட்டும் தான் இவங்க அடிச்சு இருப்பாங்க. இவளையும் அடிக்கிறாங்கன்னா வேற ஏதோ பிரச்சினை’ என்ற முடிவுக்கு வந்தவன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை சத்தமில்லாமல் உருவி எல்லார் முன்னிலும் நீட்டினான்.

அவன் துப்பாக்கி வைத்திருப்பான் என்பதை எதிர்பாராத ஊர்மக்கள் எல்லார் முகத்திலும் வந்து போன அதிர்ச்சியை குறித்துக் கொண்டான்.

“எதுக்காக இப்படி மிருகத்தனமா நடந்துக்கறீங்க? மருதாணி என்ன தப்பு செஞ்சானு ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கறீங்க?”

“ஏன்டா… செய்றது எல்லாம் செஞ்சுட்டு என்னவோ நல்லவன் வேசம் போடறியா? துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன்னா அப்படின்னா முன்னேற்பாட்டோட தான் வந்து இருக்கே” கும்பலில் ஒருவன் குற்றம் சாட்டினான்.

“நான் இங்கே வரும் பொழுது ராத்திரியில் காட்டு மிருகம் ஏதாவது தொல்லை செஞ்சா தேவைப்படும்னு எடுத்துட்டு வந்தேன். ஆனா இப்போ தான் தெரியுது. துப்பாக்கி தேவைப்படுறது உங்களை மாதிரி ஆளுங்களுக்குத் தான்”

“டேய்! என்னடா ரொம்ப பேசுற? எங்க ஊரில் இருந்துகிட்டு எங்களையே எதிர்த்து பேசறியா?” என்று ஆத்திரமாக பேசிக் கொண்டே முன்னே வந்த முத்தையா கௌதமின் துப்பாக்கி அவனை நோக்கி திரும்பியதும் அப்படியே பின் வாங்கினான்.

கௌதமின் கண்கள் நொடிக்கொரு முறை மருதாணியிடம்  படிந்து மீண்டது. அரை மயக்கத்தில் இருந்தவளின் கண்கள் அவனை விட்டு அரை வினாடி கூட விலகவில்லை.

அவளது கண்களில் கண்ணீர் இல்லை… கோபம் இல்லை… சலனமில்லாத …. நிராதரவான அந்த தோற்றம் அவனது மனதைப் பிசைந்தது.

துப்பாக்கியுடன் முன்னேறியவனை தடுக்கும் துணிவு அங்கிருந்த ஒருவருக்கும் இல்லாமல் போனது.

மருதாணியை விடுவித்து அவளது தாவணியை சரியாக அணிவித்து தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான். துவண்டு போய்… நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியவளைப் பார்க்க முடியாமல் அவனது நெஞ்சம் கொதித்தது.

“இப்போ எதுக்கு இவளை இப்படி போட்டு அடிச்சு வச்சு இருக்கீங்க? இதுநாள் வரை அவளுக்கு நீங்க செஞ்ச கொடுமை எல்லாம் போதாதா? மனுசங்க தானா நீங்க எல்லாம்? சரியான காட்டு மிராண்டி கூட்டம். அப்பா, அம்மா இல்லாத பெண்ணை இப்படியா அடிப்பீங்க?” அவனால் தாள முடியவில்லை.

“நீங்க இரண்டு பேரும் செஞ்சு வச்சு இருக்கிற காரியத்துக்கு உங்களை அப்படியே உயிரோட சமாதி கட்டுற முடிவில தான் நாங்க இருக்கோம்”

“நாங்க இரண்டு பேரும் அப்படி என்ன செஞ்சோம்?” ஆதரவாக மருதாணியை பிடித்தவாறே தன்னுடைய கேள்விகளை தொடர்ந்தான் கெளதம்.

“என்ன செஞ்சீங்களா? நீயே இந்த கருமத்தைப் பாரு” என்று கௌதமின் முன்னால் பேப்பரைப் போட… குனிந்து அதை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

‘கடவுளே இதென்ன கொடுமை’

 

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here