தணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 16

0
865

ஊரின் எல்லை வரை மருதாணியை தோளில் தாங்கியவாறு நடந்து வந்தவன் டவுனுக்கு வந்த பிறகு டேக்ஸியை வரவழைத்து ஒரு ஹோட்டலுக்கு அவளை அழைத்து சென்றான். அங்கேயே ரிஷப்ஷனில் சொல்லி மருத்துவரை வரவழைத்து அவளது காயங்களுக்கு மருந்திட செய்தான். உணவு வேளை நெருங்கியதும் இருவருக்கும் சேர்த்து உணவை வரவழைத்தான்.
இத்தனையையும் அவன் பார்த்து பார்த்து செய்தாலும் இருவரும் இடையில் ஒரு வார்த்தை கூட பேசி இருக்கவில்லை. மருதாணி இறுகிப் போய் அமர்ந்து இருந்தாள். கெளதமோ எப்படி பேச்சை துவங்குவது என்று புரியாமல் மௌனம் சாதித்தான்.
மருதாணிக்கும் சரி கௌதமிற்கும் சரி உணவு தொண்டைக் குழியைத் தாண்டி இறங்கவில்லை. பட்டினியாகக் கிடந்தால் எதுவும் மாறி விடப் போவதில்லையே… முதலில் மருதாணியை தேற்றியாக வேண்டும்… அடுத்து ஊரில் இருக்கும் அம்மாவை… அப்பாவை… தாத்தாவை… பாட்டியை… கொஞ்சம் கஷ்டம் தான்.
முன்பானால் தன் மனதுக்கு பிடித்த பெண் என்று சொல்லி இருக்கலாம். இப்பொழுது இவள் தான் என் மனைவி என்று அறிமுகம் செய்து வைத்தால் நிச்சயம் அவர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருக்கும்.
நீண்டதாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினான் கெளதம். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்த மருதாணியின் முகம் கறுத்துப் போனது.
‘என்னை அவசரப்பட்டு கல்யாணம் செஞ்சுகிட்டதா நினைக்கிறாரோ’
“மருதாணி… நம்ம கல்யாணம் இப்படி ஒரு சூழல்ல நடந்ததை நிச்சயம் நான் விரும்பல… நல்ல விமரிசையா… உன் ஊர் ஆட்கள் அப்புறம் என்னோட குடும்பம், சொந்த பந்தங்கள் எல்லார் முன்னிலையிலும் உன்னை கல்யாணம் செஞ்சுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன்.
உனக்கும் இது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்னு எனக்குப் புரியுது. ஆனா… எனக்கு அந்த சூழ்நிலையில் வேற வழி தெரியல… அவங்ககிட்ட உன்னை விட்டுட்டு வந்து இருந்தா நிச்சயம் உன்னை கொன்னு இருப்பாங்க. அப்படிப்பட்டவங்க கிட்டே உன்னை தனியா விட்டுட்டு எனக்கென்னனு கிளம்பி வர எனக்கு எப்படி மனசு வரும் மருதாணி?
அதே நேரம் இப்போ நான் உன்னை கல்யாணம் செய்யாம வெறுமனே என்னோட அழைச்சிட்டு வந்து இருந்தா அந்த பத்திரிக்கை செய்தியை உண்மையாக்கின மாதிரி ஆகிடும். உன்னோட பேருக்கு என்னால ஏற்பட்ட கெட்ட பெயரை போக்குறதுக்கு எனக்கு வேற வழி தெரியலை மருதாணி”
அவளை சமாதானம் செய்வதற்கென்று அவன் சொன்ன வார்த்தைகள் மருதாணியின் மனதை கிழித்து கூறு போட்டுக் கொண்டிருந்தது.
‘என்னோட பேரில் இருக்கும் களங்கத்தை துடைக்கத் தான் என்னை கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா?’
அவன் ஏற்கனவே அவளிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதை ஏனோ அப்பொழுது அவள் மறந்து போனாள்.
திருமணம் முடிந்ததில் இருந்தே அவன் முகத்தில் சந்தோசம் இல்லாதது அவளை வெகுவாக உறுத்தியது.
மதியம் வரை இருவரும் அறையிலேயே ஓய்வு எடுத்தார்கள். இடையில் தான் மட்டுமாக வெளியில் சென்ற கெளதம் அவளுக்கு மாற்று உடையும் அதற்கு தோதாக சில நகைகளும் வாங்கி வந்தான்.
ஊரில் நடந்த களேபரத்தில் மருதாணியின் உடை ஆங்காங்கே கிழிந்து போய் இருந்தது. அவனது சட்டையை மேலே அணிவித்து தான் ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தான். ஆனால் இப்படியே அவனது வீட்டுக்கும் அழைத்து செல்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
முதன்முதலாக மருதாணியை அவனை சேர்ந்தவர்கள் பார்க்கும்போது நல்ல முறையில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினான். இப்படி கிழிந்த உடையில் அவளைப் பார்த்தால் மற்றவர்களின் முன்பு அவளின் தரம் குறையக்கூடும்… அதற்கு விடக்கூடாது என்று எண்ணியவன் அவளுக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து வாங்கி இருந்தான்.
“மருதாணி இப்போதைக்கு நீ கட்டிக்க இரண்டு புடவையும், சின்னதா செயின், வளையல், தோடு மட்டும் வாங்கி இருக்கேன்… இங்கே இருக்கிறதெல்லாம் சின்ன கடைகள் தான். பெருசா டிசைன் எதுவும் இல்லை. ஊருக்குப் போனதும் நாளைக்கு அங்கே பெரிய கடைகளில் வாங்கிக்கலாம். இப்போதைக்கு இதை போட்டுக்கோ” என்று கொடுக்க சிரத்தை இல்லாமல் வாங்கியவள் அப்படியே கட்டிலில் வைத்து விட்டு விட்டத்தை வெறிக்கத் தொடங்கினாள்.
“நாம இங்கேயே இருக்க முடியாது மருதாணி… என்னோட வீட்டுக்கு போயாகணும். என்ன தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சு இருந்தாலும் இன்னும் எங்க வீட்டுக்கு தெரியாது இல்லையா? அங்கே போகணும். மத்தவங்க மூலமா விஷயம் தெரியறதுக்கு முன்னாடி நாம அங்கே இருந்தாகணும்” என்று மெதுவாக நிலைமையை எடுத்துரைக்க அமைதியாக எழுந்து கிளம்பத் தொடங்கினாள்.
அவள் உடை மாற்றும் இடத்திற்கு சென்று உடையை மாற்றிக் கொண்டு வருவதற்குள் இங்கே கௌதமும் தயாராகி காத்திருந்தான்.
“பாரு மருதாணி… இப்போ நடந்து இருக்கிற இந்த கல்யாணம் எங்க வீட்டு ஆட்களுக்கு ரொம்பவும் அதிர்ச்சியைத் தரக்கூடிய விஷயம்… ஒருவேளை அவங்க கோபத்தில் ஏதாவது பேசினாக் கூட எனக்காக அதெல்லாம் பொறுத்துக்கணும்” என்று கெஞ்சுதலாக சொன்னவனை மறுத்து அவள் எதுவும் பேசவில்லை.
உணர்வுகள் தொலைத்த முகத்துடன் கிளம்பியவளைக் கண்டு அவனுக்கும் வருத்தமாகிப் போனது.
‘ஆமா… நீங்க வசதியானவர்… நகரத்து நாகரீகம் தெரிஞ்சவர்… நான் படிக்காதவ.. பழங்குடி இனத்தை சேர்ந்தவ.. அவங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருக்கும் தான்.’
அவனுக்கு மட்டும் இப்படி ஒரு சூழலில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று ஆசையா என்ன? வேறு வழி இல்லாமல் தானே இப்படியாகிப் போனது. ஆரம்பத்தில் அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்… நாளடைவில் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணியவன் டாக்சிக்கு வரவழைத்து மருதாணியுடன் வீடு நோக்கி செல்ல… கார் பயணத்தின்போது அவன் நினைவுகளை முழுக்க ஆக்கிரமித்து இருந்தது அவனது குடும்பம் மட்டும் தான்.
மருதாணி காரின் ஜன்னல் வழி பார்வையை செலுத்தியபடி இருக்க… ஏதேதோ யோசனைகளில் வந்து கொண்டிருந்தவன் வீடு இருக்கும் தெருவில் நுழைந்ததும் அங்கே இருந்த கூச்சலையும், குழப்பத்தையும் கண்டு ஒரு நொடி திகைத்துப் போனான். டிரைவரிடம் சொல்லி வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அத்தனை குழப்பத்திலும் மருதாணியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே கீழே இறங்கினான்.
வீட்டு வாசலில் இருந்த விசாலத்தையும், குமரனையும் கண்டதும் அவனுக்கு நொடியில் எல்லாமே விளங்கி விட்டது.
“ஆபிஸ் வேலையா உங்க பையனை அனுப்பினா… அங்கே போய் என்ன வேலை பார்த்து இருக்கான்னு பாருங்க… எங்க கம்பெனியோட மானம் போச்சு… மரியாதை போச்சு.. எல்லாம் நீங்க பெத்து வச்சு இருக்கிற பொம்பளைப் பொறுக்கி பிள்ளையால…” விசாலத்தின் பேச்சால் கௌதமின் நரம்புகள் புடைத்தெழுந்தது. விசாலத்தின் கையில் இருந்த அந்த நாலாந்தர பத்திரிக்கையை தூக்கி எறிய அது நேராக கௌதமின் தாய் மரகதத்தின் முகத்தில் மீது பட்டுத் தெறித்து கீழே விழுந்தது.
அடுத்த நொடி அவனின் பொறுமை அனைத்தும் காற்றில் பறந்து ஆவியாக மாறி இருக்க… உயிர் பறிக்கும் ராட்சசனைப் போல அடங்காத ஆத்திரத்துடன் விசாலத்தின் முன்னே போய் நின்றான்.
அந்த நிமிடம் வரை அந்த தெருவே அதிரும்படி கத்திக் கொண்டிருந்த விசாலத்தின் வாய் கௌதமைக் கண்டதும் கப்பென மூடிக் கொண்டது.
நரசிம்ம அவதாரத்தின் மறு உருவமாய் அங்கே நின்று கொண்டிருந்த கௌதமைக் கண்டதும் அவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.
‘ இந்த குமரன் பய அந்த முத்தையா கிட்டே பேசினதை வச்சு.. இந்த பயலை அவங்க கிராமத்து ஆட்கள் எல்லாருமா சேர்ந்து அடிச்சு நொறுக்கி இருப்பாங்க… இன்னும் ஒரு வாரத்துக்கு இந்தப் பக்கமே வர மாட்டான்ன்னு பார்த்தா… இப்படி காங்கேயம் காளை மாதிரி நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு வந்து நிற்கிறானே’
“ உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வந்து என்னோட அம்மா கிட்டயும்… என் வீட்டு ஆட்கள் கிட்டயும் இப்படி குரலை உயர்த்தி இப்படி மரியாதை இல்லாம பேசுவீங்க? நான் உங்க கம்பெனில வேலை பார்க்கிறேன் தான்… அதுக்காக என் வீட்டுக்கு முன்னாடி வந்து இப்படி கத்தி கூப்பாடு போடுவீங்களா?”
“சு… சும்மா கத்தாதே.. உன் யோக்கியதை என்னனு இந்த பத்திரிகைக்காரன் பிட்டு பிட்டு வச்சுட்டான்.” அப்பொழுதும் அடங்காமல் எகிறினார் விசாலம்.
தன்னுடைய போனை எடுத்த கெளதம் ராஜேஷிற்கு வீடியோ கால் செய்து ஸ்பீக்கரில் போட்டு பேசத் தொடங்கினான்.
“ராஜேஷ்… இன்னும் அரை வினாடி உங்க அம்மா என் வீட்டு வாசலில் இருந்து குரலை உயர்த்தி அசிங்கமாப் பேசினா… அதுக்கு அப்புறம் அவங்க என் பிரண்டோட அம்மா அப்படிங்கிறத நான் மறக்க வேண்டி இருக்கும்.”
“வாட்! அம்மா அங்கே உன் வீட்டு வாசல்ல என்னோட அம்மா கத்திட்டு இருக்காங்களா? அவங்க அங்கே என்ன செய்றாங்க?”
“அதை நீயே கேளு!” என்றவன் போனை அவர்புறம் திருப்ப… அதுநேரம் வரை வாய் கிழிய பேசியவர் மகனிடம் பேசுவதற்கு வார்த்தைகள் வராமல் திண்டாடினார்.
“அம்மா… அங்கே என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” பற்களைக் கடித்து துப்பியபடி கேட்ட மகனின் குரலிலேயே அவனது கோபத்தின் அளவு புரிய… அவரது தொண்டை உலர்ந்து போனது.
“அது வந்து தம்பி… அந்த பத்திரிகை விஷயமா…”
“அம்மா.. அதுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அது அவங்க பர்சனல் விஷயம்… முதல்ல நீங்க அங்கிருந்து கிளம்புங்க” என்று பேசி விட்டு அவரின் பதிலை எதிர்பாராமல் போனை அணைத்து விட மனதுக்குள் கறுவியபடி அங்கிருந்து கிளம்பினார் விசாலம்.
அவர் சென்ற பின்னரும் அங்கேயே காத்திருந்து கௌதமிடம் அடியை வாங்குவதற்கு குமரனுக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கிறது? அவனும் அவர் பின்னாலேயே பம்மிக்கொண்டு சென்று விட இப்பொழுது கெளதம் வீட்டினரின் பக்கம் கூட திரும்ப முடியாமல் ஒரு நிமிடம் தலை குனிந்து நின்றான்.
இந்த விசாலம் அவனது வாழ்க்கையில் எந்த அளவிற்கு பள்ளம் வெட்ட முடியுமோ வெட்டி அவனது வாழ்வில் சோதனைகளை அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறார். அவனாக சொல்லி இருந்தால் ஏற்பட்டு இருக்கும் விளைவுகளை விட அதிக அளவு இப்பொழுது அவன் எதிர்கொண்டாக வேண்டும்.
அந்த தெரு மக்கள் அனைவரும் இப்பொழுது அவன் வீட்டு வாசலில் தான் கூடி இருக்கிறார்கள். நடப்பது அத்தனையையும் ஊரே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு மட்டும் இல்லை… அவர்களது குடும்பத்திற்கே அவமானத்தை தேடித் தரக் கூடிய விஷயம். ஊர் மக்கள் முன்னிலையில் இன்று தன்னுடைய குடும்பத்தின் தரம் தாழ்ந்து போவதற்கு தான் ஒரு காரணமாகப் போய் விட்டதை எண்ணி தவிப்பிற்கு ஆளானான்.
வீட்டினரின் குற்றம் சாட்டும் பார்வையை உணர்ந்தாலும் தயக்கமின்றி மருதாணியின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
“இவ பேர் மருதாணி… இன்னிக்கு காலையில் இவளும் நானும் கல்யாணம் செஞ்சுகிட்டோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்க யாருக்கும் சொல்ல முடியாம அவசரத்தில் நடந்துடுச்சு… மன்னிச்சுடுங்க” என்று யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சொன்னவன் மருதாணியின் கைகளைப் பற்றி வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான்.
மொத்த குடும்பமும் அவன் பின்னாலேயே உயிர் இழந்த ஜடப் பொருளைப் போல வீட்டினுள் நுழைந்தார்கள். எல்லாரும் வந்ததும் மரகதம் முதல் வேலையாக கதை இறுக தாளிட்டவர் அதன் கீழேயே மடிந்து அமர்ந்து விட்டார்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 4]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here