தணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 18

0
873

அத்தியாயம் 18

Madhumathi Bharath Tamil Novels

எல்லார் முகத்திலும் அதிர்ச்சி தெளிவாக தெரிந்தது. கௌதமின் இந்த திருமணத்தை இன்னும் அந்த வீட்டை சேர்ந்த எல்லோராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தான் என்றாலும் கூட இப்படி முகத்தில் அடித்தது போல மரகதம் பேசியதை அங்கே இருந்த யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது அவரின் குணம் அல்லவே…

எப்பொழுதும் சிரித்த முகமாகவே வலம் வரும் மரகதத்தின் கோபத்தை அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தாலும் யாராலும் அவர் அப்படி பேசியதை  சரியென்று சொல்ல முடியவில்லை.

“மரகதம்…”செல்லத் தாயின் குரலில் அதட்டல் கூடுதலாகவே இருந்தது.

“உங்க அதட்டல் எல்லாம் என்னிடம் மட்டும் தானா அத்தை… பெத்தவங்க , தாத்தா, பாட்டின்னு இப்படி நாம எல்லாரும் உயிரோட இருக்கும் பொழுது இப்படி ஒரு காரியத்தை செஞ்சு வச்சு இருக்கானே உங்க பேரன்…  அவனை ஒரு வார்த்தை யாருமே கேட்கலை… அவன் கூட்டிட்டு வந்தவளை … வந்த அன்னிக்கே அடுப்படியில் நுழைய விட்டாச்சு… என்ன ஜாதியோ? என்ன குலமோ?…”

“அம்மா… என்னைத் திட்டுங்க… நான் கேட்டுக்கிறேன்… ஏன்னா இந்த விஷயத்தில் முடிவெடுத்து அவ கழுத்தில தாலியை கட்டி என்னோட மனைவியாக்கினது நான் தான்… அப்போ அதை தடுக்கக் கூட முடியாத மயக்கத்தில் அவ இருந்தா…”

“ஹ… மயக்கம்… இல்லாம எப்படி இருக்கும்? இப்படி ஒரு வசதியான வீட்டுப் பையனை கல்யாணம் செஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சா மயக்கம் இல்லாமலா இருக்கும்?”

“மரகதம்…” காலையில் இருந்து அமைதியாக இருந்த அவரது கணவர் குரலை உயர்த்தினார்.

“நம்ம பையனை பேச மட்டும் தான் உனக்கு உரிமை இருக்கு.. அந்தப் பொண்ணைப் பத்தி எந்த உரிமையில் இப்படி எல்லாம் பேசுற? உன் பையன் சொல்றதை வச்சுப் பார்க்கும்போது தப்பு அந்த பொண்ணு மேல இல்லை போலருக்கு… அப்படி இருக்கும்போது…”

“அவன் சின்னப் பையன் ஒண்ணும் அறியாதவன்… இவ தான் அவனை மயக்கி…”

“ஆமாண்டி… அந்த பொண்ணு கழுத்தில தாலி கட்டின உன் பையன் பச்சக் குழந்தை… அவனை விட வயசில சின்ன பொண்ணு தானே அந்தப் பொண்ணும்?…” அந்த நேரத்திலும் நியாயமாக பேசிய கணவரை எரித்து விடுவது போல பார்த்தார் மரகதம்.

“உங்களுக்கு தெரியாதுங்க… இவ ஒரே நாளில் கிச்சனுக்குள்ளே நுழையிற அளவுக்கு கைகாரி…”

“அம்மா… ப்ளீஸ்!… இன்னொரு முறை நீங்க இதே மாதிரி அவளைப் பேசினா அப்புறம் நான் என்னோட பொண்டாட்டியை கூட்டிட்டு இங்கே இருந்து போயிடுவேன்” என்று கெளதம் போட்ட சத்தத்தில் மொத்த வீடும் நிசப்தமானது.

மரகதத்தின் முகம் வெளுத்த சுண்ணாம்பாக மாறி விட்டது. மருதாணி உட்பட அனைவருக்குமே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார்.

‘என் பையனுக்கு அப்போ நான் முக்கியம் இல்லையா?’ மகனுக்கு  திருமணம் முடிந்த பிறகு எல்லா தாயிற்கு இயல்பாக தோன்றும் ஒரு கேள்வி. ஆனால் மரகதத்திற்கு அது தாங்க முடியாத வலியைக் கொடுத்தது.

அவரின் உலகம் முழுக்க முழுக்க கௌதமை சுற்றி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. காலையில் விடிந்தது முதல் இரவு உறக்கத்திற்கு செல்வதற்கு முன்னான கடைசி நொடி வரை அவரது சிந்தனையில் நிறைந்து இருப்பது கெளதம் மட்டுமே. ஏற்கனவே கௌதமின் திருமணத்தினால் அவருக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபம் இப்பொழுது அவனின் பேச்சால் தாங்க முடியாத வலியாக மாறிப் போனது.

அறைக்குள் நுழைந்து படுக்கையில் விழுந்தவர் தலையணை நனையும் மட்டும் அழுது தீர்த்தார். மகனுக்கு தான் முக்கியம் இல்லாமல் போய் விட்டோம் என்ற எண்ணமே அவரை தின்று தீர்த்தது.

அறைக்கு வெளியே இருந்தவர்களும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருந்தாலும் யாரும் கௌதமை எதிர்த்து நிற்கவில்லை. ஒருவேளை கெளதம் அப்படி பேசாமல் இருந்து இருந்தால் மரகதத்தை யாராலும் கட்டுப்படுத்தி இருக்க முடியாது. விவாதம் நீண்டுகொண்டே போய் இருக்கும். தீராத மன வருத்தத்தில் கொண்டு போய் முடிந்திருக்கும்  என்பதை எல்லாருமே உணர்ந்து இருந்தார்கள்.

வீட்டினரின் மன நிலைமையை சீராக்கும் பொறுப்பை வழக்கம்போல செல்லத்தாயி கையில் எடுத்துக் கொண்டார்.

“சரி… நேரமாச்சு… எல்லாரும் போய் தூங்குங்க… கெளதம்.. சாந்தி முஹுர்த்தத்திற்கு எப்போ நாள் குறிச்சு இருக்கீங்க?” என்று மகனை நோக்கி கேள்வியை செலுத்தினார்.

“ஜோசியர் ஒரு வாரம்  கழிச்சு குறிச்சு கொடுத்து இருக்கார்மா”

“அப்போ கெளதம்… அதுவரை நீ தாத்தா கூட படுத்துக்கோ… உன் பொண்டாட்டி என்னோட தூங்கட்டும்… வேற ஏதாவது பேசணும்னா பேசிட்டு பத்து நிமிசத்தில் எல்லாரும் தூங்க போய்டணும்.” என்று உத்தரவிட்டவர் அங்கிருந்து அகன்று விட கெளதம்  மருதாணியை அழைத்துக் கொண்டு தோட்டத்து பக்கம் சென்றான்.

“மருதாணி அம்மா வந்து…” லேசான தயக்கத்துடன் பேச்சைத் துவங்கினான் கெளதம்…

“ என் அம்மாவும் இப்படித்தான்… யாரும் என்னை சொந்தம் கொண்டாடினா அவங்களுக்குப் பிடிக்காது” அவள் முகத்தில் கோபம் இல்லை… மாறாக மரகதத்தை புரிந்து கொண்ட பாவனை அவள் முகத்தில். கௌதமுக்கு பெரும் பாரம் குறைந்த உணர்வு. மனம் இலகுவாக அவளிடம் இயல்பாக பேசத் தொடங்கினான்.

“கொஞ்ச நாள் எனக்காக பொறுத்துக்கோ..என்னோட கல்யாணத்தை ரொம்ப விமரிசையா செய்யணும்னு ஆசைப்பட்டாங்க. அதை கண்ணால கூட பார்க்க முடியாத வருத்தம் அவங்களுக்கு. உன்மேல எல்லாம் அவங்களுக்கு துளி கூட கோபம் இல்லை. அம்மாவோட கோபம் முழுக்க என் மேல தான்… அதை நான் பார்த்துக்கிறேன்.அதுவரைக்கும் நீ கொஞ்சம்… பார்த்து…”

“ம்ம்ம்.. புரியுது”

“கல்யாணம் ஆன பிறகு இரண்டு பேரையும் பிரிச்சு வச்சுட்டாங்களேனு வருத்தப்படறியா?”

“ஹா..ஹா.. அதெல்லாம் இல்லை”

“எதுக்கு இப்போ சிரிக்கிற?” என்றான் சந்தேகமாக…

“இல்ல… எங்க ஊர் முறைப்படி கல்யாணம் ஆகி ஒரு மாசம் பையன் பொண்ணு வீட்டில் வந்து இருக்கணும். வீட்டு வேலை எல்லாம் செய்யணும். கல்யாணத்துக்கு பிறகு பொண்ணு அந்த வீட்டுக்கு போன பிறகு எப்படி எல்லாம் கவனிச்சுப்பானு ஒரு மாசம் வாழ்ந்து காட்டணும். சமையல் உட்பட… மாமனார், மாமியாருக்கு முழு திருப்தி வந்தா தான் பொண்ணை பையன் வீட்டுக்கு வாழ அனுப்புவாங்க… அது மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.. சிரிப்பு வந்துடுச்சு”

“எதே…” என்றவன் கொஞ்சம் அதிர்ச்சியாக…

“ஆமா.. அதான் எங்க ஊர் வழக்கம்… எங்க முறைப்படி பையன் மேல முழு நம்பிக்கை வந்த பிறகு தான் பொண்ணை அனுப்புவாங்க.. அதுவரைக்கும் சமைக்க சொன்னா கூட மாப்பிள்ளை முகம் சுளிக்காம செஞ்சு தான் ஆகணும். குடும்பம் நடத்தும்போது இது பொம்பிளை வேலை இது ஆம்பிளை வேலைன்னு எதையும் பிரிச்சு வைக்கக் கூடாது. எல்லா வேலையிலயும் புருசனும் பங்கு எடுத்துக்கணும்.”

“நல்ல முறை தான்…”என்றான் இன்னமும் அதிர்ச்சி நீங்காமலே .

“என்ன பயமா இருக்கா?”

“இல்ல.. தப்பிச்சுட்டேனு நினைச்சு சந்தோசமா இருக்கேன்”

“யார் சொன்னா நீங்க தப்பிச்சுட்டீங்கன்னு…” என்றவளின் முகத்தில் இருந்த புன்னகை அவனுக்கு எதையோ உணர்த்த கொஞ்சம் கலவரமான முகத்துடன் அவளைப் பார்த்தான்.

“எனக்கு சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் ரொம்ப முக்கியம்.. அதெல்லாம் செஞ்சா தான் மேற்கொண்டு மத்த விஷயத்தை எல்லாம் யோசிக்க முடியும்”

“ஏய்! மனு.. என்னடி புதுசா ஏதோ குண்டு வைக்கிற?”

“நான் ஒண்ணும் புதுசா எதுவும் சொல்லலையே… ஏற்கனவே இருந்ததைத் தான் சொல்றேன்…”

“அது.. அது உங்க ஊர் பையனை கல்யாணம் செஞ்சுகிட்டா தானே பொருந்தும்…” எதையாவது பேசி அவளை சமாதானம் செய்து அவளிடம் இருந்து தப்ப முயன்றான்.

“இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. இப்போ நான் உங்களை கல்யாணம் செஞ்சுகிட்ட பிறகு உங்க வீட்டு பழக்க வழக்கத்தை விட்டுட்டு எங்க கிராமத்து வழக்கத்தை மட்டும் தான் கடைபிடிப்பேன்னு சொல்ல முடியுமா? முடியாது இல்ல.. இந்த வீட்டு பழக்கத்தை எல்லாம்  செஞ்சு தானே ஆகணும். அதே தான் உங்களுக்கும்… உங்களுக்கு ஒரு நியாயம்… எனக்கு ஒரு நியாயமா?”

“அதெல்லாம் சரி தான். ஆனா இப்படி ஒரு மாசம்னு சொல்றியே… அதுதான் கஷ்டமா இருக்கு… ஜோசியர் நமக்கு  ஒரு வாரம் கழிச்சு நாள் குறிச்சு கொடுத்து இருக்கார்… நீ சொல்றதைப் பார்த்தா… அன்னிக்கு நமக்கு நோ டச்சிங்கா” என்றான் பாவமாக…

“ஆமா…”என்றாள் கொஞ்சம்  கூட தயவு இன்றி… ஆனால் இதழின் ஓரத்தில் அழகிய புன்னகை ஒன்று இருந்ததை இருளின் போர்வையால் அவனால் பார்க்க முடியவில்லை.

“அப்படியே இருந்தாலும் இப்போ தான் உன்னோட ஊர்ல நாம இல்லையே.. உன் அப்பா, அம்மாவும் இல்லை.. நீ இருக்கிறதே நம்ம வீட்டில் தானே… யார் வந்து இதெல்லாம் கேட்கப் போறா?”

“ஏன் எனக்காக உங்க பாட்டியும், தாத்தாவும் அந்த பொறுப்பை எடுத்துக்க மாட்டாங்களா?” என்று கேட்க… இல்லையென்று எப்படி சொல்வான்?

“ஆனாலும்… ஒரு மாசம் ரொம்ப பெரிய கேப் மனு…” என்றான் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு.

“எப்படியும் நீங்க ஆசைப்பட்ட மாதிரி இந்த கல்யாணம் நடந்து இருந்தா உடனேவா நடந்து இருக்கும்… கொஞ்ச நாள் காத்து இருந்து இருக்கணும் தானே?” என்றாள் கிடுக்குப் பிடியாக..

“நடக்கலைன்னா பரவாயில்லை… இப்போ கல்யாணம் நடந்து… உன்னை பக்கத்தில் வச்சுக்கிட்டு..” என்று ஏக்கமாக பேசியபடியே அவனது கைகள் மெல்ல அவள் புறம் நீள… லாவகமாய் நகர்ந்து கொண்டவள் மோகனப் புன்னகை பூத்தாள்.

“ம்ஹும்… இந்த வேலை எல்லாம் என்கிட்டே நடக்காது… முதல்ல எங்க ஊர் சம்பிரதாயப்படி நடங்க… எங்களுக்கு பிடிச்சு இருந்தா தான் மேற்கொண்டு எல்லாமும்” என்றவள் அவனின் ஏக்கம் நிறைந்த பார்வையை ரசித்தபடி வீட்டினுள் சென்று விட்டாள்.

மருதாணி சென்றதும் சில நிமிடங்கள் அவள் போன பாதையையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் மெல்ல மெல்ல சிவப்பு நிறம் கொண்டது.

எவ்வளவு அழகாக நடந்திருக்க வேண்டியது அவனது திருமணம். வீட்டில் எல்லாரிடமும் கலந்து பேசி… அவர்களின் சம்மதத்தை வாங்கி எத்தனை இன்பமாய் நடந்திருக்க வேண்டியது! மருதாணியை முதன்முதலில் எப்படி பெற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும்… திருமணத்தின் போது ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளிலும் மருதாணியை சீண்டி… சிவக்க செய்து அதை எல்லாம் கண்களால் ரசித்து… இதயத்தில் நிரப்பி… அத்தனையும் பாழாகிப் போனது யாரால்?

அவன் கண் முன்னே வந்து நின்றது விசாலம் மட்டுமே… எதற்காக இத்தனையும் செய்தார்? தன் மீது அவருக்கு எதற்கு இத்தனை வெறுப்பு?

அவருக்கான தீர்ப்பை அவன் மனதுக்குள் எழுதி முடித்தான். ராஜேஷின் முகத்திற்காக இத்தனை நாள் பாவம் பார்த்தது போதும். அவன் குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் குலைத்த பிறகும் மௌனமாகவே இருந்து விட்டால் அவன் எல்லாம் என்ன ஆண் பிள்ளை!

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கெளதம் தீர்மானித்து விட்டான்.  ஒரு முடிவோடு படுக்கைக்கு உறங்க சென்றவனின் மனதில் விசாலத்தை வீழ்த்த அருமையான திட்டம் ஒன்று உதித்தது.

எரிக்கும்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 3 Average: 4.7]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here