தணலை எரிக்கும் பனித்துளி தமிழ் நாவல் அத்தியாயம் 19

0
1366

 

Madhumathi Bharath Tamil Novels

மறுநாள் பொழுது விடிந்ததும் வழக்கம்போல வாசலில் கோலம் போடுவதற்காக சென்ற மரகதம் திகைத்து நின்று விட்டார். தேவதையை மிஞ்சும் அழகுடன் மருதாணி எதிரில் நின்று கொண்டிருந்தாள். சற்று முன் தான் குளித்திருப்பாள் போலும்… தலையில் இருந்து ஈரம் சொட்டிக்  கொண்டிருக்க… நுனி கூந்தலை மெல்லியதாக முடிச்சிட்டு இருந்தாள்.
வாசலில் கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தவள் மரகதத்தைப் பார்த்து விட்டாள். பளீரென்ற புன்னகையுடன் அவரை எதிர்கொண்டாள்.
“நானே கோலம் போட்டுட்டேன் அத்தை… காலையில் என்ன சமைக்கட்டும்?” என்று முதல் நாள் அவர் நடந்து கொண்ட விதத்தையே மறந்தவளாக பேச… அவருக்குமே அந்த நொடி அவரின் கோபம் மறந்து தான் போனது. மகனின் தேர்வை எண்ணி மனம் பெருமையில் திளைத்தது.
“இட்லி செஞ்சிடு” என்று சொன்னவர் வேறு எதுவும் பேசாமல் வீட்டினுள் நுழைந்து கொண்டார்.
குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்ற சென்றவரின் கை விரல்கள் சில நொடிகள் தயங்கி நின்றது.
“அத்தை உங்க பேரன் பொண்டாட்டியை விளக்கேற்ற சொல்லுங்க…” என்று செல்லதாயின் முகம் பார்க்காமல் சொன்னவர் அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டார்.
அடுத்த சில நொடிகளில் அவரது அறைக்கதவு தட்டப்பட்டது.
“அத்தை , உங்களுக்கும் மாமாவுக்கும் காபி…” என்று கொடுத்த மருதாணி அவரின் ஆச்சர்யம் நிறைந்த பார்வையை கண்டும் காணாமல் நகர்ந்து விட்டாள்.
கணவரை எழுப்பி அவருக்கு காபியை கொடுத்த மரகதம் , பலத்த சிந்தனையுடன் அப்படியே அமர்ந்து விட்டார்.
“என்ன மரகதம்… காபியை குடிக்காம என்ன யோசனை? அந்த பொண்ணு கையால போட்டதுன்னு குடிக்காம இருக்கியா? ” மனைவியின் மனநிலையை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது அவருக்கு.
“ம்ச்! அதெல்லாம் இல்லைங்க… நேத்து நைட் தான் அந்த பொண்ணை அப்படி பேசினேன். இப்போ என்னடான்னா கொஞ்சம் கூட முகம் திருப்பாம சிரிச்ச முகமா எல்லாத்தையும் செய்றா… அதான் யோசிக்கிறேன்”
“வீட்டுக்கு வந்த மருமக சண்டை போடலைனா எப்படி பொழுது போகும்னு யோசிக்கறியா?” என்றார் சற்றே கிண்டலாக…
“ம்ச்!… நீங்க வேற நேரம் காலம் தெரியாம கிண்டல் செஞ்சுக்கிட்டு… எனக்கென்னமோ அந்தப் பொண்ணு நடிக்கிறாளோனு தோணுது…”
“அதனால அந்த பொண்ணுக்கு என்ன யூஸ்?”
“இந்த வீட்டில் அவளை எதிர்த்து கேள்வி கேட்கிற ஒரே ஆள் நான் மட்டும் தானே?”
“அதுக்காக… உனக்கு ஐஸ் வைக்குது அந்த பொண்ணுன்னு சொல்ல வர்றியா?”
“எனக்கு அப்படித்தான் தோணுது…”
“உன்னோட கணிப்பு உண்மையா இருக்கணும்னு அவசியம் இல்ல மரகதம்… ஒருவேளை அந்தப் பெண்ணோட குணமே அதுவா கூட இருக்கலாம்… ஒரே நாளில் நீ எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.” என்றார் தன்மையாக…
“என்னவோ போங்க… என்ன தான் ஆயிரம் சமாதானம் சொல்லிக்கிட்டாலும் என்னால இந்த கல்யாணத்தை ஏத்துக்க முடியல… நமக்கு இருக்கிறது ஒரே பையன்.. அவன் கல்யாணத்தை கண் குளிர பார்க்க முடியலையே…”
“அந்த கவலை உனக்கு மட்டும் தான் இருக்கா? வீட்டில் எல்லாருக்கும் தான் இருக்கு…. அதுக்காக அதையே நினைச்சு குத்திக் காட்டி பேசிட்டு இருந்தா மேல மேல கஷ்டத்தை இழுத்து விட்டுக்கிற மாதிரி தானே… நடந்ததையே பேசிப் பேசி ஏன் நிகழ் காலத்தை ரணமாக்கிக்கணும்”
“அப்போ என்னோட வருத்தத்தைக் காட்டக் கூட எனக்கு உரிமை இல்லையா?”
“அப்படி இல்லை மரகதம்…”
“வேண்டாம்ங்க… என்னோட வருத்தம் உங்களுக்குப் புரியாது. ஆசை ஆசையா பெத்து வளர்த்த மகன்… அவனுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் செஞ்சுக்க அவனுக்கு முழு சுதந்திரம் இருக்குங்க… அதை நான் மறுக்கலை..
இந்த பொண்ணை எனக்குப் பிடிச்சு இருக்கும்மான்னு என்கிட்டே வந்து சொல்லி இருந்தா… வீட்டில் எல்லார்கிட்டயும் அவனுக்காக நானே பேசி இந்த கல்யாணத்தை நடத்தி வச்சு இருப்பேனே… அந்த பொண்ணு மட்டுமில்லாம இந்த உலகமே எதிர்த்து நின்னு இருந்தாலும் என் மகனுக்காக நான் எல்லாரையும் எதிர்த்து நின்னு இருப்பேன்.” என்று பேசியவரின் தாய்ப்பாசம் கண்டு அவருமே கொஞ்சம் உருகித் தான் போனார்.
“கெளதமுக்கு மட்டும் நம்ம நினைப்பு இல்லாம இருந்து இருக்குமா? நம்ம சம்மதம் இல்லாம அந்த பொண்ணு கழுத்தில தாலி கட்டும் பொழுது அவன் மனசு என்ன பாடுபட்டு இருக்கும்? அதை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேங்கிற”
“ம்ச்! தயவு செஞ்சு இந்த பேச்சை விடுங்க… என் மனசு படும்பாடு இங்கே யாருக்கும் புரிய மாட்டேங்குது”
“புரியாம என்ன மரகதம்…”
“வேண்டாம்ங்க…போதும்…போய் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்”
அனைவரும் சாப்பாட்டு மேசையில் கௌதமின் வருகைக்காக காத்திருக்க… குளித்து முடித்து வந்தவனின் கண்கள் முதலில் மருதாணியைத் தேட… அதை கண்டு கொண்ட மரகதத்தின் விழிகளில் சிறு சலனம் வந்து போனது. அவரையும் அறியாமல் அவர் கண்கள் மருதாணியின் புறம் திரும்ப… கௌதமின் பார்வைக்கு கண்களால் பதில் அளித்துக் கொண்டிருந்தாள் மருதாணி.
விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தார் மரகதம். மகனும், மருமகளும் கண்களால் பேசிக் கொள்வதை எண்ணி மகிழவும் முடியவில்லை… வெறுக்கவும் முடியவில்லை. தாய் மனம் போராடியது.
“அப்பா… சாப்பிட்டதும் ஆபிஸ் வரை போய்ட்டு வர்றேன்… இன்னிக்கு உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா?”
“ஆமா தம்பி… என்ன தான் ஜோசியர் மறுபடி நம்ம முறைப்படி கல்யாணம் செய்ய வேண்டாம்னு சொல்லி இருந்தாலும் நாம அப்படியே இருக்க முடியாதுப்பா… சொந்த பந்தங்களுக்கு தகவல் சொல்லணும். தாலி வாங்கணும்… வர்ற எல்லாருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யணும். வீட்டிலேயே செஞ்சிடலாம்னு இருக்கோம்”
“வீட்டில் வேணாம்ப்பா… நல்லதா ஏதாவது ஹோட்டலில் ஏற்பாடு பண்ணிக்கலாம். எல்லாத்தையும் ஈவன்ட் பிளானர்ஸ் (event planners) கிட்டே கொடுத்திடலாம். நமக்கு வேலை மிச்சம்… இருக்கிற கம்மியான நாளுக்குள்ளே எல்லா வேலையும் நீங்க இழுத்து போட்டு செஞ்சா உடம்பு கெட்டுடும்”
“சரி கெளதம்… அப்புறம்…”
“சொல்லுங்கப்பா…”
“நேத்து அந்த விசாலம் அம்மா அவ்வளவு தூரம் இங்கே வந்து அசிங்கமா பேசிட்டு போனாங்க.. இப்போ மறுபடி அவங்க கம்பெனிக்கு போய்த் தான் ஆகணுமா?” அவரின் குரலிலேயே அவரின் விருப்பமின்மை தெளிவாக தெரிந்தது.
“அங்கே வேலை பார்க்கிறேனே அப்பா… அப்படி சட்டுன்னு முடிவு எடுத்திட முடியாது. அவங்களுக்காக இல்லைனாலும் ராஜேஷ் முகத்துக்காக பார்க்கணுமே… எனக்குனு சில பொறுப்புகளும், கடமைகளும் இருக்குப்பா.. அதை தட்டி கழிக்க முடியாது”
“எனக்கு என்னவோ நீ தொடர்ந்து அங்கே போறது…”
“நான் பார்த்துக்கிறேன்ப்பா… கொஞ்ச நேர வேலை தான் முடிச்சுட்டு வந்துடுவேன்”
“சரிப்பா…” என்றவர் மகன் மீது கொண்ட நம்பிக்கையால் மேற்கொண்டு அது குறித்து எதுவும் கேட்கவில்லை.
சாப்பிட்டு முடித்ததும் மருதாணியிடம் கண்களால் அருகே அழைத்தான்.
“இந்த பேப்பர்ல எல்லாம் கொஞ்சம் கையெழுத்து போடு” என்று சொன்னவன் நிறைய பேப்பர்களில் அவளிடம் கையெழுத்து வாங்கினான்.
என்ன ,ஏது என்று ஒரு வார்த்தை கேளாமல் அவன் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவள் அவனைப் பார்த்து வெள்ளையாய் புன்னகைத்தாள்.
“எதுக்காக இந்த கையெழுத்துன்னு கேட்க மாட்டியா?”
“அவசியமில்லை” என்றவள் அத்துடன் வேலை முடிந்தது என்பதாக நகர்ந்து விட்டாள். கௌதம் தாயின் புறம் பார்வையை செலுத்த… அவரது பார்வை வேகமாக அவனிடம் இருந்து திரும்புவது புரிந்தது. லேசான பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
காரில் ஏறி வண்டியை எடுக்கும் பொழுது வேகமாக அவனை நோக்கி மருதாணி ஓடி வந்தாள்.
“என்ன மனு… வரும் பொழுது ஏதாவது வாங்கிட்டு வரணுமா? இல்லை பணம் எதுவும் தேவைப்படுதா?”
“எப்போ திரும்பி வருவீங்க?”
“கொஞ்ச நேர வேலை தான் மனு… ஒரு இரண்டு மணி நேரம் ஆகலாம்… எப்படியும் மதிய சாப்பாட்டுக்கு வந்திடுவேன்”
“சரி… சீக்கிரம் வந்துடுங்க” அவள் கண்களில் ஏதோவொரு ரகசிய செய்தி…
“என்ன மனு… ஏதோ விஷயமிருக்கு போலவே…” அவன் கண்களில் ரகசிய எதிர்பார்ப்பு…
“ஆமா… சீக்கிரம் வாங்க… நான் காத்திருப்பேன்”
“ஆஹா… மேடம் சொல்றதைப் பார்த்தா பலமா கவனிக்கப் போறீங்க போலவே… நான் வேணும்னா வீட்டிலேயே இருந்துடட்டுமா?”
“அதெல்லாம் வேண்டாம்… நீங்க போயிட்டு வாங்க… நானும் அதுக்குள்ளே தயாராகணும் இல்லையா?”
“என்ன மேடம்? ஏதோ சர்ப்ரைஸ் பிளான் போடறீங்க போல…”
“அப்படித்தான் வச்சுக்கோங்க”
“என்னனு சொல்ல மாட்டீங்களா மேடம்?”
“ம்ஹும்…” என்று அழகாய் தலை அசைத்து மறுத்தவளை… இறுக கட்டிக் கொள்ள சொல்லி கைகள் இரண்டும் பரபரக்க… இருக்கும் இடம் கருதி அதை செய்ய முடியாமல் தவிர்த்தவன்… கண்களால் அவளை ஆலிங்கனம் செய்தான்.
மருதாணியின் கன்னங்கள் அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் சிவந்து போனது.
“ம்ச்.. இப்படி பார்த்தா என்ன அர்த்தம்?”
“இப்போதைக்கு பார்க்க மட்டும் தானே முடியும்?” அவன் வார்த்தைகளில் இருந்த தாபம் அவளை தப்பாமல் சென்று சேர்ந்தது.
“சரி சரி… பேசினது போதும்.. கிளம்புங்க…”
“துரத்துலதுலேயே குறியா இரு”
“சீக்கிரம் கிளம்பி போனா தானே சீக்கிரம் வருவீங்க” என்றவளின் கண்களில் அவனுக்கு கொஞ்சமும் குறையாமல் காதல் வழிந்தது.
“மனு… என்னை டெம்ப்ட் செய்யாதே… அப்புறம் உனக்குத் தான் கஷ்டம்… சீக்கிரம் வந்திடறேன்” என்று உறுதி கூறியவன் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட, மருதாணியின் முகத்தில் மந்தகாச புன்னகை… காரை ஓட்டிக்கொண்டு இருந்த முகம் நொடிப் பொழுதில் தீவிர பாவனைக்கு மாறி இருந்தது.
காலை சரியாக அலுவலகம் தொடங்க இருந்த நேரத்தில் மிடுக்கான நடையுடன் உள்ளே நுழைந்த கௌதமை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த தோற்றத்திலேயே தெரிந்தது. அலுவலகத்தில் எல்லாரிடமும் அவனது அவசர திருமண செய்தி பரவி இருப்பதை அவனால் உணர முடிந்தது.
மற்ற எல்லாரையும் விட ராஜேஷ் அதிகமாக அதிர்ந்ததை கெளதம் அறிந்தாலும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளவில்லை.
“வா… கெளதம்… இரண்டு நாள் லீவு எடுத்துட்டு அப்புறமா வேலைக்கு வந்து இருக்கலாமே?”
“லீவா? தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு… எப்படி சார் லீவ் போட முடியும்?”
“நேத்து தானே உனக்கு கல்யாணம்…”
“சார் என்னை தனியா அந்த பழங்குடி கிராமத்துக்கு அனுப்பி வச்சு இருந்தீங்களே அது சம்பந்தமா முக்கியமான மீட்டிங் ஒண்ணை ஏற்பாடு செஞ்சா நல்லா இருக்கும். அதுவும் இப்பவே”
“தாராளமா செஞ்சிடலாம் கெளதம்… நேத்து அம்மா உங்க வீட்டுக்கு வந்து…”
“பத்து மணிக்கு மீட்டிங்னு பியூன் மூலமா எல்லார்கிட்டயும் சொல்ல சொல்லிடவா சார்” அவனது பேச்சின் பின் பாதியை கவனியாதது போல பேசினான் கெளதம்.
அந்த பேச்சு கௌதமுக்கு பிடிக்கவில்லை என்பது புரிந்து விட ராஜேஷும் அமைதியானான். அவனைப் பொறுத்தவரை நேற்று விசாலம் பேசிய பேச்சிற்கு பிறகு கெளதம் மீண்டும் ஆபிசுக்கு வந்து இருப்பதே பெரிது. தாய் செய்தது தவறான செயல் தான். அதற்காக நண்பனிடம் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்கவும் அவன் தயார் தான். ஆனால் நடந்த விஷயத்தை அத்தனை இலகுவாக எடுத்துக் கொள்பவன் கிடையாது. முடிந்தவரை அவனிடம் இயல்பாக பேசி அவனது கோபத்தை தணிக்க வேண்டும் என்று ராஜேஷ் நினைத்திருந்தான். அப்படி அவனது கட்டுக்குள் அடங்குபவனா கெளதம்!
மீட்டிங் ஆரம்பமானது. முக்கிய அதிகாரிகள் அத்தனை பேரும் அங்கே வந்து இருந்தார்கள் விசாலம் உட்பட…
விசாலத்தின் பார்வையில் இருந்த நக்கலால் துளி அளவும் பாதிக்கப்படாதவனாக பேச்சைத் துவங்கினான் கெளதம்.
“சார்… என்னை நீங்க எதுக்காக அந்த கிராமத்துக்கு போக சொன்னீங்களோ அந்த வேலையை முடிச்சுட்டேன். இதுக்கு முன்னாடி எத்தனையோ பேர்.. ஏன் உங்க அப்பாவே கூட முயற்சி செஞ்சு முடிக்க முடியாத வேலையை நான் முடிச்சுட்டேன். அது பத்தின ரிப்போர்ட் உங்க டேபிளில் இருக்கு” என்று கம்பீரமான குரலில் கூறவும் வேகமாக பாய்ந்து அந்த பைலை கைப்பற்றிய விசாலம் அதில் ஒரு வரி விடாமல் உன்னிப்பாக படித்தார்.
“எல்லாம் அரைகுறையா இருக்கு… இப்படித் தான் வேலையை முடிச்சுட்டு உனக்கு நீயே சுய தம்பட்டம் அடிச்சுப்பியா”
“என்ன அரைகுறையா இருக்கு?”
“இதுல எல்லாப் பொருட்களும் எப்படி செய்றதுன்னு இருக்கு… எந்த அளவுல மூலப்பொருள் சேர்க்கணும்ங்கிறது எங்கேயும் இல்லையே”
“அதை எதுக்கு நான் சொல்லணும்?”
“என்ன தம்பி பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு!”
“இல்லையே! நீங்க என்னை அந்த ஊருக்கு அனுப்பும் பொழுது என்ன சொன்னீங்க? யாராலும் அந்த மக்களோட ரகசியத்தை தெரிஞ்சுக்க முடியாதுன்னு தானே சவால் விட்டீங்க”
“ஆமா… அதுக்கென்ன?”
“ இப்போ நான் அந்த மக்கள் செய்ற எல்லா பொருளையும் எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வந்து இருக்கேன். அளவு கூட தெரியும். ஆனா அதை உங்களுக்கு சொல்றதா இல்லை..”
“பின்னே…”
“இது அந்த ஊர் மக்களின் சொத்து… அதை உங்களை மாதிரி ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு கொடுக்க எனக்கு இஷ்டமில்லை…”
“இது நீ வேலை செய்ற இந்த கம்பெனிக்கு செய்ற துரோகம்”
“நிச்சயமா இல்லை… இது நான் அந்த மக்களுக்கு செய்ற நியாயம். இன்னொரு விஷயம் உங்களுக்கு நியாபகப்படுத்துறேன். அந்த மக்கள் எப்படி எல்லாப் பொருட்களையும் செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்னு மட்டும் தான் நான் சொன்னேன். அதை உங்க கிட்டே அப்படியே தூக்கி கொடுக்கிறதா சொல்லவே இல்லை.”
“உன்னை மாதிரி ஒரு துரோகிக்கு இனி இந்த கம்பெனியில் வேலை இல்லை” என்றார் விசாலம் மூச்சு வாங்க…
“ஹா ஹா… இதுலயும் நீங்க கொஞ்சம் லேட்டு மேடம்… என்னோட ரெசிக்னேஷனை அனுப்பி வச்சுட்டுத் தான் இந்த மீட்டிங் ஹாலுக்கு உள்ளேயே நான் வந்தேன்” என்று சொல்ல ராஜேஷ் பரபரப்பாக தன்னுடைய மொபைலை எடுத்து மெயிலை பார்த்தான்.
இனி செய்வதற்கு எதுவுமில்லை என்பது அவனுக்கு நன்றாக புரிய… வருத்தம் மேலிட நண்பனைப் பார்த்தான்.
ராஜேஷின் மன்னிப்பு கலந்த பார்வையை எதிர்கொள்ளவும் பிடிக்காதவன் போல தன்னுடைய கம்பீரத்தின் ஒரு துளி கூட குறையாமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான் கெளதம்.
வீட்டுக்கு செல்லும் வழியில் மருதாணியிடம் கையெழுத்து வாங்கிய பேப்பர்களை எடுத்துக் கொண்டு அரசு அலுவலகத்துக்குள் நுழைந்தவன் வேலையை முடித்துக்கொண்டு வீடு செல்லும்போது மணி சரியாக ஒன்றைத் தொட்டிருக்க… வீட்டிற்குள் நுழைந்தவன் வீடு இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சியானான்.
எரிக்கும்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 4 Average: 4.5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here